31 May 2017

ஆச்சரிய மனிதர்கள்


ஆச்சரிய மனிதர்கள்
            அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க வைக்க வேண்டும் என்ற முயற்சிகள் ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் தொடங்குவது வழக்கம். ஒரு சடங்கு போல தொடங்கி மறுபடியும் அடுத்தக் கல்வியாண்டில் அந்த சடங்கு மீண்டும் நிகழ்த்தப்படும்.
            அரசுப் பள்ளிகளில் சீருடை, பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், காலணிகள், மதிய உணவு என்று அத்தனையும் இலவசம். சேர்க்கைக் கட்டணம், நன்கொடை, கட்டிட நிதி என்று எதுவும் கிடையாது.
            தனியார் பள்ளிகளில் சீருடை, பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், காலணிகள் என்று அனைத்தையும் விலை கொடுத்துதான் வாங்கிக் கொடுக்க வேண்டும். தவிர சேர்க்கைக் கட்டணம், நன்கொடை, கட்டிடநிதி, தேர்வுக் கட்டணம் என்று கட்டணப் பட்டியல் ஒரு டஜனுக்கு மேல் தேரும்.
            இவ்வளவு இருந்தும் அரசுப் பள்ளிகளை நிராகரித்து தனியார் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள்தான் அதிகம். 
            அவர்களுக்கு ஏதோ சில விசயங்கள் அரசுப் பள்ளிகளில் பிடிக்கவில்லை. ஏதோ சில விசயங்கள் தனியார் பள்ளிகளில் பிடித்திருக்கிறது. நாம் பிடித்த கடையில் கடைச்சரக்கு வாங்குவது போலத்தான், தங்களுக்குப் பிடித்த பள்ளியில் அவர்கள் படிப்புச் சரக்கை வாங்க நினைக்கிறார்கள். இல்லையென்றால் இலவசமாக கிடைக்கும் ஒரு பொருளை விட்டு விட்டு காசு கொடுத்து அதே பொருளை ஏன் வாங்க நினைக்க வேண்டும்?
            "ப்ரியா கொடுத்தா பினாயிலைக் கூட குடிப்பாங்கப்பா!" என்ற சொலவடை தோன்றிய சமூகத்தில் கல்வியை ப்ரியாகக் கொடுத்தும் காசு கொடுத்து வாங்குவதில் திருப்தி காணும் தன்மை நிச்சயம் ஆச்சரியம்தான். இந்த ஆச்சரியமான திருப்திக் காணும் தன்மை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிகம். அநேக அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளின் படிப்பில்தான் தனியார் பள்ளிகள் கொழித்துக் கொண்டும், செழித்துக் கொண்டும் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் சம்பளம் வாங்கி, அதை அப்படியே தனியார் பள்ளிகளில் கொட்டிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களும் நிச்சயம் ஆச்சரியம்தான்.
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...