31 May 2022

புதிய நீதிக் கதைகள் – பாகம் 13 லிருந்து எடுக்கப்பட்டது

புதிய நீதிக் கதைகள் – பாகம் 13 லிருந்து எடுக்கப்பட்டது

டீ எப்படி சொல்லுங்க.

நீ வெந்நீரைப் போட்டுக் கொடுத்தாலும் டீயைப் போலக் குடிப்பேன்.

வாவ் என்ன ஒரு கவிதை. நிஜமாவா சொல்றீங்க?

பின்ன பொய்யையா சொல்லுவாங்க?

ஏய் பொய் சொல்லக் கூடாது.

பொய் சொல்றதெல்லாம் சுட்டுப் போட்டா கூட வராது.

உண்மையைச் சொல்லுப்பா.

காட் பிராமிஸ் உண்மை.

பாத்தீயா? பிராங்கா சொல்ல மாட்டேங்ற.

ப்ளீஸ் நம்புப்பா.

நம்ப மாட்டேன். டெல் பேக்ட்.

பேக்டத்தான் சொல்றேன்.

எப்படி நம்புறது?

நம்பித்தான் ஆவணும்.

ஐயோ கொல்லாதப்பா.

நம்பிக்கைத்தாம் வாழ்க்கை எல்லாம். பிரபு சொல்வாரே.

யாருப்பா அந்தப் பிரபு?

அவுங்க அப்பா கூட அரிச்சந்திரா படத்துல நடிச்சிருக்காரே சிவாஜி.

சரியா புடிபட மாட்டேங்குதுப்பா.

கல்யாண் ஜீவல்லர்ஸ் நகைக்கடைக்கு வருவார்ல.

கல்யாண் ஜீவல்லர்ஸ் பிரபுன்னு சொல்லக் கூடாதா?

அவருதாம்பா. அவரேதாம்பா.

சரி எதாவது பேசி டைவர்ப் பண்ணாதே. வாட் பேக்ட்? ட்ரூ பேக்ட் அதைச் சொல்லு.

நீ போட்டுக் கொடுக்குற டீ அப்படித்தான இருக்கு.

எப்படி இருக்கு?

சாட்சாத் வெந்நீரைப் போல.

டேய் நெனைச்சேன்டா. நீ எதச் சுத்தி எப்படிச் சொல்ல வருவேன்னு.

என்னை நம்பு ப்ளீஸ்.

இனிமே டீன்னு வீட்டுப்பக்கம் வராதே. செருப்பால அடிப்பேன்.

வெந்நீர்ன்னு வந்தாலுமா?

செருப்பு பிய்ஞ்சிடும். மரியாதையா ஓடிடு.

பின்குறிப்பும் நீதியும் : அவரவர்களுக்குப் பிடித்தமான உண்மையை மட்டும் சொல்லவும். எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டும் என்று சட்ட ரீதியான கட்டாயம் எதுவுமில்லை.

*****

சாதிய பூதத்தின் ஊதப்பட்ட உருவம்

சாதிய பூதத்தின் ஊதப்பட்ட உருவம்

            சாதி என்பது என்ன? பொருளாதாரம்தான் சாதி. அப்புறம் அது ஒரு கோஷ்டி. ஒரு கோஷ்டியில் இருப்பவர்கள் ஒரே மாதிரியாகப் பொருளாதாரத்தை உருவாக்கிக் கொள்ள, உருவாக்கிய பொருளாதாரத்தை ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையாக இருந்து காப்பாற்றிக் கொள்ள உருவாக்கிக் கொண்டதுதான் அது.

            பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர். பொருளாதாரத்தில் உயர்வாக இருப்பவர்கள் உயர் சாதியினர். உயர் சாதிகளுக்கு ஏற்ப பொருளாதாரத்தை நிலைபடுத்திக் கொண்டதுதான் இந்திய சாதிய முறையின் மிகப் பெரிய வெற்றி எனலாம்.

            உயர் சாதியின் பொருளாதார நுகர்வை ஒரு போதும் கீழுள்ள சாதியினர் பெற்று விடக் கூடாது என்பதற்கேற்ப அவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள் வைப்பதற்குதான் சாதி அமைப்பின் சடங்குகளும் சம்பிரதாயங்களும்.

            என் சடங்கும் சம்பிரதாயமும் உயர்வு என்கிற போது உனது அமைப்பின் சடங்கும் சம்பிரதாயமும் தாழ்வு என்ற உணர்வு இயற்கையாக வந்து விடுகிறது அல்லவா. அந்தச் சம்பிரதாயம், சடங்குகளுக்கேற்ப மொழி, பேச்சு, அணுகுமுறை, பழக்க வழக்கம் எல்லாவற்றையும் வேறுபடுத்தி விடுவார்கள்.

            ஒருவர் பேசுவதை வைத்தே அவரது சாதியைச் சொல்லி விட முடியும் என்பார்கள். அது மேற்படி சொன்னதிலிருந்து வந்ததுதான். பெயரை வைத்தும் சாதியைச் சொல்ல முடியும் என்பார்கள். அதுவும் அப்படி வந்ததுதான்.

            இளைய தலைமுறைகள் பெயரை மாற்றிக் கொள்வதால் உன் அப்பன் பெயரைச் சொல் என்பார்கள். இப்படியெல்லாம் அணுகுமுறைகள் வைத்திருக்கிறார்கள்.

            உங்கள் சாதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றால் அதற்காகப் போராடிக் கொண்டு இருக்காதீர்கள். அந்த நேரத்தை உங்கள் பொருளாதாரத்தை உயர்த்துவதில் காட்டுங்கள்.

            உங்களிடம் பொருளாதாரம் இருக்கிறது என்றால் நீங்கள் இடும் பணிகளை உயர் சாதியினர் தலையால் செய்யவும் தயாராக இருப்பார்கள்.

