ஆயிரம் கோடி, பல்லாயிரம் கோடி, லட்சங் கோடி நன்றிகள்!
ஒவ்வொரு நாளின் விடியலையும் நன்றி சொல்லலோடு துவக்க விரும்புகிறேன்.
நன்றி சொல்லும் ஒவ்வொரு விடியலிலும் சூரிய உதயத்தின் அற்புதத் தோற்றம் என்னை அதிக உற்சாகம்
கொள்ளத் தூண்டுகிறது.
நேற்றைய நாளை இனிமையாக்கியவர்களுக்கும் கூடவே இன்றைய நாளை இனிமையாக்கப்
போகிறவர்களுக்கும் என் நன்றி உரித்தாகிறது. நேற்றைய பொழுதில் சிரமங்களைக் கொடுத்தவர்களுக்கும்
என் நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு வித்தியாசமான நன்றி செலுத்தலாகத்
தோன்றலாம். ஆனால் அவர்களுக்கு நன்றிகளைச் செலுத்திதான் ஆக வேண்டும். வாழ்க்கையின் மகத்தான
பாடங்களை அவர்கள்தான் கற்பிக்கிறார்கள். இனிமையாக்கியவர்களுக்கான நன்றியானது மகத்தான
அன்பைத் தந்ததற்காக.
இந்த உலகில் நன்றி செலுத்த தகுதியவற்றவர்களாக யாரேனும் இருக்கிறார்களா
அல்லது ஏதேனும் இருக்கிறதா என்று யோசிக்கிறேன். யோசிக்க யோசிக்க அப்படி யாரும் அல்லது
ஏதும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு
உயிருக்கும் ஒரு பயன் இருப்பதைப் போலத்தான் ஒவ்வொன்றுக்கும் நன்றி செலுத்த ஒரு காரணம்
இருக்கிறது.
யாதும் நன்றி செலுத்தலுக்கு உரியவை எனும் போது நான் நன்றி செலுத்த
விரும்பாமல் இருப்பதால் ஏதேனும் ஒன்று நன்றிக்குரியதன்று என்பதாகாது என்பதைப் புரிந்து
கொள்கிறேன். என்னுடைய நன்றிக்காக யாரும் ஏதும் ஏங்கிக் கிடக்கவில்லை என்றாலும் நான்
நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன். அந்தக் கடமையை நான் எப்போதும் செய்துதான் ஆக
வேண்டும். வாழ்க்கையின் தவிர்க்க முடியாத முதன்மையான கடமை அதுதான் என்று நான் உறுதியாக
நம்புகிறேன்.
இனிமையான அதிகாலைப் பொழுதில் என்னை எழுப்பி விட்ட பறவைகளின்
ஒலிக்காக, அன்றைய பொழுதை உற்சாகமாகத் துவக்க தேநீரோடு வந்து நிற்கும் மனைவிக்காக, ஏதேனும்
உதவி தேவையா என்று வந்து நிற்கும் குடும்ப உறுப்பினர்களுக்காக, காலை உணவைத் தந்த தாவரங்களுக்காக,
அதை இனிமையாகச் சமைத்துத் தந்த அன்பர்களுக்காக என்று தொடர்ந்து செல்லும் நன்றிகளின்
பட்டியல் மிக நீளமானது. பட்டியல் நீளமாகப் போகிறது என்றாலும் ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும்
தவற விடாமல் நன்றி சொல்வதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.
இந்த இனிய காலைப் பொழுதில் இதை எழுதுவதற்குக் காரணமான அறிவைப்
போதித்த ஆசான்களுக்கும் இந்த இனிய அனுபவத்தை உணர்வதற்குக் காரணமான அனைவருக்கும் நான்
நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக இதை வாசிக்கும் உங்களுக்கும் நன்றி சொல்ல
பெரிதும் விரும்புகிறேன். எவ்வளவோ பணிகளுக்கு மத்தியில் இதைப் படிக்க வந்திருக்கும்
உங்களின் தேர்வுக்கும் இத்தேர்வு உங்களுக்குப் பயனுடையதாக இருந்திருந்தால் அதற்கும்
நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். என் நன்றிகளை ஏற்றுக் கொள்ள எல்லாரையும் அன்புடன்
வேண்டுகிறேன்.
“நன்றி மறப்பது நன்றன்று” என்றும் “நன்றல்லது அன்றே மறப்பது
நன்று” என்று நன்றி சொல்லலுக்கு மகத்தான பாதை வகுத்துத் தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு
ஆயிரம் கோடி, பல்லாயிரம் கோடி, பல லட்சம் கோடி நன்றிகளைத் தெரிவித்தாலும் போதாது என்பதால்
நன்றிகளை அந்த எண்ணிக்கையைக் கடந்தும் சொல்ல பிரியப்படுகிறேன். என்றும் அன்புடன் என்பதோடு
என்றும் நன்றியுடன் உங்கள் விகடபாரதி.
*****
No comments:
Post a Comment