31 May 2017

ஆச்சரிய மனிதர்கள்


ஆச்சரிய மனிதர்கள்
            அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க வைக்க வேண்டும் என்ற முயற்சிகள் ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் தொடங்குவது வழக்கம். ஒரு சடங்கு போல தொடங்கி மறுபடியும் அடுத்தக் கல்வியாண்டில் அந்த சடங்கு மீண்டும் நிகழ்த்தப்படும்.
            அரசுப் பள்ளிகளில் சீருடை, பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், காலணிகள், மதிய உணவு என்று அத்தனையும் இலவசம். சேர்க்கைக் கட்டணம், நன்கொடை, கட்டிட நிதி என்று எதுவும் கிடையாது.
            தனியார் பள்ளிகளில் சீருடை, பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், காலணிகள் என்று அனைத்தையும் விலை கொடுத்துதான் வாங்கிக் கொடுக்க வேண்டும். தவிர சேர்க்கைக் கட்டணம், நன்கொடை, கட்டிடநிதி, தேர்வுக் கட்டணம் என்று கட்டணப் பட்டியல் ஒரு டஜனுக்கு மேல் தேரும்.
            இவ்வளவு இருந்தும் அரசுப் பள்ளிகளை நிராகரித்து தனியார் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள்தான் அதிகம். 
            அவர்களுக்கு ஏதோ சில விசயங்கள் அரசுப் பள்ளிகளில் பிடிக்கவில்லை. ஏதோ சில விசயங்கள் தனியார் பள்ளிகளில் பிடித்திருக்கிறது. நாம் பிடித்த கடையில் கடைச்சரக்கு வாங்குவது போலத்தான், தங்களுக்குப் பிடித்த பள்ளியில் அவர்கள் படிப்புச் சரக்கை வாங்க நினைக்கிறார்கள். இல்லையென்றால் இலவசமாக கிடைக்கும் ஒரு பொருளை விட்டு விட்டு காசு கொடுத்து அதே பொருளை ஏன் வாங்க நினைக்க வேண்டும்?
            "ப்ரியா கொடுத்தா பினாயிலைக் கூட குடிப்பாங்கப்பா!" என்ற சொலவடை தோன்றிய சமூகத்தில் கல்வியை ப்ரியாகக் கொடுத்தும் காசு கொடுத்து வாங்குவதில் திருப்தி காணும் தன்மை நிச்சயம் ஆச்சரியம்தான். இந்த ஆச்சரியமான திருப்திக் காணும் தன்மை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகம். அநேக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளின் படிப்பில்தான் தனியார் பள்ளிகள் கொழித்துக் கொண்டும், செழித்துக் கொண்டும் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் சம்பளம் வாங்கி, அதை அப்படியே தனியார் பள்ளிகளில் கொட்டிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களும் நிச்சயம் ஆச்சரியம்தான்.
*****

சோதனை மேல் சோதனை


தப்பிச்சிடலாமா?
            "எப்படியும் தேர்தல்ல ஜெயிச்சிட்டா..." என்ற தலைவரிடம், "ரெய்ட்லேர்ந்து தப்பிச்சிடலாமா?" அப்பாவியாகக் கேட்டார் சின்னசாமி.
*****
சோதனை மேல் சோதனை
            "சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!" பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த சுந்தர், "இதுக்கு என்னடா அர்த்தம்?" என்று கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னான் திலகர், "ரெய்டு மேல ரெய்டு போதுமடா சாமின்னு அர்த்தம்!"
*****
சீனியர் ஜூனியர்
            சீனியர் ஹீரோக்களின் மழுப்பான பதில்கள் போலிருப்பதில்லை, ஜூனியர் ஹீரோக்களின் அரசியல் குறித்தப் பதில்கள்.
*****

கருணையைக் கொன்ற சிவப்பு


கேள்வி
வேளா வேளைக்கு
வயிறு முட்டச் சாப்பிடுபவன்
பசி என்றால் என்னவென்று கேட்பான்.
அவனுக்கு மேலும் மேலும் சோற்றைப் போட்டு
அது பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும்
டை கட்டி, ஷீ மாட்டி
முதுகு ஒடிய புத்தகம் சுமக்க வைக்கும்
அவன் கற்கும் காசு பிடுங்கிக் கல்வி.
*****

கருணையைக் கொன்ற சிவப்பு
அந்த சிக்னல்
இன்னும் கொஞ்சம்
கருணை காட்டி
சிவப்பு காட்டியிருக்கலாம்
பார்வையற்ற அந்த முதியவர்க்கு
ஒரு ஐந்து ரூபாய் நாணயம் விழுவதற்குள்
விழுந்து விட்டது மஞ்சளும்
அதைத் தொடர்ந்த பச்சையும்.
*****

ஒன்லி 25!