            ஒரு மெய்மை என்னவென்றால் நாம் நிலைநாட்டிக் கொள்ள வேண்டியது நம் சாதிக்கான உரிமையே அல்ல. நிலைநாட்டிக் கொள்ள வேண்டியது நமது பொருளாதாரத்திற்கான உரிமையைத்தான்.

            உங்கள் பொருளாதார உரிமைகளை ஒருபோதும் நீங்கள் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள் என்றால் நீங்கள் யார் முன்னும் மண்டியிட வேண்டியதில்லை. அதை விட்டு விட்டு உயர் சாதியினரிடம் உங்களுக்கான கருணையை வேண்டி மனு போட்டுக் கொண்டு இருக்காதீர்கள்.

            எந்தச் சாதியினராக இருந்தாலும் அவர்கள் உண்ண, உடுத்த, உறைவிடத்தைத் தேடிக் கொள்ள முழு உரிமையும் இருக்கிறது. அதற்கான உரிமை எப்போதும் உங்களுக்கு இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையென்றால் கூட்டமாக ஒன்றிணைந்து உங்களது உரிமையைக் கேளுங்கள்.

            தர மறுத்தால் விடாதீர்கள். அந்த இடத்தைக் காலி செய்யுங்கள். நீங்கள் நினைப்பது போல உயர் சாதியினர் இல்லாமல் தாழ்ந்த சாதியினர் வாழ்ந்து விட முடியும். தாழ்ந்த சாதியினர் இல்லாமல் உயர் சாதியினர் வாழவே முடியாது. அவர்களால் அவர்களுக்கு உரிய சிறிய அடிப்படை வேலைகளைக் கூட செய்ய முடியாது என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.

            இன்றைய வாழ்வில் ஒருவர் உதவி இல்லாமல் மற்றொருவர் வாழவே முடியாது எனும் போது ஒவ்வொருவரின் உதவியும் மற்றவர்களுக்கு தேவை. உங்களுடைய உதவி அவர்களின் அன்றாட வாழ்க்கையில் எப்படியெல்லாம் தேவைப்படுகிறது என்பதை அப்பட்டமாகவே பேசுங்கள்.

            நாம் அப்பட்டமாகப் பேச மறுக்கிறோம். அதுவே சாதி அடிமைத்தனத்திற்குக் காரணமாகி விடுகிறது. பேசுவதற்கான மொழி எல்லாருக்கும் பொதுவானது. அதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கிறது.

            உரக்கப் பேசுங்கள். பேச்சில் உங்கள் பொருளாதர உரிமையைச் சுட்டிக் காட்டுங்கள். நடைமுறை வாழ்க்கையில் உங்களுக்கான பொருளாதார உரிமையை விட்டுக் கொடுக்காமல் நிலைநாட்டுங்கள்.

            அவரவர் பொருளாதார நலன்களையே சாதி என்ற பெயரில் சமத்காரம் புரிவதால் அந்தச் சமத்காரத்தை அப்பட்டமாகப் பேசி உடையுங்கள். எங்கள் பொருளாதார உரிமையை உங்களுக்காக ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேளுங்கள்.

            சாதி என்பது அச்சுறுத்தும் பூதமல்ல. பேசினால் பயந்தோடக் கூடிய பூதம்தான். பொருளாதார உரிமைகளை விட்டுக் கொடுத்ததால் உண்டு கொழுத்த பூதம் சாதி. பேச்சு இருக்கிறதே அது எல்லாவற்றையும் விட பெரிய பூதம். பொருளாதார உரிமை இருக்கிறதே அது மாபெரும் பூதம். இந்த இரண்டு பூதத்தாலும் சாதி எனும் பூதத்தை ஓட ஓட விரட்டுங்கள்.

*****

30 May 2022

ஆசிரியர் குறிப்பு – சில குறிப்புகள்

ஆசிரியர் குறிப்பு – சில குறிப்புகள்

            அண்மையில் ஒரு புத்தகம் வாசிக்க நேர்ந்தது. அந்த புத்தகம் எழுதிய எழுத்தாளரைப் பற்றி இரண்டு மூன்று பக்கங்கள் எழுதியிருந்தார்கள். அதை அந்த எழுத்தாளர் கூட எழுதியிருக்கலாம். எழுத்து நடை யாரோ ஒருவர் எழுதியது போல இருந்தது. அப்படித்தான் எழுத வேண்டும் போல. அதனாலென்ன எழுதிக் கொள்ளட்டும்.

            அந்த எழுத்தாளர் சிறு பிராயத்தில் சந்தித்த பிரபலங்களில் தொடங்கி அந்தப் பிரபலங்கள் அவர் ஆன்னா, ஆவன்னா வாசித்ததைப் பாராட்டியது வரை ஏகப்பட்ட விசயங்கள். ஓர் எழுத்தாளர் என்றால் வரலாற்றில் எவ்வளவு விடயங்களைப் பதிய வேண்டியிருக்கிறது.

            அதைத் தொடர்ந்து அவர் எழுதிய பல புத்தகங்களின் பட்டியல், வெளியான ஆண்டு அடைப்புக்குறிக்குள். அவ்வளவு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். நமக்கு அவர் எழுதிய ஒரு புத்தகம் கூடத் தெரியவில்லை.

            நூல் விவரம் நிச்சயம் அவசியமானது எனக் கருதுகிறேன். அதற்காக அவர் இன்னும் சில பக்கங்கள் ஒதுக்கினாலும் அது நியாயமே. அவர் எழுதியுள்ள நூல்களை இந்தத் தமிழ்ச் சமூகம் மறந்து விடக் கூடாது. அதை விட முக்கியமாக அவற்றை எழுதிய அவர் மறந்து விடக் கூடாது. அதற்காகவேனும் அவரது ஒவ்வொரு நூலிலும் அது இடம் பெறத்தான் வேண்டும்.

