29 Apr 2022

நீங்கள் படிப்பதற்கான 10 புத்தகங்கள்

நீங்கள் படிப்பதற்கான 10 புத்தகங்கள்

1. திருக்குறள்

            இதை நீங்கள் படித்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் உங்களைத் தமிழர் இல்லை என்று சொல்லி விடக் கூடிய அபாயம் இருக்கிறது. நூல் முழுக்க நிறைய அறிவுரைகள். உங்களுக்குப் பிடித்த அறிவுரையைப் பின்பற்றலாம். பிடிக்காவிட்டால் மற்றவர்களுக்குச் சொல்லலாம். இந்த நூலைப் பல பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. விலை குறைவான பதிப்பகத்தின் பதிப்பை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

2. பாரதியார் கவிதைகள்

            இந்த நூலையும் நீங்கள் படித்துதான் ஆக வேண்டும். பாடியபடி படிக்கலாம். படித்தபடி பாடலாம். கையடக்க பதிப்பு, மலிவு பதிப்பு, செம்பதிப்பு என்று பலவிதமான பதிப்புகள் கிடைக்கின்றன. உங்களுக்கு விருப்பமான பதிப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பல பதிப்பகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வெளியிட்டிருக்கின்றன. போட்டியில் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

3. தமிழ் அகராதி

            இந்த நூலை நீங்கள் முழுவதுமாகப் படிக்க முடியுமா என்று சொல்லத் தெரியவில்லை. படித்தால் நல்லதுதான். நிறைய தமிழ் சொற்களை நீங்கள் இந்தப் புத்தகத்தில் பார்க்க முடியும். இந்த நூலுக்கும் நிறைய பதிப்பகங்கள் மெனக்கெட்டிருக்கின்றன. மெனக்கெட்டுப் பார்த்து சிறந்த மற்றும் உங்களுக்குப் பிடித்த பதிப்பாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

4. இயர்புக்

            ஒவ்வொரு ஆண்டின் நிகழ்விற்கான புத்தகம். நீங்கள் ஓட்டப்போட்டியில் ஜெயித்தது, குலுக்கல் போட்டியில் குத்து விளக்கு வாங்கியது, உள்ளூர் கிளப்பின் மாமனிதர் விருது வாங்கியது போன்ற தகவல்கள் இல்லாவிட்டாலும் உங்களுக்குத் தேவையான புத்தகம்தான். இதற்கும் பல பதிப்பகங்கள் இருப்பதுதான் சிறப்பு. மலையாள மொழியிலிருந்து கூட வந்து தமிழ் மொழிக்கு இயர்புக் வெளியிட்டிருக்கிறார்கள் என்பதே இதன் சிறப்பை உணர்த்த போதுமானது என்று நினைக்கிறேன்.

5. சமையல் குறிப்புகள் 1000

            ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம். எந்த வீட்டிலாவது சமைக்காமல் இருக்க முடியுமா? அப்படிச் சமைக்கும் போது தேவையான ஒன்றிரண்டு குறிப்புகளையல்ல, ஆயிரம் குறிப்புகளைத் தரும் புத்தகம். உடனடியாக ஆயிரம் குறிப்புகள் பயன்படா விட்டாலும் ஒவ்வொரு நேரமாகப் பயன்படக் கூடும். பிஸ்கட் டப்பாவில் நான்கு மிளகைப் போட்டு வைத்தால் பிஸ்கட்டின் மொறுமொறுப்பு குறையாது என்பது பயனுள்ள குறிப்பு. நான் போகும் வீடுகளில் எல்லாம் தேநீரோடு நமத்துப் போன பிஸ்கட்டுகளை வைத்து விருந்தோம்புகிறார்கள். அப்போதெல்லாம் இந்தப் புத்தகம் அவர்களிடம் இல்லாத குறையை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு சில பதிப்பகங்கள் சமையல் குறிப்புகள் 500, சமையல் குறிப்புகள் 250, சமையல் குறிப்புகள் 50 போன்ற புத்தகங்களைக் கூட வெளியிட்டிருக்கின்றன. விலையை அனுசரித்தும் உங்கள் கையிருப்பை அனுசரித்தும் உங்களுக்குத் தேவையான எண்ணிக்கையை உடைய குறிப்பு நூலை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

