30 Jul 2022

காதலிப்பது என்றால் சும்மாவா

காதலிப்பது என்றால் சும்மாவா

உன் அப்பாவை சார் என்றேன்

அம்மாவை மேடம் என்றேன்

தம்பியை மிஸ்டர் என்றேன்

சித்தப்பா பெரியப்பா மாமா என்று

நிறைய சார்கள்

சித்தி பெரியம்மா மாமி அத்தை என்று

நிறைய மேடம்கள் ஆகி விட்டன

நிறைய தம்பிகள் அண்ணன்கள் கசின்கள்

நிறைய மிஸ்டர்களும் ஆகி விட்டன

லாட் ஆப் தாங்ஸ்

ப்ளீஸ்

எக்ஸ்கியூஸ் மீ

ஒன் மினிட்

பேர்டன்

வாவ் ப்யூட்பூல்

ஸோ க்யூட்

வோண்டர்புல்யா

இப்படி நிறைய நிறைய

காதலிப்பது என்றால் சும்மாவா சொல்

எவ்வளவு ஆங்கில வார்த்தைகள்

ஸ்போக்கன் இங்கிலீஷ்காரன் நன்றாகச் சம்பாதிக்கிறான்

*****

இயற்கை விவசாயத்தில் எஞ்சி நிற்கும் வாய்ப்புகள்

இயற்கை விவசாயத்தில் எஞ்சி நிற்கும் வாய்ப்புகள்

            ஆட்டுக்கிடை போடுதல் என்பது விவசாய நிலத்தை இயற்கையாக வளப்படுத்தும் முறைகளுள் ஒன்று. வீடுதோறும் இருந்த மாடுகள் குறைந்து போனதாலும் மற்றும் இல்லாமல் போனதாலும் வயல்களுக்கு சாண எருவிடுதலுக்கான வாய்ப்பு குறைந்து போய் விட்டது மற்றும் இல்லாமல் போய் விட்டது.

            மாடுகள் குறைந்து போனாலும் குறையாமல் நமக்குக் கிடைக்கும் பால் போலவா சாண எரு கிடைக்கிறது? மாடுகள் இருந்தால்தான் சாண எரு கிடைக்கும். மாடுகளின் சாண எரு கிடைத்தால் நாம் அதிக அளவில் ரசாயன உரங்களை இறக்குமதி செய்யவும் வேண்டியதில்லை, அதைக் கொட்டி மண்ணைப் பாழ்படுத்தவும் வேண்டியதில்லை. அந்த வகையில் மாடுகள் விவசாய மற்றும் வீட்டளவில் மட்டுமல்லாது நாட்டளவிலும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை.

            முழுமையாக இயற்கையாக விவசாயம் செய்ய முடியாத நிலையை நம் விவசாய முறை அடைந்து விட்டது என்பது ஓர் எதிர்மறைக் கூற்றைப் போலத் தெரியும். நிலைமை அப்படித்தான் இருக்கிறது. ரசாயன உரங்களையோ, ரசாயன மருந்துகளையோ தவிர்க்க முடியாத நிலைக்கு இந்திய விவசாய முறை அதிரடியாகவும் அபாயகரமாவும் மாறி விட்டது. இருந்த போதிலும் பகுதியளவேனும் அல்லது மிகக் கொஞ்சமேனும் இயற்கையான விவசாய முறைகள் இந்திய விவசாய முறையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

            இந்திய விவசாய முறையில் பயன்படுத்தப்படும் சில பூச்சிக்கொல்லிகள் உயிருக்கே உலை வைப்பவை என்றாலும் பயிர்களுக்குத் தாராளமாகப் பயன்படுத்தப்படுபவை. ரசாயன பூச்சிக்கொல்லிகள் எனும் உயிர்க்கொல்லிகள் இயற்கையாக இருந்த எவ்வளவோ பூச்சிக்கொல்லி முறைகள் வழக்கொழிந்துப் போய் விட்டன.

            ஆவின் ஐம்பொருள் எனப்படும் பஞ்சகவ்வியம் இயற்கை உரமாகவும் பயிர்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலைத் தரக் கூடிய ஊக்க மருந்தாகவும் இயற்கையான பூச்சிவிரட்டியாகவும் பயன்படுத்தக்கூடியது. வேப்பம் இலைகளும், கொட்டைகளும் இயற்கையான பூச்சிக்கொல்லிகள். இவற்றை செலவேதும் இன்றி விவசாயிகள் தங்கள் உடல் உழைப்பாலும் சேகரிப்பாலும் செய்து கொண்டனர்.

            இப்போது நிலைமை மாறி விட்டது. வேப்ப மரத்திற்குப் பதிலாக ஸ்பிரேயர் வந்து விட்டது. வேப்ப எண்ணெய்க்குப் பதிலாகப் பூச்சிக்கொல்லிகள் வந்து விட்டன.

            எவ்வளவோ இயற்கையான விவசாய முறைகள் மறைந்து விட்ட போதும் ஆட்டுக்கிடை போடுதலை இன்றும் டெல்டா மாவட்டங்களின் சில விவசாய நிலங்களில் பார்க்க முடிகிறது. கீதாரிகளும் கிடைகளும் அந்த வகையில் விவசாயத்தை இயற்கையாகச் செய்ய உதவும் எஞ்சி நிற்கும் எச்சங்கள் எனலாம்.

            விவசாயத்திற்கான செலவுகளும் விளைவிப்பதற்கான கூலிகளும் அதிகரித்து விட்ட நிலையில் சாண எருவைத் தேடி அலைந்து அதை ஆட்களைக் கொண்டு வண்டியில் ஏற்றி மீண்டும் வயலில் முட்டுகளாக இறக்கி எருவைக் கலைத்து ஆகும் செலவிற்கு வயலில் கிடை போடுவது லாபகரமாகவும் இயற்கையான எருவிடும் முறையைத் தக்க வைக்கும் ஒரு வாய்ப்பாகவும் இருக்கிறது.