            மு.வ.வின் நூல்களில் நீங்கள் அப்படி ஒரு பட்டியலைப் பார்க்கலாம். அவ்வளவு பெரிய எழுத்தாளருக்கே அது தேவைப்படுகிறது என்றால் நான் வாசித்த துக்கடா எழுத்தாளருக்கு அது அவசியம் தேவை. இந்த விசயத்தில் திருவள்ளுவர் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டிருக்கிறார். ஒரே புத்தகத்தோடு நிறுத்தி விட்டார். ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும் இதனால் பள்ளி மாணவர்களுக்கு எளிமையைச் செய்து விட்டார்.

            திருவள்ளுவர் இருந்திருந்தால் திருக்குறளை மனப்பாடம் செய் என்றெல்லாம் கட்டாயப்படுத்தியிருக்க மாட்டார். அது நம் தேர்வு முறை நமக்குக் கொடுத்த தண்டனை. திருவள்ளுவர் நல்லவர். மறந்தும் பிறன்கேடு சூழற்க என்றுதானே சொல்கிறார். மாணவர்களுக்குக் கேடு நினைத்திருப்பாரா அவர்.

            அவ்வளவு நூல்கள் எழுதி தமிழ்ச் சமூகத்தால் அறியப்படாமல் இருந்த எழுத்தாளரைப் பற்றி எனக்கு ஒரு பெரும் பரிதாபம் எழுந்தது. நான் கூட பாருங்கள் அவர் பெயரைச் சொல்லாமல்தான் எழுதுகிறேன். எனக்கேன் வம்பு சொல்லுங்கள். நான் ஏதாவது சொல்லப் போய் அவனெல்லாம் ஓர் எழுத்தாளானா என்று நான்கு பேர் கிளம்பி விட்டால் நிலைமை என்னாவது? அதற்காகவே பொத்திப் பொத்திக் காக்க வேண்டியிருக்கிறது.

            அந்த எழுத்தாளருக்கு ஒரு நேரம் வராமலா போய் விடும். ஏதாவது சினிமா பாட்டு எழுதுங்கள் எழுத்தாளரே. மக்கள் தங்களை அறியாமல் தாளம் போடும் வகையில் மக்கயாலா, மலமா பித்து, ஒகமசீயா இப்படி ஏதாவது போட்டு. உங்கள் பிரபலம்தான் உங்கள் நூல்களை அறியச் செய்யும்.

            அப்படியும் இல்லையென்றுதான் நினைக்கிறேன். அப்படிதான் என்றால் வாலி எழுதிய இரண்டு நூல்களின் பெயர்களைச் சொல்லுங்கள். அல்லது கண்ணதாசன் எழுதிய இரண்டு நூல்களின் பெயர்களையாவது சொல்லுங்கள். நமக்குத் தெரிந்ததெல்லாம் திருவள்ளுவர் எழுதிய நூல்தான். அவரோ சினிமா பாட்டு எழுதவில்லை. மற்றபடி சேக்கிழாரே சமயத்தில் கம்பராமாயணம் எழுதப் போய் விடுகிறாரே. அவ்வளவுதான் நம் ஞாபகங்கள். நாமென்ன செய்வது?

*****

ஞான வெளிச்சம் தரும் சின்ன சின்ன டியூப்லைட்டுகள்

ஞான வெளிச்சம் தரும் சின்ன சின்ன டியூப்லைட்டுகள்

இப்போல்லாம் யார் சார் புக் படிக்கிறா?

நீங்க படிக்கிறீங்களா?

யாரும் படிக்கிறதில்ல. நானும் படிக்கிறதில்ல.

ரொம்ப நல்ல விசயம்தான் சார்.

படித்ததனால் அறிவு பெற்றோர் ஆயிரம்தான் உண்டு

படிக்காமல் அறிவு பெற்றோர் நீங்கள் ஒருவர்தான் உண்டு

அதை நினைத்து தாழ்வு மனப்பான்மை

அடையாதீங்க சார் ப்ளீஸ்.

*

இப்படியே போனா கோடாம்பட்டி வருமா சார்?

முதல்ல போங்க போயிட்டே இருங்க சார்.

தேங்க்யூ சார்.

தேங்க்யூல்லாம் வேணாம். நீங்க போனா கண்டிப்பா வரும் சார்.

*

என்ன சார் ரோடு இது?

ரொம்ப மோசம்தாங்க சார் ரொம்ப ரொம்ப மோசம்.

காசைப் போட்டுக் காரை வாங்குனா இப்படியா?

இனுமே காரை வாங்குறப்பவே ரோட்டையும் சேர்த்து வாங்கணும் சார்.

*

பேப்பர்ல நியூஸே இல்லங்க தம்பி.

அடப் பாவிகளா வெறும் பேப்பரை அச்சடிச்சு கொடுக்க ஆரம்பிச்சிட்டானுங்களா?

நீங்க வேற தம்பி. நாம்ம எதிர்பாக்குற மாதிரி நியூஸ் இல்ல தம்பி.

நீங்க எந்த மாதிரி எதிர்பாக்குறீங்க?

அது வந்து தம்பி… அது வந்து என்னான்னா தம்பி… அதெ எப்படிச் சொல்றது தம்பி… போங்க தம்பி… சொன்னா புரியாது. உங்களுக்கு எல்லாத்துலயும் விளையாட்டுதான்.

*

அந்தக் காலம் மாதிரி இந்தக் காலம் இல்லீங்க.

நான் எப்படிங்க நம்புறது?

நம்பணும் தம்பி. பெரியவங்க சொல்றதெ நம்பணும்.

நாம்ம நம்புறாப்புல இல்லைங்க.

நீங்க நம்புறதுக்கு என்ன பண்ணணும்ன்னு சொல்லுங்க.

