விளக்குமாற்றுக்குச் சேதாரம் ஆன கதை!
ஓரங்குலசாமிக்கு ஒரே பையன்
கல்யாணசுந்தரம். கல்யாணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் குழந்தையில்லாமல் பிறகு பிறந்தவன். கேட்கவா
வேண்டும், கல்யாண சுந்தரம் செல்லப் பிள்ளையாக, அடங்காத பிள்ளையாக, அசராத பிள்ளையாக
வளர்ந்தான்.
பையன் கேட்பதையெல்லாம் வாங்கிக்
கொடுத்தால்தான் நிம்மதி, பையன் விரும்புவதையெல்லாம் செய்து கொடுத்தால்தான் சந்தோசம்
என்று வாழ ஆரம்பித்தார் ஓரங்குலசாமி. அப்படியெல்லாம் கூடாது என்று அவருடைய மனைவி மாலா
குமாரி எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். ஒரு வாரம் சோறு ஆக்கிப் போடாமல், கோவித்துக்
கொண்டு புகுந்த வீட்டுக்குப் போய் என்று எவ்வளவோ பண்ணிப் பார்த்தார். எதுவும் காரியத்துக்கு
ஆகவில்லை.
ஓரங்குலசாமிக்குப் புத்தி
கெட்டுப் போனதோ அல்லது அவரது புத்தி அப்படித்தான் போனதோ தெரியவில்லை, பிள்ளை காட்டிய
வழியே தகப்பனுக்குத் தெய்வம் காட்டும் வழி என்று போக ஆரம்பித்து விட்டார்.
விளைவு கல்யாணசுந்தரம் பதினான்கு
வயதிலேயே பல்சர் ஓட்டினான். பதினைந்து வயதில் அப்பாச்சிக்கு மாறினான். பதினெட்டு வயதில்
எல்லாம் ராயல் என்பீல்டில் பறந்து கொண்டிருந்தான்.
அவனுக்கு இருபத்து நான்கு
முடிவதற்குள் நான்கு பெண்களின் வாழ்வைக் கெடுத்து விட்டதாக நான்கு பஞ்சாயத்துகளைப்
பார்த்து விட்டார் ஓரங்குலசாமி.
தறிகெட்டுத் திரிந்த பயல்
ஒரு நாள் அப்பனிடம் வந்து, “அப்புச்சி! யேவாராம் பண்ணலாம்ன்னு இருக்கேன். ஓசூர்ல நம்ம
சேக்காளிகள் நாலு பேரு நட்டு, போல்ட்டு தயார் பண்ணி தமிழ்நாடு முழுக்க வித்தா கொழுத்த
காசெ அள்ளிப்புடலாம்ங்றாங்க. ஆளுக்கு எண்பது லட்சம் போட்டா எட்டே மாசத்துல கோடிஸ்வரனாகிடலாம்ங்றாங்க.”
என்று சொன்னதும் ஓரங்குலசாமிக்குச் சந்தோசம் தாங்க முடியவில்லை. எண்பது லட்சத்துக்கு
இன்னும் இருபது லட்சத்தைச் சேர்த்தாலே கோடீஸ்வரன்தானே என்று சொல்லத் தோன்றவில்லை ஓரங்குல
அறிவும் அரையங்குலமாகக் குறைந்து விட்ட அந்தச் சாமிக்கு.
மகன் ஜாதகத்தில் நல்ல காலம்
வந்து விட்டது என்று, கையிருப்பில் இருந்த காசையெல்லாம் ஒன்று சேர்த்து, ஊரில் முப்பாட்டன்
காலத்திலிருந்து இருந்த நஞ்சை, புஞ்சை எல்லாவற்றையும் விற்று, குடியிருந்த வீட்டையும்
அடமானத்துக்கு வைத்து ரகளை பண்ணிக் கொண்டிருந்தார்.
