30 Jul 2025

மனதின் ஆரவாரம்

மனதின் ஆரவாரம்

காலத்தை நம்ப முடியாது

தூக்கியும் விடும்

தலைகுப்புற கவிழ்த்தும் விடும்

இரண்டையும் செய்து விட்டு

தூக்கத்தைப் பறித்து விடும்

தூக்கம் வரவில்லையா

பரவாயில்லை

கையில் ஸ்மார்ட்போன் எதற்கு இருக்கிறது

ஸ்மார்ட்டாக நோண்டிக் கொண்டிரு

கனவுகளில் கண்ட கண்ட கருப்பு ஆடுகளை

நினைத்துக் கொண்டிராதே

உனக்குதான் அது கருப்பு ஆடு

அதற்கு அது

என்ன நிறமென்றே தெரியாது

நாயே என்று சொல்கிறாயே

மனிதா என்று சொல்லுமாறு

என்றாவது நடந்திருக்கிறாயா

ஒழுங்கு கொஞ்சமேனும் வாய்திருக்கிறதா

ஒரு பாலிதீன் பையைத் தவிர்ப்பது கூட

சுற்றுச்சூழலுக்கு உதவும்

உன் மனசு ஒரு மஞ்சள் பையைத்

தூக்க விடுமா

ஆனால் பார் பல நேரங்களில்

சட்டத்தை மீறாமல்

வாகனம் ஓட்ட முடியாது

நேர்மையாளர்கள்

தண்டம் கட்டுவார்கள்

சாமர்தியசாலிகள்

தப்பித்துக் கொள்வார்கள்

சாமர்த்தியசாலிகள் திருப்தியாளர்களும் இல்லை

நேர்மையாளர்கள் அதிருப்தியாளர்களும் இல்லை

யாரிடமிருந்தும்

யாரும் எதிர்பார்க்காமல் இருந்தால்

யாரிடமும் யாருக்கும்

எந்த அதிருப்தியுமில்லை

எதிர்பார்க்காமல் எதுவும் கிடைப்பதில்

எந்தத் திருப்தியுமில்லை

எதிர்பார்த்துக் கிடைக்காமல் போவதால் ஏமாற்றம்

எதிர்பார்ப்பில்லாமல் கிடைக்காமல் போவதில்

ஏதுமில்லை தடுமாற்றம்

எதிர்பார்ப்பால் வரும் பிரச்சனைகள்

எதுவும் பிரச்சனைகளே இல்லை

எதிர்பார்ப்புகள் இல்லையென்றால்

பிரச்சனைகளே இல்லை

யோசித்துப் பார்க்கையில்

எல்லாம் முடிகையில் ஏது பாரம்

எல்லாம் இடையில் மனம் செய்யும் ஆரவாரம்

*****

29 Jul 2025

பேரார்வத்தின் இடம்

பேரார்வத்தின் இடம்

எல்லாரையும் விட

வேகமாக

உயரமாக

வளர வேண்டும் என்ற பேரார்வம்

அபார்ட்மெண்டின்

அறுபதாவது தளத்தில்

அமெரிக்காவில்

வைத்திருக்கிறது

யாருமற்ற தனிமையில்

*****

 

நூறு ரூபாய்க்கு இரண்டு கிலோ

கிலோ ஐம்பது ரூபாய் என்று சொல்லியிருக்கலாம்

இரண்டு கிலோ நூறு ரூபாய் என்று சொல்வதில்தான்

வியாபாரம் இருக்கிறது

ஒரு கிலோ வேண்டியவர்கள்

ஐம்பது ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறார்கள்

நூறு ரூபாய்க்குத்தான் வாங்க முடியும் என்று

இரண்டு கிலோவாகவும் வாங்கிக் கொள்கிறார்கள்

இருபது ரூபாய்தான் இருக்கிறது என்பவருக்கும்

விற்றுக் கொண்டுதான் இருக்கிறார் வியாபாரி

*****

செல்லமுத்து ஆடிமுத்து ஆன கதை!

செல்லமுத்து ஆடிமுத்து ஆன கதை!

ஆடித் தள்ளுபடி என்றால் ஜவுளிகளை அள்ளிக் கொண்டு வந்து விடுவார் ஆடிமுத்து. அவர் பெயர் செல்லமுத்து. ஆடியில் இப்படி அள்ளி வந்து ஆடிமுத்தாய் ஆகிப் போனவர்.

“இந்த வருஷத்துத் தீவாளிக்கு போன வருஷத்து மாதிரியால்லா ஆடித் தள்ளிபடியில் உங்கொப்பன் அள்ளி வந்திருக்கான்!” எனச் சகபாடிகள் கிண்டல் செய்யும் போது ஆடிமுத்துவின் பிள்ளைகள் ஆடித்தான் போவார்கள்.

வருஷத்துக்கு ஒரு முறைதான் ஜவுளி போடுவார், அதுவும் ஆடியில்தான் என்பது இந்நேரத்துக்கு உங்களுக்குச் சொல்லாமலே புரிந்திருக்கும். அந்த வருஷத்துக் கல்யாணம், காதுகுத்தல், மஞ்சள் நீராட்டு, சீமந்தம் என்று எல்லாவற்றுக்கும் முன்கூட்டியே ஒரு கணக்குப் போட்டு ஜவுளிகளை அள்ளி வந்து விடுவார் என்பதை உங்களுக்குச் சொன்னால்தானே புரியும்.

