31 Dec 2022

திருவாரூர் புத்தகக் காட்சிகள்

திருவாரூர் புத்தகக் காட்சிகள்

சென்னை போன்று புத்தகக்காட்சிகள் எல்லா ஊருக்கும் வாய்ப்பது கிடையாது. திருவாரூருக்கு வாய்ப்பதெல்லாம் மார்கழி மாதத்துப் புத்தகக் காட்சிகள்தாம். அந்த மாதத்தில் பெரும்பாலும் திருமண மண்டபங்கள் காலியாக இருக்கும் என்பதால் அந்த மாதத்தைத் தேர்ந்தெடுத்துப் புத்தகக் காட்சி போடுபவர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் சேத்தியாதோப்பைச் சேர்ந்தவர்கள் போடுகிறார்கள்.

திருவாரூர் கமலாலயத்தின் தென்கரையில் இருக்கும் ராசம்மாள் திருமண மண்டபத்தில்தான் இந்தப் புத்தகக் காட்சிகள் நடக்கும். சில வருடங்கள் பழைய தொடர்வண்டி நிலையத்துக்கு அருகில் இருக்கும் மெரினா மகாலிலும் நடக்கும். இந்த 2022 ஆம் ஆண்டு மார்கழியில் மெரினா மகாலில் நடந்தது.

கிண்டில், பிடிஎப் என்று வாசித்தாலும் புத்தகத்தை வைத்து வாசிப்பதில் கிடைக்கும் சுகம் அலாதி. புத்தகத்தின் அணுக்கம் தரும் அனுபவம் அதிலே படித்துப் பழகியதில் உண்டானதாகவும் இருக்கலாம் என்றாலும் வருங்காலப் பிள்ளைகள் திரைகளில் படித்துப் படித்து அதையும் சுகானுபவமாக உணரலாம்.

கிண்டிலிலும் பிடிஎப்பிலும் வராத எழுத்துகள் இன்னும் இருக்கின்றன. அவற்றை வாசிக்க வேண்டுமானால் புத்தகங்களைத்தான் நாட வேண்டியிருக்கிறது.

புத்தகக் காட்சிகளில் சில அபூர்வமான தருணங்களும் வாய்த்து விடுவதுண்டு. அது எப்படியோ நிகழ்ந்து விடுகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் ஏ.ஜெ. ஐயாவைப் (பேராசிரியர் முனைவர் அ. ஜான்பீட்டர்) பார்க்க நேர்ந்தது. மொத்தமே நாங்கள் இருவர்தான் அந்தப் புத்தகக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். புத்தகக் காட்சியில் ஆட்கள் இல்லையே தவிர வெளியே கடைத்தெரு முழுவதும் ஆட்களாக நிறைந்திருந்தனர். சந்தைக்கான பண்டங்களிலிருந்து புத்தகங்கள் விலகி விட்டனவோ என்னவோ! வெளியே போக்குவரத்து நெருக்கடி படு பயங்கரமாக இருந்தது. புத்தகக் காட்சியைக் கண்டு கொள்ளாமல் செல்பவர்கள் அதிகமாக இருந்தனர்.

புத்தகக் காட்சிகள் பெரும்பாலும் இப்படித்தான் மனிதர்கள் இல்லாத வனாந்திரங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. வனாந்திரமாக இருந்தாலும் வந்த வெட்டிக் கொண்டு போக ஆட்கள் நிறைந்திருப்பார்கள். புத்தகக் காட்சிகளாகப் போய் விட்டதால் வந்து கட்டிக் கொண்டு போக ஆட்கள் இல்லை. இருந்தாலும் புத்தகக் காட்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் ஆர்வமாகச் செய்கிறார்கள். அவர்களுக்கு இது போன்ற புத்தகக் காட்சிகளால் எத்தனை புத்தகங்கள் விற்கும், எவ்வளவு லாபம் கிடைக்கும் என்ற கேள்விகளுக்கு எப்படிப்பட்ட பதில்கள் இருக்கும் என்று தெரியவில்லை.

ஏ.ஜெ. ஐயா என்னைப் பார்த்ததும் அண்மையில் படித்த புத்தகத்தைப் பற்றிக் கேட்டார்கள். நல்ல வேளையாக நான் விமலாதித்த மாமல்லனின் ‘விளக்கும் வெளிச்சமும்’ என்ற தொகுப்பைப் படித்திருந்தேன். இதற்கு நான் அண்ணன் சித்தார்த்தனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் என்னைச் சந்தித்த போது அந்தத் தொகுப்பைக் கொடுத்திருந்தார். அந்தச் சந்திப்பு குறித்து தனியே எழுத வேண்டும். இப்படி எழுத வேண்டும் என்று நினைத்திருந்து நிறைய எழுதாமல் விட்டிருக்கிறேன். ஆனால் அந்தச் சந்திப்பை மறவாமல் எழுதி விட வேண்டும்.