            ஆடுகளில் எண்ணிக்கைக்கேற்ப ஓர் இரவுக்கு ஆடுகளை விவசாய நிலத்தில் அடைத்து வைப்பதற்கு ஆட்டுக்கிடைக்கான பணமானது நிர்ணயிக்கப்படுகிறது. இந்த 2022 வது ஆண்டு எங்கள் வயலில் 100 குழி அளவுள்ள ஒரு மா நிலத்திற்கு அதாவது சதுர அடி கணக்கில் சொன்னால் 14400 சதுர அடி கொண்ட வயலுக்கு 300 ஆடுகள் கொண்ட ஆட்டுக்கிடையைப் போடுவதற்கு ஓர் இரவுக்கு ஐநூறு ரூபாய் வாங்கிக் கொண்டார்கள். உரமிடுதலுக்கு ஆகும் செலவைக் கணக்குப் பார்க்க விரும்புவோருக்காக இதைக் குறிப்பிடுகிறேன். இயற்கை எருவிடுதலுக்கும் ரசாயன உரமிடுதலுக்கும் ஆகும் செலவின வேறுபாட்டை அறிந்து கொள்வதற்கும் இந்தச் செலவுக் கணக்கு உதவும் என்பதற்காகவும் சொல்கிறேன்.

            ஒரு மா அளவுள்ள நிலத்துக்கு ஒரு நாள் இரவு என்றல்ல இரண்டு நாள் இரவு கூட கிடை போடலாம். அவ்வளவுக்கவ்வளவு வயல் வளமாகும். சாண எருவை விட ஆட்டாம் புழுக்கைகள் நிலத்தை ஒரு படி கூடுதலாக வளப்படுத்தும் என்று கிராமத்தில் சொல்லப்படுவதுண்டு. அது எல்லாவற்றையும் விட சாண எருவிடுவதை விட செலவினமும் குறைவாக ஆவதும் குறிப்பிடத்தக்கது.

            மாடுகளை நாம் ஓரளவுக்கோ முழுமையாகவோ அழித்து விட்டாலும் ஆடுகளை அழியாமல் கீதாரிகள் காப்பாற்றி வருவது வயல்களுக்கு இயற்கையான முறையில் எருவிடுவதற்கு ஒரு வாய்ப்பு என்று சொல்வதா? வரப்பிரசாதம் என்று சொல்வதா?

            ஆடுகளும் கீதாரிகளும் இருக்க வேண்டும் என்றால் வயல்கள் இருக்க வேண்டும். வயல்களில் ஆட்டுக்கிடை போடுவதற்கு விவசாயிகளும் ஆர்வமாக முன் வர வேண்டும்.

            புறம்போக்கு நிலங்களாக இருந்த மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் அந்தந்தப் பகுதிகளின் செல்வாக்கு மிகுந்தவர்களின் வைப்பாட்டிகள் போல மாற்றப்பட்டு பின்பு அவர்களின் உரிமை நிலங்களாக பட்டா மாறி விட்ட நிலையில் ஆடுகளுக்கும் கீதாரிகளுக்கும் இருக்கும் ஒரே வாய்ப்பு விவசாய நிலங்கள்தான். விவசாயிகளுக்கு இயற்கையான முறையில் எருவிடுவதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பும் கீதாரிகள்தான்.

            விவசாயிகளால் கீதாரிகளும் கீதாரிகளால் விவசாயிகளால் இயற்கையாகப் பயனடையும் இந்த இணைப்பும் பிணைப்பும் எந்தக் காலத்திலும் விடுபட்டு விடக் கூடாது என்று எல்லாம் வல்ல இயற்கையை வேண்டிக் கொள்கிறேன்.

*****

வெயிலை நனைத்த மாமழை

வெயிலை நனைத்த மாமழை

            மழையை மழை என்றே சொல்லலாம். இளங்கோவடிகள் மாமழை என்கிறார். சென்னை போன்ற நகரங்களின் பெருவெள்ளத்தைப் பார்த்தவர்கள் மழையை மாமழை என்று சொல்வது பொருத்தம் என்றும் சொல்லலாம்.

            ஒவ்வொரு முறையும் கோடை வெயிலின் உக்கிரம் ஏறிக் கொண்டிருப்பதைப் பெரியவர்கள் சொல்லித்தான் அது நம் நினைவில் உறைக்கிறது. அலைவதும் அலைச்சலில் தொலைவதும் எனப் பழக்கப்பட்டுப் போன இளைய தலைமுறைக்கு வெயிலையும் மழையையும் பார்த்துக் கொண்டிருக்க நேரமில்லை. அது குறித்து யோசித்துப் பார்க்கவும் பிரக்ஞையில்லை.

            வெயிலிலிருந்து காக்க அவர்களுக்கு லோஷன்கள் இருக்கின்றன. இன்றைய வாழ்க்கையில் ஏசி அறைகள் ஒரு பெரிய விசயமில்லை. ஊட்டியும் கொடைக்கானலும் சென்றுதான் கோடையைக் கழிக்க வேண்டும் என்ற அவசியமில்லாத வகையில் ஒவ்வொரு வீட்டிலும் ஏசிக்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஊட்டியென்ன, கொடைக்கானலென்ன என்று சுவிஸையே திரையில் கொண்டு வந்து கொட்டுகின்றன டிஜிட்டல் திரைகள்.