தள்ளுபடியில் அள்ளி வந்த பிறகு, ரோக்காவை எடுத்துக் கொண்டு சம்புலிங்கத்திடம்  போவார் ஆடிமுத்து. சரியாத்தான் தள்ளுபடி பண்ணி கடைக்காரன் போட்டிருக்கானா என்பது ஆடிமுத்துவுக்கு எப்போதும் இருக்கும் சந்தேகம். இத்தனைக்கும் அது கம்ப்யூட்டர் ரோக்கா. அது சரி அதை அங்கே வைத்து சரிபார்க்காமல் ஊரில் வந்து ஏன் சரிபார்க்க வேண்டும் என்றால், ஆடிமுத்துவுக்கு அதைப் படித்துக் கணக்குப் போட்டுப் பார்க்கும் அளவுக்கு விவரம் பத்தாது. அவர் அந்தக் காலத்து ஒண்ணாம் வகுப்பையே அஞ்சு வருஷம் படித்துப் பார்த்து விட்டு, சீச்சீ இந்தப் படிப்பு புளிக்கும் எனப் படிப்பை அந்தரத்தில் விட்டவர்.

சம்புலிங்கம் கணிதப்புலியா என்றால் அவர் அந்தக் காலத்து எஸ்எஸ்எல்சியில் நான்கு முறை கோட் அடித்தும், அதற்கு மேல் முடியாது என்று உள்ளூர் ஆலையில் கணக்குப்பிள்ளையாய் வேலைக்குச் சேர்ந்து, கணக்கு சரியாக வரவில்லை என்று வேலையை விட்டுத் தூக்கி அடிக்கப்பட்டு, கடைசியில் ஜோதிடராய் மாறி எல்லாருக்கும் ஜாதகக்கட்டங்களைக் கணித்துக் கொண்டிருப்பவர்.

அடிக்கடி ஜாதகம் பார்க்கவரும் மற்றும் குறி கேட்க வரும் ஆடிமுத்துவை தனது ஆஸ்தான வாடிக்கையாளர் பட்டியலில் இருந்து இழந்து விடக் கூடாது என்பதற்காகவே தள்ளுபடி மற்றும் சதவீத கணக்குகளை எப்படியோ தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கற்றுக் கொண்டு அவற்றைப் போட்டுப் பார்த்து, கம்ப்யூட்டர் பில் சரியாகத்தான் இருக்கிறது என்று அவர் சொல்ல வேண்டிய தலைக்கு மேல் வேலை அவருக்கு.

“இந்தத் தடவெ அம்பது சதவீத தள்ளுபடியில அள்ளி வந்துட்டேன்ல!” என்று ஆடிமுத்து கம்ப்யூட்டர் போட்ட ரோக்கா சீட்டை நீட்டிய போது, சம்புலிங்கம் மீண்டும் தலைகீழாக நின்று எப்படி எப்படியோ கணக்குப்போட்டும், தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ஐந்து சதவீத்தைத் தாண்டவில்லை.  

“என்னடா இது! கம்ப்யூட்டரே வெச்சு ஏமாத்துறானுவோளா? வுட மாட்டேன் பாரு.!” என்று மறுநாளே வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி விட்டார் ஆடிமுத்து.

ஆடிப் போய் அதிரடியாய் சரவெடியாய் வந்த ஆடிமுத்துவிடம் கடைக்காரர்கள், ‘ஐந்து சதவீதத்திலிருந்து ஐம்பது சதவீதம் வரை தள்ளுபடி’ என்பதை விளக்க படாதபாடு பட்டார்கள்.

தனக்குத் தெரிந்த முறையில் பத்து நிமிடத்தை எடுத்துக் கொண்டு எழுத்துக் கூட்டிப் படித்து அது சரிதான் என்பதை ஆடிமுத்து உறுதிபடுத்திக் கொண்டார்.

“அது சரி! ஏம்யா ஐந்து சதவீதத்திலிருந்துங்றதெ சின்னதாவும் ஐம்பது சதவீதம்ங்றதெ பெரிசாவும் போட்டு இருக்குறே?” என்றார் ஆடிமுத்து.

“சின்னதா போட்டிருக்கிறதெ பெரிசாவும், பெரிசா போட்டிருக்கிறதெ சின்னதாவும் கொடுக்குறதுதானே யேவாரம்!” என்றனர் கடைக்காரர்கள்.

அத்தோடு ஆடியில் தள்ளுபடியில் ஜவுளி எடுப்பதை விட்டு விட்டார் ஆடிமுத்து. ஆனால் இப்போதும் அவர் ஆடிமுத்துதான் இந்தக் கிராமத்துக்கு.

