அலைவுறும் மனமும் நானும்
இங்கெனச் சிலவும் அங்கெனச்
சிலவும்
அங்கங்கே இருக்கின்றன எனக்கானவை
எனக்கான பொருட்களைப் போல
நானும் அங்கங்கே கலந்திருக்கிறேன்
நகரத்தில் இருக்கையில் உண்டாகும்
வெறுமையில்
கிராமத்தின் ஏக்கங்களும்
கிராமத்தில் தவற விட்டிருக்கும்
பரபரப்புகளில்
நகரத்தின் நினைவுகளும் கலந்திருக்கின்றன
வெளி பிரதேசத்தில் இருக்கும்
போது
சொந்தப் பிராந்தியத்தின்
பரிதவிப்புகளும்
தாய்த் தேசத்தில் இருக்கும்
போது
தூர தேசங்களின் கனவுகளும்
எனக் கலந்திருந்தேன்
ஒரு நேரமும் ஓரிடத்திலும்
நிலையாக இருந்திராத என்னை
நீங்கள் முழு முற்றாகப் பார்த்திருக்க
முடியாது
அங்கங்கும் கொஞ்சம் கொஞ்சம்
இருந்திருக்கும் நான்
இப்போதும் அப்படித்தான்
எங்கும் நிலையாகத் தங்கியிருக்க
முடியாத தேசாந்திரியைப் போல
அலைந்து கொண்டிருக்க சபிக்கப்பட்டிருக்கிறோம்
என்னூடாக மனமும் மனதினூடாக
நானும்
*****
No comments:
Post a Comment