ஒன்லி 25!
            நான்கு மாடிகளேறி 25 ரூபாய்க்கு வாட்டர் கேனைப் போட்டு விட்டு இறங்கிய வினோத்தின் காதில் விழுந்தது அந்த பிரேக்கிங் நியூஸ், "ஏ.டி.எம்.மில் ஒரு முறை பணம் எடுத்தால் 25 ரூபாய்க் கட்டணம்!"
*****
இடம் பார்த்தல்
            ஒரு வாரமாக தண்ணீர் வராமல் குடத்தோடு அலைந்து கொண்டிருந்த குமுதாவிடம் சொன்னாள் அமுதா, "நம்ம ஊருக்கு ஜீப்ல வந்து டாஸ்மாக்குக்கு இடம் பார்த்துட்டு இருக்காங்களாம்!"
*****
பின்வினை
            "சினிமாவிலேர்ந்து டேரக்டா பாலிடிக்ஸ்தான்!" சொன்ன கதிரின் பின்னால் அட்டகாசமாய்ச் சிரிக்கும் ரஜினியின் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
*****

கடவுளின் முடிவுகள்


கடவுளின் முடிவுகள்
நேசித்தவளின் முகத்தில்
ஆசிட் வீசியவனை என்ன சொல்வது?
ஆதாம்கள் கடித்த ஆப்பிளின் எச்சில் என்றா?
ஆப்பிள் மர நிழல்
பாதுகாப்பில்லை என்று
ஏவாள்கள் முடிவெடுத்த நிலையில்
அங்கே கண்காணிப்பு கேமிராக்களைப்
பொருத்துவதாக முடிவெடுத்தார் கடவுள்.
*****

அக்கறை பாஸ்! அக்கறை!
முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்த மகன்
தினம் தினம்
முதியோர்களைக் காக்கச் சொல்லி
ஸ்டேட்டஸ் போடுகிறான்
தன்னால் முடியாததை
இன்னொருவராவது செய்யட்டுமே
என்ற சமூக அக்கறையோடு!
*****

30 May 2017

சாமர்த்திய அரசர் சம்புலிங்கம்


சாமர்த்திய அரசர் சம்புலிங்கம்
            சமத்து சம்புலிங்கம் ஒரு தொடை நடுங்கி அரசர். ‍பக்கத்து நாடுகளோடு பகை வேண்டாம் என்று அந்தந்த நாடுகளில் போடும் சட்டங்களையெல்லாம் எதிர்பேச்சு பேசாமல் தன் நாட்டிலும் அமல்படுத்தி விடுவார்.
            அதனால் அவரது அரசாட்சியில் போர் என்பதே இல்லாமல் போய் விட்டது. அவருக்கு ஒரு விநோதப் பழக்கம் இருந்தது. தூது ஓலையோடு வரும் புறாக்களைப் பிடித்து கறி சமைத்து சாப்பிட்டு விடுவார். தனக்கு தூது ஓலைகள் எதுவும் வரவில்லை என்று அக்கம் பக்கத்து நாடுகளையும் சமாளித்து விடுவார்.
            இப்படியாக புறாக்கறி சாப்பிட்டது போலும் ஆச்சு, தூது ஓலைகளை படிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போச்சு என்று அவர் சந்தோசமாக இருந்து வந்தார்.
            அப்போதுதான் தூதுவன் சொன்ன செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தார் சம்புலிங்கம்.
            "நன்றாகக் கேட்டாயா? பக்கத்து நாட்டு மன்னன் தடை செய்தது மாட்டு இறைச்சியாக இருக்கப் போகிறது?" தூதுவனைக் குடாய்ந்தார் சம்புலிங்கம்.
            "இல்லை மன்னா!" பவ்வியமாக பதிலளித்தான் தூதுவன்.
            "அப்படியானால் என் தலை மேல் கை வைத்து சத்தியம் செய்து சொல் பார்ப்போம்!"
            "தங்கள் தலை மேல் என்ன மன்னா! தங்கள் பரம்பரை மேல் சத்தியமாகச் சொல்கிறேன். பக்கத்து நாட்டு மன்னன் தடை செய்தது மாட்டு இறைச்சியை அல்ல, புறா இறைச்சியைத்தான்!"
            "எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? இனி என் நாட்டிலும் அல்லவா நான் புறா இறைச்சியைத் தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் வேலையற்ற போக்கத்த பக்கத்து நாட்டு மன்னன் வேண்டுமென்றே படையெடுத்து வந்து பயமுறுத்துவானே!" கண்ணீர் விட்டு கதறி அழ வேண்டும் போலிருந்தது புறா இறைச்சியில் ருசி கண்ட பூனையான மன்னர் சம்புலிங்கத்துக்கு.
*****