6. பிரபலமானவர்களின் விலாசங்கள்

            உங்கள் விலாசம் தவிர அனைத்து நபர்களின் விலாசங்களும் உள்ள அற்புதமான புத்தகம். நூலை வாசிக்க வாசிக்க தமிழ்நாட்டின் அத்தனை ஊர்களின் பெயர்களையும், தெருக்களின் பெயர்களையும் அறிந்து கொள்ளலாம். கோடாலிகருப்பூர், வெட்டரிவாள் முதல் தெரு போன்ற ஊர் மற்றும் தெருக்களின் பெயரை அந்த நூலில் இருந்ததுதான் தெரிந்து கொண்டேன். அந்த ஊரிலும் தெருவிலும் பிரபலமானவர்கள் வசித்து வருகிறார்கள் என்ற தகவலை அதையடுத்துதான் தெரிந்து கொண்டேன். வருடா வருடம் இந்த நூலை அப்டேட் செய்கிறார்கள். புதிய பதிப்புகள் புதிய வாசகர்களுக்கும் பழைய பதிப்புகள் ஆய்வாளர்களுக்கும் பயன்படும். இது போன்ற நூலை ஒரு சில பதிப்பகங்கள் மட்டுமே வெளியிடுகின்றன. அனைத்துப் பதிப்பகங்களும் வெளியிட முயற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் ஆக்ஸ்போர்ட் டிக்சனரி போல இருக்கும் இது போன்ற நூல்களின் விலை குறைய வாய்ப்பிருக்கிறது.

7. வாசலில் போட அழகு கோலங்கள்

            தமிழில் ஓவிய நூல்கள் குறைவு என்று யார் சொன்னது? நீங்கள் இந்த நூலைப் பார்க்க வேண்டும். எழுத்துகள் குறைவுதான். எட்டுப்புள்ளி, ஊடுபுள்ளி, இரண்டு புள்ளியில் நிறுத்தவும் என்று ஒரு சில இடங்களில் மட்டும்தான் எழுத்துகளைப் பார்க்க முடியும். ஓவியங்கள்தான் அதிகம். இதனால் வெகு விரைவாகப் படித்து முடித்து விடலாம். நான் ஒரு புத்தகத்தைக் கூட முழுமையாகப் படிக்கவில்லை என்று நினைப்பவர்கள் வாங்க வேண்டிய முதன்மையான புத்தகம். நீங்கள் இது போன்ற புத்தகங்களை ஆயிரம் என்ன இரண்டாயிரம் வரை கூட படித்து விடலாம். இது போன்ற நூல்களுக்கும் நிறைய பதிப்பகங்கள் இருப்பதால் பக்கங்களைப் புரட்டி உங்கள் மனதைக் கவரும் கோலங்கள் உள்ள புத்தகங்களாக வாங்க வேண்டும்.

8. சமகாலக் கவிதைகள் ஒரு பார்வை

            தொகுப்பு நூல் வரிசையைச் சார்ந்த புத்தகம்தான். பலரும் கட்டுரைகள் எழுதியிருப்பார்கள். கவிதைகள் எழுதி பிரசுரம் ஆகாதவர்கள் அவர்களின் கவிதைகளை மேற்கோள் காட்டி கட்டுரைகள் எழுதியிருப்பார்கள். இதனால் அறியப்படாத பல கவிஞர்களை அறிய இந்த நூல் உங்களுக்குப் பேருதவி செய்யும். மாவட்ட வாரியாக இது போன்ற நூல்கள் அதிகம் வெளிவருவதால் உங்களுக்குப் பிடித்த மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு கூட வாங்கிக் கொள்ளலாம். விலையும் குறைவுதான். விளம்பரங்கள் நிறைய இருக்கலாம். அந்த விளம்பரங்களிலும் ஒரு கவித்துவம் இருக்கவே செய்யும். அதனால் முழுமையான கவிதைப் புத்தகம் என்று சொல்லலாம் இந்தக் கட்டுரைப் புத்தகத்தை.

