ஓடும் நதியைப் பார்க்காமல் ஓடும் வாழ்க்கை
இறுக்கங்களைக் கரைத்துக்
கொண்டோடும்
அற்புத நதி ஓடிக் கொண்டிருக்கிறது
அழுத்தங்களின் சுவடுகளை
அலசி எடுத்துக் கொண்டோடும்
சுழல்களின் அழகில் மயங்கி
நிற்கலாம்
உச்சி வரை ஏறி விட்ட வெம்மையைப்
பாதம் நனைத்துக் குளிர்வித்துக்
கொள்ளலாம்
இன்னும் கொஞ்சம் இறங்கி நீராடி
மனம் முழுதும் பனித்துளிகளால்
நிரப்பிக் கொள்ளலாம்
ஏறி இறங்கி வளைந்து நெளிந்து
அடைபட்டு கரையுடைத்து செல்லும்
பாதைகளில் பாடங்கள் பல கற்றுக்
கொள்ளலாம்
நதியோடிப் பரவிய பசுமையில்
நெக்குருகி பாடல் பல பாடி
மகிழலாம்
நதி வழி ஓடி கடல் கண்டு
நீர்மையின் நீலத்தைத் தரிசித்து
வரலாம்
தோண்டப்படாமல் இருக்கும்
ஆழ்மன ஊற்றுகளில் பிரவகிக்கும்
புதுநீரை அள்ளிப் பருகி வரலாம்
ஓடும் நதியைப் பார்க்க நேரமில்லாமல்
ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை
*****
No comments:
Post a Comment