26 Jul 2022

தீபாவளி வெடியோடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் சேர்த்து விடாதீர்கள்!

தீபாவளி வெடியோடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் சேர்த்து விடாதீர்கள்!

            எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெடிப்பதை வைத்துதான் சில நாட்களாக எங்கள் வீட்டில் காமெடி ஓடிக் கொண்டிருக்கிறது.

            எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெடிக்கின்றன என்று சொன்னதும் என் மகள் அப்பா தீபாவளிக்கு இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்கிக் கொடுங்கள் என்கிறாள்.

            எப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெடிக்க ஆரம்பித்து விட்டனவோ அவற்றைத் தீவிரவாதிகள் கையில் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறாள் மனைவி ரொம்ப கரிசனத்தோடு.

            எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பற்றி எரிவதால் அதனுடன் ஹெல்மெட் கொடுப்பதைப் போல ஏன் தீயணைப்பான் கொடுக்கக் கூடாது என்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்.

            தற்சமயம் கிப்ட் கேட்கும் அசாமிகளை நான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வைத்துதான் சமாளித்துக் கொண்டிருக்கிறேன். அதாகப்பட்டது கிப்ட் என்று யாரேனும் கேட்டால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கித் தரவா என்று கேட்டால் அசாமிகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விட வேகமாக வெடித்துத் தெறித்தாற் போல பறந்து போகிறார்கள்.

            தற்போதைய சாலைப் போக்குவரத்தைப் பார்க்கையில் நூறு இருசக்கர வாகனங்களில் பத்தாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக இருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மனதில் வைத்துதான் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கிறதா என்று என் நண்பர் ஒருவர் கூட சந்தேகம் தெரிவித்து விட்டார்.

            எனக்கென்னவோ சத்தம் போடாமல் அமைதியாகச் செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் டர் டுர் சர்ரென்று சத்தம் எழுப்பிக் கொண்டே செல்லும் என்னுடைய பெட்ரோல் ஸ்கூட்டரையும் பார்க்கையில் என் ஸ்கூட்டர் அடம் பிடிக்கும் குழந்தையைப் போலும், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சமத்தான குழந்தையைப் போலவும் தோன்றுகிறது.

            புகையில்லை, சுற்றுச்சூழல் மாசு இல்லை என்று நாம் சொன்னாலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மின்சாரம் இல்லாமல் எப்படி ஓடும் என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும். அதற்குத் தேவையான மின்சாரத்தை எப்படித் தயாரிக்கிறார்கள் என்று நாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அணு சக்தி, அனல் சக்தி என்ற பல வழிகளில்தான் மின்சாரம் தயாராகி வருகிறது. அவை உண்டாக்கும் சுற்றுச்சூழல் சீர்கேட்டைப் பேசி மாளாது.

            எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரிகள் மாபெரும் சிதைக்க முடியாத மாசுக்களாய் உருவாகும் ஆபத்தும் இருக்கிறது.

            சுற்றுச்சூழலை, மாசுக்களைப் பற்றி யோசித்தால் மனிதர்கள் இயங்க முடியாது. மனிதர்கள் தங்களுடைய இயக்கத்தைப் பற்றி யோசித்தால் அவற்றை அளவோடு வைத்துக் கொள்ள முடியும். அந்த அளவில் எரிபொருளைச் சிக்கனமாகவும் தேவைக்கேற்ற வகையிலும் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கும் மாசற்ற வாழ்க்கை முறைக்கும் ஒவ்வொரு மனிதரும் தம்மால் இயன்றதைச் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...