27 Jul 2022

உங்கள் உணவுக்கட்டுபாட்டை வளர்த்துக் கொள்வது எப்படி?

உங்கள் உணவுக்கட்டுபாட்டை வளர்த்துக் கொள்வது எப்படி?

உணவு கட்டுபாட்டை எங்கிருந்து ஆரம்பிப்பது?

உணவில் கட்டுபாடு என்பது தேவைதானா?

இப்படி பல கேள்விகள் நீங்கள் உணவுக் கட்டுபாடு என்ற சொல்லைக் கேட்டதும் உங்களுக்குள் ஏற்படலாம் அல்லது இப்படிப்பட்ட கேள்விகளை நீங்கள் எழுப்பத் துவங்கலாம்.

அதற்கு முன் ஒரு சிலவற்றை நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

உணவுக்கு அளவு தேவையில்லை என்று சொன்னால் வயிற்றுக்கு ஓர் அளவு இருக்கிறதே. செரிமானத்துக்கும் ஒரு அளவு இருக்கிறதே.

பள்ளிக்கூடத்தில் படித்த போது சொன்ன ஒரு கதை இன்னும் எனக்குப் பசுமையாக நினைவாக இருக்கிறது.

ஆசை மிகுதியால் எலி ஒன்று தனக்குக் கிடைத்த உணவு முழுவதையும் தானே உண்டு விடும். அதிக அளவு உண்டதால் வயிற்று வலியால் அவதிப்படும். மருத்துவர் வருவார் ஊசி போடுவார். கிடைத்த உணவை மற்ற எலிகளோடு பகிர்ந்து உண்டிருந்தால் அந்த எலிக்கு அந்த நிலை ஏற்பட்டிருக்காது என்ற நீதியோடு அந்தக் கதை சொல்லப்படும்.

எவ்வளவு உணவு கிடைத்தால் என்ன? அவ்வளவையும் உண்டு விட முடியுமா? உண்ண உண்ண திகட்டாமல் இருக்க வேண்டுமே? அப்படியே திகட்ட திகட்ட உண்டாலும் வயிறு அதைச் செரிக்க வேண்டுமே?

நமக்கு உணவுக் கட்டுபாட்டைப் பேச வேண்டிய அவசியம் ஏன் வந்தது? சர்க்கரை வியாதி, கொழுப்பு நோய், ரத்த அழுத்தப் பிரச்சனைகள் போன்றவை நம்மை உணவுக் கட்டுபாட்டை நோக்கி நகர்த்துகின்றன.

நம் முன்னோர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் இல்லை. ஒருவேளை இங்கொருவர், அங்கொருவர் என்று சொற்ப எண்ணிக்கையில் தெரிந்தோ தெரியாமல் இருந்திருக்கலாம். இப்போது வெளிப்படுவது போல ஒரு சமூக நோயைப் போல அந்த நோய்கள் அப்போது வெளிப்படவில்லை.

அவர்களுக்குத் தேவைக்கும் குறைவாக உணவு கிடைத்ததுதான் சர்க்கரை, கொழுப்பு போன்ற நோய்கள் அவர்களை அண்டாமல் போனதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். மேலும் அவர்களின் காலத்தில் அவர்கள் கடுமையாக உடல் உழைப்பில் ஈடுபடவும் வேண்டியிருந்தது.

அவர்கள் காலத்தில் மூன்று வேளையும் முறையாக உணவு உண்டவர்கள் குறைவு. இரண்டு வேளை உணவோடு வாழ்ந்தவர்கள் அநேகம். ஒரு வேளை உணவோடு வாழ்ந்தவர்களும் அதிகம். ஒருவேளை உணவும் கிடைக்காமல் இருந்தவர்கள் இன்னும் அதிகம்.

குறையான உணவு அவர்களை ஒரு விதத்தில் நோய்களினின்று காப்பாற்றியது. இன்று நம்முடைய மிகையான உணவே நம் நோய்களுக்குக் காரணிகளாகின்றன.

எதிர்காலத்தில் நின்று பார்க்கும் போது உணவின்றி பஞ்சத்தால் இறந்தோரின் எண்ணிக்கையை விட மிகை உணவு உண்டு அதனால் ஏற்பட்ட நோய்களால் மாண்டவர்கள் அதிகமாக இருக்கலாம்.

உண்பதற்கேற்ப உடல் உழைப்பு இருக்கும் பட்சத்தில் உணவில் எந்த விதமான கட்டுபாடும் தேவையில்லை. உடல் உழைப்பு குறைந்து விட்ட காலத்தை நோக்கி நம்மை இயந்திரங்கள் நகர்த்தி விட்டன. நமது உடல் உழைப்புக்கு ஏற்ற அளவில் உண்ண வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

நாவின் சுவைக்கு அடிமைப்பட்டுக் கூடுதலாக உண்ட உணவுக்கேற்ப உடற்பயிற்சியோ, யோகாவோ செய்பவர் சர்க்கரை, கொழுப்பு தொடர்பான நோய்கள் வராமல் தம்மைக் காத்துக் கொள்ளலாம். ஆனால் யோகா உணவுக் கட்டுபாட்டை வலியுறுத்துகிறது. நாவின் சுவையைப் புரிந்து கொள்ளச் சொல்கிறது.

