19 Mar 2022

போதும் என்ற வாசகம்

போதும் என்ற வாசகம்

            செலவை எப்படிக் கட்டுக்குள் வைப்பது என்று என்னிடம் பலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களைப் பொருத்த வரையில் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் மனிதனாக நான் தெரிகிறேன். ஒரு கட்டுபாட்டுக்குள் இருக்கும் மனிதனாகவும் பல நேரங்களில் நான் அவர்களுக்குத் தெரிகிறேன்.

            இதற்கான மெனக்கெடல் மற்றும் திட்டமிடல் ஏதோ என்னிடம் இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். உண்மையில் அப்படி ஏதும் என்னிடம் இல்லை. எனக்கு எவ்வளவு தேவையோ அதைத் தாண்டி அதிகப்படியாக நான் சிந்திக்க விரும்புவதில்லை. இச்சிந்தனை நமது மூதாதையர்கள் தந்த சிந்தனையிலிருந்து வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

            நம் மூதாதையர்கள் சொன்ன, “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்ற வாசகம் எப்போதும் என் மனதில் இருக்கிறது. வாழ்க்கையில் மிக உயர்ந்த பொன்னைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். தங்கத்தைப் பற்றிதான் பேசுகிறார்கள். பொக்கிஷத்தைப் பற்றித்தான் பேசுகிறார்கள். ஆனால் அந்தப் பொக்கிஷம் தங்கத்தில் இல்லை என்று சொல்வதன் மூலம் அவர்கள் நம் வாழ்க்கைக்கு மகத்தான வழிகாட்டலைச் செய்திருக்கிறார்கள். இந்த வழிகாட்டலுக்காக அவர்களுக்கு நான் எப்போதும் நெஞ்சார்ந்த நன்றிகளைப் பல நேரங்களில் என்னையும் அறியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

            அவர்கள் தந்த அற்புதமான வாசகம் மிதமான வேகத்தில் வண்டியைச் செலுத்த உதவும் வேக கட்டுப்பாட்டுக் கருவியைப் போல பல நேரங்களில் எனக்கு உதவுகின்றது. என்னுடைய முயற்சி, உழைப்பு, செல்வம், மகிழ்ச்சி என்று எல்லாவற்றிலும் போதும் என்கிற வரம்பும் அளவும் இருப்பதை அவர்கள் தந்த வாசகத்தால் உணர்கிறேன். பெரும்பாலும் அந்த அளவோடு நான் நிறுத்திக் கொள்கிறேன்.

            அவர்கள் தந்த வாசகம் மேலும் பல விளைவுகளை என் வாழ்க்கையில் உண்டாக்கி விட்டது. என்னை ஒரு மாபெரும் செல்வந்தனாக ஆக்குவதிலிருந்து தடுத்து விட்டது. என்னை அளவுக்கதிகமாக முயற்சி செய்யாமல் உழைக்க விடாமலும் செய்து விட்டது. அந்த வாசகத்தின் பின்விளைவு என்று இதைக் குறிப்பிடலாம். ஆனால் எனக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவுக்குப் பெற்றுக் கொள்ள எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது.

            ஒவ்வொரு காரியத்தைத் துவங்கும் போதும் நான் போதும் என்ற அளவைத்தான் தீர்மானித்துக் கொள்கிறேன். அந்த வாசகம் சக்தியைத் தாண்டி செயலாற்றாமல் இருப்பதன் அவசியத்தை எப்போதும் எனக்குச் சொல்கிறது. எனக்குப் போதுமான அளவு எவ்வளவோ அந்தச் சக்தியின் அளவுக்குள் மட்டும் இருத்திக் கொள்ள அந்த வாசகம் எனக்கு எப்போதும் வழிகாட்டுகிறது.

            குறிப்பாக ஒரு சில விசயங்களை நான் சுட்டிக் காட்ட முடியும். அந்த வாசகம் எனக்கு மூன்று வேளை உணவு போதும் என்கிறது. இடையிடையே சிற்றுண்டியோ தேநீரோ தேவையில்லை என்று கூறுகிறது. அந்த வாசகம் எனக்குத் தந்த தாக்கத்தால் நான் அவற்றை விட்டு பனிரெண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பல நேரங்களில் அந்த வாசகம் என்னைச் சோதித்துப் பார்த்து இன்றைக்கு இரண்டு வேளை உணவு கூட போதுமானது என்கிறது. அது போன்ற நாட்களில் நான் இரண்டு வேளை உணவோடு நிறுத்திக் கொள்வதும் உண்டு.

            அந்த வாசகம் மேலும் எவ்வளவோ பாடங்களை எனக்குச் சொல்கிறது. நான் வைத்துக் கொள்ள வேண்டிய ஆடைகளின் எண்ணிக்கை, நான் சேர்த்துக் கொள்ள வேண்டிய நண்பர்களின் எண்ணிக்கை, உறவினர்களின் எண்ணிக்கை, ஒரு விழா என்றால் கூட்ட வேண்டிய நபர்களின் எண்ணிக்கை என்று எவ்வளவோ சொல்கிறது.

ஒவ்வொரு செயலைச் செய்யும் போதும் நான் அந்த வாசகத்திடம் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் எப்போதும் கேட்டுக் கொள்கிறேன். அந்த வாசகம்தான் எனக்குச் செலவுகளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் வழிகாட்டுகிறது. அந்த வாசகத்தின் வழிகாட்டல்களுக்காக நான் எப்போதும் நன்றியைச் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். உங்களுக்கும் அந்த வாசகம் பயன்பட்டால் நான் இன்னும் கூடுதலாக அந்த வாசகத்துக்கு நன்றியைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என் வாழ்க்கையை மாற்றிய வாசகங்களில் அந்த வாசகத்திற்கு அதிகமான பங்கிருக்கிறது. மகத்தான வாசககமாக என் வாழ்க்கையை வழிகாட்டும் வாசகம் அது. அந்த வாசகத்தாலே வாழ்க்கையில் நான் பெரிதாக வளர்ந்து விடவும் இல்லை என்ற எண்ணம் இல்லாமலும் பெரிதாக வளர்ந்து விட வில்லையே என்ற ஏக்கமும் இல்லாமல் இருக்கிறேன். அப்படி ஒரு மன அமைதியைத் தரும் வாசகத்தை வேறெந்த வாசகத்திலும் தரிசித்ததில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

*****

No comments:

Post a Comment

மனக்கண்ணாடியில் பார்த்தல்

மனக்கண்ணாடியில் பார்த்தல் நீ மிகுந்த மனக்கவலையை உருவாக்குகிறாய் எப்படி அதை எதிர்கொள்வது என்று தெரியவில்லை இருந்தாலும் எப்படி எதிர்கொண்...