திறக்காத பூட்டுகள்


ரொம்ப நல்லவர்
            "ரொம்ப டீசன்டான ஆளு!" என்று சொல்லப்பட்ட ரங்கசாமியின் மொபைலில் இருந்தது அந்த வீடியோ.
*****
திறக்காத பூட்டுகள்
            கணவனின் மொபைலில் தினமும் பாஸ்வேர்டைப் போட்டு முயற்சித்துக் கொண்டிருந்தாள் மாதவி.
*****
காதல் கள்வன்
            "உன்னை எப்போதும் பார்த்துகிட்டு இருக்கணும்னுதான் நிறைய போட்டோஸ் எடுத்து வெச்சிருக்கிறேன்!" என்ற முகுந்தின் மொபைலில் அனிதாவின் அரை நிர்வாணப் படம் ஒன்றும் இருந்தது.
*****

காட்சி நிச்சயம்


காட்சி நிச்சயம்
அந்தப் பார்வையில் ஒரு குரூரம் இருக்கிறது
அவர்கள் நம்பிக்கையோடு பார்க்க மாட்டார்கள்
சட்டைப் பையில் இருப்பதை கவனிப்பார்கள்
கொஞ்சம் அசந்தால் தூக்கி எறிந்து விடுவார்கள்
வேகமாகச் சென்றாக வேண்டிய பாதையில்
மெதுவாகச் செல்ல முடியாது
கருணை காட்ட முடியாது
இயந்திரம் போல் சென்று கொண்டிருப்பதாகத் தோன்றும்
ஆனால், அது அப்படியில்லை என்றால்
ஒரு ரோபோட் வந்து
உங்களைக் கொன்று போடும்
துரதிர்ஷ்டவசமாக நீங்கள் பிறந்து விட்டீர்கள்
நீங்கள் வாழ வைக்கப்படுவீர்கள்
அது உங்கள் தலையெழுத்து
நொந்து கொண்டு வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை
என்றெண்ணி இருந்து விடாதீர்கள்
உன்னிப்பாகப் பாருங்கள்
உங்கள் பயணத்தில் உங்களைப் பார்த்து
ஒரு குழந்தை கையசைக்கும் காட்சி நிச்சயம் இருக்கும்.
*****

கண் அன்னவன்


புகார்
            காணாமல் போன சிசிடிவி கேமிரா பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு வந்தான் கேசவன்.
*****
கண் அன்னவன்
            வீட்டைச் சுற்றி கண்காணிப்பு கேமிரா வைத்த கணவனைப் பெருமையோடு பார்த்தாள் அவன் மனதில் இருக்கும் சந்தேகம் புரியாத வித்யா.
*****
டிரெண்ட்
            டிரெண்டியா எஸ்டேட்ல நடக்குற மாதிரி பழி வாங்கும் பேய்க் கதையைச் சொன்ன இயக்குநரை டிக் அடித்தாள் தயாரிப்பாளர்.
*****

பிரார்த்தனை


பிரார்த்தனை
பத்திரமாய் பள்ளியிலிருந்து
திரும்பிய மகன்
நாளை கடத்தப்படலாம்.
அதற்காக கடத்தல்காரர்களிடம்
பேரம் பேச முடியுமா?
போலீஸ்காரர்களிடம் சொல்லித்தான்
சிரமம் கொடுக்க முடியுமா?
இதையெல்லாம் பார்த்து
நாளை என் மகன்
ஒரு கடத்தல்காரனாக மாறி விடாமல்
இருக்க வேண்டும் என்று
பிரார்த்திக்கத்தான் நம்மால் ஆகும்.
*****

