சாமர்த்திய அரசர் சம்புலிங்கம்
சமத்து சம்புலிங்கம் ஒரு தொடை நடுங்கி
அரசர். பக்கத்து நாடுகளோடு பகை வேண்டாம் என்று அந்தந்த நாடுகளில் போடும் சட்டங்களையெல்லாம்
எதிர்பேச்சு பேசாமல் தன் நாட்டிலும் அமல்படுத்தி விடுவார்.
அதனால் அவரது அரசாட்சியில் போர் என்பதே
இல்லாமல் போய் விட்டது. அவருக்கு ஒரு விநோதப் பழக்கம் இருந்தது. தூது ஓலையோடு வரும்
புறாக்களைப் பிடித்து கறி சமைத்து சாப்பிட்டு விடுவார். தனக்கு தூது ஓலைகள் எதுவும்
வரவில்லை என்று அக்கம் பக்கத்து நாடுகளையும் சமாளித்து விடுவார்.
இப்படியாக புறாக்கறி சாப்பிட்டது போலும்
ஆச்சு, தூது ஓலைகளை படிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போச்சு என்று அவர் சந்தோசமாக
இருந்து வந்தார்.
அப்போதுதான் தூதுவன் சொன்ன செய்தி கேட்டு
அதிர்ச்சியடைந்தார் சம்புலிங்கம்.
"நன்றாகக் கேட்டாயா? பக்கத்து நாட்டு
மன்னன் தடை செய்தது மாட்டு இறைச்சியாக இருக்கப் போகிறது?" தூதுவனைக் குடாய்ந்தார்
சம்புலிங்கம்.
"இல்லை மன்னா!" பவ்வியமாக பதிலளித்தான்
தூதுவன்.
"அப்படியானால் என் தலை மேல் கை வைத்து
சத்தியம் செய்து சொல் பார்ப்போம்!"
"தங்கள் தலை மேல் என்ன மன்னா! தங்கள்
பரம்பரை மேல் சத்தியமாகச் சொல்கிறேன். பக்கத்து நாட்டு மன்னன் தடை செய்தது மாட்டு
இறைச்சியை அல்ல, புறா இறைச்சியைத்தான்!"
"எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம்
நடக்கிறது? இனி என் நாட்டிலும் அல்லவா நான் புறா இறைச்சியைத் தடை செய்ய வேண்டும். இல்லையென்றால்
வேலையற்ற போக்கத்த பக்கத்து நாட்டு மன்னன் வேண்டுமென்றே படையெடுத்து வந்து பயமுறுத்துவானே!"
கண்ணீர் விட்டு கதறி அழ வேண்டும் போலிருந்தது புறா இறைச்சியில் ருசி கண்ட பூனையான
மன்னர் சம்புலிங்கத்துக்கு.
*****
No comments:
Post a Comment