28 Jul 2022

ஏனிந்த மழை இப்படிப் பொழிகிறது?

ஏனிந்த மழை இப்படிப் பொழிகிறது?

மழையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நீரின்று அமையாது உலகு என்று திருவள்ளுவர் மழையைத்தான் குறிப்பிடுகிறார்.

மாமழை என்று இளங்கோவடிகள் மழையை வணங்கி வாழ்த்துகிறார்.

ஒரு வகையில் மழைதான் பூமியை அடையாளப்படுத்துகிறது. மழை இன்றேல் பூமியும் உயிர்கள் இல்லாத மற்ற கிரகங்களில் ஒன்றாக இருந்திருக்கும்.

தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதத்தை மழை மாதம் என்பார்கள். கார்த்திகை மாதத்தை அடைமழை மாதம் என்பார்கள். புரட்டாசியில் பிரண்டை காயும் அளவுக்கு வெயிலும் அடிக்கலாம், ஊரே வெள்ளத்தில் மிதக்கும் அளவுக்கு மழையும் பெய்யலாம் என்பார்கள். இப்படி மழைக்கும் மாதங்களுக்குமான உறவு பற்றிய வழக்கு கிராமங்களில் உண்டு.

இப்போது பெய்யும் மழைக்கும் சில பத்தாண்டுகளுக்கு முன்பு பெய்த மழைக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

மனிதர்களைப் போல இந்த மழை அவசர அவரசமாகப் பெய்து விட்டுப் போகிறதோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுவதுண்டு. சில மாதங்கள் வரை சீராகப் பெய்ய வேண்டிய மழை சில நாட்களில் பெய்து விடுகிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது.

ஐப்பசி, கார்த்திகை முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும். ஆனால் வெள்ளம் போன்ற அசௌகரியங்கள் அபூர்வம்தான் என்று அப்போதைய பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இன்று மழை வெள்ளம் சர்வ சாதாரணமாகி விட்டது. ஒரு நாள் மழைக்கே மறுநாள் வெள்ளத்தில் படகு விட வேண்டியதாக இருக்கிறது.

சில மணி நேரங்கள் நின்று நிதானமாகப் பெய்ய வேண்டிய மழை சடுதியில் பெய்து விடுவதை மேக வெடிப்பு என்கிறார்கள். ஒரு நாளில் ஓயாது பெய்யும் மழைக்காக ரெட் அலர்ட் கொடுக்கிறார்கள்.

எங்கே எப்போது எப்படி மழை பெய்யும் என்பதற்கு எந்த வித நிச்சயமும் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. மழைப்பேறும் மகப்பேறும் மகாதேவன் கூட அறியாதது என்று இது குறித்து நம் முன்னோர்கள் சொலவம் சொல்லியிருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் சொன்னது மேற்குறிப்பிட்ட பொருளில் அல்ல. அவர்கள் குறிப்பிடும் மழை அபாயத்தைச் சுமந்து வரும் மழையும் அன்று.

ஏன் மழை இப்படி மாறியது? பருவநிலை மாறுபாடு என்கிறார்கள். பருவநிலை மாறுபாட்டால் மழை காணாப் பிரதேசங்கள் கூட கனமழையைப் பெறுகின்றன. கனமழையைப் பெறும் பிரதேசங்கள் மழை மறைவு பிரதேசங்களாக மாறுகின்றன.

ஐரோப்பா இந்த ஆண்டு கடும் கோடையைச் சந்தித்திருக்கிறது. தமிழ் நாட்டில் கோடையை மழை தணித்திருக்கிறது.

சில ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை நட்ட வைத்த பயிர்களுக்கு மழையும் வராமல் காவிரியில் தண்ணீரும் வராமல் விவசாயிகள் சிரமப்பட்டிருக்கிறார்கள்.

