17 Mar 2022

இதுவரை என் இரு சக்கர அனுபவங்கள்

இதுவரை என் இரு சக்கர அனுபவங்கள்

            இரு சக்கர வாகனத்தை மிக மோசமாக வைத்திருந்த அனுபவம் எனக்கு நிறைய உண்டு. மோசமாக என்றால் படுமோசமாக என்றும் சொல்லலாம். அதன் காரணமாக எனது ஒரு இரு சக்கர வாகனத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு அதை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

            அப்போதெல்லாம் நான் எங்காவது இரு சக்கர வாகனத்தில் சென்றால் எனது வாகனத்தைப் பார்க்க நண்பர்கள் கூடி விடுவார்கள். அது நான் வாகனம் ஓட்டி வரும் அழகைப் பார்ப்பதற்கோ, வண்டியை அழகாக வைத்திருப்பதைப் பார்ப்பதற்கோ அன்று. அந்த இரண்டு விசயக்கூறுகளிலும் நான் சுத்த பூஜ்யம்தான்.

            எனது வண்டியில் ஒட்டியிருக்கும் அழுக்குகளையும் தூசுக்களையும் பார்க்கத்தான் நண்பர்கள் அப்படி கூடுவார்கள். அதெப்படி இவன் வண்டியில் மட்டும் இம்மாம் தூசுக்களும் அழுக்குகளும் என்று பார்க்கும் நண்பர்கள் ஆச்சரியப்பட்டு விடுவார்கள். நாள் கணக்கில் வண்டியைத் துடைக்காமல் வைத்திருந்தால் அப்படித்தான் இருக்கும் என்றாலும் என் வண்டி அதற்கும் மேல் இருந்தது எப்படி என்பது எனக்கு இன்று வரை புரியாத ஆச்சரியம்தான்.

            கிட்டதட்ட இரண்டு வண்டிகளை மிக மோசமாக வைத்துக் கொண்டதன் மூலம் இரண்டையும் பயன்படுத்த முடியாத நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறேன். எனது குடும்பத்தில் யாரும் இப்படியில்லை. ஆனால் நான் இப்படியாக இருந்தேன். இரண்டு மூன்று ஆண்டுகள் ஒரு இரு சக்கர வாகனத்தை உருப்படியாகப் பயன்படுத்தி இருந்தால் பெரிய விசயம்.

            என் அப்பா 1996 இல் வாங்கிய டி.வி.எஸ். பிப்டியை 2017 வரைப் பயன்படுத்தினார். விட்டிருந்தால் இப்போது வரை அதைப் பயன்படுத்திக் கொண்டிருப்பார். வீட்டிலிருந்த நாங்கள்தான் அவரை மல்லுக்கட்டி டி.வி.எஸ். எக்செல் 100 க்கு மாற்றினோம். அப்போது கூட ஸ்கூட்டி வகைக்கு மாறாமல் அவர் பயன்படுத்திய மாடலை ஒத்த மாடலுக்கே மாறினார்.

            இரண்டு இரு சக்கர வாகனத்தில் விழுந்த அடி என்னை இப்போது மாற்றியிருக்கிறது. இப்போது மூன்றாவதாக வாங்கியிருக்கும் வாகனத்தைக் கொஞ்சம் கவனமாகவே பராமரிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். தினந்தோறும் காலையில் வண்டியை இயக்குவதற்கு முன் துடைத்து விடுகிறேன். அநேகமாக மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வண்டியை சேவைப்பிரிவுக்குக் கொண்டு சென்று அதை நன்முறையில் பராமரிக்கிறேன். அவர்கள் மாற்ற வேண்டியதை மாற்றி, நீக்க வேண்டியதை நீக்கி, சேர்க்க வேண்டியதை சேர்த்து ஒவ்வொரு முறையும் வண்டியைப் புதிது போலச் செய்து விடுகிறார்கள். அவர்களுக்கு எப்போதும் என் விஷேச நன்றிகள்.

            வண்டியின் பிரேக் சூவை அவ்வபோது சோதிக்க வேண்டும், அதிலுள்ள பிரேக் பேடை வண்டியின் இயக்கத்திற்குத் தகுந்தாற் போல் மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் இப்போது கிடைத்த அனுபவங்கள். அதாவது வண்டியைத் தள்ளிப் பார்க்கும் போது அதன் இயக்கம் நெகிழ்வாக இருக்க வேண்டும். அதற்கேற்றாற் போல வண்டிக்குத் தேவையான மாற்றங்களைச் செய்து விடுங்கள் என்று வண்டியைச் சேவைக்கு விடும் போது சொல்லி விடுகிறேன். டயர்களை முக்கால்வாசி தேய்ந்தாலே மாற்றி விடுகிறேன். இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் தேய்ந்த டயர்களை வைத்துச் சமாளிக்கலாம் என்றாலும் மாற்றி விடுகிறேன்.

            ஒரு முக்கியமான விசயம் சொல்ல வேண்டும் என்றால் கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேல் இருக்கும் டயர்களுக்குக் காற்றடித்து. அது எப்படி கனக்கச்சிதமாக அதற்குரிய காற்றழுத்தம் மாறாமல் இன்று வரை இருக்கிறது என்பது புரியவில்லை. எப்போது சோதித்தாலும் சரியான அழுத்த நிலையில் இருக்கிறது.

            வண்டியைப் பளிச்செனத் துடைக்கும் நுட்பம் எல்லாம் எனக்குப் போதாது. டீசல் போட்டுத் துடைக்கும் போது வண்டிக்கு ஒரு பளிச் கிடைக்கிறது. அதை எப்போதாவது மனதில் ஒரு குஷி பிறந்து விடும் போது மெனக்கெட்டு டீசல் வாங்கி வந்து செய்வதுண்டு. அது ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை கணக்கில் என்றாலும் அந்த ஆடி அமாவாசை கணக்குத் தவறாது.

            வண்டியில் சராசரியாக 30 கி.மீ. வேகம்தான். 35 கி.மீ. வேகத்தைத் தாண்டியதில்லை. அது எப்பேர்ப்பட்ட சாலையாக இருந்தாலும் 35 கி.மீ. வேகமே அதிகபட்ச வேகம். வண்டியின் சத்தம் இப்போது வரை ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. வண்டியைப் புதிதாக எடுத்த போது எடுத்த சத்தம் என்னவோ அதே சத்தம்தான் இப்போதும் காலையில் வண்டியை எடுக்கும் போதும்.

            இப்படி அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மைச் செதுக்கிக் கொண்டே போகின்றன. நீங்களும் உங்கள் இரு சக்கர வாகன அனுபவங்களைச் சொல்லுங்கள். பலருக்கும் பயன்படலாம். பயனுடையதைச் சொல்வதைப் போன்ற அறம் என்ன இருக்கிறது சொல்லுங்கள். “அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்” (குறள் 96) என்கிறார் வள்ளுவர்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...