இந்தத் தொகுப்பு பற்றி வலைப்பூவில் எழுதி விட்டீர்களா? என்று ஏ.ஜெ. ஐயா கேட்டார்கள். சமீப காலமாக வாசிக்கும் புத்தகத்தைப் பற்றி எழுதும் பழக்கம் அற்றுப் போயிருந்தது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. இதைத் தள்ளிப் போட்டால் எழுதாமல் போய் விடுவேன் அன்றே உட்கார்ந்து எழுதிப் பதிவிட்டேன். மீண்டும் புத்தக வாசிப்பு பற்றி எழுத வேண்டும் என்ற உணர்வை ஊட்டியதற்காக நான் ஏ.ஜெ. ஐயாவுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

இந்தப் புத்தகக் காட்சியில் எனக்குப் பிடித்த சில தலைப்புகளில் நல்ல புத்தகங்கள் கிடைத்தன. கவிமணி தேசிய விநாயகத்தின் ‘மலரும் மாலையும்’ படிக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை. நாமக்கல் கவிஞரின் பாடல்களையும் தொகுப்பாகப் படிக்க வேண்டும் என்ற ஆசை. அந்த இரண்டு ஆசையும் நிறைவேறும் வகையில் இரண்டு புத்தகங்களும் இந்தப் புத்தகக் காட்சியில் கிடைத்தன. மருதகாசி மற்றும் உடுமலை நாராயணகவியின் திரைப்பாடல்கள் தொகுப்பும் கிடைத்தன. அவற்றை வாங்கிக் கொண்டேன்.

*****

புலவர்கள் போற்றும் மாமழை

புலவர்கள் போற்றும் மாமழை

என்ன செய்வேன்

எனக்குத் தெரியாமல்

நடுச்சாமத்தில் பெய்திருக்கிறது மழை

கப்பல்கல் ஆகாமல்

காகிதங்களாக இருக்கின்றன

நோட்டுப்புத்தகங்கள்

அடுத்த முறை வரும் போது

சொல்லிவிட்டு வா என்று

மனக்கண்களால்

மழை பொழிந்து கொண்டேன்

நோட்டுப்புத்தகங்களோடு

பள்ளிக்கூடத்தில் இருந்த போது வருகிறது

புலவர்கள் போற்றும் மாமழை

*****

எட்டுப்பட்டித் தாத்தா

எட்டுப்பட்டித் தாத்தா

கோடையில் வெயில் அதிகம் என்கிறார்

குடிக்கும் பன்னீர் சோடாவை அதிகரித்தபடி

நவம்பரில் மழை அதிகம் என்கிறார்

அரைமணி நேரத்திற்கு ஒரு முறை

தேநீர்க் குவளையை

இடிச்சத்தத்தோடு உறிஞ்சியபடி

பனிக்காலத்திலும் குளிர் அதிகம் என்கிறார்

போர்வையை நெடுநேரம்

இழுத்துப் போர்த்தி உறங்கியபடி

எல்லாம் அதிகம் என்றாலும்

எதிலும் குறைவில்லை

ரெண்டு தாரம் கட்டையில் போயி

மூன்றாம் தாரத்தோடு இருக்கும்

எட்டுப்பட்டித்  தாத்தாவுக்கு

*****

30 Dec 2022

வங்கிக்கடனும் வீடும் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பொருளாதார மாதிரிகள்

வங்கிக்கடனும் வீடும் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பொருளாதார மாதிரிகள்

என்னைக் கேட்டால் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டாதீர்கள் என்பேன். நீயேன் அநாவசியமாக வங்கிகளின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகிறாய் என்று கேட்கலாம்.

வங்கிக் கடன்களில் வீட்டுக்கடன்கள் பிரதான இடம் வகிக்கக் கூடியன. வீட்டுக்கடன் வழங்குவதை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்ட ஒரு நிதி நிறுவனம் ஒரு வங்கியாகவே வளர்ச்சிப் பெற்றதைக் கொண்டு இதை நீங்கள் மேலும் புரிந்து கொள்ளலாம்.

ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் உங்கள் ஆசையில் நான் தேவையின்றி ஒரு கருத்தைத் திணிப்பதாக நீங்கள் நினைக்கலாம். வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி மாதா மாதாம் தவணைத் தொகைச் செலுத்துவதைப் போல நீங்கள் ஏன் தொடர்வைப்பு கணக்கு ஒன்றைத் துவங்கி மாதா மாதம் பணத்தை உங்கள் பெயரில் வரவு வைத்துக் கொள்ளக் கூடாது? அப்படி பெரும்பாலான மக்களால் செய்ய முடியவில்லை என்ற பலவீனத்தைதான் வங்கிகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

வீட்டைப் பற்றியும் ஓர் உண்மையை உங்களுக்குச் சொல்ல வேண்டும். உங்கள் கையில் பணம் இருந்தால் வீட்டின் விலை குறையும். உங்கள் கையில் பணம் இல்லா விட்டால் வீட்டின் விலை அதிகமாகும். இதென்ன ஆருடம் போல இருக்கிறது என்று நினைக்காதீர்கள்.

