24 Mar 2022

நம் வாழ்வை நாமே தீர்மானிக்கிறோம்!

நம் வாழ்வை நாமே தீர்மானிக்கிறோம்!

            ஒரு செயலைச் செய்வதற்கு விருப்பத்தைப் போல மந்திர சக்தி ஏதும் கிடையாது. விருப்பமில்லாத செயலைச் செய்ய முடியாது. விருப்பத்தின் ஆற்றல் மகத்தானது. விருப்பமானது மலையைப் போன்ற காரியங்களைத் துரும்பைப் போலக் கருதி காரியங்களைச் செய்ய வைக்கும். விருப்பமில்லாத ஒரு காரியம் துரும்பளவு இருந்தாலும் அது மலையளவாக மாறி விடும்.

            பிடித்திருந்தால் எல்லாரும் எல்லா வேலைகளையும் செய்வார்கள்தான். வாழ்க்கை அப்படித்தான் அமையும் என்று சொல்வதற்கில்லை. பிடிக்காத வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கும். விருப்பம் இல்லை என்ற காரணத்திற்காக அந்த வேலையைச் செய்யாமல் இருக்க முடியாது.

            பல நேரங்களில் விருப்பங்களையெல்லாம் மூட்டைக் கட்டி தூர வைத்து விட்டுதான் காரியங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வாறு இல்லாவிட்டால் வாழ்க்கையில் மிகப்பெரிய நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

            நாம் விரும்பாத காரியங்களை நெருக்கடிகள் செய்ய வைத்து விடும். இது குறித்த தீர்க்கமான பார்வையை உருவாக்கிக் கொள்வது நல்லது. எந்தெந்த காரியங்களைச் செய்யாமல் விட்டால் வாழ்வின் பிற்பகுதியில் நெருக்கடிகளை உருவாகுமோ அவற்றைச் செய்து முடித்து விடுவதுதான் நல்லது. அங்கே விருப்பமின்மையைக் காரணம் காட்டி அந்தக் காரியத்தைத் தள்ளிப் போடுவதோ செய்யாமல் போடுவதோ நல்லதல்ல.

            அவரவர்கள் வாழ்க்கையை அவரவர்கள் ஆள வேண்டும் என்றால் நெருக்கடிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. நெருக்கடிகளுக்கு இடம் கொடுக்க ஆரம்பித்தால் பின் நெருக்கடிகளே நம்முடைய வாழ்க்கையை ஆண்டு கொண்டிருக்கும். நாம் நெருக்கடியின் கைப்பிள்ளையாக மாறியிருப்போம். நாளடைவில் நெருக்கடியின் கைப்பாவையாகவும் மாறி விடுவோம்.

            ‘இளமையில் கல்’ என்பது நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லி சென்ற காலக்கடமைக்கான அற்புதமான வாசகம். இளமையிலேயே செய்து முடிக்க வேண்டிய அந்த அற்புதமான காரியத்தை விருப்பமின்மையைக் காரணம் காட்டிப் புறந்தள்ளினால் அது உண்டாக்கும் நெருக்கடிளுக்கு ஏற்பவே வருங்காலத்தை நாம் நகர்த்த வேண்டியிருக்கும்.

            உடற்பயிற்சிக்கும் உடலோம்பலுக்கும் நேரம் ஒதுக்குங்கள் என்ற சமிக்ஞைகள் உங்களிடமிருந்தோ அல்லது உங்கள் நலனில் அக்கறை மிகுந்தோரிடமிருந்தோ வெளிப்பட்டு விட்டால் அது கண்டிப்பாக செய்தே ஆக வேண்டிய காரியம்தான். விருப்பமில்லை, நேரமில்லை என்பதைக் காரணம் காட்டி அதைப் புறந்தள்ள முடியாது. ஒருவேளை புறந்தள்ளினால் சர்க்கரை நோயோ, ரத்த அழுத்த மாறுபாடோ, கொழுப்பு நோயோ வந்து நெருக்கடியை உண்டு பண்ணி எந்தக் காரியத்தை விருப்பமின்மையைக் காரணம் காட்டித் தள்ளிப் போட்டீர்களோ அதைச் செய்ய வைத்து விடும்.

            வாழ்க்கையில் அவசியமான அத்தியாவசியமான ஒரு சில காரியங்கள் இருக்கின்றன. அக்காரியங்களை ஆற்றுவதில் நம்முடைய பிடித்தங்களைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பிடித்திருக்கிறதோ பிடிக்கவில்லையோ அது பொருட்டேயல்ல. அந்தக் காரியங்களை அந்தந்த நேரத்தில் செய்து முடித்து விட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டும். அப்படிப் போய்க் கொண்டிருந்தால் வாழ்க்கையும் இணக்கமாகவும் இன்பமாகவும் போய்க் கொண்டிருக்கும்.

            நம்முடைய வாழ்க்கை இணக்கமாகப் போய்க் கொண்டிருக்க வேண்டுமா அல்லது நெருக்கடிகளோடு போய்க் கொண்டிருக்க வேண்டுமா என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இந்த விசயம் நிச்சயம் நம்முடைய அணுகுமுறையால் உண்டாவதுதான். நாம் நினைத்தால் நம்முடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். நம்முடைய விருப்பங்களை தகவமைத்துக் கொள்வதில் நாம் நம் அற்புதமான கவனத்தைச் செலுத்திதான் ஆக வேண்டும்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...