30 Jul 2022

இயற்கை விவசாயத்தில் எஞ்சி நிற்கும் வாய்ப்புகள்

இயற்கை விவசாயத்தில் எஞ்சி நிற்கும் வாய்ப்புகள்

            ஆட்டுக்கிடை போடுதல் என்பது விவசாய நிலத்தை இயற்கையாக வளப்படுத்தும் முறைகளுள் ஒன்று. வீடுதோறும் இருந்த மாடுகள் குறைந்து போனதாலும் மற்றும் இல்லாமல் போனதாலும் வயல்களுக்கு சாண எருவிடுதலுக்கான வாய்ப்பு குறைந்து போய் விட்டது மற்றும் இல்லாமல் போய் விட்டது.

            மாடுகள் குறைந்து போனாலும் குறையாமல் நமக்குக் கிடைக்கும் பால் போலவா சாண எரு கிடைக்கிறது? மாடுகள் இருந்தால்தான் சாண எரு கிடைக்கும். மாடுகளின் சாண எரு கிடைத்தால் நாம் அதிக அளவில் ரசாயன உரங்களை இறக்குமதி செய்யவும் வேண்டியதில்லை, அதைக் கொட்டி மண்ணைப் பாழ்படுத்தவும் வேண்டியதில்லை. அந்த வகையில் மாடுகள் விவசாய மற்றும் வீட்டளவில் மட்டுமல்லாது நாட்டளவிலும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை.

            முழுமையாக இயற்கையாக விவசாயம் செய்ய முடியாத நிலையை நம் விவசாய முறை அடைந்து விட்டது என்பது ஓர் எதிர்மறைக் கூற்றைப் போலத் தெரியும். நிலைமை அப்படித்தான் இருக்கிறது. ரசாயன உரங்களையோ, ரசாயன மருந்துகளையோ தவிர்க்க முடியாத நிலைக்கு இந்திய விவசாய முறை அதிரடியாகவும் அபாயகரமாவும் மாறி விட்டது. இருந்த போதிலும் பகுதியளவேனும் அல்லது மிகக் கொஞ்சமேனும் இயற்கையான விவசாய முறைகள் இந்திய விவசாய முறையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

            இந்திய விவசாய முறையில் பயன்படுத்தப்படும் சில பூச்சிக்கொல்லிகள் உயிருக்கே உலை வைப்பவை என்றாலும் பயிர்களுக்குத் தாராளமாகப் பயன்படுத்தப்படுபவை. ரசாயன பூச்சிக்கொல்லிகள் எனும் உயிர்க்கொல்லிகள் இயற்கையாக இருந்த எவ்வளவோ பூச்சிக்கொல்லி முறைகள் வழக்கொழிந்துப் போய் விட்டன.

            ஆவின் ஐம்பொருள் எனப்படும் பஞ்சகவ்வியம் இயற்கை உரமாகவும் பயிர்களுக்கு இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலைத் தரக் கூடிய ஊக்க மருந்தாகவும் இயற்கையான பூச்சிவிரட்டியாகவும் பயன்படுத்தக்கூடியது. வேப்பம் இலைகளும், கொட்டைகளும் இயற்கையான பூச்சிக்கொல்லிகள். இவற்றை செலவேதும் இன்றி விவசாயிகள் தங்கள் உடல் உழைப்பாலும் சேகரிப்பாலும் செய்து கொண்டனர்.

            இப்போது நிலைமை மாறி விட்டது. வேப்ப மரத்திற்குப் பதிலாக ஸ்பிரேயர் வந்து விட்டது. வேப்ப எண்ணெய்க்குப் பதிலாகப் பூச்சிக்கொல்லிகள் வந்து விட்டன.

            எவ்வளவோ இயற்கையான விவசாய முறைகள் மறைந்து விட்ட போதும் ஆட்டுக்கிடை போடுதலை இன்றும் டெல்டா மாவட்டங்களின் சில விவசாய நிலங்களில் பார்க்க முடிகிறது. கீதாரிகளும் கிடைகளும் அந்த வகையில் விவசாயத்தை இயற்கையாகச் செய்ய உதவும் எஞ்சி நிற்கும் எச்சங்கள் எனலாம்.