ஒரு வீட்டை வாங்குவதற்கு உரிய பணம் உங்களிடம் கையில் இருந்தால் நீங்கள் பேரம் பேசிக் குறைக்க முடியும். உங்கள் பேரம் படியாவிட்டால் வேறு இடத்தில் இருக்கும் வீட்டிற்குப் பேரம் பேசவும் முடியும். உங்களிடம் பணம் இல்லாத போது இந்தச் சுதந்திரம் போய் விடுகிறது. நீங்கள் கடனுக்குப் பணத்தை வாங்கி வாங்குவதென்றால் கடனுக்கான வட்டி விகிதம், வீட்டுக்கான விலை என்று இன்னொருவரின் பிடியில் சிக்கிக் கொண்டுதான் உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

நீங்கள் வீடு வாங்குவது என்று முடிவு செய்து பணத்தைத் தொடர் வைப்பிலோ அல்லது முதலீட்டிலோ தொடர்ந்து செய்ய ஆரம்பித்து விட்டீர்கள் என்றால் அதற்கான கால அவகாசம் ஐந்திலிருந்து பத்தாண்டுகள் வரை நீளும். ஆனால் நீங்கள் உங்கள் வீடு குறித்த விசாரணையை பணத்தைத் திரட்டத் துவங்கும் அந்த நாளிலிருந்து துவங்கி விடலாம். உங்களுக்கு உங்கள் வீட்டைப் பற்றியும் விலையைப் பற்றியும் முடிவு செய்ய ஐந்திலிருந்து பத்தாண்டுகள் இருக்கின்றன. இந்தக் காலத்திற்குள் நீங்கள் வீடு குறித்த பல அனுபவ உண்மைகளைப் பெற்றிருப்பீர்கள். இந்தக கால கட்டத்திற்குள் நீங்கள் எதிர்பார்க்காத குறைந்த விலைக்கு வீடுகள் விற்பனைக்கு வருவதையும் பார்ப்பீர்கள். பொறுமையாகக் கவனித்து வருவதன் பலன் அது.

பத்தாண்டு கால இடைவெளிக்குள் உங்கள் பணமும் பெருகியிருக்கும். நீங்கள் எதிர்பார்க்காத குறைந்த விலையில் வீடு கிடைப்பதற்கான வாய்ப்பும் கூடியிருக்கும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் வீடில்லாமல் நடுரோட்டில் இருப்பதா என நீங்கள் கேட்கலாம். சொந்த வீடு வாங்குவதை விட வாடகை வீடு மிகக் குறைவான மற்றும் மலிவான ஒன்று என்பதை இந்த இடைபட்ட காலத்தில் நீங்கள் நன்றாகவே புரிந்து கொள்ளலாம்.

வாடகை வீட்டில் கிடைக்கும் நன்மைகள் சொந்த வீட்டில் கூட கிடைப்பதில்லை. அவ்வளவு நன்மைகள் வாடகை வீட்டில் ஒளிந்து கிடக்கின்றன. மிக முக்கியமாக வீட்டின் பராமரிப்பிற்காக நீங்கள் பைசா காசை ஒதுக்க வேண்டியதில்லை. இது வாடகை வீட்டில்தான் சாத்தியம்.

நீங்கள் வேலை பார்க்கும் இடம் மாறினால் வாடகை வீட்டை இஷ்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். சொந்த வீட்டை நீங்கள் தூக்கிச் செல்ல முடியாது, மாற்றிக் கொள்ளவும் முடியாது. குழந்தையின் படிப்பிற்காகவோ உங்கள் வேலைக்காகவோ நீங்கள் எங்கு வேண்டுமானாலும் உங்கள் வாடகை வீட்டை நீங்கள் மாற்றிக் கொண்டே இருக்கலாம். அப்போது வீடு உங்களுக்கு ஒரு சுமையாக இருக்காது. உண்மையான வீடு பேறு என்பது அதுதான் என்பதை அப்போது நீங்கள் உணர்வீர்கள்.

எனக்குத் தெரிந்த பல பேர் சொந்த வீட்டை எங்கோ புறநகரின் ஒதுக்குப் புறத்தில் கட்டி விட்டு நகரின் முக்கிய பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு சொந்த வீட்டை வாடகைக்கும் விட முடியாமல், அதை என்ன செய்வது என்று புரியாமலும் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சொந்த வீட்டிற்காகத்தான் வங்கிகள் நம்மைக் கசக்கிப் பிழிகின்றன. வீட்டை இப்படித்தான் நமக்குச் சுமையாக மாற்றுகின்றன.