            மழையினின்று நனையாமல் சென்று வர அவர்களுக்கு மகிழ்வுந்துகள் இருக்கின்றன. மழையின் பொருட்டு அவர்கள் எந்தக் காரியத்தையும் நிறுத்தி வைக்க முனைவதில்லை. பெருவெள்ளம் வந்து அள்ளிச் சுருட்டிக் கொண்டு போனாலொழிய மழைக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

            வாழ்க்கை இப்படி பருவ காலங்களை மதிக்காமல் ஓடும் என்று சில பல பத்தாண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. கொரோனா போன்ற பெருந்தொற்றுகள் வந்து முடக்கும் போதும் அவர்கள் ‘ஒர்க் பிரம் ஹோம்’ என்ற உத்தியோடு இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

            குழந்தைகளுக்கும் கூட வெயிலும் மழையும் ஒரு பொருட்டில்லை. எவ்வளவு வெயில் அடித்தாலும் அவர்களின் மட்டைப் பந்துகள் இடைவிடாமல் அடிபட்டுக் கொண்டும் உருண்டு கொண்டும் இருக்கின்றன. மழைப்பொழுதுகளிலும் கிடைக்கும் சிறு இடைவெளிகளில் மழைத்துளிகளைப் போல பந்துகளைப் பொழிய வைத்து விளையாடுகிறார்கள்.

            கோடையைப் பெரிதாக உணர்பவர்கள் பெரியவர்கள்தான். அவர்களே ஏறிக் கொண்டிருக்கும் வெப்பத்தை உணர்கிறார்கள். அவர்களின் வயது ஏற்றமும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் ஒவ்வொரு வருடமும் கோடை வெயில் ஏறிக் கொண்டிருப்பது உண்மை. வயது முதிர்வும் மட்டுமல்லாது அந்த முதிர்ச்சிதான் பருவ நிலைகளை உணர்ந்து கொள்ளும் பக்குவத்தையும் அவர்களுக்குத் தருகிறது.

            வீட்டுக்கு முன்போ பின்போ ஒரு புங்கனையோ வேப்ப மரத்தையோ நட்டு வைத்திருக்கும் முன்னோர்களை நன்றியோடு நினைந்து பார்க்கும் அவர்கள் போர்டிகோவிற்கு முன்பாக ஒரு வேப்பங்கன்றையாவது கிளப்பி விட வேண்டும் என்று முனைப்போடு இருக்கிறார்கள்.

            அநேகமாக வீட்டின் முன் ஒரு புங்கனோ, வேப்பனோ இருக்கும் வீடுகளில் ஒரு முதியவர் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். மரமென்பது வெறும் மரம் மட்டுமா என்ன? கோடை வெயிலைக் குளிர்விப்பது மட்டுமா? மழையை வழங்கும் முலைக்காம்புகளும் மரங்கள்தானே.

            கோடை வெயிலில் நிற்கும் போதும், தண்ணீருக்காக ஏங்கும் போதும் மழை என்பது மாமழைதான் என்பது போல பெருவெள்ளமாகப் பெருக்கெடுக்கும் போதும் அது மாமழைதான். இந்த வருட கோடை வெயிலைக் குளிர்வித்திருப்பதும் அதே மாமழைதான்.

            மழைக்கு இணையாக மழையைத் துணையாகக் கொண்டு வரும் மரங்களும் மாமரங்கள்தான். மரங்களில் மாமரம் என்று ஒரு மரம் இருந்தாலும் மரங்களின் சிறப்பைப் பார்க்கும் போது ஒவ்வொரு மரமும் மாமரம்தான் இல்லையா.

*****

வானிலைக் கணிப்பாளர்கள்

வானிலைக் கணிப்பாளர்கள்

மழையைக் கணிக்கிறேன் என்று

ஆளாளுக்குக் கிளம்பியிருக்கிறார்கள்

வாட்ஸ்அப்பை விடாது நனைக்கிறார்கள்

பிக் பிரேக்கிங் என்று போட்டு

மேகத்தை நகர்த்துகிறார்கள்

காற்றை திசை திருப்புகிறார்கள்

இப்போது மழை பெய்யும் என்கிறார்கள்

இப்போது வெயில் அடிக்கும் என்கிறார்கள்

புயல் வர இருபத்து மூன்று மணி நேரம்

ஐம்பது நான்கு நிமிடம் இருபத்தேழு நொடிகள்

இருக்கிறது என்று துல்லியம் சொல்கிறார்கள்

எவ்வளவு சொல்கிறார்கள்

நுட்பம் காட்டுகிறார்கள்

எந்தக் குழந்தையாவது நம்புகிறதா பாருங்கள்

சமத்துகள் எல்லாம்

கலெக்டர் லீவ் விட்டாரா என்று கேட்கிறதுகள்

*****

28 Jul 2022

ஏனிந்த மழை இப்படிப் பொழிகிறது?

ஏனிந்த மழை இப்படிப் பொழிகிறது?

மழையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நீரின்று அமையாது உலகு என்று திருவள்ளுவர் மழையைத்தான் குறிப்பிடுகிறார்.

மாமழை என்று இளங்கோவடிகள் மழையை வணங்கி வாழ்த்துகிறார்.

ஒரு வகையில் மழைதான் பூமியை அடையாளப்படுத்துகிறது. மழை இன்றேல் பூமியும் உயிர்கள் இல்லாத மற்ற கிரகங்களில் ஒன்றாக இருந்திருக்கும்.

தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதத்தை மழை மாதம் என்பார்கள். கார்த்திகை மாதத்தை அடைமழை மாதம் என்பார்கள். புரட்டாசியில் பிரண்டை காயும் அளவுக்கு வெயிலும் அடிக்கலாம், ஊரே வெள்ளத்தில் மிதக்கும் அளவுக்கு மழையும் பெய்யலாம் என்பார்கள். இப்படி மழைக்கும் மாதங்களுக்குமான உறவு பற்றிய வழக்கு கிராமங்களில் உண்டு.

