24 Jul 2022

வீரராகவன் ஒரு போலீஸ்காரர்

வீரராகவன் ஒரு போலீஸ்காரர்

            வீரராகவன் ஒரு போலீஸ்காரர். கஞ்சி போட்ட காக்கிச் சட்டை விறைப்பாக இருப்பது போலத்தான் பணியிலும் விறைப்பாக இருப்பார்.

            இதுவரை ஒரு பைசா லஞ்சம் வாங்கியதில்லை. அவருக்கு யாரும் லஞ்சம் தரவும் மாட்டார்கள். எந்தக் குறுக்கு வழிகளும் தெரியாவருக்கு யார் லஞ்சம் தர பிரியப்படுவார்கள்?

            வீரராகவனுக்கு இரண்டு தம்பிகள். ஒருவர் குடிகாரர். போலீஸ்கார அண்ணன் அரசாங்கத்தில் வேலை பார்த்துச் சம்பாதித்ததை அந்தத் தம்பி அரசாங்கத்தின் டாஸ்மாக்கிற்கு வருமானமாகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

            இன்னொரு தம்பி ‘போலீஸ்காரரின் தம்பி’ என்ற பெயரைப் பயன்படுத்தி அண்ணன் லஞ்சம் வாங்குவதை விட அதிகமாகச் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

            வீரராகவன் தன் பாக்கெட்டில் குறையும் பணத்தைப் பற்றி எப்போதும் நினைத்துப் பார்த்ததில்லை. தம்பிகள் தாராளமாகச் செலவு செய்யட்டும் என்று விட்டு விடுவார்.

            தம்பிகளை நினைத்துக் கல்யாணம் செய்து கொள்ளாததால் ஏன் பணம் குறைகிறது என்று கேட்க பொண்டாட்டியும் இல்லாமல்போய் விட்டார்.

            இப்படி இருக்கும் நிலையில்தான் வீரராகவனுக்குத் தம்பிகள் இருவரையும் கைது செய்ய வேண்டிய இக்கட்டான நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முதல் தம்பி குடித்து விட்டு பெண்களை ஈவ் டீசிங் செய்திருந்தான். இரண்டாவது தம்பி பிராத்தல் கேஸில் பிடிக்க வேண்டிய நிலையில் இருந்தான்.

            தம்பிகளுக்காகவே வாழ்ந்து வந்த வீரராகவன் தடுமாறிப் போனார். பால்சோறும் நெய்சோறும் ஊட்டிய கைகளால் தம்பிகளைக் கைது செய்து அழைத்து வருவதா என்று பேதலித்து நின்றவர் என்ன செய்தார் தெரியுமா?

            தன்னைத் தானே கைது செய்து கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார். தம்பிகள் செய்த குற்றத்திற்காகத் தனக்குத் தண்டனை தருமாறு தன்னைத் தானே லாக்கப்பில் வைத்து பூட்டிக் கொண்டு சாவியை வெளியே தூக்கி எறிந்தார்.

            தம்பிகள் இருவரும் வெளிநாடு தப்பி ஓடினர்.

            கைது செய்ய வேண்டிய குற்றவாளிகள் இருவரைக் கைது செய்யாமல் வெளிநாடு தப்ப விட்டதற்காக நீதிமன்றமும் அவரை பணியிடை நீக்கம் செய்து சிறையிலடைக்க ஆணையிட்டது.

            வீரராகவன் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார், வெளிநாடு தப்பிச் சென்ற தம்பிகள் இருவரும் ஒருநாள் திரும்பி வந்து தன்னை ஜாமீன் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு.

            இதெல்லாம் ஒரு கதையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இந்தக் கதையையே நாளை சினிமாவாக நீங்கள் பார்க்கவும் நேரிடலாம். எதற்கும் இருக்கட்டும், ஒன்றுக்கு இரண்டு முறை படித்துக் கொள்ளுங்கள். பாப்கார்ன் சாப்பிட்டுக் கொண்டே படம் பார்க்க இது போன்ற கதைகள் உதவும்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...