27 Jul 2025

அமைதியைக் கொண்டு வந்த தொலைக்காட்சிகளும் அலைபேசிகளும்!

அமைதியைக் கொண்டு வந்த தொலைக்காட்சிகளும் அலைபேசிகளும்!

சாயுங்கால நேரமாகி விட்டால் கிராமங்களில் அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களிடையே நடக்கும் வாய்ச் சண்டையைச் சொல்லி மாளாது. கம்பிவட தொலைக்காட்சிகள் (கேபிள் டிவிக்கள்) வரும் வரை இதே கதைதான். அதன் பிறகு பெண்கள் எல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதிலும், அதில் வரும் நெடுந்தொடர்களில் ஆழ்வதிலும் கவனம் செலுத்திய பிறகு இந்தச் சண்டைகள் படிப்படியாகக் குறைந்து தற்போது நின்றே போய் விட்டன. கிராமங்கள் அமைதியின் தேசங்களாகி விட்டன. அரிதாக எப்போதாவது இந்தியா – பாகிஸ்தான் சண்டைகள் போல நடந்தால்தான் உண்டே தவிர, தினசரி நடக்கும் இஸ்ரேல் – பாலஸ்தீன சண்டைகள் போல இல்லை.

அக்கம் பக்கங்களிலும் குடும்பங்களிலும் நடக்கும் சிறு சிறு சச்சரவுகள் சண்டைகளைக் கூட இப்போது பார்க்க முடியவில்லை. சச்சரவுகளுக்கோ, சண்டைகளுக்கோ நேரமில்லாமல் குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் அலைபேசிகளில் மூழ்கிக் கிடக்கின்றனர். வேடிக்கையாகச் சண்டை இழுக்கலாம் என்று பார்த்தால் கூட அலைபேசியில் விளையாடவே நேரம் போதவில்லை என்று வாண்டுகள் விழுந்தடித்து ஓடி விடுகின்றன. அட போப்பா இன்னும் புலனத்தில் தன்னிலை (ஸ்டேட்டஸ்) வைக்க நேரமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன் என்று பெரிசுகள் புட்டுக் கொள்கின்றன.

இன்ஸ்டா பார்க்கவே நேரமில்லாத என்னிடம் இன்ஸ்டான்டாகச் சண்டை வளர்க்கச் சொல்கிறாயா என்று அக்கா, தங்கை தொடங்கி அண்ணன் தம்பி வரை கழுவுகின்ற நீரில் நழுகின்ற மீனாக நழுவிக் கொள்கிறார்கள்.

இவற்றைப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளாகப் பார்ப்பதா? இவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதும், நோண்டிக் கொண்டிருப்பதுதாம்தான் பிரச்சனை என்று பார்ப்பதா?

சில சம்பவ நடப்புகளும் இதை உறுதி செய்யவே செய்தன.

தம்பி இறந்த துக்கத்தில் இருந்த தங்கராசுவின் கைக்கு ஒரு திறன்பேசி (ஸ்மார்ட்போன்) வந்ததும் அவர் தம்பி இறந்ததை மற்றும் இருந்ததையே மறந்து விட்டார்.

அடங்காப் பிள்ளையாக அடம் பண்ணிக் கொண்டு இருந்த சின்னமணியின் அத்தனை வாலையும் சுருட்டி ஓரிடத்தில் அமர வைக்க அலைபேசியே போதுமானதாக இருக்கிறது.

ஆளுக்கொரு அலைபேசியில் மூழ்கி நாடும் வீடும் சண்டை போடவோ, சச்சரவு செய்யவோ ஆளில்லாமல் அமைதியின் பூர்விகப் பிரதேசமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

தியானத்தால் எல்லாம் அமைதியாகாத எங்கள் பச்சைமுத்து பாவாடைராயன் அண்ணன் அலைபேசியில் மூழ்கி அத்வைதமே அடைந்து விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒருவேளை இவர்களை எல்லாம் அலைபேசி இல்லாத உலகில் விட்டால் மிருகங்களாகி விடுவார்களோ என்றும் யோசனையாக இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் எப்படி மாறினாலும் மனிதனும் ஒரு சமூக விலங்குதானே. மாறினால் மாறித் தொலையட்டும்.

உண்மையைச் சொல்லப் போனால் ஆளுக்கொரு அலைபேசியில் தொலைந்து போய் யாருக்கும் யாரும் தெரியாமல், யாருக்கும் யாரும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஹாய் நீ சௌக்கியமா?

ஹாய் நான் சௌக்கியம்!

இனி அவ்வளவுதான் உலகம்.

*****

No comments:

Post a Comment