கோள்மூட்டியின் ஆவி
அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும்
சண்டை என்றால்
ஆச்சியம்மாளைக் கை காட்டுவார்கள்
இரண்டு தெருவிற்கும் வெட்டு
குத்து என்றாலும்
ஆச்சியம்மாளைத்தான் காரணம்
காட்டுவார்கள்
கோள்மூட்டி ஆச்சியம்மாள்
என்றும்
வத்திக்குச்சி ஆச்சியம்மாள்
என்றும்
இல்லாத நேரங்களில் திட்டித்
தீர்ப்பார்கள்
சாகும் நாளில் கூட
ஆச்சியம்மாள் பேசிய பேச்சில்
சீயான் தாத்தாவும் சிலோன்
மாமாவும்
சண்டையிட்டுக் கொண்டார்கள்
ஆச்சியம்மாள் சுடுகாட்டில்
எரியும் போதும்
சடலம் சரியாக எரியவில்லை
என்று
வெட்டியானுக்கும் நாட்டாமைக்கும்
வாய்ச் சண்டையில் ஆரம்பித்துக்
கைகலப்பில் முடிந்தது
ஆச்சியம்மாள் செத்து பத்து
ஆண்டுகள் ஆகியும்
அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும்
சண்டை ஓயவில்லை
அவ்வபோது இரண்டு தெருக்களுக்கிடைய
வெட்டுக் குத்துகள் நிகழ்ந்த
வண்ணம் இருக்கின்றன
கேட்டால் ஆச்சியம்மாளின்
ஆவிதான்
அலைபேசியில் புகுந்திருக்கிறது
என்கிறார்கள்
*****
No comments:
Post a Comment