இப்போது பெய்யும் மழைக்கும் சில பத்தாண்டுகளுக்கு முன்பு பெய்த மழைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

மனிதர்களைப் போல இந்த மழை அவசர அவரசமாகப் பெய்து விட்டுப் போகிறதோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுவதுண்டு. சில மாதங்கள் வரை சீராகப் பெய்ய வேண்டிய மழை சில நாட்களில் பெய்து விடுகிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது.

ஐப்பசி, கார்த்திகை முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும். ஆனால் வெள்ளம் போன்ற அசௌகரியங்கள் அபூர்வம்தான் என்று அப்போதைய பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இன்று மழை வெள்ளம் சர்வ சாதாரணமாகி விட்டது. ஒரு நாள் மழைக்கே மறுநாள் வெள்ளத்தில் படகு விட வேண்டியதாக இருக்கிறது.

சில மணி நேரங்கள் நின்று நிதானமாகப் பெய்ய வேண்டிய மழை சடுதியில் பெய்து விடுவதை மேக வெடிப்பு என்கிறார்கள். ஒரு நாளில் ஓயாது பெய்யும் மழைக்காக ரெட் அலர்ட் கொடுக்கிறார்கள்.

எங்கே எப்போது எப்படி மழை பெய்யும் என்பதற்கு எந்த வித நிச்சயமும் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. மழைப்பேறும் மகப்பேறும் மகாதேவன் கூட அறியாதது என்று இது குறித்து நம் முன்னோர்கள் சொலவம் சொல்லியிருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் சொன்னது மேற்குறிப்பிட்ட பொருளில் அல்ல. அவர்கள் குறிப்பிடும் மழை அபாயத்தைச் சுமந்து வரும் மழையும் அன்று.

ஏன் மழை இப்படி மாறியது? பருவநிலை மாறுபாடு என்கிறார்கள். பருவநிலை மாறுபாட்டால் மழை காணாப் பிரதேசங்கள் கூட கனமழையைப் பெறுகின்றன. கனமழையைப் பெறும் பிரதேசங்கள் மழை மறைவு பிரதேசங்களாக மாறுகின்றன.

ஐரோப்பா இந்த ஆண்டு கடும் கோடையைச் சந்தித்திருக்கிறது. தமிழ் நாட்டில் கோடையை மழை தணித்திருக்கிறது.

சில ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை நட்ட வைத்த பயிர்களுக்கு மழையும் வராமல் காவிரியில் தண்ணீரும் வராமல் விவசாயிகள் சிரமப்பட்டிருக்கிறார்கள்.

இப்போது நட்ட வைத்த பயிர்களை அறுவடை செய்யும் போது மழையில் நனையாமல் காப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பருவநிலை மாறுபாட்டால் பொழியும் இந்த மழையால் நிகழ்ந்த ஒரே நன்மை கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகத்தில் கனமழை பொழிந்து மேட்டூர் அணை நிரம்புவதுதான்.

நெல் சாகுபடியில் குறுவை சாகுபடியை அறுவடை செய்யும் போது மழையின் பாதிப்புகள் இருக்கும்தான். ஆனால் சம்பா சாகுபடி அறுவடையின் போதும் மழையின் பாதிப்புகள் கடந்த சில ஆண்டுகள் நிலவுவது புதிராக இருக்கிறது.

அறுவடையின் போது பொழியும் மழையால் நெல்லைக் காய வைப்பதற்குக் கணிசமாக செலவழிக்க வேண்டியிருக்கிறது.

இந்த ஆண்டு காவிரியில் சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட்டார்கள். எங்கள் கிராமத்தில் முன்பு போல ஆர்வமாக பலரும் குறுவை சாகுபடியைச் செய்யவில்லை. சிலர் செய்திருக்கிறார்கள். அவர்களும் ஆர்வமாகச் செய்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆற்றில் நீர் வந்து விட்ட பிறகு குறுவைச் சாகுபடியைச் செய்யாமல் இருக்க முடியாத பழக்க தோஷத்தால் செய்தவர்கள் என்று அவர்களைச் சொல்லலாம்.

இந்தக் குறுவை அறுவடையின் போது மழை வந்து நனைக்கலாம். ஈரப்பதத்தின் அளவைக் காரணம் காட்டி அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லை எடுக்காமல் தவிர்க்கலாம். காய வைத்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்று தேவுடு காத்து அந்தக் காத்திருத்தலில் நெல்லை மழையில் நனையவும் விடலாம். இந்தச் சிரமங்கள் எதற்கென்றுதான் பலர் குறுவையை விட்டு விட்டார்கள்.

பருவநிலை மாறுபாட்டைப் போல கொள்முதல் முறை மாறுபாடும் குறுவையைத் தள்ளி வைக்கச் செய்திருக்கிறது விவசாயிகளை. மழையைப் போலவே எல்லாம் திடீர் திடீர் என்று மாறுகின்றன.

உரங்களின் விலைகள் மாறுகின்றன. விதை நெல்லின் விலை அபாய நிலையை எட்டுகிறது. விவசாயக் கருவிகளின் விலைகள் மாறுகின்றன. ஆட்களின் கூலிகள் மாறுகின்றன. நெல் மூட்டை ஒன்றின் விலை மட்டும் மாறவே இல்லை. விதைத்தவர்கள் விதைத்த காசை கூட எடுக்க முடியவில்லை என்றால் எப்படி விவசாயம் செய்வார்கள்?

வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உன் நெல் மூட்டைக்கு ஏன் கொடுக்க வேண்டும் கூடுதல் விலை என்பது போல அரசின் போக்கு அமைந்தால் விவசாயிகள் வேறு என்னதான் செய்வார்கள்?