ஒரு டைம் மிஷின் வாங்கித் தாங்க. போய் பாத்துட்டு வந்து நம்புறேன்.

ஏம்ப்பா தம்பி கேக்குற மிஷின் எந்தப் பர்னிச்சர் கடையில்ல இருக்குச் சொல்லுங்க. அத தம்பிக்கு வாங்கியாந்துக் கொடுத்துட்டுத்தாம் மறுவேல பாக்கணும். எம் பேச்சையே நம்ப மாட்டேங்றாப்புல.

*****

29 May 2022

தமிழ் சினிமாவில் வறண்ட வானிலையே நிலவும்

தமிழ் சினிமாவில் வறண்ட வானிலையே நிலவும்

            அதென்ன காத்து வாக்குல ரெண்டு காதல்? பத்து பதினைந்து இருக்கக் கூடாதா? நம் தமிழ் இயக்குநர்கள் இப்படித்தான் மண்டையைக் காய வைக்கும் அளவுக்கு டைட்டில் வைக்கிறர்கள்.

            தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது என்று படம் பார்க்க போனால் மண்டை தொடங்கி உள்ளங்கால் வரை கதற கதற அடித்துக் காய வைத்து விடுகிறார்கள்.

            நாமென்ன நெல்லா? உளுந்தா? பயிரா? காய வைப்பதற்கு. நாம் அப்படித்தான் இருக்கிறோம் தமிழ் பட இயக்குநர்களுக்கு. மேலும் துணியாகவும் இருக்கறோம். அடித்துத் துவைத்துக் காய போடுகிறார்கள்.

            காய்ச்சல் பரவாயில்லை என்பவர்கள் தற்போதைய சூழ்நிலையில் படங்கள் பார்க்கலாம் என்று வானிலை அறிக்கையில் சொல்கிறார்கள். அதுவும் இன்னும் சில மாதங்களுக்குத் தமிழ் சினிமாவில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சொல்கிறார்கள்.

            ஏ.சி. தியேட்டர்களாகப் போனாலும் இந்த நிலைதான் என்கிறார்கள். வானில் மேகம் இருக்கிறது என்பதற்காக மழை பொழியுமா வானம்? அப்படித்தான் என்னதான் ஏ.சி. என்றாலும் உள்காய்ச்சல் அடித்தால் காய வேண்டியதுதான். அதற்குத் தயார் என்பவர்கள் ரிஸ்க் எடுக்கலாம்.

*

            ஆர்.ஆர்.ஆர். இப்படி ஒரு படம். கே.ஜி.எப். இப்படி ஒரு படம். இந்தப் படங்கள் நன்றாகப் பிய்த்துக் கொண்டு போவதாகக் கேள்விப்படுகிறேன். திரையை அல்ல. வசூலைத்தான். பீஸ்ட் படத்தைக் கூட பீ.இ.எ.எஸ்.டி. என்று வெளியிட்டு இருந்தால் இன்னும் பிய்த்துக் கொண்டு போயிருக்கும்.

            தமிழ்ப் பட இயக்குநர்கள் இன்னும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நாமும் பான் இந்தியா தரத்துக்குக் குறைந்தவர்கள் அல்ல. சர்வதேச தரத்துக்கு மட்டும்தான் குறைந்தவர்கள். அந்தக் குறைபாட்டைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

*

            கமல்ஹாசன் கூட தன் தரத்தைக் குறைத்துக் கொண்டார் போல்தான் தோன்றுகிறது. அவர் இப்போதைய ரஷ்யா – உக்ரைன் போரை வைத்து விஸ்வரூபம் – 3 எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

            அவர் தன் தரத்துக்கு தமிழக அரசியலில் போர் புரிந்திருக்கக் கூடாது. சர்வதேச தரம் அவருக்கு நன்றாகவே ஒத்து வரும். அதுவும் இந்த ரஷ்யா – உக்ரைன் போர் தரம் ரொம்பவே ஒத்து வரும்.

            அமெரிக்க அதிபராகக் கூட அவர் போட்டியிட்டு இருக்கலாம். ஜார்ஜ் புஷ்ஷாக வேடமிட்டவர் தமிழக முதல்வராக தசாவதாரம் காட்டாததை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். நான் புரிந்துகொண்டிருக்கிறேன். ஐப்பான் பிரதமராகக் கூட அவர் போட்டியிட்டுப் பார்க்கலாம். தசாவதார ஜப்பானியர் மட்டுமல்லாது அப்போதே அவர் ஜப்பானில் கல்யாண ராமனாகியவர்.

            தமிழக மையத்தை மட்டும் சிந்தித்து இந்த உலக மையத்தை அவர் மறந்திருக்கலாம். ஞாபகப்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதே.

*****

பத்திகளின் உத்திகள் – ஒரு சிறப்புப் பார்வை மனிதர்களின் உலகத்திலிருந்து…

பத்திகளின் உத்திகள் – ஒரு சிறப்புப் பார்வை மனிதர்களின் உலகத்திலிருந்து…

            சில பத்திகளை எழுதும் போது நான் பலருக்கும் நன்றிக்கடன் பட வேண்டியனவாக இருக்கிறேன். சில நேரங்களில் அது தேவையா என்றும் தோன்றுகிறது. நன்றிகடனை அவர்கள் வட்டியும் முதலுமாகக் கேட்கும் போது அவர்கள் கந்துவட்டிக்காரர்களைப் போல கறாராக நடந்து கொள்கிறார்கள்.

            பல பத்திகளில் நான் எழுதியிருப்பவை அவர்களைத்தான். அவர்களைத்தான் எழுதுகிறேன் என்பதற்காக அவர்களின் பெயர்களை எழுத முடியுமா? ஒரு மூன்றாம் உலகப் போர் நடந்தால் பூமி தாங்குமா என்ன? உலகப் போரை உத்தேசித்தும் உலகின் அமைதியை உத்தேசித்தும் நான் பெயர்களை வெளியிடுவதில்லை.

