நம்பிக்கைகள் நிரந்தரமானவை
தமிழகத்தில் ‘எண்ணம் போல் வாழ்வு’ என்ற அனுபவ வாசகத்தை ஆட்டோக்களின்
பின்புறம் காணலாம். எண்ணற்றோர் சொல்லும் அற்புத வாசகம் அது.
நம்பிக்கையோடு எண்ணுபவர்களின் வாழ்க்கைப் பிரகாசமாகத்தான் இருக்கிறது.
அவநம்பிக்கையாளர்கள் அவஸ்தைப்படுகிறார்கள்தான்.
நம்பிக்கையோடு எண்ணுபவர்கள் எல்லாம் பிரகாசமாகவா இருக்கிறார்கள்
என்பதில் ஐயப்பாடே வேண்டியதில்லை. அது அப்படித்தான். மாற்ற முடியாத ஒன்று. நம்பிக்கை
என்றால் முழுமையான நம்பிக்கை. அனைத்து அம்சங்களிலும் நம்பிக்கை என்பதை நீங்கள் புரிந்து
கொள்ள வேண்டும்.
நண்பர்களிடம் நம்பிக்கையோடு பேசும் சிலர் குடும்ப வாழ்க்கையில்
சங்கடங்களைச் சந்திப்பவர்களாக இருக்கலாம். இங்கே நம்பிக்கையின் விதி பொய்த்து விட்டதா
என நீங்கள் கேட்கலாம்.
நம்பிக்கையின் விதி எங்கேயும்
பொய்ப்பதில்லை. நீங்கள் அவர்களை உற்றுக் கவனித்தால் ஓர் உண்மையைக் கண்டறியலாம். நண்பர்களிடம்
நம்பிக்கையோடு பழகும், பேசும் அளவுக்கு அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களோடு இருக்க
மாட்டார்கள் என்பதுதான் அந்த உண்மை. அதனால்தான் நான் முழுமையான நம்பிக்கை என்பதையும்
அனைத்து அம்சங்களிலும் நம்பிக்கை என்பதையும் அழுத்தம் கொடுத்துக் குறிப்பிட்டேன்.
உறவுகளிடம், நண்பர்களிடம்
நம்பிக்கையாகப் பேசுபவர்கள் கூட அரசியல் குறித்து எதிர்மறையாகப் பேசுவார்கள். அந்த
அவநம்பிக்கையான உணர்வுகளும் சிந்தனைகளும் ஏதோ சில விசயங்களில் அவர்களின் வாழ்க்கையில்
பிரதிபலித்தே தீரும்.
நீங்கள் கேட்கலாம், வாழ்க்கையில்
அவநம்பிக்கையே தேவையே இல்லையா என்று? ஆமாம் அது தேவையில்லை. எல்லா அவநம்பிக்கைகளும்
நம்பிக்கையாக மாறுவதைத் தவிர அவற்றுக்கு வேறு வழியில்லை. அவநம்பிக்கைகளோடு தொடர்புடைய
அனைத்தும் தற்காலிகமானவை. நீண்ட காலத்துக்கு அவை நீடிக்க முடியாது. நம்பிக்கையே நிரந்தரமானது.
தொடர்ந்து நீடிக்கக் கூடியது.
குறுகிய காலமாகவும் தற்காலிகமாகவும்
நீடிக்கும் அவநம்பிக்கைகளில் நாம் காட்டும் ஈர்ப்பை நிரந்தரமான நீடித்த நம்பிக்கையில்
காட்ட வேண்டும். வாழ்க்கையும் வரலாறும் நமக்குச் சொல்லும் பாடம் அதுதான்.
இந்த உலகம் மட்டுமல்லாது
இந்தப் பிரபஞ்சமே நம்பிக்கையோடு நீடித்தும் நிலைத்தும் இருக்கிறது. அவநம்பிக்கைகள்
அவ்வபோது வந்து வந்து போகின்றன. அவ்வபோது வந்து வந்து போகும் அவநம்பிக்கைகள் மேல் நாம்
ஈடுபாடு காட்ட வேண்டியதில்லை.
புயலோ, வெள்ளமோ, பூகம்பமோ,
பேரிடர்களோ நெடுங்காலம் நீடித்து விடாது. அவற்றின் காலம் குறுகியது. அமைதியும் நம்பிக்கையும்தான்
நெடுங்காலம் நீடிக்கக் கூடியது.
நம் வாழ்க்கை வளமையாலும்
செழுமையாலும் ஆனது. நமது வாழ்வின் வளமையையும் செழுமையையும் நம் நம்பிக்கை எப்போதும்
தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம்பிக்கையின் நிழலில்
ஓய்வும் அமைதியும் கொள்ள வேண்டியதுதான். நம்பிக்கைகள் எப்போதும் நிறைவேறும், எப்படியும்
நிறைவேறும்.
*****
No comments:
Post a Comment