*****

28 Jul 2025

தலைமுறையும் அரிசியும்

இலவசமும் விலைவாசியும்

ரேஷன் அரிசி இலவசமாகக் கிடைக்கிறது

கடை அரிசி

விலையேறிக் கொண்டிருக்கிறது

*****

ஜென் இசட்

சாலையில் ஒருவன்

பேசிக் கொண்டே செல்கிறான்

ப்ளூடூத்தில் பேசுபவன் எல்லாம்

பைத்தியம் அல்ல

*****

அவர்

அவர் சாமியாருமில்லை

அவர் குடும்பஸ்தருமில்லை

ஆனாலும்

அவர்

அங்கு தங்கியிருக்கிறார்

அந்த வாடகை வீட்டில்

*****

தவமிருந்து பெற்ற சாபத்தின் பிள்ளை!

தவமிருந்து பெற்ற சாபத்தின் பிள்ளை!

பொறந்தப்போ தங்க நெறத்தில அப்படியே மாம்பழ நெறம் கணக்கா தகதகவென இருந்தார் தங்கப்பழம். அந்தப் பேரே அப்படித் தோற்றத்தப் பார்த்து வந்ததுதான்.

எட்டு வருஷமா போவாத கோயில் இல்ல, ஏறாத மலையில்ல. எங்கெங்கோ அலைஞ்சு எந்தெந்த சாமிக்கோ வேண்டி பொறந்தவரு தங்கப்பழம்.

அந்த ஊருல செல்லமா வளர்ந்த புள்ளைன்னா அவருதான். செல்லம்ன்னா செல்லம் அப்படியொரு செல்லம், அவங்க அம்மா கோமளத்தாயீ அவரெ தரையிலயே நடக்க விடாது, தரையில உக்காரவும் விடாது. அவுங்க அம்மாவோட மடி மேல உக்காந்து, முந்தானை மேல நடந்து ராசா போல வளர்ந்தாரு தங்கப்பழம்.

அப்பங்காரு ஒண்டிப்புலி அதுக்கும் மேல. மவனுக்கு மூணு சக்கர சைக்கிளு வாங்கணும்னு அவரு வேலைக்கு வர, போவ வெச்சிருந்த சைக்கிள வித்து வாங்கிக் கொடுத்துப்புட்டு நடந்து வேலைக்குப் போனவரு.

தங்கப்பழம் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க போன காலத்துல வாத்தியாரு இவனெ அடிச்சிட்டாருன்னு பதிலுக்கு இவன் வாத்தியாரு மண்டையை ஒடைச்சுப் போட எட்டாவது படிச்சதோடு முடிஞ்சிடுச்சு அவரு படிப்பு.

படிப்பு முடிஞ்சுப் போனது தங்கப்பழத்துக்கு ரொம்ப வசதியாப் போயிடுச்சு. பள்ளிக்கூடம் போன நாளுல ஊரு தங்காத ஆளு, சுதந்திரமா சுத்தித் திரிஞ்சாரு. அப்பவே பீடி, புகையிலைன்னு பழக்கம் இருந்தது பெறவு குடி, கஞ்சா வரைக்கும் போயிடுச்சு.

வரம் வாங்கிப் பொறந்த புள்ளைங்க எல்லாம் இப்படித்தான் இருக்கும் போலன்னு ஊருக்குள்ள பேச்சு வர்ற அளவுக்குத் தங்கப்பழம் கெட்டப் பழக்கங்களாலேயே கனிஞ்சிக்கிட்டு இருந்தாரு.

இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் கல்யாணம் ஆனாத் திருந்திப்புடுவாங்கன்னு ஒரு பொண்ணோட வாழ்க்கையைப் பலி கொடுக்குறதுதானே நம்ம சமூகத்தோட வழக்கம். அந்த வழக்கப்படி தங்கப்பழத்துக்குப் பலி கொடுக்கப்பட்ட பொம்முனாட்டிதான் பவுனம்மா.

தங்கமும் பவுனும் சேர்ந்து எப்படியெல்லாமோ ஜொலிச்சிருக்கணும் இல்லையா? அந்தக் கொடுப்பினை பவுனுக்கு இல்ல. தங்கம் தினம் குடிச்சிட்டு வந்தும், கஞ்சா போட்டுக்கிட்டு வந்தும் அடிச்சுத் துவைச்சு புடம் போட்டு எடுத்ததுல பவுனம்மா பல்லிளிச்சிப் போன கவரிங்கா ஆனதுதான் மிச்சம்.

தங்கப்பழம் பவுனம்மாவை அடிக்குற அடியே நாலு தெரு தள்ளி கேட்கும். வலி தாங்க முடியாம பவுனம்மா அழுவுற அழுகை நாலு ஊருக்குக் கேட்கும்.

ஒரு நாளு இந்த அடியையும் வலியையும் தாங்கிக்கிறதுக்குப் பதிலா, மண்ணெண்ணெய்யை ஊத்திக்கிட்டுப் பொசுங்கிப் போயிடலாம்ன்னு பவுனம்மா ஊத்திக்க, அதெ பார்த்து புள்ளைங்க அழுத அழுகையைப் பார்த்துட்டு எவ்வளவு வலின்னாலும் தாங்கிக்கிட வேண்டியதுதான்னு முடிவுக்கு வந்துட்டு அந்தம்மா.