நீங்கள் வாடகை வீட்டில் ஐந்தாண்டுகளோ பத்தாண்டுகளோ இருப்பதால் கிடைக்கும் மற்றொரு பலன் எந்தெந்த பகுதிகளில் வீடுகள் என்ன விலைக்குப் போகின்றன? எந்தெந்த இடங்களில் வீடுகள் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன? என்று பெறும் அறிவு இருக்கிறதே. அது ரொம்ப முக்கியமானது.

நீங்கள் எதிர்பார்க்காத மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் வீடு குறித்த தகவலை அந்தப் பத்தாண்டுகளுக்குள் நிச்சயம் ஒரு சில முறைகளாவது பெறுவீர்கள். நீங்கள்தான் வீட்டிற்காகப் பணத்தைச் சேர்க்க ஆரம்பித்திருப்பீர்களே. அப்போது அந்தக் குறைந்த விலை வீடு கிடைக்கும் போது உங்களுக்கு வங்கிக் கடனே தேவை இருக்காது அல்லது தேவையிருக்கும் பணத்திற்கு மிகக் குறைந்த அளவில் கடன் வாங்கினாலே போதும் என்ற நிலை இருக்கும்.

வீடு வாங்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து விட்டால் அதற்காக வங்கியில் கடன் வாங்குவதை முதலில் யோசிக்காதீர்கள். அதற்காகப் பணத்தைத் தவணைத் தொகைச் செலுத்துவதைப் போல மாதா மாதம் பாதுகாப்பான முறையில் சேமிப்பது குறித்தும் முதலீடு செய்து குறித்தும் யோசியுங்கள். வீடு என்பது மிக எளிமையாக உங்களுக்குக் கைகூடி விடும்.

உங்கள் கையில் பணம் இருந்து சற்றே விலை கூடுதலாக ஒரு வீட்டை வாங்கினாலும் அதுவும் குறைந்து விலைக்கு வாங்கியதைப் போலத்தான். எப்படி என்கிறீர்களா? உங்களுக்கு வீட்டுக்கடனுக்கான வட்டி இல்லாமல் போய் விடுகிறது அல்லவா? அப்படியானால் குறைந்து விலைக்கு வாங்கியதாகத்தானே அர்த்தம். அப்படியானால் அவ்வளவு தொகையா வீட்டுக்கடனுக்கான வட்டி செலுத்துகிறோம் என்று கேட்கீறீர்களா? நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள். இல்லையென்றால் இணையத்தில் இதற்கெனப் பிரத்யேகமாக இருக்கும் கணிப்பான்களில் தொகையைக் கொடுத்துப் பாருங்கள் உங்களுக்கே தெரியும்.