இந்த இடத்தில் மாலாகுமாரி
மகன் என்று கூட பார்க்காமல், கடைசி அஸ்திரத்தைப் பிரயோகிக்காமல் விடக் கூடாது என்று,
பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகிப்பது போலக் காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருந்தார்,
“நமக்கு யேவாரமெல்லாம் ஒத்து வராதுடா மவனே. இருக்குற சொத்தைப் பார்த்தாலே நாலு காசு
வரும். அது போதும்டா நீயி ஆயுசுக்கும் உக்காந்தே சாப்புடலாம். அகலக்கால் வெச்சு இருக்குற
சொத்தெ அழிச்சுப்புடாதடா. இந்த ஒரு விசயத்துல மட்டும் அம்மா பேச்சைக் கேளுடா!” என்று.
யார் சொன்னாலும் அதைக் கேட்கும்
ஜாதகமா அது?
காலில் விழுந்த தாயின் முதுகில்
குனிந்து ஓங்கி ஒரு குத்துக் குத்தி, அப்படியே பொடனியில் ஒரு போடு போட்டான் கல்யாணசுந்தரம்.
அதற்கு மேல் வலி தாங்க முடியாது என்று புத்திமதியை நிறுத்திக் கொண்டாள் மாலாகுமாரி.
ஓரங்குலசாமியும் கல்யாணசுந்தரமும்
நின்ற நிலைக்கு ஓசூருக்கு எண்பது லட்சத்தோடு போனவன், நான்கே மாதத்தில் கையில் பைசா
காசில்லாமல் திரும்பி வந்தான்.
“நமக்கு யேவாரமெல்லாம் ஒத்து
வராதுப்பா. கார்ப்பரேட்காரனுங்கோ நம்மள வுட சீப்பா தட்டி வுடுறானுவோப்பா. இதுக்கு மேல
அதுல இருந்தா நட்டம் தாங்காது பாருங்க. ஏதோ இத்தோடு விட்டுச்சே கால்ல சுத்துன பாம்புன்னு
ஓடியாந்துட்டேன்!” என்றான் கல்யாண சுந்தரம்.
“இதைத்தானடா படிச்சு படிச்சுக்
கால்ல விழுந்து சொன்னேன்!” என்று தலையில் அடித்துக் கொள்ளத்தான் முடிந்தது மாலாகுமாரிக்கு.
பிறகு அவனையா அடிக்க முடியும்? அப்படி ஏதும் செய்ய நினைத்தால் வெளுத்து எடுத்து விடுவானே
மகன்.
அடமானம் வைத்த வீட்டை மீட்க
முடியாமல், எப்போதும் வெள்ளையும் சொள்ளையுமாக திரிந்த ஓரங்குலசாமி, இப்போது அழுக்கு
வேட்டியோடு நானூறு ரூபாய் வாடகைக்கு ஒரு சார்ப்பு வீட்டில் வசித்து வருகிறார். கல்யாணசுந்தரம்
எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் பரதேசிக் கோலமாய் டாஸ்மாக்கை ரெண்டு பண்ணி விட்டு,
வீட்டில் வந்து, குடிக்க பைசா காசு தராத நீயெல்லாம் தகப்பனா என்று லந்து பண்ணிக் கொண்டிருக்கிறான்.
“மவனுக்கு ஒரு கல்யாணத்தைப்
பண்ணி வைத்தால் சரி ஆகிடுவான்!” என்று ஓரங்குலசாமி முணுமுணுக்கும் போதெல்லாம், புருஷன்
என்று கூட பார்க்காமல் பிய்ந்து செருப்பைக் கழற்றி வீசுகிறாள் மாலாகுமாரி. சில நேரங்களில்
விளக்குமாறு பிய்ந்து வீணாகப் போகிறது என்று கூட பார்க்காமல் விளாசித் தள்ளுகிறாள்.
சும்மாவா சொன்னார்கள், பிள்ளைகள்
அமைவதெல்லாம் இறைவன் தந்த வரம் என்று. ஒருவேளை ஒன்பது வருடம் கழித்து இப்படி ஒரு பிள்ளை
பிறக்காமல் இருந்திருந்தால் ஓரங்குலசாமி வெள்ளையும் சொள்ளையுமாகக் கெத்தாகத்தான் இருந்திருப்பாரோ
என்னவோ! மாலாகுமாரியும் விளக்குமாற்றுக்குச் சேதாரம் இல்லாமல் கணவனே கண்கண்ட தெய்வம்
என்று வாழ்ந்திருப்பாளோ என்னவோ!
*****
No comments:
Post a Comment