பவுனம்மாவுக்கு ஒரு புள்ளையும் பொண்ணும். புருஷங்காரன் பாசமா இல்லன்னாலும் புள்ளைங்க ரெண்டும் அம்புட்டுப் பாசம் அம்மா மேல. அந்தப் பாசம்தான் தங்கப்பழத்தோடு அத்தனை கொடுமைகளையும் தாங்க வெச்சுச்சு.

காலம் எத்தனை நாளைக்குத்தான் அப்படியே போகும்?

புள்ளைங்க தோளுக்கு மேல வளர்ந்த பெறவும் தங்கப்பழம் பவுனம்மாவைப் போட்டு புரட்டி எடுத்துக்கிட்டுத்தான் இருந்தாரு.

புள்ளைங்க எவ்வளவோ சொல்லிப் பாத்துச்சுங்க. பொண்ணு சோத்துல விஷத்தெ வெச்சு கொன்னே புடுவேன்னு மிரட்டிக் கூட பார்த்துச்சு. “என்னெய கொல்லுறதுக்கு இந்த உலகத்துல என்ன விஷம் இருக்கு?”ன்னு மீசையெ முறுக்கிட்டு எகிறுனாரு தங்கப்பழம்.

ஒரு நாளு மவனும் மவளும் இருக்குறப்பவே புடவையை உருவிட்டு பவுனம்மாவைத் தங்கப்பழம் அடிச்சப்போ, “குடிச்சுப்புட்டா நீ பெரிய இவனாடா?” என மகன் நெட்டித் தள்ளியதிலிருந்து தன் அலப்பறைகளை முடித்துக் கொண்டார் தங்கப்பழம்.

இப்போல்லாம் “குடிப்பியா, குடிப்பியா?” என்று மகன் கேட்க, “மாட்டேன்! மாட்டேன்!” என்று சொல்லியபடி தினம் தினம் குடித்து விட்டு வந்து அடி வாங்கிக் கொண்டிருக்கிறார் தங்கப்பழம்.

மகன் அடிக்கிற அடி நான்கு தெரு தள்ளியும், அப்பனின் அழுகை நான்கு ஊர் தாண்டியும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

பவுனம்மாவுக்கு எல்லாம் மரத்துப் போய் விட்டது. யாரோ அடிக்கிறார்கள், யாரோ அழுகிறார்கள் என்று அந்தம்மா பாட்டுக்கு நெடுந்தொடர் பார்த்தபடி கண்ணீர் வீட்டுக் கொண்டு, மூக்கைச் சிந்தி எறிந்து கொண்டிருக்கிறது.

*****

விளக்குமாற்றுக்குச் சேதாரம் ஆன கதை!

விளக்குமாற்றுக்குச் சேதாரம் ஆன கதை!

ஓரங்குலசாமிக்கு ஒரே பையன் கல்யாணசுந்தரம். கல்யாணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் குழந்தையில்லாமல் பிறகு பிறந்தவன். கேட்கவா வேண்டும், கல்யாண சுந்தரம் செல்லப் பிள்ளையாக, அடங்காத பிள்ளையாக, அசராத பிள்ளையாக வளர்ந்தான்.

பையன் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்தால்தான் நிம்மதி, பையன் விரும்புவதையெல்லாம் செய்து கொடுத்தால்தான் சந்தோசம் என்று வாழ ஆரம்பித்தார் ஓரங்குலசாமி. அப்படியெல்லாம் கூடாது என்று அவருடைய மனைவி மாலா குமாரி எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். ஒரு வாரம் சோறு ஆக்கிப் போடாமல், கோவித்துக் கொண்டு புகுந்த வீட்டுக்குப் போய் என்று எவ்வளவோ பண்ணிப் பார்த்தார். எதுவும் காரியத்துக்கு ஆகவில்லை.

ஓரங்குலசாமிக்குப் புத்தி கெட்டுப் போனதோ அல்லது அவரது புத்தி அப்படித்தான் போனதோ தெரியவில்லை, பிள்ளை காட்டிய வழியே தகப்பனுக்குத் தெய்வம் காட்டும் வழி என்று போக ஆரம்பித்து விட்டார்.

விளைவு கல்யாணசுந்தரம் பதினான்கு வயதிலேயே பல்சர் ஓட்டினான். பதினைந்து வயதில் அப்பாச்சிக்கு மாறினான். பதினெட்டு வயதில் எல்லாம் ராயல் என்பீல்டில் பறந்து கொண்டிருந்தான்.

அவனுக்கு இருபத்து நான்கு முடிவதற்குள் நான்கு பெண்களின் வாழ்வைக் கெடுத்து விட்டதாக நான்கு பஞ்சாயத்துகளைப் பார்த்து விட்டார் ஓரங்குலசாமி.