மழை கூட இப்படி, அப்படி என்று ஒரு விதத்தில் கருணை காட்டி விடுகிறது. ஆனால் விலைதான் விவசாயிகளிடம் எந்த விதமான கருணையும் காட்ட மாட்டேன்கிறது. அரிசிக்கு .ஜி.எஸ்.டி. விதிக்கும் வகையில் நிலைமை மாறி விட்ட பிறகு நெல் மூட்டையின் கொள்முதல் விலை மட்டும் அப்படியே நீடிப்பது கவலைக்குரிய அம்சம்தான்.

இப்போது எனக்குப் புரிகிறது, இந்த மழை ஏன் தாறுமாறாகப் பெய்கிறது என்று. விவசாயிகளின் கவலைகளைப் புரிந்து கொள்ள முடியாமல்தான் இந்த மழை தாறுமாறாகப் பெய்கிறதோ என்னவோ?!

*****

27 Jul 2022

உங்கள் உணவுக்கட்டுபாட்டை வளர்த்துக் கொள்வது எப்படி?

உங்கள் உணவுக்கட்டுபாட்டை வளர்த்துக் கொள்வது எப்படி?

உணவு கட்டுபாட்டை எங்கிருந்து ஆரம்பிப்பது?

உணவில் கட்டுபாடு என்பது தேவைதானா?

இப்படி பல கேள்விகள் நீங்கள் உணவுக் கட்டுபாடு என்ற சொல்லைக் கேட்டதும் உங்களுக்குள் ஏற்படலாம் அல்லது இப்படிப்பட்ட கேள்விகளை நீங்கள் எழுப்பத் துவங்கலாம்.

அதற்கு முன் ஒரு சிலவற்றை நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

உணவுக்கு அளவு தேவையில்லை என்று சொன்னால் வயிற்றுக்கு ஓர் அளவு இருக்கிறதே. செரிமானத்துக்கும் ஒரு அளவு இருக்கிறதே.

பள்ளிக்கூடத்தில் படித்த போது சொன்ன ஒரு கதை இன்னும் எனக்குப் பசுமையாக நினைவாக இருக்கிறது.

ஆசை மிகுதியால் எலி ஒன்று தனக்குக் கிடைத்த உணவு முழுவதையும் தானே உண்டு விடும். அதிக அளவு உண்டதால் வயிற்று வலியால் அவதிப்படும். மருத்துவர் வருவார் ஊசி போடுவார். கிடைத்த உணவை மற்ற எலிகளோடு பகிர்ந்து உண்டிருந்தால் அந்த எலிக்கு அந்த நிலை ஏற்பட்டிருக்காது என்ற நீதியோடு அந்தக் கதை சொல்லப்படும்.

எவ்வளவு உணவு கிடைத்தால் என்ன? அவ்வளவையும் உண்டு விட முடியுமா? உண்ண உண்ண திகட்டாமல் இருக்க வேண்டுமே? அப்படியே திகட்ட திகட்ட உண்டாலும் வயிறு அதைச் செரிக்க வேண்டுமே?

நமக்கு உணவுக் கட்டுபாட்டைப் பேச வேண்டிய அவசியம் ஏன் வந்தது? சர்க்கரை வியாதி, கொழுப்பு நோய், ரத்த அழுத்தப் பிரச்சனைகள் போன்றவை நம்மை உணவுக் கட்டுபாட்டை நோக்கி நகர்த்துகின்றன.

நம் முன்னோர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் இல்லை. ஒருவேளை இங்கொருவர், அங்கொருவர் என்று சொற்ப எண்ணிக்கையில் தெரிந்தோ தெரியாமல் இருந்திருக்கலாம். இப்போது வெளிப்படுவது போல ஒரு சமூக நோயைப் போல அந்த நோய்கள் அப்போது வெளிப்படவில்லை.

அவர்களுக்குத் தேவைக்கும் குறைவாக உணவு கிடைத்ததுதான் சர்க்கரை, கொழுப்பு போன்ற நோய்கள் அவர்களை அண்டாமல் போனதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். மேலும் அவர்களின் காலத்தில் அவர்கள் கடுமையாக உடல் உழைப்பில் ஈடுபடவும் வேண்டியிருந்தது.

அவர்கள் காலத்தில் மூன்று வேளையும் முறையாக உணவு உண்டவர்கள் குறைவு. இரண்டு வேளை உணவோடு வாழ்ந்தவர்கள் அநேகம். ஒரு வேளை உணவோடு வாழ்ந்தவர்களும் அதிகம். ஒருவேளை உணவும் கிடைக்காமல் இருந்தவர்கள் இன்னும் அதிகம்.

குறையான உணவு அவர்களை ஒரு விதத்தில் நோய்களினின்று காப்பாற்றியது. இன்று நம்முடைய மிகையான உணவே நம் நோய்களுக்குக் காரணிகளாகின்றன.

எதிர்காலத்தில் நின்று பார்க்கும் போது உணவின்றி பஞ்சத்தால் இறந்தோரின் எண்ணிக்கையை விட மிகை உணவு உண்டு அதனால் ஏற்பட்ட நோய்களால் மாண்டவர்கள் அதிகமாக இருக்கலாம்.

உண்பதற்கேற்ப உடல் உழைப்பு இருக்கும் பட்சத்தில் உணவில் எந்த விதமான கட்டுபாடும் தேவையில்லை. உடல் உழைப்பு குறைந்து விட்ட காலத்தை நோக்கி நம்மை இயந்திரங்கள் நகர்த்தி விட்டன. நமது உடல் உழைப்புக்கு ஏற்ற அளவில் உண்ண வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

நாவின் சுவைக்கு அடிமைப்பட்டுக் கூடுதலாக உண்ட உணவுக்கேற்ப உடற்பயிற்சியோ, யோகாவோ செய்பவர் சர்க்கரை, கொழுப்பு தொடர்பான நோய்கள் வராமல் தம்மைக் காத்துக் கொள்ளலாம். ஆனால் யோகா உணவுக் கட்டுபாட்டை வலியுறுத்துகிறது. நாவின் சுவையைப் புரிந்து கொள்ளச் சொல்கிறது.

