26 Apr 2022

வேதாளம் கேட்காத விடுகதைகள்

வேதாளம் கேட்காத விடுகதைகள்

ரூபாயில் விலையேறும்

பைசாவில் விலையிறங்கும்

அது என்ன என்றான் மகன்

இதென்ன புது விடுகதை என்றேன்

நானே கண்டுபிடித்தேன்

நானே கேட்கிறேன் என்றான் மகன்

உன் ஸ்கூல் பீசும் டொனேசனுமா என்றேன்

சிரித்தபடி இல்லையென்றவனிடம்

உன் பாக்கெட் மணியா என்றேன்

அதுவுமில்லை என்றவனிடம்

வீட்டு வாடகைத் தொடங்கி

உப்பு புளி மிளகாய் வெந்தயம் கடுகு

பால் பேப்பர் என்று சகலப் பொருட்களையும்

சொல்லிப் பார்த்தேன்

எதுவுமில்லை என்றவன்

உங்களுக்குத் தெரிந்தது உங்கள் அறிவுக்குத் தெரியாது என்றான்

ஒரு விடுகதையை அவிழ்ப்பதற்குள்

மறு விடுகதையா என்றேன்

இரண்டும் ஒன்று என்றவன்

இரண்டின் விடைகளும் வேறு வேறு என்றான்

விடுகதை ஒன்றாகும் போது

விடைகள் எப்படி வேறாகும் என்றேன்

ஒரு கேள்விக்குப் பல பதில்கள் போல

பல பதில்கள் என்றால் தவறான பதில்களும் என்றான்

விடுகதைக்கு விடை சொல் என்றதும்

சொன்னால் புரியாது சொல்லா விட்டால் தெரியாது என்றான்

அன்றிலிருந்து டேங்க் புல் பண்ணி

வாகனத்தில் செல்லும் போதும் யோசிக்கிறேன்

விடை மட்டும் புலப்பட்ட பாடில்லை

*****

No comments:

Post a Comment

திராவிடமா? தமிழ்த் தேசியமா?

திராவிடமா? தமிழ்த் தேசியமா? ஓர் அரசியல் பண்பாட்டு இயக்கத்திற்கான வலுவான அடிப்படை கருத்தியல்தான். அந்தக் கருத்தியல் அடிப்படையில்தான் தங்கள்...