மனதின் ஆரவாரம்
காலத்தை நம்ப முடியாது
தூக்கியும் விடும்
தலைகுப்புற கவிழ்த்தும் விடும்
இரண்டையும் செய்து விட்டு
தூக்கத்தைப் பறித்து விடும்
தூக்கம்
வரவில்லையா
பரவாயில்லை
கையில்
ஸ்மார்ட்போன் எதற்கு இருக்கிறது
ஸ்மார்ட்டாக
நோண்டிக் கொண்டிரு
கனவுகளில் கண்ட கண்ட கருப்பு
ஆடுகளை
நினைத்துக் கொண்டிராதே
உனக்குதான் அது கருப்பு ஆடு
அதற்கு அது
என்ன நிறமென்றே தெரியாது
நாயே என்று சொல்கிறாயே
மனிதா என்று சொல்லுமாறு
என்றாவது நடந்திருக்கிறாயா
ஒழுங்கு கொஞ்சமேனும் வாய்திருக்கிறதா
ஒரு பாலிதீன் பையைத் தவிர்ப்பது
கூட
சுற்றுச்சூழலுக்கு உதவும்
உன் மனசு ஒரு மஞ்சள் பையைத்
தூக்க விடுமா
ஆனால் பார் பல நேரங்களில்
சட்டத்தை மீறாமல்
வாகனம் ஓட்ட முடியாது
நேர்மையாளர்கள்
தண்டம் கட்டுவார்கள்
சாமர்தியசாலிகள்
தப்பித்துக் கொள்வார்கள்
சாமர்த்தியசாலிகள் திருப்தியாளர்களும்
இல்லை
நேர்மையாளர்கள் அதிருப்தியாளர்களும்
இல்லை
யாரிடமிருந்தும்
யாரும் எதிர்பார்க்காமல்
இருந்தால்
யாரிடமும் யாருக்கும்
எந்த அதிருப்தியுமில்லை
எதிர்பார்க்காமல் எதுவும்
கிடைப்பதில்
எந்தத் திருப்தியுமில்லை
எதிர்பார்த்துக் கிடைக்காமல்
போவதால் ஏமாற்றம்
எதிர்பார்ப்பில்லாமல் கிடைக்காமல்
போவதில்
ஏதுமில்லை தடுமாற்றம்
எதிர்பார்ப்பால் வரும் பிரச்சனைகள்
எதுவும் பிரச்சனைகளே இல்லை
எதிர்பார்ப்புகள் இல்லையென்றால்
பிரச்சனைகளே இல்லை
யோசித்துப் பார்க்கையில்
எல்லாம் முடிகையில் ஏது பாரம்
எல்லாம் இடையில் மனம் செய்யும்
ஆரவாரம்
*****
No comments:
Post a Comment