ஆறு மனமே ஆறு
சாக்கடையாய்த் தேங்கிய பின்னும்
அது ஆறுதான் என்றார்கள்
நதிக்கரையில் முளைத்துக்
கொண்டிருக்கும்
வீடுகளைக் காட்டி
நாகரிகம் இன்னும்
பிறந்து கொண்டிருக்கிறது
என்றார்கள்
மது அருந்த வருவோரையும்
புகைக்க வருவோரையும்
இடம் சுட்டி பொருள் விளக்கிப்
படித்துறைக்கு வரும் கூட்டம்
இப்போதும் இருக்கிறது என்றார்கள்
தகன மேடையும்
கருமாதித் துறையும்
மாறி விடவில்லை என்றார்கள்
மேட்டுத்தெரு மாடசாமியின்
நல்லடக்கம்
இன்று பிற்பகல் மூன்று மணியளவில்
வெண்ணாற்றங்கரையும் நடைபெறும்
என்பதை
ஆழ்ந்த வருத்தத்தோடுத் தெரிவித்துக்
கொள்வதோடு
உற்றார்கள் உறவினர்கள்
இதை ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்று
இரங்கல் தெரிவித்துச் செல்லும்
ஒலிப்பெருக்கியும்
மேற்படி அனைத்தையும்
உறுதிப்படுத்திச் செல்வதால்
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்
மனிதர்கள் எப்படியெல்லாமோ
மாற்றிய பின்னும்
ஆறு என்றும் ஆறுதான்
*****
No comments:
Post a Comment