பாடம்
நல்லா படிச்சாத்தான்
வேலைக்குப் போகலாம்
கை நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்றால்
அதற்குத்தான் பக்கத்து வீட்டுப் பையன் இருக்கான்
கடத்திவிட்டு கேட்டப் பணத்தைக் கறக்கலாம்
என்கிறான்
தினம் தினம் உன்னிப்பாகச்
செய்திகள் பார்க்கும் மகன்.
*****

29 May 2017

வெள்ளந்தியாக ஒரு கொள்கை பரப்புச் செயலாளர்


வெள்ளந்தியாக ஒரு கொள்கை பரப்புச் செயலாளர்
            அரசியலில் டிரெண்ட் மாறிக் கொண்டிருப்பதை சமத்து சம்புலிங்கம் சமீப காலமாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
            முன்பெல்லாம் ஒரு பொதுக்கூட்டத்துக்கு இருபது தொண்டர்களைக் கூட்டி வந்தால் கிளைச் செயலாளர் ஆக்கி விடுவார்கள். ஐம்பது தொண்டர்களைக் கூட்டி வந்தால் ஒன்றிய செயலாளர் ஆக்கி விடுவார்கள். ஆயிரம் தொண்டர்கள் என்றால் மாவட்டச் செயலாளரே ஆகி விடலாம்.
            இப்போது அப்படியில்லை, தொண்டர்களை அழைத்து வருவது தனி ஏற்பாடாகி விட்டது. அவர்களுக்கு தலைக்கு ஐநூறும், ஒரு குவார்ட்டரும், ஒரு பிரியாணி பொட்டலமும் கொடுப்பது பொருத்து பதவிகள் தீர்மானமாகின்றன. ஐம்பது தொண்டர்களுக்கு மேற்காணும் செலவைச் செய்ய திராணியிருந்தால் ஒன்றிய செயலாளர் போஸ்ட் தயார். ஆயிரம் தொண்டர்கள் என்றால் மாவட்டச் செயலாளர் என்றாகி விட்டது.
            தான் இருக்கும் நிலையில் இதெல்லாம் சாத்தியமாக என யோசித்துப் பார்த்த சம்புலிங்கம், தலைவரிடம் தன் தகுதிக்கு ஏற்றாற் போல் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கேட்டார்.
            "அதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்குலே?" என்றார் தலைவர்.
            "டெய்லி பத்தாவது வட்டம் சார்புல தலைவருக்கு ஆயிரம் லைக்ஸூம், 500 கமெண்டும் போட ஏற்பாடு பண்ணிடறேன்!" என்றார் சம்புலிங்கம் தன் கொள்கையில் சற்றும் மனம் சளைக்காமல் வேதாளத்தோடு போராடும் விக்கிரமாதித்யனைப் போல வெள்ளந்தியாக.
*****

இடம் பொருள் பேரம்


நேரம்
            நல்ல வெயிலில் நடுரோட்டில் பஞ்சராகி நின்றது பேருந்து.
*****
புத்தி
            நிரம்பிய கூட்டம் வியர்வையில் நனைய, கர்ச்சீப்பைப் போட்டு இடம் பிடித்த ஏகாம்பரம் பேருந்து கிளம்பியதும் ஏறிக் கொண்டார்.
*****
இடம் பொருள் பேரம்
            இளநீர்க்காரனிடம் பேரம் பேசிய நன்மாறன் கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை வாங்கிக் கொண்டு நூறு ரூபாய்த் தாளை நீட்டினான்.
*****

மலை சாட்சி


மலை சாட்சி
இந்தத் தேயிலைத் தூள்
தேநீராய் தயாரிக்கப்பட்டால்
சுறுசுறுப்புத் தரும் அன்றோ!
அப்படித்தான் வாங்குகிறேன்
சூப்பர் மார்க்கெட்டின் ஏசி அறையில்
அடுக்கப்பட்ட தேயிலைப் பாக்கெட்டுகள்
ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்து.
இது எத்தனை பேரின்
வியர்வையை உறிஞ்சி
தேநீராய் ஊற்றுகிறதோ
என்ற மலையளவு கேள்விக்கு
அது விளைந்த மலையே சாட்சி.
*****

கணம்
செயின் பறிப்புச் சம்பவத்துக்குப் பிறகு
அநேகமாக அவள் விட்டு விட்டாள்
செயின் போடுவதை.
இப்போது பாதுகாப்பாய் உணர்ந்தாலும்
கழுத்து அறுபடுவதாய் உணரும் அவள்
அதை மட்டும் விட முடியாமல் தவிக்கிறாள்
பைக்குகள் கடக்கும் ஒவ்வொரு கணத்திலும்.
*****

