13 Mar 2022

மெய் சிலிர்த்துக் கொள்ளும் வானம்

மெய் சிலிர்த்துக் கொள்ளும் வானம்

கொடும்பனி நள்ளிரவில் ஆரம்பித்து

பிற்பகல் வரை நீடிக்கிறது

இப்படியொரு நிகழ்வைப் பார்த்ததில்லை

அனுபவத்தை அலசித் தேடிக் களைத்தவர்கள் கூறுகிறார்கள்

பொழிவதும் பொழியாமல் போவதும்

வானத்தின் இயல்பு எனக் கூற யாரும் தயாராக இல்லை

நீடிக்கும் பனிப்பொழிவை இயல்புக்கு மீறியதென

புகாரளிக்கவும் குற்றப்பத்திரிகை சமர்ப்பித்து விடவும்

பெருங்கூட்டம் காத்து நிற்கிறது

கூட்டத்தினின்று நோக்குகையில்

வானம் கையறு நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது

கையறு நிலையிலும் புகார்களைப் பொருட்படுத்தாது

பனியைப் பொழிந்தபடி இருக்கும் வானத்தை

அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாதவர்கள்

வீட்டிற்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டு

போர்வைக்குள் புதைந்துப் போகிறார்கள்

நீடிக்கும் பனிப்பொழிவை ரசித்தபடி

பாடிக்கொண்டு செல்லும் இரவாடியின் ஒலி அலைகளில்

வானம் கொஞ்சம் மெய் சிலிர்த்துக் கொள்கிறது

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...