செல்லமுத்து ஆடிமுத்து ஆன கதை!
ஆடித்
தள்ளுபடி என்றால் ஜவுளிகளை அள்ளிக் கொண்டு வந்து விடுவார் ஆடிமுத்து. அவர் பெயர் செல்லமுத்து.
ஆடியில் இப்படி அள்ளி வந்து ஆடிமுத்தாய் ஆகிப் போனவர்.
“இந்த
வருஷத்துத் தீவாளிக்கு போன வருஷத்து மாதிரியால்லா ஆடித் தள்ளிபடியில் உங்கொப்பன் அள்ளி
வந்திருக்கான்!” எனச் சகபாடிகள் கிண்டல் செய்யும் போது ஆடிமுத்துவின் பிள்ளைகள் ஆடித்தான்
போவார்கள்.
வருஷத்துக்கு
ஒரு முறைதான் ஜவுளி போடுவார், அதுவும் ஆடியில்தான் என்பது இந்நேரத்துக்கு உங்களுக்குச்
சொல்லாமலே புரிந்திருக்கும். அந்த வருஷத்துக் கல்யாணம், காதுகுத்தல், மஞ்சள் நீராட்டு,
சீமந்தம் என்று எல்லாவற்றுக்கும் முன்கூட்டியே ஒரு கணக்குப் போட்டு ஜவுளிகளை அள்ளி
வந்து விடுவார் என்பதை உங்களுக்குச் சொன்னால்தானே புரியும்.
தள்ளுபடியில்
அள்ளி வந்த பிறகு, ரோக்காவை எடுத்துக் கொண்டு சம்புலிங்கத்திடம் போவார் ஆடிமுத்து. சரியாத்தான் தள்ளுபடி பண்ணி கடைக்காரன்
போட்டிருக்கானா என்பது ஆடிமுத்துவுக்கு எப்போதும் இருக்கும் சந்தேகம். இத்தனைக்கும்
அது கம்ப்யூட்டர் ரோக்கா. அது சரி அதை அங்கே வைத்து சரிபார்க்காமல் ஊரில் வந்து ஏன்
சரிபார்க்க வேண்டும் என்றால், ஆடிமுத்துவுக்கு அதைப் படித்துக் கணக்குப் போட்டுப் பார்க்கும்
அளவுக்கு விவரம் பத்தாது. அவர் அந்தக் காலத்து ஒண்ணாம் வகுப்பையே அஞ்சு வருஷம் படித்துப்
பார்த்து விட்டு, சீச்சீ இந்தப் படிப்பு புளிக்கும் எனப் படிப்பை அந்தரத்தில் விட்டவர்.
சம்புலிங்கம்
கணிதப்புலியா என்றால் அவர் அந்தக் காலத்து எஸ்எஸ்எல்சியில் நான்கு முறை கோட் அடித்தும்,
அதற்கு மேல் முடியாது என்று உள்ளூர் ஆலையில் கணக்குப்பிள்ளையாய் வேலைக்குச் சேர்ந்து,
கணக்கு சரியாக வரவில்லை என்று வேலையை விட்டுத் தூக்கி அடிக்கப்பட்டு, கடைசியில் ஜோதிடராய்
மாறி எல்லாருக்கும் ஜாதகக்கட்டங்களைக் கணித்துக் கொண்டிருப்பவர்.
அடிக்கடி
ஜாதகம் பார்க்கவரும் மற்றும் குறி கேட்க வரும் ஆடிமுத்துவை தனது ஆஸ்தான வாடிக்கையாளர்
பட்டியலில் இருந்து இழந்து விடக் கூடாது என்பதற்காகவே தள்ளுபடி மற்றும் சதவீத கணக்குகளை
எப்படியோ தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துக் கற்றுக் கொண்டு அவற்றைப் போட்டுப் பார்த்து,
கம்ப்யூட்டர் பில் சரியாகத்தான் இருக்கிறது என்று அவர் சொல்ல வேண்டிய தலைக்கு மேல்
வேலை அவருக்கு.
“இந்தத்
தடவெ அம்பது சதவீத தள்ளுபடியில அள்ளி வந்துட்டேன்ல!” என்று ஆடிமுத்து கம்ப்யூட்டர்
போட்ட ரோக்கா சீட்டை நீட்டிய போது, சம்புலிங்கம் மீண்டும் தலைகீழாக நின்று எப்படி எப்படியோ
கணக்குப்போட்டும், தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ஐந்து சதவீத்தைத் தாண்டவில்லை.
“என்னடா
இது! கம்ப்யூட்டரே வெச்சு ஏமாத்துறானுவோளா? வுட மாட்டேன் பாரு.!” என்று மறுநாளே வரிந்து
கட்டிக் கொண்டு கிளம்பி விட்டார் ஆடிமுத்து.
ஆடிப்
போய் அதிரடியாய் சரவெடியாய் வந்த ஆடிமுத்துவிடம் கடைக்காரர்கள், ‘ஐந்து சதவீதத்திலிருந்து
ஐம்பது சதவீதம் வரை தள்ளுபடி’ என்பதை விளக்க படாதபாடு பட்டார்கள்.
தனக்குத்
தெரிந்த முறையில் பத்து நிமிடத்தை எடுத்துக் கொண்டு எழுத்துக் கூட்டிப் படித்து அது
சரிதான் என்பதை ஆடிமுத்து உறுதிபடுத்திக் கொண்டார்.
“அது
சரி! ஏம்யா ஐந்து சதவீதத்திலிருந்துங்றதெ சின்னதாவும் ஐம்பது சதவீதம்ங்றதெ பெரிசாவும்
போட்டு இருக்குறே?” என்றார் ஆடிமுத்து.
“சின்னதா
போட்டிருக்கிறதெ பெரிசாவும், பெரிசா போட்டிருக்கிறதெ சின்னதாவும் கொடுக்குறதுதானே யேவாரம்!”
என்றனர் கடைக்காரர்கள்.
அத்தோடு
ஆடியில் தள்ளுபடியில் ஜவுளி எடுப்பதை விட்டு விட்டார் ஆடிமுத்து. ஆனால் இப்போதும் அவர்
ஆடிமுத்துதான் இந்தக் கிராமத்துக்கு.
*****
No comments:
Post a Comment