தறிகெட்டுத் திரிந்த பயல் ஒரு நாள் அப்பனிடம் வந்து, “அப்புச்சி! யேவாராம் பண்ணலாம்ன்னு இருக்கேன். ஓசூர்ல நம்ம சேக்காளிகள் நாலு பேரு நட்டு, போல்ட்டு தயார் பண்ணி தமிழ்நாடு முழுக்க வித்தா கொழுத்த காசெ அள்ளிப்புடலாம்ங்றாங்க. ஆளுக்கு எண்பது லட்சம் போட்டா எட்டே மாசத்துல கோடிஸ்வரனாகிடலாம்ங்றாங்க.” என்று சொன்னதும் ஓரங்குலசாமிக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை. எண்பது லட்சத்துக்கு இன்னும் இருபது லட்சத்தைச் சேர்த்தாலே கோடீஸ்வரன்தானே என்று சொல்லத் தோன்றவில்லை ஓரங்குல அறிவும் அரையங்குலமாகக் குறைந்து விட்ட அந்தச் சாமிக்கு.

மகன் ஜாதகத்தில் நல்ல காலம் வந்து விட்டது என்று, கையிருப்பில் இருந்த காசையெல்லாம் ஒன்று சேர்த்து, ஊரில் முப்பாட்டன் காலத்திலிருந்து இருந்த நஞ்சை, புஞ்சை எல்லாவற்றையும் விற்று, குடியிருந்த வீட்டையும் அடமானத்துக்கு வைத்து ரகளை பண்ணிக் கொண்டிருந்தார்.

இந்த இடத்தில் மாலாகுமாரி மகன் என்று கூட பார்க்காமல், கடைசி அஸ்திரத்தைப் பிரயோகிக்காமல் விடக் கூடாது என்று, பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிப்பது போலக் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருந்தார், “நமக்கு யேவாரமெல்லாம் ஒத்து வராதுடா மவனே. இருக்குற சொத்தைப் பார்த்தாலே நாலு காசு வரும். அது போதும்டா நீயி ஆயுசுக்கும் உக்காந்தே சாப்புடலாம். அகலக்கால் வெச்சு இருக்குற சொத்தெ அழிச்சுப்புடாதடா. இந்த ஒரு விசயத்துல மட்டும் அம்மா பேச்சைக் கேளுடா!” என்று.

யார் சொன்னாலும் அதைக் கேட்கும் ஜாதகமா அது?

காலில் விழுந்த தாயின் முதுகில் குனிந்து ஓங்கி ஒரு குத்துக் குத்தி, அப்படியே பொடனியில் ஒரு போடு போட்டான் கல்யாணசுந்தரம். அதற்கு மேல் வலி தாங்க முடியாது என்று புத்திமதியை நிறுத்திக் கொண்டாள் மாலாகுமாரி.

ஓரங்குலசாமியும் கல்யாணசுந்தரமும் நின்ற நிலைக்கு ஓசூருக்கு எண்பது லட்சத்தோடு போனவன், நான்கே மாதத்தில் கையில் பைசா காசில்லாமல் திரும்பி வந்தான்.

“நமக்கு யேவாரமெல்லாம் ஒத்து வராதுப்பா. கார்ப்பரேட்காரனுங்கோ நம்மள வுட சீப்பா தட்டி வுடுறானுவோப்பா. இதுக்கு மேல அதுல இருந்தா நட்டம் தாங்காது பாருங்க. ஏதோ இத்தோடு விட்டுச்சே கால்ல சுத்துன பாம்புன்னு ஓடியாந்துட்டேன்!” என்றான் கல்யாண சுந்தரம்.

“இதைத்தானடா படிச்சு படிச்சுக் கால்ல விழுந்து சொன்னேன்!” என்று தலையில் அடித்துக் கொள்ளத்தான் முடிந்தது மாலாகுமாரிக்கு. பிறகு அவனையா அடிக்க முடியும்? அப்படி ஏதும் செய்ய நினைத்தால் வெளுத்து எடுத்து விடுவானே மகன்.

அடமானம் வைத்த வீட்டை மீட்க முடியாமல், எப்போதும் வெள்ளையும் சொள்ளையுமாக திரிந்த ஓரங்குலசாமி, இப்போது அழுக்கு வேட்டியோடு நானூறு ரூபாய் வாடகைக்கு ஒரு சார்ப்பு வீட்டில் வசித்து வருகிறார். கல்யாணசுந்தரம் எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் பரதேசிக் கோலமாய் டாஸ்மாக்கை ரெண்டு பண்ணி விட்டு, வீட்டில் வந்து, குடிக்க பைசா காசு தராத நீயெல்லாம் தகப்பனா என்று லந்து பண்ணிக் கொண்டிருக்கிறான்.

“மவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்தால் சரி ஆகிடுவான்!” என்று ஓரங்குலசாமி முணுமுணுக்கும் போதெல்லாம், புருஷன் என்று கூட பார்க்காமல் பிய்ந்து செருப்பைக் கழற்றி வீசுகிறாள் மாலாகுமாரி. சில நேரங்களில் விளக்குமாறு பிய்ந்து வீணாகப் போகிறது என்று கூட பார்க்காமல் விளாசித் தள்ளுகிறாள்.