*****

மறு கவசம்

மறு கவசம்

யாரும் வாங்க மாட்டேங்றான்னு

உள்ளே தூக்கி வெச்சேன்

மறுக்கா போடச் சொல்லிட்டாங்களா மக்கா

என்ற படிக்கு

சலிப்பைக் கொஞ்சம்

வெற்றிலைச் சீவல் எச்சிலோடு துப்பிய படிக்கு

முகக்கவசங்கள் அடங்கிய

சவ்வுத்தாள் பையைத் தூக்கி

வெளியே வைக்கிறார்

பெட்டிக்கடைத் தாத்தா

*****

ஆறு மனமே ஆறு

ஆறு மனமே ஆறு

சாக்கடையாய்த் தேங்கிய பின்னும்

அது ஆறுதான் என்றார்கள்

நதிக்கரையில் முளைத்துக் கொண்டிருக்கும்

வீடுகளைக் காட்டி

நாகரிகம் இன்னும்

பிறந்து கொண்டிருக்கிறது என்றார்கள்

மது அருந்த வருவோரையும்

புகைக்க வருவோரையும்

இடம் சுட்டி பொருள் விளக்கிப்

படித்துறைக்கு வரும் கூட்டம்

இப்போதும் இருக்கிறது என்றார்கள்

தகன மேடையும்

கருமாதித் துறையும்

மாறி விடவில்லை என்றார்கள்

மேட்டுத்தெரு மாடசாமியின் நல்லடக்கம்

இன்று பிற்பகல் மூன்று மணியளவில்

வெண்ணாற்றங்கரையும் நடைபெறும் என்பதை

ஆழ்ந்த வருத்தத்தோடுத் தெரிவித்துக் கொள்வதோடு

உற்றார்கள் உறவினர்கள்

இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று

இரங்கல் தெரிவித்துச் செல்லும்

ஒலிப்பெருக்கியும்

மேற்படி அனைத்தையும்

உறுதிப்படுத்திச் செல்வதால்

ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்

மனிதர்கள் எப்படியெல்லாமோ

மாற்றிய பின்னும்

ஆறு என்றும் ஆறுதான்

*****

29 Dec 2022

நீர் பேறு

நீர் பேறு

பிள்ளைவரம் இல்லாத ராஜா ஒருவன்

ஏரியொன்றை வெட்டி

பிள்ளை பேற்றைப் பெற்றுக் கொண்டான்

நீரால் நிரம்பிய ஏரியில்

மீன்கள் பெருகி முட்டையிட்டு

குஞ்சு குலுப்பான்களோடு குலவின

எண்ணற்ற பறவைகள் எங்கிருந்தோ வந்து

ஏகப்பட்ட குஞ்சுகளோடு திரும்பின

நரிகள் பாம்புகளும்

குறைவில்லாமல் குட்டிகள் பெற்றுக் கொண்டன

நிறைமாத நீரைப் பாய்ச்சி

நெல்மணிகள் கறிகாய்கள் பழ மரங்களோடு மல மரங்கள்

வம்ச விருத்தி செய்து கொண்டே போயின

பஞ்சம் தேடி பிழைக்க வந்த மனிதர்களும்

மீன்களோடு மீன்களாய் பறவைகளோடு பறவைகளாய்

உயிர்களோடு உயிர்களாய்

பிள்ளைகள் பெற்று மதாந்து நின்றனர்

யார் கண் பட்டதோ

நிறைசூலி ஏரியின் கரை மீது ஒரு சாலை வந்தது

சாலை வந்ததும் ஏரிக்குள்ளிருந்து

ஒரு பேருந்து நிலையம் முளைத்தது

முளைத்ததைச் சுற்றி களைச் செடிகள் அன்ன

வீட்டு மனைகள் வீரியமாகி

மனைகள் எங்கும் கட்டிடங்கள் முளைத்தன

மீன்கள் பரதேசம் போயின

பறவைகள் தூரதேசம் போயின

நரிகளும் வனவாசம் வாங்கின

பாம்புகள் சந்நியாசம் பெற்றன

நெல்மணிகளும் செடிகளும் பல மரங்களும்

எங்கிருந்தோ விளைந்து வந்தன

மனிதர்கள் மட்டும் எங்கிருந்தோ

வந்து வந்து போகின்றனர்

வந்து போகிறவர்களில்

வாடகைத் தாய்களும் இருக்கின்றனர்

*****

ஓடும் நதியைப் பார்க்காமல் ஓடும் வாழ்க்கை

ஓடும் நதியைப் பார்க்காமல் ஓடும் வாழ்க்கை

இறுக்கங்களைக் கரைத்துக் கொண்டோடும்

அற்புத நதி ஓடிக் கொண்டிருக்கிறது

அழுத்தங்களின் சுவடுகளை

அலசி எடுத்துக் கொண்டோடும்

சுழல்களின் அழகில் மயங்கி நிற்கலாம்

உச்சி வரை ஏறி விட்ட வெம்மையைப்

பாதம் நனைத்துக் குளிர்வித்துக் கொள்ளலாம்

இன்னும் கொஞ்சம் இறங்கி நீராடி

மனம் முழுதும் பனித்துளிகளால் நிரப்பிக் கொள்ளலாம்

ஏறி இறங்கி வளைந்து நெளிந்து

அடைபட்டு கரையுடைத்து செல்லும்

பாதைகளில் பாடங்கள் பல கற்றுக் கொள்ளலாம்

நதியோடிப் பரவிய பசுமையில்

நெக்குருகி பாடல் பல பாடி மகிழலாம்

நதி வழி ஓடி கடல் கண்டு

நீர்மையின் நீலத்தைத் தரிசித்து வரலாம்

தோண்டப்படாமல் இருக்கும்

ஆழ்மன ஊற்றுகளில் பிரவகிக்கும்

புதுநீரை அள்ளிப் பருகி வரலாம்

ஓடும் நதியைப் பார்க்க நேரமில்லாமல்

ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை

*****

28 Dec 2022

விமலாதித்த மாமல்லனின் ‘விளக்கும் வெளிச்சமும்’ – ஒரு பார்வை

விமலாதித்த மாமல்லனின் ‘விளக்கும் வெளிச்சமும்’ – ஒரு பார்வை

விமலாதித்த மாமல்லனின் சமீபத்திய தொகுப்பு ‘விளக்கும் வெளிச்சமும்’. 2000 லிருந்து 2022 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்ட எழுத்துகளின் தொகுப்பாக ‘விளக்கும் வெளிச்சமும்’ வெளியாகியிருக்கிறது. சிறுகதைத் தொகுப்பா, குறுநாவல் தொகுப்பா என்று சொல்ல முடியாத அளவுக்கு நெடுங்கதைகளும் கலந்த கலப்பாக அமைந்திருக்கிறது இத்தொகுப்பு.

இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் படிக்கும் போது நாவலுக்கான ஓர் அனுபவம் கிட்டும் என்பதைப் பின்னட்டையில் பனி மலை படர்ந்த ஒரு சூழலின் பின்னணியில் நின்று விமலாதித்த மாமல்லன் கூறுகிறார்.

சிறுகதைகளோ, நெடுங்கதைகளோ, குறுநாவலோ அனைத்திலும் விடுபடலின் ஒரு தவிப்பு ஒளிந்திருக்கிறது. அத்தவிப்பு பெரும்பாலும் பால்யத்தின் அனுபவங்களில் கட்டுபடுத்தப்பட்ட அழுத்தங்களின் பின்னணியிலிருந்து நிகழ்காலத்தை நோக்கிக் கதை சொல்லும் பாணியில் நீள்கின்றன. 

ஆறு தலைப்புகளில் தனது அனுபவ பரீட்சார்த்தங்களைச் சமகாலத்தின் எள்ளல் கலந்து சில கூர்மையான கேள்விகளுடன் கூடிய அவதானிப்புகளோடு விமலாதித்த மாமல்லன் வாசிப்போருக்கு முன் வைக்கிறார்.

‘அமன்’ என்ற சிறுகதையில் சைக்கிள் ஒரு குறியீடாகிக் காலத்தின் முன்னும் பின்னும் பயணிக்கிறது. அதே சைக்கிள் விளக்கைத் தொலைத்து விட்டு ஐந்தாவது தலைப்பாக ‘விளக்கு’ என நெடுங்கதையாக தொடர்கிறது. இந்தச் சிறுகதையையும் அந்த நெடுங்கதையையும் இணைத்தால் அது ஒரு குறுநாவலாகி விடும். ஒரு பாதுகாப்பான மனநிலையில் வளைய வரும் அபார்ட்மென்ட் கலாச்சாரத்தின் இறுக்கமானது புசித்தல் விலக்கப்பட்ட வளர்ப்பின் வார்ப்பில் வளரும் குழந்தைகளை ஆப்பிளைப் புசிக்க வைப்பதில் தளர்வதாக இவ்விரு சிறுகதை – நெடுங்கதைகளுக்கு இடையே ஒரு தொடர்பு இருக்கிறது.

‘மறைவு’ என்ற தலைப்பிலான கதை தற்கொலைக்கான அறிவுரைக் கதை போன்ற தோற்றம் தரக் கூடியது. இத்தொகுப்பை ஒரு நாவலுக்கான அனுபவமாகவும் கொள்ளலாம் என்ற கூற்றில் பார்த்தால் ஒரு நாவலின் பன்முகத் தளத்தில் அதுவும் ஒரு தளம் எனக் கொள்ளலாம். அவமானத்தையும் நிர்வாணத்தையும் பொருட்படுத்தாது ஓடும் ஒரு சிறுவன் அலுவலகச் சூழல், வணிகச் சூழல் என்று இயங்கம் இருவேறு மனிதர்களுக்கு ஊக்கத் துலக்கமாகவும் தன்னம்பிக்கை பாடமாகவும் இருக்கிறான். இச்சிறுகதையின் அறிவுரைத் தளத்தில் மறைவாக நின்று இயங்கும் பாத்திரமும் அந்தச் சிறுவனே. அநேமாக அந்தச் சிறுவன் விமலாதித்த மாமல்லனாகவும் இருக்கலாம் என்றால் அவரே அவரைப் பற்றிக் கூறிக் கொண்டிருப்பதை மறைவாகக் கேட்டுக் கொண்டிருப்பதான பாவனையை இச்சிறுகதையில் உணர முடிகிறது.  ‘மறைவு’ என்ற பொருளில் இப்படி இருவேறு பொருள் தரக்கூடிய சிறுகதை இது. இக்கதையும் தந்தை – மகன் எனும் இழையின் மையப்புள்ளியில் இணையக் கூடிய கதை. 