            அவர்களைப் பத்திகளின் மனிதர்கள் என்று அழைக்கலாமா என்று நான்கு இரவுகள் தூங்காமல் விழித்திருந்து யோசித்துப் பார்த்தேன். அவர்களை மனிதர்கள் என்று அழைத்தால் மட்டும் போதுமானது என்று தோன்றியது.

            எல்லா மனிதர்களாலும் ஒரு பயன் இருக்கிறது என்பதை நான் பத்திகள் எழுதத் தொடங்கிய பிறகுதான் உணர்ந்தேன். எதற்கும் பயன்படாத மனிதர்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருக்கும் மனிதர்கள்தான் பத்திகளுக்கு உபயோகப்படுகிறார்கள். அவர்கள் இல்லையென்றால் அந்தப் பத்தி உருவாகப் போவதில்லை. ஒரு பத்திக்கு உபயோகப்படுபவரை நாம் எதற்கும் உதவாதவர் என்று சொல்ல முடியாது பாருங்கள். என்னைக் கேட்டால் உதவாக்கரை என்ற சொல் தமிழின் அர்த்தம் இழந்த சொல் என்பேன்.

            பத்திகள் உலகில் பார்த்தால் எல்லா மனிதர்களும் பயன் உள்ளவர்கள். அவர்களின் பயன்களைப் பத்திகளே வெளிக்கொணர்கிறது. அனைவரும் பத்திகள் எழுத வேண்டும் என்று நான் சொல்வதற்குக் காரணம் அதுதான்.

            உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மனிதர் பற்றியும் ஒரு பத்தி எழுதுங்கள். நீங்கள் பல பத்திகள் எழுதி விடலாம். நீங்கள் ஒரு பத்தி எழுத்தாளர் என்ற பெயரையும் பெற்று விடலாம். இப்போது உங்களுக்குப் பத்தி எழுத்தாளர் என்ற பெயரைப் பெற்றுத் தந்தவர்கள் யார்? அந்த மனிதர்கள்தானே.

            மனிதர்கள் பத்திகளுக்கு உதவுகிறார்கள். பத்திகள் ஒரு மனிதருக்கு எழுத்தாளர் என்ற பெயரைப் பெற்றுத் தர உதவுகிறது. இப்படித்தான் மனிதர்களால் பத்திகளும் பத்திகளால் மனிதர்களும் பரஸ்பரம் பயன் பெறுகிறார்கள்.

            இனி மனிதர்களைப் பார்க்கும் போதெல்லாம் பத்திகளைப் பற்றி நினையுங்கள். பத்திகளை எழுதும் போதெல்லாம் அந்த மனிதர்களை நன்றியுடன் நினையுங்கள். அந்த மனிதரை நினைத்துதான் இந்தப் பத்தியை எழுதினேன் என்ற உண்மையை எந்தக் காலத்திலும் வெளிப்படுத்தி விடாதீர்கள். வெளிப்படுத்தும் பட்சத்தில் உங்களுக்கு எதிரான ஒரு மோசமான பத்தியை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். பத்தி எழுத்தில் நீங்களும் ஒரு மனிதராகி விடுவீர்.

            எல்லா மனிதர்களையும் பத்திகள் இப்படித்தான் பயன்படுத்துகின்றன. இதில் ஓர் அடிப்படை விசயம் என்னவென்றால் பத்திகளை நீங்கள்தான் பயன்படுத்த வேண்டும். பத்திகள் உங்களைப் பயன்படுத்தக் கூடாது.

            மனிதர்களுக்கான பத்திகளைப் பற்றி எழுதிக் கொண்டே இருப்போம். பத்தி இலக்கியத்தை வளர்ப்போம். பத்திகள் வளர்ப்பது எழுத்தாளர்களை என்பதால் அந்த எழுத்தாளர்களில் ஒருவராக நாமும் இருக்க ஏன் முயற்சிக்கக் கூடாது? முயற்சிப்போம்

*****

28 May 2022

ஆபீஸ் ஆபீஸ் கோ அவே

ஆபீஸ் ஆபீஸ் கோ அவே

ரொம்ப நேரம் யோசித்துப் பார்த்து விட்டேன்

எழுதுவதற்கு எதுவும் தோன்றுவதாகத் தெரியவில்லை

படுத்து விடுவதுதான் உத்தமம்

மறுநாள் காலை சீக்கிரம் எழுந்தாக வேண்டும்

அலுவலகம் வா வா என்று அழைக்கும்

நான்

ஆபீஸ் ஆபீஸ் கோ அவே

கம் அகைன் அனதர் டே

என்று ரைம்ஸ் பாட முடியாது.

*****

ஆடுவோமோ! பள்ளு பாடுவோமே! பெட்ரோல் வாங்கும் அளவுக்குச் சம்பாதித்து விட்டோமோ!

ஆடுவோமோ! பள்ளு பாடுவோமே! பெட்ரோல் வாங்கும் அளவுக்குச் சம்பாதித்து விட்டோமோ!

            பெட்ரோல் வண்டியின் மதிப்பு அதில் போடும் பெட்ரோலின் மதிப்பில்தான் இருக்கிறது. இன்னும் சிறிது காலத்தில் பெட்ரோல் வண்டிகளை விட பெட்ரோலின் மதிப்பு அதிகமாகி விடலாம். அப்போது பெட்ரோல் வாங்க கடன் கொடுக்கும் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும். நாமும் வண்டிக்கான இ.எம்.ஐ.யைக் குறைவாகவும் பெட்ரோலுக்கான இ.எம்.ஐ.யை அதிகமாகவும் செலுத்த வேண்டியிருக்கலாம்.