சும்மாவா சொன்னார்கள், பிள்ளைகள் அமைவதெல்லாம் இறைவன் தந்த வரம் என்று. ஒருவேளை ஒன்பது வருடம் கழித்து இப்படி ஒரு பிள்ளை பிறக்காமல் இருந்திருந்தால் ஓரங்குலசாமி வெள்ளையும் சொள்ளையுமாகக் கெத்தாகத்தான் இருந்திருப்பாரோ என்னவோ! மாலாகுமாரியும் விளக்குமாற்றுக்குச் சேதாரம் இல்லாமல் கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்திருப்பாளோ என்னவோ!

*****

27 Jul 2025

அமைதியைக் கொண்டு வந்த தொலைக்காட்சிகளும் அலைபேசிகளும்!

அமைதியைக் கொண்டு வந்த தொலைக்காட்சிகளும் அலைபேசிகளும்!

சாயுங்கால நேரமாகி விட்டால் கிராமங்களில் அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களிடையே நடக்கும் வாய்ச் சண்டையைச் சொல்லி மாளாது. கம்பிவட தொலைக்காட்சிகள் (கேபிள் டிவிக்கள்) வரும் வரை இதே கதைதான். அதன் பிறகு பெண்கள் எல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதிலும், அதில் வரும் நெடுந்தொடர்களில் ஆழ்வதிலும் கவனம் செலுத்திய பிறகு இந்தச் சண்டைகள் படிப்படியாகக் குறைந்து தற்போது நின்றே போய் விட்டன. கிராமங்கள் அமைதியின் தேசங்களாகி விட்டன. அரிதாக எப்போதாவது இந்தியா – பாகிஸ்தான் சண்டைகள் போல நடந்தால்தான் உண்டே தவிர, தினசரி நடக்கும் இஸ்ரேல் – பாலஸ்தீன சண்டைகள் போல இல்லை.

அக்கம் பக்கங்களிலும் குடும்பங்களிலும் நடக்கும் சிறு சிறு சச்சரவுகள் சண்டைகளைக் கூட இப்போது பார்க்க முடியவில்லை. சச்சரவுகளுக்கோ, சண்டைகளுக்கோ நேரமில்லாமல் குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் அலைபேசிகளில் மூழ்கிக் கிடக்கின்றனர். வேடிக்கையாகச் சண்டை இழுக்கலாம் என்று பார்த்தால் கூட அலைபேசியில் விளையாடவே நேரம் போதவில்லை என்று வாண்டுகள் விழுந்தடித்து ஓடி விடுகின்றன. அட போப்பா இன்னும் புலனத்தில் தன்னிலை (ஸ்டேட்டஸ்) வைக்க நேரமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்று பெரிசுகள் புட்டுக் கொள்கின்றன.

இன்ஸ்டா பார்க்கவே நேரமில்லாத என்னிடம் இன்ஸ்டான்டாகச் சண்டை வளர்க்கச் சொல்கிறாயா என்று அக்கா, தங்கை தொடங்கி அண்ணன் தம்பி வரை கழுவுகின்ற நீரில் நழுகின்ற மீனாக நழுவிக் கொள்கிறார்கள்.

இவற்றைப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளாகப் பார்ப்பதா? இவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதும், நோண்டிக் கொண்டிருப்பதுதாம்தான் பிரச்சனை என்று பார்ப்பதா?

சில சம்பவ நடப்புகளும் இதை உறுதி செய்யவே செய்தன.

தம்பி இறந்த துக்கத்தில் இருந்த தங்கராசுவின் கைக்கு ஒரு திறன்பேசி (ஸ்மார்ட்போன்) வந்ததும் அவர் தம்பி இறந்ததை மற்றும் இருந்ததையே மறந்து விட்டார்.

அடங்காப் பிள்ளையாக அடம் பண்ணிக் கொண்டு இருந்த சின்னமணியின் அத்தனை வாலையும் சுருட்டி ஓரிடத்தில் அமர வைக்க அலைபேசியே போதுமானதாக இருக்கிறது.

ஆளுக்கொரு அலைபேசியில் மூழ்கி நாடும் வீடும் சண்டை போடவோ, சச்சரவு செய்யவோ ஆளில்லாமல் அமைதியின் பூர்விகப் பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

தியானத்தால் எல்லாம் அமைதியாகாத எங்கள் பச்சைமுத்து பாவாடைராயன் அண்ணன் அலைபேசியில் மூழ்கி அத்வைதமே அடைந்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒருவேளை இவர்களை எல்லாம் அலைபேசி இல்லாத உலகில் விட்டால் மிருகங்களாகி விடுவார்களோ என்றும் யோசனையாக இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் எப்படி மாறினாலும் மனிதனும் ஒரு சமூக விலங்குதானே. மாறினால் மாறித் தொலையட்டும்.

உண்மையைச் சொல்லப் போனால் ஆளுக்கொரு அலைபேசியில் தொலைந்து போய் யாருக்கும் யாரும் தெரியாமல், யாருக்கும் யாரும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஹாய் நீ சௌக்கியமா?

ஹாய் நான் சௌக்கியம்!

இனி அவ்வளவுதான் உலகம்.

*****

என் சமகால கொசுவும் சமகால நானும்!

என் சமகால கொசுவும் சமகால நானும்!

