நன்றியுணர்வின் அற்புதம்
நன்றியுணர்வின் பிள்ளைகளாக நாம் இருக்கும் வரை நாம் அற்புதமானவர்கள்தான்.
நன்றியுணர்வு வெறுப்புணர்வை அறவே துடைத்தெறிந்து விடுகிறது. எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும்
நேர்மறை உணர்வாக மாற்றி விடுகிறது.
நன்றியுணர்வில் இவ்வளவு அற்புதங்கள் நிறைந்திருக்கும் என்பதை
நான் எப்படி இத்தனை நாள்கள் அறியாமல் இருந்தேன்? புத்தகங்களும் தொடர் வாசிப்பும் நான்
சந்தித்த மனிதர்களும்தான் அதன் அற்புதத்தை எனக்குப் புரிய வைத்தார்கள்.
“எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்
உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.” (குறள். 110)
என்ற குறட்பாவின் உள்ளார்ந்த
பொருள் என்னவாக இருக்கும் என்று மீண்டும் மீண்டும் என் மனதில் அசைப் போட்டுப் பார்த்த
பிறகுதான் நான் புரிந்து கொண்டேன். திருவள்ளுவர் மனித குலத்திற்கான அற்புதமான மந்திர
வாசகத்தை வழங்கியிருக்கிறார் என்பதை இந்த குறட்பாவைக் கொண்டு நீங்கள் புரிந்து கொள்ள
முடியும்.
ஒவ்வொரு மனிதருக்கும் அவரவரது மனம்தான் மாபெரும் உய்வு. ஒவ்வொரு
மனிதருக்கும் தேவையான மனநிறைவையும், மன அமைதியையும் அவரவரது மனம்தான் வழங்க முடியும்.
நாம் நன்றியுணர்வோடு இருக்கும் அளவைக் கொண்டே நமக்கான மன அமைதியையும்
மன நிறைவையும் நமது மனம் வழங்குகிறது. மனதார நன்றியைத் தெரிவிக்காத போது, மனதார நன்றியோடு
நடந்து கொள்ளாத போது மனம் தன்னைத் தானே நரகமாக மாற்றிக் கொள்கிறது. நன்றியோடு நடந்து
கொள்ளத் துவங்கும் போது மனம் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைத் தானே சொர்க்கமாக மாற்றிக்
கொள்கிறது.
உய்வில்லாத ஓர் இடம்தான் நரகம். உய்வை வழங்கக் கூடிய ஓர் இடம்தான்
சொர்க்கம். சொர்க்கத்தை விரும்புவதற்குக் காரணம் அந்த இடம் தரக்கூடிய உய்வுதான். நரகத்தை
நாம் விரும்ப முடியாமைக்குக் காரணம் நரகம் தரும் உய்வற்ற தன்மைதான்.
நன்றியுணர்வுள்ள மனம் தான் கொண்டுள்ள நன்றியுணர்வால் படிப்படியாக
சொர்க்கத்தை நோக்கி நகர்ந்து சொர்க்கமாகவே ஆகி விடுகிறது. நன்றி உணர்வை இழந்து விடும்
மனம் படிப்படியாக நரகத்தை நோக்கி நகர்ந்து நரகமாகவே ஆகி விடுகிறது.
நன்றியுணர்வற்ற தன்மையைத் திருவள்ளுவர் கொலைத் தன்மையோடு ஒப்பிட்டுக்
கூறுவதை நாம் கவனிக்கலாம். நன்றியைக் கொல்லுதல் என்ற சொற் பயன்பட்டால் அதைச் சுட்டுகிறார்.
செய்நன்றியைக் கொன்றவர்க்கு உய்வில்லை என்றுசொல்வதன் மூலம் அப்படிப்பட்டவர்களை அவர்
நரகத்தை நோக்கித் தள்ளி விட்டு விடுகிறார். அந்த நரகம் என்பது அவரது மனமே உருவாக்கித்
தரும் நரகம்தான் என்பது அனுபவப்படும் போது புரியும்.
நன்றிணர்வுள்ள மனதால் மட்டுமே குற்ற உணர்வினின்று விடுபட முடியும்.
எதிர்மறை எண்ணங்களால் தாக்குறாமல் இருக்க முடியும். நீங்கள் ஒவ்வொன்றிற்கும் நன்றியோடு
இருந்து பாருங்கள். மனக்குறைகள் மாயமாய் மறைவதை அறிய முடியும். எவையெல்லாம் நன்றியற்றனவோ
அவற்றை விட்டு விடுங்கள், மறந்து விடுங்கள். நன்றிக்கு உரியவை எவையோ அவற்றை மட்டும்
நினைந்து நினைந்து நன்றி பாராட்டுங்கள்.
உங்களுக்குத் தேவையான அனைத்து
நேர்மறையான உணர்வுகளும் நன்றியுணர்விலிருந்து பிறப்பவைதான். தன்னம்பிக்கை, ஊக்கம்,
முயற்சி, மனம் தளராமை, அஞ்சாமை, கருணை, அன்பு, பொறுமை, செழிப்பு என்று அனைத்தும் நன்றியுணர்வால்
உண்டாக வேண்டியவை. உங்களது நன்றியுணர்வு உங்களுக்குத் தேவையான அனைத்து நல்லவை மற்றும்
நேர்மறை உணர்வுகளை நீங்கள் கேட்காமலே உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். ஏனென்றால்
நன்றியுணர்வு என்பது அற்புதமானது, அற்புதங்களைப் புரிய கூடியது. இந்த உண்மையை இன்னொருவர்
சொல்லிப் புரிந்து கொள்ள முடியாது. உங்களால் உங்கள் மனதால் அனுபவித்துப் பார்க்கும்தான்
புரிந்து கொள்ள முடியும். அந்த அற்புதமான அனுபவத்தை நீங்கள் ஏன் இன்றிலிருந்து துவங்கக்
கூடாது. ஒவ்வொன்றுக்கும் நன்றி சொல்லிப் பாருங்கள். அற்புதமான தருணங்களையும் உணர்வுகளையும்
உணருங்கள்.
*****