            இப்போதெல்லாம் புல் டேங்க் பெட்ரோல் நிரப்பிப் போய்க் கொண்டிருக்கும் போது என்னையறியாமல் ஒரு பயம் வந்து விடுகிறது.  எங்கே யாராவது வழியில் வழிமறித்து புல் டேங்க் பெட்ரோலைக் கொள்ளையடித்துப் போய் விடுவார்களோ என்று.

            விலையுயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பேங்குகள் லாக்கர் போன்ற வசதிகளை வழங்குகின்றன. இந்த பெட்ரோல் டேங்குக்கும் அப்படி எதாவது செய்ய முடியுமா என்று பேங்குகள் யோசிக்க வேண்டும்.

            அரபு நாடுகளில் எல்லாம் அவ்வளவு பெட்ரோலை வைத்து எப்படி பாதுகாக்கிறார்களோ? பாதுகாக்க முடியாமல்தானே அமெரிக்காவோடு சண்டை வருகிறது. ஈராக்கும் குவைத்தும் பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டன.

            வருங்காலங்களில் பெட்ரோல் போட ஒருவர் இருந்தால் அதை பிடுங்க ஒருவர் இருப்பார். நீங்கள் நாட்குறிப்பில் அவசியம் இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வருங்கால சந்ததிகள் எவ்வளவு தீர்க்கதரிசனமாக நம் பாட்டனார் எழுதி வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்வார்கள். தீர்க்கதரிசி என்ற பட்டமும் கிடைத்தாக இருக்கட்டும்.

            பாரதி மட்டும்தானா நாமும் இப்படி தீர்க்கதரிசி பட்டம் பெற்றுக் கொள்வதால் கோபித்துக் கொள்ள மாட்டார். ஆடுவோமோ பள்ளு பாடுவோமோ ஆனந்த பெட்ரோலை வாங்கும் அளவுக்குச் சம்பாதித்து விட்டோமே என்று.

            இல்லத்தரசிகள் மட்டும் ஏன் சும்மா இருக்க வேண்டும். அவர்களும் ஆடலாம் பள்ளு பாடலாம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி இந்த மாதத்து சிலிண்டரை வாங்கி விட்டோம் என்று.

            நீங்கள் வாங்கும் லிஸ்டில் மண்ணெண்ணெய் இருந்தால் அதற்கும் சேர்த்து ஆடுவோமோ பள்ளு பாடுவோமே பாடிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் பாடி விட்டு மண்ணெண்ணெயை விட்டு விட்டால் அது என்ன நினைத்துக் கொள்ளும்?

            ஆகவே பாடுங்கள் பெட்ரோலால் பஞ்சப்பாட்டுக்கு ஆளாகப் போவதை பஞ்சமின்றி பாடி ஆடுவது நம் இந்திய ஞான மோன நிலையைக் காட்டக் கூடியதாகும். இது உலகிற்கு நாம் வழங்கும் முக்கியமான ஆன்மீகச் செய்தி என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

*****

27 May 2022

அன்பு ஒரு கிலோ, பாசம் இரண்டு கிலோ வாங்குங்கள்

அன்பு ஒரு கிலோ, பாசம் இரண்டு கிலோ வாங்குங்கள்

            நிறைய மருத்துவர்கள் எழுத்தாளர்களாகி நிறைய எழுதுகிறார்கள். அதை படிக்க படிக்க இனிமேல் ஏன் டாக்டர்களிடம் செல்ல வேண்டும் யோசிக்கிறேன். பேசாமல் நானே ஒரு டாக்டராகி எனக்கு நானே வைத்தியம் பார்த்துக் கொண்டு நாலு பேருக்கும் வைத்தியம் பார்த்து சேவை புரியலாம் என்று நினைக்கிறேன்.

            இந்த வரிசையில் வக்கீல்கள், ஆடிட்டர்கள், இன்ஜினியர்கள், டெக்னாலஜிஸ்டுகள் இப்படி நிறைய வகையறாக்கள் வர வேண்டும்.

            வாசிப்புதான் நம்மை விரிவு படுத்தும். பல தொழில்களைச் செய்ய இப்படி வழிகாட்டும். நிறைய வாசியுங்கள். நிறைய தொழில்கள் செய்யுங்கள். வாசிப்பதை நிறுத்தினால் தொழில்களைக் கற்றுக் கொள்ள முடியாது. வாசிப்புத் தொழிலைக் கற்றுக் கொள். கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்.

*

            பணம் இல்லாமல் இருப்பதைப் போல பணம் இருப்பதும் ஒரு வகைப் பிரச்சனைதான். பணம் இல்லையென்றால் எதையுமே வாங்க முடியவில்லையே என்ற ஒரு கவலைதான். பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்க வேண்டுமே என்று ஏகப்பட்ட கவலைகள்.

            எலான் மாஸ்கிடம் நான் அப்படிப்பட்ட கவலையைக் காண்கிறேன். மனிதரிடம் ஏகப்பட்ட காசு கொட்டிக் கிடக்கிறது. எதை வாங்குவது, எப்படி வாங்குவது என்ற ஏகப்பட்ட யோசனைகளால் அவர் சூழ்ந்திருக்கிறார்.

            டிவிட்டரை வாங்கியிருக்கிறார். கொகொ கோலாவை வாங்க வேண்டும் என்று பிரியப்படுகிறார். நான் தினம் தினம் கொகோ கோலா ஒரு பாட்டில் மட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறேன். எலான் மாஸ்க் சொன்னபடி கொகொ கோலாவை வாங்கினால் நான் எலான் மாஸ்கிடம் தினம் ஒரு பாட்டில் கொகொ கோலா வாங்குகிறேன் என்று பெருமையோடு சொல்லிக் கொள்வேன்.

