அதி அற்புதமான பேச்சாளர் நீங்கள்!
அனைவரும் விரும்பும்படி பழகுவது ஒரு கலை. அது வாழ்வின் அழகியல்.
விரும்பும்படி பழகுவதில் முக்கியமான கூறு பேச்சு. விரும்பும்படி பழகுவதில் விரும்பும்படி
பேசுவதுதான் முதன்மையானது.
விரும்பும்படி பேசத் தெரியாத போது அதை ஒரு குறையாகக் கொள்ள வேண்டியதில்லை.
விரும்பும்படி பேசுவதை விட கூடுதலாக அனைவரையும் விரும்ப செய்வதற்கான மாபெரும் நுட்பம்
ஒன்று இருக்கிறது. பேசாமல் இருப்பதுதான் அந்த மாபெரும் நுட்பம். நாம் பேசாமல் எதிரில்
இருப்பவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டு மட்டும் இருங்கள். அனைவரும் விரும்பும் நபராக
நீங்கள் மாறி விடுவீர்கள்.
இருப்பால் மட்டுமல்ல இன்மையாலும் கிடைக்கும் சிறப்பு பேச்சுக்கு
மட்டும்தான் உண்டு. கவர்ச்சிகரமான பேச்சின்மை குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை. கவர்ச்சிகரமான
பேச்சை விட பேசாமல் இருப்பது ஆயிரம் மடங்கு கவர்ச்சி வாய்ந்தது.
மற்றவர்கள் பேசும் போது நன்றாகக் கவனியுங்கள். அவர்களின் குரலை
உற்றுக் கேளுங்கள். அது ஆயிரம் மடங்கு நீங்கள் அவர்களிடம் பேசியதற்குச் சமம். பேச்சின்
மூலம் கவர்வதை விட அவர்களின் பேச்சைக் கவனிப்பதன் மூலம் மிக அதிகமாகவே கவரலாம்.
எல்லாருக்கும் அவர்களின் பேச்சைக் காது கொடுக்கும் ஒரு மனிதர்
தேவைப்படுகிறார். அந்த நபர் ஏன் நீங்களாக இருக்கக் கூடாது? இதனால் பேசாமலே பேசிச் சாதிப்பதை
விட அதிகம் உங்களால் சாதிக்க முடியும்.
மிகக் குறைவாகப் பேசுவது குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை.
பேச்சுக் கலையின் அற்புதமே மிகக் குறைவாகப் பேசுவதில்தான் இருக்கிறது. மிக அதிகமாகப்
பேசுவது உங்கள் பேச்சை எப்போதும் சுவாரசியம் ஆக்காது.
பேசுவதற்கு முன் அனைவரும் விரும்பும்படி பேச முடியுமா என்று
பாருங்கள். அப்படிப் பேச முடிந்தால் பேசுங்கள். இல்லாவிட்டால் பேசாமலே இருந்து விடுங்கள்.
அதிகமான நபர்களால் நீங்கள் விரும்பப்படுவீர்கள்.
பேசியே ஆக வேண்டும் நீங்கள் விருப்பபட்டால் நலமா, நன்று, நன்றி,
சிறப்பு, அருமை, உங்களால் முடியும், உங்கள் மேல் நம்பிக்கை உண்டு என்பன போன்ற சொற்களும்
வாக்கியங்களும் மட்டுமே போதும் உங்களுக்கு. எந்தத் தலைப்பிலான உரையாடலாக இருந்தாலும்
சொற்பொழிவாக இருந்தாலும் யாரிடம் பேசுவதாக இருந்தாலும் இவையே போதும் உங்களுக்கு. உங்கள்
அற்புதமான பேச்சை இந்தச் சொற்களையும் வாக்கியங்களையும் கொண்டே நீங்கள் அமைத்துக் கொள்ள
முடியும்.
வெகு முக்கியமாக இந்தச் சொற்களையும்
வாக்கியங்களையும் கொண்டு உங்கள் பேச்சை நீங்கள் அமைத்துக் கொண்டால் உங்கள் பேச்சை யாராலும்
குறை சொல்ல முடியாது. அனைவராலும் விரும்பப்படும் பேச்சாக உங்கள் பேச்சு அமைந்து விடும்.
இந்தப் பேச்சின் சிறப்பே
நன்மையை மட்டும் பேசுவதுதான். நாட்டில் நன்மையை மட்டும் பேசுபவர்கள் குறைந்து விட்டார்கள்
என்பதால் இந்தப் பேச்சு வெகு சிறப்பாக உங்களை அடையாளம் காட்டும். உங்களைப் பலரையும்
விரும்ப வைக்கும். இதற்கு மேல் சொற்கள் தேவைப்பட்டால் ஆகா, அற்புதம், சிறப்பு, மகிழ்ச்சி
என்பன போன்ற சொற்களையும் அச்சொற்களைக் கொண்ட வாக்கியங்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு உலகின் அதி அற்புதமான பேச்சாளர் நீங்கள்தான்.
*****
No comments:
Post a Comment