உடற்பயிற்சியும் யோகாவும் கட்டுபாடான வாழ்வின் அங்கங்கள். உடற்பயிற்சியையோ யோகாவையோ செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் ஒருவருக்கு உணவுக் கட்டுபாடு குறித்த உணர்வு இயல்பாக இருக்கும். உணவுக்கட்டுபாட்டை அவர் வழக்கமான பழக்கமாக வைத்திருப்பார்.

இன்றைய அவசர வாழ்வில் உடற்பயிற்சிக்கும் யோகாவுக்கும் நேரமில்லை என்று சொல்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். வாழ்க்கை எவ்வளவு அவசரமாக மாறினாலும் அந்த அவசர வாழ்க்கையில் உடற்பயிற்சியும் யோகாவும் தவிர்க்க முடியாத அங்கங்கள்தான் என்றாலும் யோகா மற்றும் உடற்பயிற்சி தவிர்த்த உணவுக் கட்டுபாடு முறைகள் இருக்கிறதா என்று கேட்பவர்கள் அதிகம் உருவாகிக் கொணடிருக்கிறார்கள்.

பெரிதும் பிரயத்தனப்படாமல் உணவுக்கட்டுபாடு முறைகள் ஏதேனும் கடைபிடிப்பதற்கு இருக்கிறதா என்ன? ஒரு சில முறைகள் இருக்கின்றன. அதற்கு உங்களுக்கு அபாரமான மனக்கட்டுபாடு தேவைப்படலாம்.

ஒரு மனிதருக்கு மூன்று வேளை உணவு போதுமானது. வெறும் மூன்று வேளை உணவு மட்டுமே போதுமானது. அப்படியானால் இடையிடையே சிற்றுண்டிகள் தேவையே இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மூன்று வேளை உணவை மட்டும் எடுத்துக் கொள்வதோடு இடையிடையே எடுத்துக் கொள்ளும் சிற்றுண்டியை நிறுத்திக் கொள்வது தற்காலத்துக்கு ஏற்ற அருமையான உணவுக் கட்டுபாடு எனலாம்.

ஆரம்பத்தில் இந்த உணவுக் கட்டுபாடு முறை கடினமாகத் தெரியலாம். அடிக்கடி தேநீரோ, குளம்பியோ குடித்துப் பழகி விட்டவர்களுக்கு இந்தக் கட்டுபாடு சுபலமானதாக இருக்க வாய்ப்பில்லை.

பழக்கத்திற்கு முன் எதுவும் கடினம் இல்லை. சிற்றுண்டியை விட்டு விடுவதை ஒருவர் பழகிக் கொண்டால் அது நிச்சயம் சுலபமாகி விடும்.

மூன்று வேளை உணவை மட்டும் எடுத்துக் கொள்வது என்ற கட்டுபாட்டிற்குப் பழக்கப்பட்ட பின்பு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லலாம்.

ஒரு நாளுக்கு மூன்று வேளை உணவு என்றால் ஒரு வாரத்துக்கு இருபத்தோரு வேளை உணவை எடுத்துக் கொள்கிறோம். இதை பதினெட்டு வேளை உணவாக மாற்றலாம். அதாவது வாரத்தில் உங்களுக்குப் பிடித்த மூன்று நாட்களுக்கு இருவேளை உணவை மட்டும் எடுத்துக் கொள்வது மூலமாக வாரத்திற்கு இருபத்தியோரு வேளை என்றிருக்கும் எண்ணிக்கையை நீங்கள் பதினெட்டாகக் குறைக்கலாம். ஒரு நாள் மூன்று வேளை உணவு, அடுத்த நாள் இரண்டு வேளை உணவு என்று கூட இதை நீங்கள் வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.

மேற்கண்ட முறையில் நீங்கள் நன்கு பழக்கப்பட்ட பின்பு ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுடன் கூட நிறுத்திக் கொள்ளலாம். ஒரு நாளுக்கு இரண்டு வேளை உணவு என்பது மிக அபாரமாக உங்களுக்கு உதவும். உங்கள் சுறுசுறுப்பு, மலர்ச்சி, உற்சாகம் அனைத்தும் இரு வேளை உணவுக்குள் இருப்பதை நீங்கள் வெகு விரைவில் உணர்ந்து கொள்வீர்கள்.

உணவுக் கட்டுபாடு என்பது நீங்கள் வகுத்துக் கொள்ளும் முறைகளில் பழக்கப்பட்ட பிறகுதான் அதன் நன்மை உங்களால் உணர்ந்து கொள்ளப்பட்டு தொடர்ந்து உங்களது நடைமுறைக்கானதாக மாறும். அது வரை நீங்கள் அந்தக் கட்டுபாட்டை உங்களுக்கு நீங்களே பழக்கப்படுத்திக் கொள்வதில் ஒரு போதும் சோர்ந்து விடக் கூடாது.

இப்போது மேலே எழுப்பப்பட்ட கேள்விகளை ஒரு முறை எழுப்பிப் பாருங்கள். அந்தக் கேள்விகளுக்கு அர்த்தம் இருப்பதையும் அக்கேள்விகளுக்கான தீர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியம் இருப்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்.

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...