            இன்னும் அவருக்கு வாங்குவதற்கு நிறைய கனவுகள் இருக்கின்றன. வாங்குவதிலேயே அவர் தன் வாழ்க்கையைக் கழித்து விடுவாரோ என்று நான் அச்சப்படுகிறேன்.

            என்னதான் எலான் மாஸ்க் டிவிட்டரை வாங்கினாலும் ஒரு நாளைக்கு நூறு டிவிட்டுக்கு மேலா போட முடியும்? என்னை எடுத்துக் கொள்ளுங்கள். டிவிட்டரை வாங்காமலேயே எத்தனை டிவிட்டுகள் போட்டுக் கொண்டிருக்கிறேன்.

            கொகோ கோலாவை வாங்கினாலும் அவரால் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் குடிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? அதிபட்சம் ஐந்து லிட்டர் குடிப்பாரா? அவ்வளவு குடித்தால் அவ்வளவுக்கும் சேர்த்து பத்து முறையாவது ஒரு நாளைக்கு உச்சா போக வேண்டியிருக்கும்.

            எலான் மாஸ்க் வாங்கிக் கொண்டே இருக்க போகிறார். வாங்குவது ஒரு வியாதி. அதை அவ்வளவு சீக்கிரத்தில் குணப்படுத்த முடியாது. அதற்கு தடுப்பூசிகள் இருக்கிறதா என்பதை உலக சுகாதார நிறுவனத்திடம் கேட்டு உறுதி செய்ய வேண்டும். அவர் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றால் நான்கு தமிழ் படங்களை வாங்கி ரிலீஸ் செய்தால் போதும்.

            ஒரு தமிழராக இந்த விசயத்தில் நீங்கள் எனக்கு ஏதாவது ஆலோசனை சொல்ல முடியுமா என்று எலான் மாஸ்க் என்னிடம் கேட்டால் நான் சொல்வேன், ஆசைபட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா?

            எலான் மாஸ்க் அவர்களே கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். நாம் வாங்க வேண்டிய அன்பும் பாசமும் நேசமும் நிறையவே இருக்கின்றன. அப்பாடா எலான் மாஸ்கிற்கு ஒரு அறிவுரை சொல்லியாயிற்று. அப்படியே கேட்ஸ், பப்பெட் என்று செல்ல வேண்டும். பிறகுதான் இந்தியா வந்து அம்பானி, அதானிகளுக்கு.

*****

எடை குறைப்புக்கு எனது ஆலோசனைகள்

எடை குறைப்புக்கு எனது ஆலோசனைகள்

            உடல் எடை குறைய ஆலோசனை கேட்பவர்கள் உலகில் நானூற்று பதின்மூன்று கோடியாக அதிகரித்திருப்பதாக அறிகிறேன். ஆலோசனைகள் மேல் மக்களுக்கு அபரிமிதமான பிடிப்பு வந்திருக்கிறது.

            ஆலோசனைகள்தான் சிறந்தன, அறிவுரைகள் அல்ல. இரண்டும் ஒன்று போல தெரிந்தாலும் வேறு வேறு. ஆலோசனைகள் சொன்னால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம். ஆலோசனைகள்தானே, செய்ய வேண்டும் என்று யாரும் கட்டாயம் செய்ய மாட்டார்கள்.

            அறிவுரைகள் அப்படியல்ல. ஆபத்தானவை. கொஞ்சம் நேரம் கேட்டாலும் அதைக் கேட்பது கடினம்தான் என்றாலும் அதை அப்படியே செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள்.

            அறிவுரைகளைக் கேட்டுச் செய்ய முடியாமல் வசவுகளை வாங்குவதை விட ஆலோசனைகளைக் கேட்டு எதையும் செய்யாமல் சந்தோஷமாக இருக்கலாம் என்று மக்கள் நினைப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

            உடல் எடை குறைப்புக்கான என்னுடைய ஆலோசனைகள் உங்களுக்கு எப்போதும் பயன்படும். வேறு யாருடைய ஆலோசனைகளை நீங்கள் செயல்படுத்துகிறீர்களோ இல்லையோ என்னுடைய ஆலோசனைகளைக் கட்டாயம் செயல்படுத்துவீர்கள்.

            ஆலோசனைகளை நோக்கி அடியெடுத்து வைப்போம். மூட்டு வலி இருப்பவர்கள் உட்கார்ந்த வாக்கிலும் உள்வாங்கிக் கொள்ளலாம்.

            காலையில் வாக்கிங் போனால் அதற்காக வாங்கி வைத்த டிரக்சூட், டீ சர்ட், சூ போன்றவற்றை வீணாகாமல் பயன்படுத்தலாம். எதுவும் வீணாவதற்கு இடம் கொடுக்காதீர்கள். நீங்கள் பழைய கைலி, கிழிந்த பனியனோடு சென்றாலும் யாரும் எதுவும் கேட்க முடியாது. இருந்தாலும் மேற்படி ஐட்டங்கள் இருந்தால் எங்க வீட்டுக்காரரும் வாக்கிங் போறாரு என்று தாய்குலங்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

            இதை நான் ஆணாதிக்க சிந்தனையோடு சொல்வதாக எனக்குள் ஒரு பயம் ஏற்படுவதால் தாய்குலங்களும் பழைய நைட்டியோடும் மேலே ஒரு சாயம் போன துண்டோடும் வாக்கிங் போகலாம் என்பதைச் சேர்த்துக் கொள்கிறேன். இது தந்தையர்குலங்களுக்குத் தங்கள் தாய்குலங்கள் வாக்கிங் போவதாகச் சொல்வதற்கான பெருமையைப் பெற்றுத் தரும்.

            முற்பகல் 11 மணி மற்றும் பிற்பகல் 4 மணிக்குக் குடிக்கும் டீ மற்றும் சிற்றுண்டியை நிறுத்தினால் தினமும் குறைந்தபட்சம் முப்பது ரூபாயிலிருந்து நூறு ரூபாய் வரை மிச்சம் பிடிக்கலாம். காசு முக்கியம் இல்லையா நண்பர்களே. காசிருந்தால்தான் சுகருக்குக் கூட மாத்திரை வாங்கிப் போட முடியும்.