உடற்பயிற்சியும் யோகாவும் கட்டுபாடான வாழ்வின் அங்கங்கள். உடற்பயிற்சியையோ யோகாவையோ செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் ஒருவருக்கு உணவுக் கட்டுபாடு குறித்த உணர்வு இயல்பாக இருக்கும். உணவுக்கட்டுபாட்டை அவர் வழக்கமான பழக்கமாக வைத்திருப்பார்.

இன்றைய அவசர வாழ்வில் உடற்பயிற்சிக்கும் யோகாவுக்கும் நேரமில்லை என்று சொல்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். வாழ்க்கை எவ்வளவு அவசரமாக மாறினாலும் அந்த அவசர வாழ்க்கையில் உடற்பயிற்சியும் யோகாவும் தவிர்க்க முடியாத அங்கங்கள்தான் என்றாலும் யோகா மற்றும் உடற்பயிற்சி தவிர்த்த உணவுக் கட்டுபாடு முறைகள் இருக்கிறதா என்று கேட்பவர்கள் அதிகம் உருவாகிக் கொணடிருக்கிறார்கள்.

பெரிதும் பிரயத்தனப்படாமல் உணவுக்கட்டுபாடு முறைகள் ஏதேனும் கடைபிடிப்பதற்கு இருக்கிறதா என்ன? ஒரு சில முறைகள் இருக்கின்றன. அதற்கு உங்களுக்கு அபாரமான மனக்கட்டுபாடு தேவைப்படலாம்.

ஒரு மனிதருக்கு மூன்று வேளை உணவு போதுமானது. வெறும் மூன்று வேளை உணவு மட்டுமே போதுமானது. அப்படியானால் இடையிடையே சிற்றுண்டிகள் தேவையே இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மூன்று வேளை உணவை மட்டும் எடுத்துக் கொள்வதோடு இடையிடையே எடுத்துக் கொள்ளும் சிற்றுண்டியை நிறுத்திக் கொள்வது தற்காலத்துக்கு ஏற்ற அருமையான உணவுக் கட்டுபாடு எனலாம்.

ஆரம்பத்தில் இந்த உணவுக் கட்டுபாடு முறை கடினமாகத் தெரியலாம். அடிக்கடி தேநீரோ, குளம்பியோ குடித்துப் பழகி விட்டவர்களுக்கு இந்தக் கட்டுபாடு சுபலமானதாக இருக்க வாய்ப்பில்லை.

பழக்கத்திற்கு முன் எதுவும் கடினம் இல்லை. சிற்றுண்டியை விட்டு விடுவதை ஒருவர் பழகிக் கொண்டால் அது நிச்சயம் சுலபமாகி விடும்.

மூன்று வேளை உணவை மட்டும் எடுத்துக் கொள்வது என்ற கட்டுபாட்டிற்குப் பழக்கப்பட்ட பின்பு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லலாம்.

ஒரு நாளுக்கு மூன்று வேளை உணவு என்றால் ஒரு வாரத்துக்கு இருபத்தோரு வேளை உணவை எடுத்துக் கொள்கிறோம். இதை பதினெட்டு வேளை உணவாக மாற்றலாம். அதாவது வாரத்தில் உங்களுக்குப் பிடித்த மூன்று நாட்களுக்கு இருவேளை உணவை மட்டும் எடுத்துக் கொள்வது மூலமாக வாரத்திற்கு இருபத்தியோரு வேளை என்றிருக்கும் எண்ணிக்கையை நீங்கள் பதினெட்டாகக் குறைக்கலாம். ஒரு நாள் மூன்று வேளை உணவு, அடுத்த நாள் இரண்டு வேளை உணவு என்று கூட இதை நீங்கள் வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

மேற்கண்ட முறையில் நீங்கள் நன்கு பழக்கப்பட்ட பின்பு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுடன் கூட நிறுத்திக் கொள்ளலாம். ஒரு நாளுக்கு இரண்டு வேளை உணவு என்பது மிக அபாரமாக உங்களுக்கு உதவும். உங்கள் சுறுசுறுப்பு, மலர்ச்சி, உற்சாகம் அனைத்தும் இரு வேளை உணவுக்குள் இருப்பதை நீங்கள் வெகு விரைவில் உணர்ந்து கொள்வீர்கள்.

உணவுக் கட்டுபாடு என்பது நீங்கள் வகுத்துக் கொள்ளும் முறைகளில் பழக்கப்பட்ட பிறகுதான் அதன் நன்மை உங்களால் உணர்ந்து கொள்ளப்பட்டு தொடர்ந்து உங்களது நடைமுறைக்கானதாக மாறும். அது வரை நீங்கள் அந்தக் கட்டுபாட்டை உங்களுக்கு நீங்களே பழக்கப்படுத்திக் கொள்வதில் ஒரு போதும் சோர்ந்து விடக் கூடாது.

இப்போது மேலே எழுப்பப்பட்ட கேள்விகளை ஒரு முறை எழுப்பிப் பாருங்கள். அந்தக் கேள்விகளுக்கு அர்த்தம் இருப்பதையும் அக்கேள்விகளுக்கான தீர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியம் இருப்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

*****

26 Jul 2022

தீபாவளி வெடியோடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் சேர்த்து விடாதீர்கள்!

தீபாவளி வெடியோடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் சேர்த்து விடாதீர்கள்!

            எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெடிப்பதை வைத்துதான் சில நாட்களாக எங்கள் வீட்டில் காமெடி ஓடிக் கொண்டிருக்கிறது.

            எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெடிக்கின்றன என்று சொன்னதும் என் மகள் அப்பா தீபாவளிக்கு இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்கிக் கொடுங்கள் என்கிறாள்.