9. துணுக்குகள் ஒரு நூறு

            நீங்கள் எதிர்பார்க்கும் நகைச்சுவைக்கு கியாரண்டி தரும் புத்தகம். கைவசம் இந்தப் புத்தகத்தை நீங்கள் வைத்திருந்தால் பல மேடைகளைக் கலக்கலாம். என்ன ஒன்று நீங்கள் பேசுவதற்கு முன்பு பேசியவரின் கையிலும் இந்தப் புத்தகம் இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கூறியது கூறல் குற்றத்திற்கு ஆளாக நேரிடும். ஆகையால் இது போன்ற வேறு தலைப்புகளில் உள்ள உங்களுக்கான துணுக்குகள், வாலிபர்களுக்கு ஏற்ற துணுக்குகள், இல்லத்தரசிகளுக்கேற்ற துணுக்குகள், பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்ற துணுக்குகள் போன்ற பலதரப்பட்ட நூல்களைத் தேர்ந்தெடுத்து ஒரு பையில் போட்டு வைத்துக் கொள்ளலாம். சூழ்நிலைக்கேற்றாற் போல் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கும் ஏகப்பட்ட பதிப்பக வெளியீடுகள் இருக்கின்றன. பலவற்றையும் பார்த்துதான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தப் பதிப்பகத்தின் புத்தகத்தை வாங்குங்கள் என்று சொல்ல முடியாததற்காக வருந்துகிறேன். நீங்கள் என்னைக் குறிப்பிட்ட பதிப்பகத்தின் ஏஜென்ட் என்று நினைத்து விடக் கூடாது பாருங்கள்.

10. மணவாழ்க்கை கையேடு

            விழாக்களில் பரிசளிப்பதற்கான அற்புதமான புத்தகம். பத்து இருபது புத்தகங்களாவது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு பங்சனுக்கும் நூறு, இருநூறு என்று எழுதுவதை விட அறுபது ரூபாய் விலையுள்ள இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக் கொள்வதால் நாற்பது மிச்சமாகும். விழாக்களில் புத்தகம் கொடுத்த பெருமையும் உங்களுக்கு உண்டாகும். இந்தப் புத்தகத்தில் பல ஆலோசனைக் குறிப்புகள் உள்ளன. குழந்தைத் திருமணம் செய்தவர்களுக்கும் பயன்படும் புத்தகம். கல்யாணம் செய்து கொள்ளாதவர்களுக்கும் பயன்படும் புத்தகம். புத்தகத்தின் இறுதியில் மொய் எழுதியவர்களைக் குறித்துக் கொள்ள இருபது பக்கங்கள் ஒதுக்கியிருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தைப் பரிசாகக் கொடுத்தால் உங்கள் பெயர் அதில் இருக்காது. அதனால் புத்தகத்தின் முதல் பக்கத்திலே இந்தப் புத்தகத்தை உங்களுக்குப் பரிசாகக் கொடுப்பது என்று எழுதி உங்கள் பெயரை எழுதி கையெழுத்து இடுங்கள்.

            இப்போதைக்கு இந்தப் பத்து புத்தகங்கள் போதும் என்று நினைக்கிறேன். இன்னும் பத்துப் புத்தகங்கள் தேவை என்று நினைத்து இருபது புத்தகங்கள் வாசிக்க நினைப்பவர்கள் காத்திருக்க வேண்டுகிறேன். உங்களால் காத்திருக்க முடியுமானால் இன்னும் பத்து புத்தகங்களின் பட்டியலை என்னால் விரைவில் கொண்டு வர முடியும்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...