ஜீரோ எம்.பி.யும் சுகரும்


ஜீரோ எம்.பி.யும் சுகரும்
            "சுகர் லெவல் கம்மி பண்ண ஒரு வழி சொல்லுங்க!" என்றவரிடம், "மொபைல்ல பார்க்குற எம்.பி. லெவல்ல கம்மி பண்ணுங்க!" என்றார் டாக்டர்.
*****
யாவரும் நட்பே!
            எந்தக் கட்சியும் பகைத்துக் கொள்ள தயாரில்லை எல்லா கட்சிக் கூட்டத்துக்கும் ஆட்கள் சப்ளை செய்யும் பரமசிவத்தை.
*****
செயல்
            கொளுத்தும் வெயிலை எதுவும் சொல்ல முடியாத பேருந்து பயணிகள் பேருந்தை எடுக்காத ஓட்டுநரைத் திட்டித் தீர்த்தனர்.
*****

தீயைப் போல டெலிட்டுதல்


தீயைப் போல டெலிட்டுதல்
ஒவ்வொரு நாளும்
ஆசையோடு எடுத்துக் கொண்ட
ஒவ்வொரு செல்பியையும்
ஒரே நாளில்
காட்டுத் தீயைப் போல
ஒட்டு மொத்தமாக டெலிட்
செய்து கொண்டிருந்தாள்
அனிதா
பிரேக் அப்பிற்குப் பின்.
*****

கத்தியைத் தீட்டியவன்
கத்தி எடுத்தான்
கலகக்காரன்
ஆறு மாதங்களாக
குரோதமாக வளர்ந்து கொண்டிருந்த
தாடி எடுக்க.
*****

28 May 2017

ஒண்ணுன்னா ஒண்ணு! ரெண்டுண்ணா ரெண்டு!


ஒண்ணுன்னா ஒண்ணு! ரெண்டுண்ணா ரெண்டு!
            நாட்டில் புலமைக்கு மதிப்பு இருந்தால்தானே புலவர்களுக்கு மதிப்பு இருக்கும். புலவர் சமத்து சம்புலிங்கத்தின் பாடு இதனால் திண்டாட்டமாக இருந்தது.
            மன்னராட்சிக் காலத்தில் தப்பும் தவறுமாக, குற்றமும் பிழையுமாக எழுதி பொழைப்பை ஓட்டி விட்டார். இப்போது மக்களாட்சிக் காலத்தில் படாத பாடு படுகிறார்.
            தலைவர் தண்டபாணி மேல் பிள்ளைத்தமிழ் பாடலாம் என்றால் "அப்படியென்றால் என்ன?" என்கிறார் தண்டபாணி.
            எதிர்க் கட்சித் தலைவர் சின்னமலை மேல் உலா பாடலாம் என்றால், "அதனால் என்னவாகும்?" என்கிறார் சின்னமலை.
            சரிதான் என்ன ஆனாலும் ஆகட்டும் என்று, ஒரு கட்சி ஆபீஸூக்கு சென்ற சமத்து சம்புலிங்கம் ரெண்டு வாழ்த்துப் பாக்களைப் பாடிக் கொடுத்தார்.
            "எதுக்கு ரெண்டு வாழ்த்துப் பாக்களைக் கொடுக்கிறீர்கள்?" கட்சி ஆபீஸில் இருந்தவர்கள் கேட்டனர்.
            "கட்சியில் ஒரு கோஷ்டி இருந்திருந்தால் ஒன்று கொடுத்திருப்பேன். ரெண்டு கோஷ்டி இருப்பதால் ரெண்டு கொடுக்கிறேன்." என்றார் சம்புலிங்கம்.
            "எதாவது ஒரு கோஷ்டிக்கு மட்டும் கொடுங்க!" என்றனர் அங்கிருந்தவர்கள்.
            "ரெண்டு கோஷ்டியில எந்த கோஷ்டி ஆட்சிக்கு வரும்னு எனக்கென்ன தெரியும்? அதனால ரெண்டு கோஷ்டிக்கும் இருக்கட்டும்!" என்று கூறிய சம்புலிங்கத்திற்கு ரெண்டு கோஷ்டியும் பாரபட்சம் பார்க்காமல் தலைமுறைகள் போற்றும், காலத்துக்கும் மறக்காத பரிசிலாக தர்ம அடிகளைக் கொடுத்து அனுப்பினர்.
*****

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...