            எப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெடிக்க ஆரம்பித்து விட்டனவோ அவற்றைத் தீவிரவாதிகள் கையில் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறாள் மனைவி ரொம்ப கரிசனத்தோடு.

            எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பற்றி எரிவதால் அதனுடன் ஹெல்மெட் கொடுப்பதைப் போல ஏன் தீயணைப்பான் கொடுக்கக் கூடாது என்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்.

            தற்சமயம் கிப்ட் கேட்கும் அசாமிகளை நான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வைத்துதான் சமாளித்துக் கொண்டிருக்கிறேன். அதாகப்பட்டது கிப்ட் என்று யாரேனும் கேட்டால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கித் தரவா என்று கேட்டால் அசாமிகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட வேகமாக வெடித்துத் தெறித்தாற் போல பறந்து போகிறார்கள்.

            தற்போதைய சாலைப் போக்குவரத்தைப் பார்க்கையில் நூறு இருசக்கர வாகனங்களில் பத்தாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக இருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மனதில் வைத்துதான் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதா என்று என் நண்பர் ஒருவர் கூட சந்தேகம் தெரிவித்து விட்டார்.

            எனக்கென்னவோ சத்தம் போடாமல் அமைதியாகச் செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் டர் டுர் சர்ரென்று சத்தம் எழுப்பிக் கொண்டே செல்லும் என்னுடைய பெட்ரோல் ஸ்கூட்டரையும் பார்க்கையில் என் ஸ்கூட்டர் அடம் பிடிக்கும் குழந்தையைப் போலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சமத்தான குழந்தையைப் போலவும் தோன்றுகிறது.

            புகையில்லை, சுற்றுச்சூழல் மாசு இல்லை என்று நாம் சொன்னாலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மின்சாரம் இல்லாமல் எப்படி ஓடும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும். அதற்குத் தேவையான மின்சாரத்தை எப்படித் தயாரிக்கிறார்கள் என்று நாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அணு சக்தி, அனல் சக்தி என்ற பல வழிகளில்தான் மின்சாரம் தயாராகி வருகிறது. அவை உண்டாக்கும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைப் பேசி மாளாது.

            எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரிகள் மாபெரும் சிதைக்க முடியாத மாசுக்களாய் உருவாகும் ஆபத்தும் இருக்கிறது.

            சுற்றுச்சூழலை, மாசுக்களைப் பற்றி யோசித்தால் மனிதர்கள் இயங்க முடியாது. மனிதர்கள் தங்களுடைய இயக்கத்தைப் பற்றி யோசித்தால் அவற்றை அளவோடு வைத்துக் கொள்ள முடியும். அந்த அளவில் எரிபொருளைச் சிக்கனமாகவும் தேவைக்கேற்ற வகையிலும் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கும் மாசற்ற வாழ்க்கை முறைக்கும் ஒவ்வொரு மனிதரும் தம்மால் இயன்றதைச் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.

*****

தந்தையிடம் கேளுங்கள்

தந்தையிடம் கேளுங்கள்

தந்தையிடம் கேளுங்கள்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதால்

நானென்ன சொல்கிறேன் என்றால்

நிறைய சம்பாதியுங்கள்

வீடு வாங்குங்கள்

வீட்டிற்குள் வைப்பதற்கு

சம்பாத்தியத்தை வைப்பதற்கும்

பீரோ வாங்குங்கள்

காவலுக்கு நாய்களை

நாய்களைப் பார்த்துக் கொள்ள

மனைவியைப் பிள்ளைகளை வாங்குங்கள்

சம்பாத்தியத்தைப் பிறத்தியார் வந்து

கொள்ளையடித்து விடாமல்

அருகில் இருப்போரைக் குண்டர்களாக்கிக் கொள்ள

அடிக்கடி சோறு போடுங்கள்

குவார்ட்டர் ஊற்றுங்கள்

படித்தால் சம்பாதிக்க முடியும் என்று சொல்லாதீர்கள்

சம்பாதித்தால்தான் படிக்க முடியும் என்று சொல்லுங்கள்

உங்களுக்குச் சந்தேகம் என்றால்

உங்கள் ப்ளாட் அருகே

பள்ளியும் கல்லூரியும் கட்டி வைத்திருக்கும்

கல்வித் தந்தையைக் கேட்டுக் கொள்ளுங்கள்

*****

25 Jul 2022

தினமும் செய்ய அலுப்பாக இருக்கிறது

தினமும் செய்ய அலுப்பாக இருக்கிறது

யோகா செய்தால் ஆகா என்றிருக்கலாம்

உடற்பயிற்சி செய்தால் உடல்நலமோடு இருக்கலாம்

நடைபயிற்சி செய்தால் சர்க்கரை நோயின்றி இருக்கலாம்

நீச்சல் நம்பர் ஒன் உடற்பயிற்சி

மலையேறுதல் மனசுக்கு நல்லது

அளவோடு சாப்பிட்டால் வளமோடு இருக்கலாம்

இப்படி தினம் தினம்

எத்தனை எத்தனை நலக்குறிப்புகள்

நாம் நலமோடு இருக்க எத்தனை நலம் விரும்பிகள்

வாட்ஸாப்பைத் திறந்தால் போதும்

பேஸ்புக்கைப் பார்த்தால போதும்

டிவிட்டர் இன்ஸ்டா மட்டும் இளிச்சவாயா என்ன

எல்லாவற்றிலும் எத்தனை எத்தனை குறிப்புகள்

எண்ணவா முடியும்

எண்ணாமல் இருக்கத்தான் முடியுமா

அற்புதம் அற்புதம் அற்புதம்

யோகா உடற்பயிற்சி நடைபயிற்சி

தினமும் செய்ய அலுப்பாக அல்லவா இருக்கிறது

தினமும் படித்துக் கொள்வதோடு நிறுத்திக் கொள்வது நல்லது

*****

24 Jul 2022

வீரராகவன் ஒரு போலீஸ்காரர்

வீரராகவன் ஒரு போலீஸ்காரர்

            வீரராகவன் ஒரு போலீஸ்காரர். கஞ்சி போட்ட காக்கிச் சட்டை விறைப்பாக இருப்பது போலத்தான் பணியிலும் விறைப்பாக இருப்பார்.