இத்தொகுப்பின் கதைகள் தந்தை – மகன் உறவுச் சிக்கலை அக்காலத்தையும் இக்காலத்தையும் தொட்டுப் பேசுகின்றன. இருவேறு காலத்தில் இறுக்கமாக இருந்த தந்தையர்களிடம் வளர்ந்த மகன்கள் இருவேறு மனநிலைகளோடு இருப்பதை விமலாதித்த மாமல்லன் நுட்பமாகப் பதிவு செய்கிறார். தந்தையின் ஏச்சையும் புறக்கணிப்புகளையும் அடிகளையும் துச்சமாகக் கருதும் போன தலைமுறையின் பிள்ளை ஒரு பக்கம் என்றால் செய்த தவறு வெளியே தெரிந்தால் என்னாகும் என்ற குற்றவுணர்வில் உயிரை மாய்த்துக் கொள்ளும் இந்தத் தலைமுறையின் பிள்ளை மறுபக்கம். இவ்விரு பக்கங்களையும் தன் தலைமுறையோடு இன்றைய தலைமுறையை இணைத்துப் பதிவு செய்த எழுத்துகளை ‘அமன்’, ‘மறைவு’ ஆகிய சிறுகதைகளிலும் ‘வெளிச்சம்’ எனும் குறுநாவலிலும் காண முடிகிறது. ‘வெளிச்சம்’ குறுநாவல் எமர்ஜென்சி காலத்திய தமிழாசிரியர்களையும் கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளர்களையும் காட்சிப்படுத்துவது வரலாற்றில் பின்னோக்கிச் சென்று களப்பயணம் காணும் அனுபவத்தைத் தரக் கூடியதாக அமைகிறது.

சிறுபான்மையோர் குறித்து ஊதிப் பெருக்கப்படும் அச்ச உணர்வு குறித்து பேசுகிறது ‘பயம்’ எனும் நெடுங்கதை. ஒருவர் சொல்லி இன்னொருவர் கேட்டு அதன் மூலம் எப்படியெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பற்றிய வெறுப்புணர்வும் பய உணர்வும் வார்த்தெடுக்கப்படுகின்றன என்பதை ‘பய’த்தில் விமலாதித்த மாமல்லன் நன்றாகக் காட்டிச் செல்கிறார். குறிப்பாக எல்லாரும்தான் தவறு செய்கிறார்கள் என்றாலும் பய உணர்வைக் காட்டி விலக்கப்படும் சமூகத்தினர் சிறு தவறு செய்தாலும் அது எவ்வளவு பெரிய பய உணர்வை ஊட்டும் வகையில் பெருக்கி வளர்க்கப்படுகிறது என்பதை ‘பயம்’ வெகு நுட்பமாகச் சொல்கிறது. இப்படி வளர்க்கப்படும் பயமானது மனிதாபிமானத்தையும் அன்புணர்வையும் பொருட்படுத்தாது போய் விடுவதைச் சொல்வதாகக் கதை முடிகிறது.

இத்தொகுப்பில் இருக்கும் ‘காவி’ குறுநாவல் வித்தியாசமானதும் மனதோடு ஒரு முறை பொருத்திப் பார்க்கக் கூடியதுமான தன்மைகள் நிரம்பியது. அனைத்தையும் துறந்து காவியை அணிந்து தப்பித்துக் கொள்ளும் மனநிலை எல்லாருக்கும் ஒரு நாள் வந்து விடுகிறது. அந்த ஒரு நாளை விரித்துப் பார்த்தால் அது ‘காவி’ என்ற குறுநாவலாகத்தான் விரியும். ஜீன்ஸ் பேண்டையும் ஜிப்பாவையும் துறந்தவனுக்கு டேன்டெக்ஸ் ஜட்டியைத் துறக்க முடியாத நிலை அல்லது அந்த நேரத்தில் துறக்க வேண்டும் என்று ஞாபகத்தில் வந்துத் தொலைக்காத நிலை மீண்டும் காவியை விட்டுத் துரத்தி விடுவதாக அக்குறுநாவல் முடிகிறது.

‘விளக்கும் வெளிச்சமும்’ ஒரு வித்தியாசமான வாசிப்பனுவத்தைத் தருகிறது. அதற்கொப்பவே சிறுகதையும் நெடுங்கதையும் குறுநாவலும் கொண்ட தொகுப்பாக விமலாதித்த மாமல்லன் இத்தொகுப்பைக் கொணர்ந்திருக்கிறார். கனக்கச்சிதமான வாக்கியங்கள் மற்றும் எளிமையான உணர்த்தல்கள் மூலமாக இத்தொகுப்பு ஓர் ஆழமான தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. சமகாலத் தொகுப்புகளில் கவனிக்கப்பட வேண்டியதும் வாசிக்கப்பட வேண்டியதுமான தொகுப்பு.

உரையாடல்களுக்கான இரட்டை மேற்கோள் குறிகளின்றியே உரையாடல்களைக் கடத்துகிறார். அத்துடன் குழப்பமின்றி வாசிக்கும் வகையில் ஒரே மாதிரியான நடையையே அனைத்திலும் கையாண்டிருக்கும் விமலாதித்த மாமல்லன் ஒவ்வொரு சிறுகதையிலும் நெடுங்கதையிலும் குறுநாவலிலும் கையாளும் பேசுபொருள்கள் பால்யத்தின் எச்சங்களும் பிற்கால அலுவலக அனுபவத்தின் மிச்சங்களும் என்ற புள்ளியில் இணையக் கூடியவை. அந்த வகையில் ஒரு நாவலைச் சிறுகதைகளாகவும் நெடுங்கதைகளாகவும் குறுநாவல்களாகவும் கலைத்துப் போட்டாற்போல் அமைந்திருக்கிறது இத்தொகுப்பு.

