ஆலோசகர்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள்
நான் பெரும்பாலும் யாருக்கும் ஆலோசனை சொல்வது கிடையாது. எனக்கு
நிறைய பேர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். எல்லாம் அக்கறையின் பேரில். அந்த அக்கறைகள்
குறித்து நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
“சார்! நீங்கல்லாம் இந்நேரத்துக்கு கவிதைப் புத்தகம் போட்டிருக்க
வேண்டும்” என்பது முக்கியமான ஆலோசனை. நேரம் அந்த அளவுக்கு மோசமாகக் கிடக்கிறது. “சரி
அப்படியானால் போடுங்கள்” என்பேன். “சார்! நான் உங்களைச் சொன்னேன்” என்பார்கள்.
“பாரதியார் அல்லது பாரதிதாசன் கவிதைகள் பரவாயில்லையா?” என்றால்,
“சார்! நான் சொன்னது உங்க கவிதைகளை” என்பார்கள். “கூச்சமாக இருக்கிறது. முதலில் உங்க
கவிதைகள். கூச்சம் தெளிந்த பிறகு என்னுடையதைப் பார்க்கலாம் சார்.” என்பேன்.
“சார்! எனக்குக் கவிதைல்லாம் வராது.” என்பார். “உங்களுக்கு வராதது
எனக்கு மட்டும் எப்படி சார் வரும்? கொஞ்சம் எப்படியாவது முயற்சி பண்ணி எழுதி விடுங்கள்
சார். உங்க தொகுப்பு வெளிவந்தால்தான் சார் என்னுடையதை வெளியிடும் தைரியமே வரும் சார்.”
என்பேன். சொன்னவர் ஒரு மாதிரியாக வெறித்துப் பார்ப்பார். இப்படி பல ஆலோசனைகள் முறிந்து
போயிருக்கின்றன.
எல்லாருக்கும் புரியும்படி எழுத வேண்டும் என்பது மற்றொரு ஆலோசனை.
நான் வாய்பாட்டை எழுதிக் காட்டினேன். அதில் பதினான்காம் வாய்பாடு புரியவில்லை என்று
ஒரு விமர்சனம் எழுந்தது. நான் என்ன செய்வேன் சொல்லுங்கள். இப்போதெல்லாம் யார் எழுதிக்
கேட்டாலும் ஆன்னா, ஆவன்னாவைத் தாண்டி எழுதுவதில்லை. அதுவும் புரியவில்லை என்றால் நான்
என்ன செய்ய முடியும்? முதியோர் கல்வியிலாவது படிப்பதைத் தவிர வேறு வழியிருக்கிறதா என்பதை
அவர்கள்தான் யோசனை செய்து கண்டுபிடிக்க வேண்டும்.
எழுத்துங்கறது சமூகத்தைப் புரட்டிப் போட வேண்டும் என்பது வேறொரு
ஆலோசனை. அது எப்படி முடியும் சொல்லுங்கள்? எழுத்து தோசையோ, ஆம்ப்ளேட்டோ கிடையாது. அது
ஆப் பாயில் மேட்டர். உங்களுக்குத் தேவை என்றால் புரட்டிப் போட்டுக் கொள்ளலாம். எழுத்தாளர்கள்
புரட்டிப் போட ஆரம்பித்தால் புல்டோசர், ஜே.சி.பி.காரர்கள் வேலை பறிபோன கோபத்தில் சண்டைக்கு
வந்து விட மாட்டார்களா?
உங்க எழுத்து யாருக்காவது பயன்பட வேண்டும் என்பது எப்போதும்
வழங்கப்படும் ஆலோசனை. இது போன்ற ஆலோசனைகளைப் புறம் தள்ள முடியாது. தினமும் நாட்காட்டியைப்
பார்த்து ராசி பலன்களை ஒரு பேப்பரில் எழுதி போட்டோ பிடித்து வாட்ஸாப்பில் தெரிந்தவர்களுக்கு
எல்லாம் போடுகிறேன். அது நிறையவே பயன்படுகிறது. பார்ப்பவர்கள் ஏதாவது போடுகிறார்கள்.
எல்லாம் குறியீடுகள்தான். அழுத முகத்தோடு கண்ணீர் ஊற்றும் முகத்தை ஒருவர் போட்டிருக்கிறார்.
எனது எழுத்து அதிகமாகப் பயன்பட்டிருக்கும் போல. ஆனந்த கண்ணீரை சிம்பாலிக்காகக் காட்டியிருந்தார்.
தினமும் எழுதுங்கள் சார் என்கிறார் ஒருவர். அது உண்டு தினமும்
ஸ்ரீராம ஜெயம். பிரசுரம்தான் ஆக மாட்டேன்கிறது.
இன்னும் நிறைய ஆலோசனைகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றாகச்
சொல்கிறேன். எதற்கும் நீங்களும் உங்கள் ஆலோசனைகளைச் சொல்லி விடுங்கள். ஆலோசனைகள் அவசியமானவை.
நான் தனிமையில் இல்லை என்பதை ஆலோசனைகளை வைத்துதான் புரிந்து கொள்கிறேன். அப்புறம் ஆலோசகர்கள்
எப்போதும் என் அன்புக்குரியவர்கள். அவர்களின் அன்பிற்காக எதையும் செய்வேன். ஒரு நாளில்
யாரும் படிக்க முடியாத அளவுக்கு நூறு நூற்றைம்பது கவிதைகள் உட்பட.
*****
No comments:
Post a Comment