28 Jul 2025

தவமிருந்து பெற்ற சாபத்தின் பிள்ளை!

தவமிருந்து பெற்ற சாபத்தின் பிள்ளை!

பொறந்தப்போ தங்க நெறத்தில அப்படியே மாம்பழ நெறம் கணக்கா தகதகவென இருந்தார் தங்கப்பழம். அந்தப் பேரே அப்படித் தோற்றத்தப் பார்த்து வந்ததுதான்.

எட்டு வருஷமா போவாத கோயில் இல்ல, ஏறாத மலையில்ல. எங்கெங்கோ அலைஞ்சு எந்தெந்த சாமிக்கோ வேண்டி பொறந்தவரு தங்கப்பழம்.

அந்த ஊருல செல்லமா வளர்ந்த புள்ளைன்னா அவருதான். செல்லம்ன்னா செல்லம் அப்படியொரு செல்லம், அவங்க அம்மா கோமளத்தாயீ அவரெ தரையிலயே நடக்க விடாது, தரையில உக்காரவும் விடாது. அவுங்க அம்மாவோட மடி மேல உக்காந்து, முந்தானை மேல நடந்து ராசா போல வளர்ந்தாரு தங்கப்பழம்.

அப்பங்காரு ஒண்டிப்புலி அதுக்கும் மேல. மவனுக்கு மூணு சக்கர சைக்கிளு வாங்கணும்னு அவரு வேலைக்கு வர, போவ வெச்சிருந்த சைக்கிள வித்து வாங்கிக் கொடுத்துப்புட்டு நடந்து வேலைக்குப் போனவரு.

தங்கப்பழம் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க போன காலத்துல வாத்தியாரு இவனெ அடிச்சிட்டாருன்னு பதிலுக்கு இவன் வாத்தியாரு மண்டையை ஒடைச்சுப் போட எட்டாவது படிச்சதோடு முடிஞ்சிடுச்சு அவரு படிப்பு.

படிப்பு முடிஞ்சுப் போனது தங்கப்பழத்துக்கு ரொம்ப வசதியாப் போயிடுச்சு. பள்ளிக்கூடம் போன நாளுல ஊரு தங்காத ஆளு, சுதந்திரமா சுத்தித் திரிஞ்சாரு. அப்பவே பீடி, புகையிலைன்னு பழக்கம் இருந்தது பெறவு குடி, கஞ்சா வரைக்கும் போயிடுச்சு.

வரம் வாங்கிப் பொறந்த புள்ளைங்க எல்லாம் இப்படித்தான் இருக்கும் போலன்னு ஊருக்குள்ள பேச்சு வர்ற அளவுக்குத் தங்கப்பழம் கெட்டப் பழக்கங்களாலேயே கனிஞ்சிக்கிட்டு இருந்தாரு.

இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் கல்யாணம் ஆனாத் திருந்திப்புடுவாங்கன்னு ஒரு பொண்ணோட வாழ்க்கையைப் பலி கொடுக்குறதுதானே நம்ம சமூகத்தோட வழக்கம். அந்த வழக்கப்படி தங்கப்பழத்துக்குப் பலி கொடுக்கப்பட்ட பொம்முனாட்டிதான் பவுனம்மா.

தங்கமும் பவுனும் சேர்ந்து எப்படியெல்லாமோ ஜொலிச்சிருக்கணும் இல்லையா? அந்தக் கொடுப்பினை பவுனுக்கு இல்ல. தங்கம் தினம் குடிச்சிட்டு வந்தும், கஞ்சா போட்டுக்கிட்டு வந்தும் அடிச்சுத் துவைச்சு புடம் போட்டு எடுத்ததுல பவுனம்மா பல்லிளிச்சிப் போன கவரிங்கா ஆனதுதான் மிச்சம்.

தங்கப்பழம் பவுனம்மாவை அடிக்குற அடியே நாலு தெரு தள்ளி கேட்கும். வலி தாங்க முடியாம பவுனம்மா அழுவுற அழுகை நாலு ஊருக்குக் கேட்கும்.

ஒரு நாளு இந்த அடியையும் வலியையும் தாங்கிக்கிறதுக்குப் பதிலா, மண்ணெண்ணெய்யை ஊத்திக்கிட்டுப் பொசுங்கிப் போயிடலாம்ன்னு பவுனம்மா ஊத்திக்க, அதெ பார்த்து புள்ளைங்க அழுத அழுகையைப் பார்த்துட்டு எவ்வளவு வலின்னாலும் தாங்கிக்கிட வேண்டியதுதான்னு முடிவுக்கு வந்துட்டு அந்தம்மா.

பவுனம்மாவுக்கு ஒரு புள்ளையும் பொண்ணும். புருஷங்காரன் பாசமா இல்லன்னாலும் புள்ளைங்க ரெண்டும் அம்புட்டுப் பாசம் அம்மா மேல. அந்தப் பாசம்தான் தங்கப்பழத்தோடு அத்தனை கொடுமைகளையும் தாங்க வெச்சுச்சு.

காலம் எத்தனை நாளைக்குத்தான் அப்படியே போகும்?

புள்ளைங்க தோளுக்கு மேல வளர்ந்த பெறவும் தங்கப்பழம் பவுனம்மாவைப் போட்டு புரட்டி எடுத்துக்கிட்டுத்தான் இருந்தாரு.

புள்ளைங்க எவ்வளவோ சொல்லிப் பாத்துச்சுங்க. பொண்ணு சோத்துல விஷத்தெ வெச்சு கொன்னே புடுவேன்னு மிரட்டிக் கூட பார்த்துச்சு. “என்னெய கொல்லுறதுக்கு இந்த உலகத்துல என்ன விஷம் இருக்கு?”ன்னு மீசையெ முறுக்கிட்டு எகிறுனாரு தங்கப்பழம்.

ஒரு நாளு மவனும் மவளும் இருக்குறப்பவே புடவையை உருவிட்டு பவுனம்மாவைத் தங்கப்பழம் அடிச்சப்போ, “குடிச்சுப்புட்டா நீ பெரிய இவனாடா?” என மகன் நெட்டித் தள்ளியதிலிருந்து தன் அலப்பறைகளை முடித்துக் கொண்டார் தங்கப்பழம்.

இப்போல்லாம் “குடிப்பியா, குடிப்பியா?” என்று மகன் கேட்க, “மாட்டேன்! மாட்டேன்!” என்று சொல்லியபடி தினம் தினம் குடித்து விட்டு வந்து அடி வாங்கிக் கொண்டிருக்கிறார் தங்கப்பழம்.

மகன் அடிக்கிற அடி நான்கு தெரு தள்ளியும், அப்பனின் அழுகை நான்கு ஊர் தாண்டியும் கேட்டுக் கொண்டிருக்கிறது.

பவுனம்மாவுக்கு எல்லாம் மரத்துப் போய் விட்டது. யாரோ அடிக்கிறார்கள், யாரோ அழுகிறார்கள் என்று அந்தம்மா பாட்டுக்கு நெடுந்தொடர் பார்த்தபடி கண்ணீர் வீட்டுக் கொண்டு, மூக்கைச் சிந்தி எறிந்து கொண்டிருக்கிறது.

*****

No comments:

Post a Comment