இத்தொகுப்பை நீங்கள் வாசிக்க விரும்பினால் பதிப்பகத்திடமிருந்து அல்ல, எழுத்தாளரிடமிருந்தே வாங்கி வாசிக்கலாம். அதற்கான முன்னேற்பாடுகளோடு தொகுப்பை வெளியிட்டிருக்கிறார் விமலாதித்த மாமல்லன். அதற்கான விவரங்கள் :

C Narasimhan

SBI SB A/c No: 37268627909

IFSC: SBIN0014625

GPay: madrasdada@oksbi

BHIM UPI: 9551651212@upi

PayTM: 9551651212@paytm

PhonePe: 9551651212

மேலதிக தொடர்புக்கும் விவரங்களுக்கும் மேலே உள்ள அலைபேசி எண்ணோடு

https://www.facebook.com/narasimhanc1960

என்ற முகநூல் இணைப்பையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

*****

கிடைத்திருப்பதின் கீதம்

கிடைத்திருப்பதின் கீதம்

ஏதோ ஒன்று

யாருக்கும் கிடைக்காத ஒன்று

கிடைத்திருக்கிறது

அதனால் இதெல்லாம் நடந்திருக்கிறது

அன்று கிடைத்த ஒன்று

எல்லாருக்கும் கிடைத்திருந்தால்

எல்லாருக்கும் அப்படியே கிடைத்திருக்குமா

என்று தெரியாது

ஒருவருக்கு இப்படி நடக்க வேண்டும்

இன்னொருவருக்கு அப்படி நடக்க வேண்டும்

என்றிருக்கிறதா என்றும் தெரியாது

நீங்கள் அப்படி இப்படி என்று

எப்படியும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்

ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்

ஒவ்வொருவருக்கும் கிடைப்பதும்

தனித்துவமாக இருக்கலாம்

ஒருவருக்குக் கிடைத்ததைப் போலவே

இன்னொருவருக்கு ஏன் கிடைக்க வேண்டும்

*****

பார்த்தலின் பிரதி

பார்த்தலின் பிரதி

பார்த்தேன் பிடிக்கவில்லை

திரும்ப திரும்ப பார்த்தால்

பிடிக்குமென்றும் பார்த்தேன்

வெறுப்புதான் கூடியது

அதுவே ஒரு பிரமாண்டமாக வந்து நின்ற போது

வேறு வழியில்லாமல்

பார்க்க வேண்டியதாகி விட்டது

பார்த்துப் பார்த்துப் பழகி

அதைப் பார்க்கிறேனோ

அல்லது பார்க்காமல் இருக்கிறேனோ என்பது

எனக்கு மறந்து போய் நாளாகி விட்டது

*****

27 Dec 2022

அந்தி மழையின் குடை

அந்தி மழையின் குடை

சுவர்கள் இடமாறி விடுவதைப் போல

வீடு அமர்க்களப்படுகிறது

சுவரெங்கும் படர்ந்த தர்பூசணிச் செடியைப் போல

வண்ண பலூன்கள்

மூலை முடுக்கெல்லாம் காய்த்துத் தொங்குகின்றன

பலூன்களினின்று மலர்ந்ததைப் போல

பிளாஸ்டிக்கில் பிரசவமான

பூக்கள் வெடித்துச் சிரிக்கின்றன

வானவில்லில் ரங்கராட்டினம் ஆடுவதைப் போலக்

குழந்தைகள் குதூகலமாய் இருக்கிறார்கள்

கவச குண்டல கர்ணன்களைப் போலக்

கைகளில் பரிசுப் பொருட்களோடு காத்திருக்கிறார்கள்

ராக்கெட் ஒன்றின் ஏவுதலுக்கான

கௌன்ட் டவுனைப் போல

நேரம் நெருங்குகிறது

கத்தியின் கூர்முனையில்

வரைபடம் வரையப்படுவதைப் போலக்

கேக் வெட்டப்படுகிறது

யாவர்க்கும் ஒரு வாய் என்பது போல

அனைவருக்கும் ஊட்டப்படுகிறது

அந்தி மழையில் நனைந்தபடி

குடை பிடித்துச் செல்வதைப் போலப்

பொம்மையின் பிறந்த நாளைக்

கொண்டாடி முடிக்கிறாள் பாப்பூ

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...