30 Jul 2022

வெயிலை நனைத்த மாமழை

வெயிலை நனைத்த மாமழை

            மழையை மழை என்றே சொல்லலாம். இளங்கோவடிகள் மாமழை என்கிறார். சென்னை போன்ற நகரங்களின் பெருவெள்ளத்தைப் பார்த்தவர்கள் மழையை மாமழை என்று சொல்வது பொருத்தம் என்றும் சொல்லலாம்.

            ஒவ்வொரு முறையும் கோடை வெயிலின் உக்கிரம் ஏறிக் கொண்டிருப்பதைப் பெரியவர்கள் சொல்லித்தான் அது நம் நினைவில் உறைக்கிறது. அலைவதும் அலைச்சலில் தொலைவதும் எனப் பழக்கப்பட்டுப் போன இளைய தலைமுறைக்கு வெயிலையும் மழையையும் பார்த்துக் கொண்டிருக்க நேரமில்லை. அது குறித்து யோசித்துப் பார்க்கவும் பிரக்ஞையில்லை.

            வெயிலிலிருந்து காக்க அவர்களுக்கு லோஷன்கள் இருக்கின்றன. இன்றைய வாழ்க்கையில் ஏசி அறைகள் ஒரு பெரிய விசயமில்லை. ஊட்டியும் கொடைக்கானலும் சென்றுதான் கோடையைக் கழிக்க வேண்டும் என்ற அவசியமில்லாத வகையில் ஒவ்வொரு வீட்டிலும் ஏசிக்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஊட்டியென்ன, கொடைக்கானலென்ன என்று சுவிஸையே திரையில் கொண்டு வந்து கொட்டுகின்றன டிஜிட்டல் திரைகள்.

            மழையினின்று நனையாமல் சென்று வர அவர்களுக்கு மகிழ்வுந்துகள் இருக்கின்றன. மழையின் பொருட்டு அவர்கள் எந்தக் காரியத்தையும் நிறுத்தி வைக்க முனைவதில்லை. பெருவெள்ளம் வந்து அள்ளிச் சுருட்டிக் கொண்டு போனாலொழிய மழைக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

            வாழ்க்கை இப்படி பருவ காலங்களை மதிக்காமல் ஓடும் என்று சில பல பத்தாண்டுகளுக்கு முன்பு யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. கொரோனா போன்ற பெருந்தொற்றுகள் வந்து முடக்கும் போதும் அவர்கள் ‘ஒர்க் பிரம் ஹோம்’ என்ற உத்தியோடு இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

            குழந்தைகளுக்கும் கூட வெயிலும் மழையும் ஒரு பொருட்டில்லை. எவ்வளவு வெயில் அடித்தாலும் அவர்களின் மட்டைப் பந்துகள் இடைவிடாமல் அடிபட்டுக் கொண்டும் உருண்டு கொண்டும் இருக்கின்றன. மழைப்பொழுதுகளிலும் கிடைக்கும் சிறு இடைவெளிகளில் மழைத்துளிகளைப் போல பந்துகளைப் பொழிய வைத்து விளையாடுகிறார்கள்.

            கோடையைப் பெரிதாக உணர்பவர்கள் பெரியவர்கள்தான். அவர்களே ஏறிக் கொண்டிருக்கும் வெப்பத்தை உணர்கிறார்கள். அவர்களின் வயது ஏற்றமும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் ஒவ்வொரு வருடமும் கோடை வெயில் ஏறிக் கொண்டிருப்பது உண்மை. வயது முதிர்வும் மட்டுமல்லாது அந்த முதிர்ச்சிதான் பருவ நிலைகளை உணர்ந்து கொள்ளும் பக்குவத்தையும் அவர்களுக்குத் தருகிறது.

            வீட்டுக்கு முன்போ பின்போ ஒரு புங்கனையோ வேப்ப மரத்தையோ நட்டு வைத்திருக்கும் முன்னோர்களை நன்றியோடு நினைந்து பார்க்கும் அவர்கள் போர்டிகோவிற்கு முன்பாக ஒரு வேப்பங்கன்றையாவது கிளப்பி விட வேண்டும் என்று முனைப்போடு இருக்கிறார்கள்.

            அநேகமாக வீட்டின் முன் ஒரு புங்கனோ, வேப்பனோ இருக்கும் வீடுகளில் ஒரு முதியவர் இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். மரமென்பது வெறும் மரம் மட்டுமா என்ன? கோடை வெயிலைக் குளிர்விப்பது மட்டுமா? மழையை வழங்கும் முலைக்காம்புகளும் மரங்கள்தானே.

            கோடை வெயிலில் நிற்கும் போதும், தண்ணீருக்காக ஏங்கும் போதும் மழை என்பது மாமழைதான் என்பது போல பெருவெள்ளமாகப் பெருக்கெடுக்கும் போதும் அது மாமழைதான். இந்த வருட கோடை வெயிலைக் குளிர்வித்திருப்பதும் அதே மாமழைதான்.

            மழைக்கு இணையாக மழையைத் துணையாகக் கொண்டு வரும் மரங்களும் மாமரங்கள்தான். மரங்களில் மாமரம் என்று ஒரு மரம் இருந்தாலும் மரங்களின் சிறப்பைப் பார்க்கும் போது ஒவ்வொரு மரமும் மாமரம்தான் இல்லையா.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...