மழை பெய்யத் தொடங்கினால்

கூடவே வந்து விடுகிறது

கொசுவின் ஞாபகம்

இது எந்த மழையில் பிறந்த

டெங்கு கொசுவோ

அவ்வளவு புள்ளிகள்

*****

எவ்வளவு பிடிஎப்பு(PDF)கள்

திறந்து படிக்கத்தான் நேரமில்லை

வரிசை கட்டி வந்து கொண்டிருக்கின்றன யூடியூப்புகள்

*****

அந்தக் காதல் தேய்ந்துவிட்டது

இப்போதெல்லாம் சில வார்த்தைகள்

அதுவும் இல்லாத போது மௌனம்

நான்தான் காதலில் விழுந்தேனா

என்று நம்ப முடியாத கணங்களில்

கொஞ்ச கொஞ்சமாய்த் தேய்ந்து

முடிவில் மறந்து போகிறது காலம்

*****

உன் குற்ற உணர்விலிருந்து

தப்பித்துக் கொள்ள

எப்படி வேண்டுமானாலும்

மாறிக் கொள்வாய் மற்றும் மாற்றிக் கொள்வாய்

சிக்கிக் கொள்வது

சமாதானம் செய்ய வரும் நான்

*****

காதல் கஞ்சன்

காதல் கஞ்சன்

பட்டம்

பொக்கே

கவிதை

என்னனென்னவோ

செய்து

எல்லாம் வீணாகி விட்டதே

நீ ஒருவரைக் காதலிப்பதை

முன்னரே சொல்லியிருக்கலாமே

பரவாயில்லை

நான் உன்னைக் காதலிப்பதை

முன்னரே சொல்லியிருக்க வேண்டும்

என்றாலும் எதுவும் வீணில்லை

அடுத்த காதலுக்கு

எல்லாம் பயன்படும்

எடுத்து வைத்துக் கொள்கிறேன்

*****

26 Jul 2025

அம்மா என்பதும் மனைவி என்பதும் ஆன்லைன்!

அம்மா என்பதும் மனைவி என்பதும் ஆன்லைன்!

“சோறு வடிக்கத் தெரியுமா?

இட்டிலி சுட தெரியுமா?

தோசை வார்க்க தெரியுமா?

சட்டினி துவையல் பண்ணத் தெரியுமா?

சப்பாத்தி இடியாப்பம் பண்ணத் தெரியுமா?

ரசம் வைக்க தெரியுமா?

குழம்பு வைக்க தெரியுமா?

கூட்டு கறி பொரியலை விடு?

அப்பளம் பொரிக்க தெரியுமா?

பிரியாணி குருமா வைக்கத் தெரியுமா?

சிக்கன் கிரேவி மட்டன் சுக்கா பண்ணத் தெரியுமா?

நான் இல்லாம எப்படிச் சமாளிப்பே?”

“அட போவீயா நீ!

எல்லாதையும் ஆன்லைனில் ஆர்டர் பண்ணி

வாங்கிச் சாப்பிட்டுக்குவேன்!”

*****

21 Jul 2025

பைசா பிரயோஜனம் இல்லாத பிரச்சனைகள்!

பைசா பிரயோஜனம் இல்லாத பிரச்சனைகள்!

பையில் பத்து பைசா இருந்ததில்லை

நிம்மதியாக இருந்தோம் என்கிறார்

இப்போதும் நிம்மதியாக இருக்க வேண்டியதுதானே

இன்று பத்து பைசாவே இல்லை.

*

எப்போது இரு நாணயங்களுக்கு இடையே வித்தியாசம் தெரியவில்லையோ அப்போதே அவ்விரு நாணயங்களில் மதிப்பு குறைந்தது வழக்கொழிந்து போகப் போகின்றது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இப்படித்தான் ஐம்பது பைசாவுக்கும் ஒரு ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாமல் போன போது ஐம்பது பைசா வழக்கொழிந்து போய் விட்டது. இப்போது ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் அப்படித்தான் இருக்கிறது. விரைவில் ஒரு ரூபாய் வழக்கொழிந்துவிடும். பிறகு இரண்டு ரூபாய்க்கும் ஐந்து ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாமல் போகும் போது இரண்டு ரூபாய் வழக்கொழிந்து விடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்போது ஐந்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.இதில் எது வழக்கொழியப் போகிறதோ என யோசிக்க யோசிக்க குழப்பமாக இருக்கிறது.

*

99 ரூபாய் கட்டணம்

100 ரூபாயை நீட்டினேன்

பாக்கியை உடனே கொடுத்து

ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்

அந்த ஒரு ரூபாய் கடவுள்

*

ஒரு கவிதைக்காக

எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்

என்பதெல்லாம் தெரியாது

பார்ப்பவர்கள் வெட்டியாக

உட்கார்ந்திருப்பதாகச் சொல்லலாம்

வீணாய்ப் பொழுதைக் கழிப்பதாகக் கூறலாம்

எழுதிய எண்பது கவிதைகளில்

ஒன்று பத்திரிகையில் பிரசுரமாகி

இருபது ரூபாய் சன்மானம் வரும் போது

அது உண்மைதானோ என்று

எங்கிருந்தோ எப்படியோ தோன்றலாம்

*****

20 Jul 2025

பேர் சொல்லும் பிள்ளைகள்!