இப்போது நட்ட வைத்த பயிர்களை அறுவடை செய்யும் போது மழையில் நனையாமல் காப்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பருவநிலை மாறுபாட்டால் பொழியும் இந்த மழையால் நிகழ்ந்த ஒரே நன்மை கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகத்தில் கனமழை பொழிந்து மேட்டூர் அணை நிரம்புவதுதான்.

நெல் சாகுபடியில் குறுவை சாகுபடியை அறுவடை செய்யும் போது மழையின் பாதிப்புகள் இருக்கும்தான். ஆனால் சம்பா சாகுபடி அறுவடையின் போதும் மழையின் பாதிப்புகள் கடந்த சில ஆண்டுகள் நிலவுவது புதிராக இருக்கிறது.

அறுவடையின் போது பொழியும் மழையால் நெல்லைக் காய வைப்பதற்குக் கணிசமாக செலவழிக்க வேண்டியிருக்கிறது.

இந்த ஆண்டு காவிரியில் சரியான நேரத்தில் தண்ணீர் திறந்து விட்டார்கள். எங்கள் கிராமத்தில் முன்பு போல ஆர்வமாக பலரும் குறுவை சாகுபடியைச் செய்யவில்லை. சிலர் செய்திருக்கிறார்கள். அவர்களும் ஆர்வமாகச் செய்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. ஆற்றில் நீர் வந்து விட்ட பிறகு குறுவைச் சாகுபடியைச் செய்யாமல் இருக்க முடியாத பழக்க தோஷத்தால் செய்தவர்கள் என்று அவர்களைச் சொல்லலாம்.

இந்தக் குறுவை அறுவடையின் போது மழை வந்து நனைக்கலாம். ஈரப்பதத்தின் அளவைக் காரணம் காட்டி அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லை எடுக்காமல் தவிர்க்கலாம். காய வைத்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் சென்று தேவுடு காத்து அந்தக் காத்திருத்தலில் நெல்லை மழையில் நனையவும் விடலாம். இந்தச் சிரமங்கள் எதற்கென்றுதான் பலர் குறுவையை விட்டு விட்டார்கள்.

பருவநிலை மாறுபாட்டைப் போல கொள்முதல் முறை மாறுபாடும் குறுவையைத் தள்ளி வைக்கச் செய்திருக்கிறது விவசாயிகளை. மழையைப் போலவே எல்லாம் திடீர் திடீர் என்று மாறுகின்றன.

உரங்களின் விலைகள் மாறுகின்றன. விதை நெல்லின் விலை அபாய நிலையை எட்டுகிறது. விவசாயக் கருவிகளின் விலைகள் மாறுகின்றன. ஆட்களின் கூலிகள் மாறுகின்றன. நெல் மூட்டை ஒன்றின் விலை மட்டும் மாறவே இல்லை. விதைத்தவர்கள் விதைத்த காசை கூட எடுக்க முடியவில்லை என்றால் எப்படி விவசாயம் செய்வார்கள்?

வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உன் நெல் மூட்டைக்கு ஏன் கொடுக்க வேண்டும் கூடுதல் விலை என்பது போல அரசின் போக்கு அமைந்தால் விவசாயிகள் வேறு என்னதான் செய்வார்கள்?

மழை கூட இப்படி, அப்படி என்று ஒரு விதத்தில் கருணை காட்டி விடுகிறது. ஆனால் விலைதான் விவசாயிகளிடம் எந்த விதமான கருணையும் காட்ட மாட்டேன்கிறது. அரிசிக்கு .ஜி.எஸ்.டி. விதிக்கும் வகையில் நிலைமை மாறி விட்ட பிறகு நெல் மூட்டையின் கொள்முதல் விலை மட்டும் அப்படியே நீடிப்பது கவலைக்குரிய அம்சம்தான்.

இப்போது எனக்குப் புரிகிறது, இந்த மழை ஏன் தாறுமாறாகப் பெய்கிறது என்று. விவசாயிகளின் கவலைகளைப் புரிந்து கொள்ள முடியாமல்தான் இந்த மழை தாறுமாறாகப் பெய்கிறதோ என்னவோ?!

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...