            விவசாயத்திற்கான செலவுகளும் விளைவிப்பதற்கான கூலிகளும் அதிகரித்து விட்ட நிலையில் சாண எருவைத் தேடி அலைந்து அதை ஆட்களைக் கொண்டு வண்டியில் ஏற்றி மீண்டும் வயலில் முட்டுகளாக இறக்கி எருவைக் கலைத்து ஆகும் செலவிற்கு வயலில் கிடை போடுவது லாபகரமாகவும் இயற்கையான எருவிடும் முறையைத் தக்க வைக்கும் ஒரு வாய்ப்பாகவும் இருக்கிறது.

            ஆடுகளில் எண்ணிக்கைக்கேற்ப ஓர் இரவுக்கு ஆடுகளை விவசாய நிலத்தில் அடைத்து வைப்பதற்கு ஆட்டுக்கிடைக்கான பணமானது நிர்ணயிக்கப்படுகிறது. இந்த 2022 வது ஆண்டு எங்கள் வயலில் 100 குழி அளவுள்ள ஒரு மா நிலத்திற்கு அதாவது சதுர அடி கணக்கில் சொன்னால் 14400 சதுர அடி கொண்ட வயலுக்கு 300 ஆடுகள் கொண்ட ஆட்டுக்கிடையைப் போடுவதற்கு ஓர் இரவுக்கு ஐநூறு ரூபாய் வாங்கிக் கொண்டார்கள். உரமிடுதலுக்கு ஆகும் செலவைக் கணக்குப் பார்க்க விரும்புவோருக்காக இதைக் குறிப்பிடுகிறேன். இயற்கை எருவிடுதலுக்கும் ரசாயன உரமிடுதலுக்கும் ஆகும் செலவின வேறுபாட்டை அறிந்து கொள்வதற்கும் இந்தச் செலவுக் கணக்கு உதவும் என்பதற்காகவும் சொல்கிறேன்.

            ஒரு மா அளவுள்ள நிலத்துக்கு ஒரு நாள் இரவு என்றல்ல இரண்டு நாள் இரவு கூட கிடை போடலாம். அவ்வளவுக்கவ்வளவு வயல் வளமாகும். சாண எருவை விட ஆட்டாம் புழுக்கைகள் நிலத்தை ஒரு படி கூடுதலாக வளப்படுத்தும் என்று கிராமத்தில் சொல்லப்படுவதுண்டு. அது எல்லாவற்றையும் விட சாண எருவிடுவதை விட செலவினமும் குறைவாக ஆவதும் குறிப்பிடத்தக்கது.

            மாடுகளை நாம் ஓரளவுக்கோ முழுமையாகவோ அழித்து விட்டாலும் ஆடுகளை அழியாமல் கீதாரிகள் காப்பாற்றி வருவது வயல்களுக்கு இயற்கையான முறையில் எருவிடுவதற்கு ஒரு வாய்ப்பு என்று சொல்வதா? வரப்பிரசாதம் என்று சொல்வதா?

            ஆடுகளும் கீதாரிகளும் இருக்க வேண்டும் என்றால் வயல்கள் இருக்க வேண்டும். வயல்களில் ஆட்டுக்கிடை போடுவதற்கு விவசாயிகளும் ஆர்வமாக முன் வர வேண்டும்.

            புறம்போக்கு நிலங்களாக இருந்த மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் அந்தந்தப் பகுதிகளின் செல்வாக்கு மிகுந்தவர்களின் வைப்பாட்டிகள் போல மாற்றப்பட்டு பின்பு அவர்களின் உரிமை நிலங்களாக பட்டா மாறி விட்ட நிலையில் ஆடுகளுக்கும் கீதாரிகளுக்கும் இருக்கும் ஒரே வாய்ப்பு விவசாய நிலங்கள்தான். விவசாயிகளுக்கு இயற்கையான முறையில் எருவிடுவதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பும் கீதாரிகள்தான்.

            விவசாயிகளால் கீதாரிகளும் கீதாரிகளால் விவசாயிகளால் இயற்கையாகப் பயனடையும் இந்த இணைப்பும் பிணைப்பும் எந்தக் காலத்திலும் விடுபட்டு விடக் கூடாது என்று எல்லாம் வல்ல இயற்கையை வேண்டிக் கொள்கிறேன்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...