பேர் சொல்லும் பிள்ளைகள்!

முகநூல், எக்ஸில் எல்லாருக்கும் இரண்டு பெயர்கள்.

சிலருக்கு மூன்று, நான்கு, ஐந்து பெயர்கள்.

உதாரணத்துக்குச் சில,

ராசகோபாலன் குமரிமுத்து

சுந்தரசோழன் சமுத்திரபாண்டியன்

ரங்கசாமி குப்பண்ணன்

ராம்குமார் கோபால்சாமி

தமிழ்ச்செல்வன் அலெக்ஸாண்டர்

பரந்தாமன் பக்கிரிசாமி

இப்படி ஒருவருக்கு இரண்டு, மூன்று என்று நான்கு பெயர்கள். நாங்கள் படித்த போது ஒரே வகுப்பறையில் நான்கைந்து பேருக்கு ஒரே பெயர் இருக்கும். முருகன் என்றால் நான்கைந்து முருகன்கள் எழுந்து நிற்பார்கள். கவிதா என்றாலும் நான்கைந்து கவிதாக்கள் எழுந்து நிற்பார்கள்.

அப்போதும் இப்படித்தான் கோவிந்தசாமி மகன் முருகன் இங்கே வாடா, கலியராசு மகன் முருகன் அங்கே போடா, மாரிமுத்து மகன் முருகன் என்னடா பண்ணிக் கொண்டிருக்கிறாய், தெட்சணாமூர்த்தி மகன் முருகன் வீட்டுப்பாடம் முடித்து விட்டாயாடா, சோனாச்சலம் பொண்ணு கவிதா வாயில் என்ன வைத்திருக்கிறாய், கிருபாகரன் மகள் கவிதா நேற்று ஏன் வரவில்லை, பாலகணபதி மகள் கவிதா ஏன் இப்படி முழிக்கிறாய், வெங்கடேசன் மகள் கவிதா என்ன ஆச்சு உனக்கு என்று அப்பா பெயரை வைத்துதான் பிரித்து அடையாளம் கண்டு கேள்வி கேட்பார்கள் ஆசிரியர்கள்.

அதைத்தான் இந்த முகநூல் தலைமுறையும் பின்பற்றுகிறது.

என்ன ஒரு வித்தியாசம் என்றால் முன்பு அப்பா பெயரைச் சொல்லி பிள்ளைகள் பெயரைச் சொல்வார்கள். இந்த முகநூலில் தங்கள் பெயருக்குப் பின்பு அப்பா பெயரைப் போட்டுக் கொள்கிறார்கள்.

அதிலும் இரண்டு பெயர்கள் ஒன்றாக அமைந்து விடும் போது, உதாரணத்துக்கு அப்புசாமி குழந்தைவேலு என்ற பெயர் இரண்டு பேருக்கு அமைந்து விடும் போது வேறு வழியில்லை, மூன்றாவது பெயரையும் இணைக்கத்தான் வேண்டியிருக்கிறது. அப்படித்தான் அப்புசாமி குழந்தைவேலு பாண்டிமுத்து என்ற பெயரைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்தக் குழப்பமெல்லாம் எதற்கு என்று பிள்ளைகள் பட்டப்பெயர் வைத்துக் கூப்பிடுவார்கள் பாருங்கள். வைத்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிடும் போது கூட காது கேட்காமல் உட்கார்ந்திருக்கும் பிள்ளைகள் பட்டப்பெயரைச் சொன்னதும் சட்டென்று எழுந்து விடுவார்கள். கருவண்டு முருகன் என்ற சொன்னால் போதும் சட்டென்று என்னடா என்று கேட்பான் பாருங்கள், தயிர்சோறு கவிதா என்றால் பல்லை உடைத்து விடுவேன் என்று சட்டென்று வரும் பதில் வரும் பாருங்கள், அது செம ரகளையாக இருக்கும்.

*****

19 Jul 2025

உயிரின் கடைசிச் சொட்டு

கவித்துவம்

மரபுக் கவிதை

ஓரடிக்கு நான்கு வார்த்தை

நவீனக் கவிதை

ஓரடிக்கு ஒரு வார்த்தை

*****

பஞ்ச தந்திரம்

ரேஷன் அரிசி

இலவசமாகக் கிடைக்கும் போதே

தோசைமாவின் விலையை

ஏற்றி விட்டார்கள்

*****

கடி

கொசுவைக் கொன்று போட்டது

என்னைக் கடித்துக் கொண்டிருந்தது

என்பதற்காகவும்

கூடுதலாக

என்னையே கடித்துக் கொண்டிருந்தது

என்பதற்காகவும்

*****

உயிரின் கடைசிச் சொட்டு

அதற்கு மேல் பணமில்லை என்பதை

அறிந்தோ என்னவோ

குளுக்கோஸ் புட்டியின்

கடைசிச் சொட்டில் பிரிந்தது

ஆயாவின் உயிர்

*****