அந்தி மழையின் குடை
சுவர்கள் இடமாறி விடுவதைப்
போல
வீடு அமர்க்களப்படுகிறது
சுவரெங்கும் படர்ந்த தர்பூசணிச்
செடியைப் போல
வண்ண பலூன்கள்
மூலை முடுக்கெல்லாம் காய்த்துத்
தொங்குகின்றன
பலூன்களினின்று மலர்ந்ததைப்
போல
பிளாஸ்டிக்கில் பிரசவமான
பூக்கள் வெடித்துச் சிரிக்கின்றன
வானவில்லில் ரங்கராட்டினம்
ஆடுவதைப் போலக்
குழந்தைகள் குதூகலமாய் இருக்கிறார்கள்
கவச குண்டல கர்ணன்களைப் போலக்
கைகளில் பரிசுப் பொருட்களோடு
காத்திருக்கிறார்கள்
ராக்கெட் ஒன்றின் ஏவுதலுக்கான
கௌன்ட் டவுனைப் போல
நேரம் நெருங்குகிறது
கத்தியின் கூர்முனையில்
வரைபடம் வரையப்படுவதைப் போலக்
கேக் வெட்டப்படுகிறது
யாவர்க்கும் ஒரு வாய் என்பது
போல
அனைவருக்கும் ஊட்டப்படுகிறது
அந்தி மழையில் நனைந்தபடி
குடை பிடித்துச் செல்வதைப்
போலப்
பொம்மையின் பிறந்த நாளைக்
கொண்டாடி முடிக்கிறாள் பாப்பூ
*****
No comments:
Post a Comment