            இதுவரை ஒரு பைசா லஞ்சம் வாங்கியதில்லை. அவருக்கு யாரும் லஞ்சம் தரவும் மாட்டார்கள். எந்தக் குறுக்கு வழிகளும் தெரியாவருக்கு யார் லஞ்சம் தர பிரியப்படுவார்கள்?

            வீரராகவனுக்கு இரண்டு தம்பிகள். ஒருவர் குடிகாரர். போலீஸ்கார அண்ணன் அரசாங்கத்தில் வேலை பார்த்துச் சம்பாதித்ததை அந்தத் தம்பி அரசாங்கத்தின் டாஸ்மாக்கிற்கு வருமானமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

            இன்னொரு தம்பி ‘போலீஸ்காரரின் தம்பி’ என்ற பெயரைப் பயன்படுத்தி அண்ணன் லஞ்சம் வாங்குவதை விட அதிகமாகச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

            வீரராகவன் தன் பாக்கெட்டில் குறையும் பணத்தைப் பற்றி எப்போதும் நினைத்துப் பார்த்ததில்லை. தம்பிகள் தாராளமாகச் செலவு செய்யட்டும் என்று விட்டு விடுவார்.

            தம்பிகளை நினைத்துக் கல்யாணம் செய்து கொள்ளாததால் ஏன் பணம் குறைகிறது என்று கேட்க பொண்டாட்டியும் இல்லாமல்போய் விட்டார்.

            இப்படி இருக்கும் நிலையில்தான் வீரராகவனுக்குத் தம்பிகள் இருவரையும் கைது செய்ய வேண்டிய இக்கட்டான நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முதல் தம்பி குடித்து விட்டு பெண்களை ஈவ் டீசிங் செய்திருந்தான். இரண்டாவது தம்பி பிராத்தல் கேஸில் பிடிக்க வேண்டிய நிலையில் இருந்தான்.

            தம்பிகளுக்காகவே வாழ்ந்து வந்த வீரராகவன் தடுமாறிப் போனார். பால்சோறும் நெய்சோறும் ஊட்டிய கைகளால் தம்பிகளைக் கைது செய்து அழைத்து வருவதா என்று பேதலித்து நின்றவர் என்ன செய்தார் தெரியுமா?

            தன்னைத் தானே கைது செய்து கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார். தம்பிகள் செய்த குற்றத்திற்காகத் தனக்குத் தண்டனை தருமாறு தன்னைத் தானே லாக்கப்பில் வைத்து பூட்டிக் கொண்டு சாவியை வெளியே தூக்கி எறிந்தார்.

            தம்பிகள் இருவரும் வெளிநாடு தப்பி ஓடினர்.

            கைது செய்ய வேண்டிய குற்றவாளிகள் இருவரைக் கைது செய்யாமல் வெளிநாடு தப்ப விட்டதற்காக நீதிமன்றமும் அவரை பணியிடை நீக்கம் செய்து சிறையிலடைக்க ஆணையிட்டது.

            வீரராகவன் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார், வெளிநாடு தப்பிச் சென்ற தம்பிகள் இருவரும் ஒருநாள் திரும்பி வந்து தன்னை ஜாமீன் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு.

            இதெல்லாம் ஒரு கதையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்தக் கதையையே நாளை சினிமாவாக நீங்கள் பார்க்கவும் நேரிடலாம். எதற்கும் இருக்கட்டும், ஒன்றுக்கு இரண்டு முறை படித்துக் கொள்ளுங்கள். பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே படம் பார்க்க இது போன்ற கதைகள் உதவும்.

*****

23 Jul 2022

கடவுளுக்காகப் பிரார்த்தித்தல்

கடவுளுக்காகப் பிரார்த்தித்தல்

நான்கு பேர் கூட நன்றாக நிற்க முடியாது

வாகனத்தில் வந்தால் நடுசாலையில் நிறுத்த வேண்டியதுதான்

ஐந்து ஆறு என்றால் சாலை மறியல் ஆகி விடும்

ஒதுங்க இடமில்லையென்றால்

சுவர் மறைவில் பல்லிப் போல ஒதுங்கி

கண்களை மூடிக் கொண்டு சிறுநீர் பெய்து விடுகிறார்கள்

யாவற்றையும் நாலாபுறமும் நான்கு சிலைகள்

உட்கார்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன

தினமும் ஐயர் வருகிறார்

பூஜை புனஸ்காரங்கள் நடக்கின்றன

மக்கள் வருகின்றனர் வரிசை முறைப்படி

அர்ச்சனைகள் தொடர்கின்றன

கடவுள் மேல் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது

சின்ன கோயில் என்றாலும்

ஒரு நாள் விடாமல் வருபவர்கள் இருக்கிறார்கள்

வருவோர் போவோர் யார் பிரார்த்திக்கா விட்டாலும்

நான் பிரார்த்திக்கிறேன்

இன்னும் கொஞ்சம் நாலாபுறமும்

இடம் விரிவாக்கித் தந்தால்

கோயிலை நான்கு முறை சுற்றி வரலாம்

நீயென்னவோ வேண்டுவோருக்கு எல்லாம் தந்து

உன்கேதும் இல்லாமல் இருந்து கொள்கிறாயே கடவுளே

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...