            கடை, ஆபீஸ் போன்றவற்றிற்கு நடந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தால் பெட்ரோல் செலவை மட்டுமல்லது வண்டி தேய்மான செலவுகள் வரை மிச்சம் செய்யலாம். லிப்ட் கேட்டுத் தொந்தரவு செய்யும் அசாமிகளின் பிரச்சனைகளிலிருந்து மிக எளிதாகத் தப்பித்து விடலாம்.

            லிப்டைப் பயன்படுத்தாமல் மாடி படிகளில் ஏறி இறங்கினால் யாரேனும் தவறவிட்ட பேனா, பென்சில், பர்ஸ்கள் சமயத்தில் ரூபாய் நோட்டுகள் வரை நம் அதிர்ஷ்டத்திற்கு ஏற்ப கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

            ஜிம்மிற்குப் போனால் நமக்குத் தேவையில்லாத அரை லிட்டரோ, ஒரு லிட்டரோ வியர்வையை அங்கே ஊற்றி விட்டு வந்து விடலாம்.

            நாலு இடங்களுக்கு நானா விதமாக சைக்கிளிங் போனால் போகின்ற வருகின்ற வழியில் கறி காய்களைச் சீப்பாகக் கிடைக்குமிடத்தில் தட்டிக் கொண்டு வந்து விடலாம். மாத செலவினத்தில் முப்பது சதவீதம் வரை சேமிக்கலாம்.

            நீச்சல் அடிப்பதும் நல்லது. குளியல் வேலையை அத்தோடு சேர்த்து முடித்துக் கொள்ளலாம்.

            இந்த ஆலோசனைகள் உங்களுக்கு நிரம்பவே பயன்படும் என்று நம்புகிறேன். மேலும் ஆலோசனைகள் தேவை என்றால் நீங்கள் எனக்கு எழுதுவதைப் பொருத்து எழுதுகிறேன்.

            நன்றி. வணக்கம்.

*****

26 May 2022

அடிக்குறாங்கம்மா பள்ளியோடத்துல…

அடிக்குறாங்கம்மா பள்ளியோடத்துல…

பள்ளிக்கூடம் போக பயமா இருக்கும்மா

பயப்படாம போடா

அடிக்குறாங்கம்மா

அடிக்குற மாதிரி நடந்துக்காதடா

இல்லம்மா எனக்குப் பயமா இருக்கும்மா

இப்போ கௌம்புறீயா இல்லியா எங்கிட்டு அடி வாங்குறீயா

உங்கிட்ட வாங்குற அடிக்கு அங்க வாங்குற அடியே மேல்

கௌம்புடா செல்லம் கௌம்புடா

அடிபடுவனுக்குத்தானே தெரியும் அசிங்கம்

ரெண்டு அடி வாங்குறதுல கொறைஞ்சு போயிட மாட்டே

எல்லாம் என் தலையெழுத்து

தலையில் அடித்துக் கொண்டு கிளம்புறப்போ

போறப்போ நம்ம ஐயன் சாமிகிட்டெ

இன்னிக்கு உன்னைய யாரும் அடிக்க கூடாதுன்னு வேண்டிக்கோங்குது

அம்மாவோட குரல்

யாரந்த பையன் யாரந்த அம்மா

அந்தப் பையன் ஏன் தமிழ்நாட்டில்ல ஓர் ஆசிரியரா இருக்கக் கூடாது

அம்மா சாட்சாத் அந்த ஆசிரியரின் அம்மாவா ஏன் இருக்கக் கூடாது என்றால்

அப்படியும் இருக்கலாம்

அப்படி இல்லாமல் இருந்தால் ரொம்ப சந்தோஷங்றேன்

அப்படிப்பட்ட சந்தோஷம் இங்க கிடைக்குமாங்றேன்

*****

விவசாயத்திற்கான பிரகாசமான பாதை

விவசாயத்திற்கான பிரகாசமான பாதை

            விவசாயம் செழித்தால் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. உண்மையான வாழ்க்கை தரம், வளமை, செழிப்பு, அபரிமிதம் அனைத்தும் விவசாய விளைச்சலில்தான் இருக்கிறது.

            வாழ்க்கை அபரிமிதமாக இருக்கிறது என்றால் குறைவற்ற விளைச்சலை விவசாயம் வாரி வழங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இன்றைய வாழ்க்கை முறை விவசாய உற்பத்தியை மட்டும் சார்ந்தில்லை என்று ஒரு சிலர் குறிப்பிடலாம்.

            இன்றைய வாழ்க்கை முறை விவசாய உற்பத்தியைச் சார்ந்ததில்லை என்றால் வெங்காயம் விலையேறினால் நமக்கேன் கவலை தொற்ற வேண்டும்? தக்காளியின் விலை ஏறினால் நாம் ஏன் மலைத்து நிற்க வேண்டும்? வெங்காய விலையேற்றம் ஆட்சியையே ஏன் மாற்றியமைக்க வேண்டும்?

            வெகு எளிதாக விவசாய விளைபொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி நம் வாயில் வந்து விழும் அளவிற்கு நமது அமைப்பு முறைகளை நாம் வைத்திருக்கிறோம். உலகில் எல்லா நாடுகளும் இந்த அமைப்பு முறையை மிக வலுவாகக் கட்டமைத்து வைத்திருக்கின்றன.

            ஒவ்வொரு விவசாயிடமும் ஒரு சேமிப்புக் களஞ்சியம் இருந்தால் போதும். விவசாய விளைபொருள்களின் விலையை நாம் நினைத்தபடி நிர்ணயிக்க முடியாது என்பது புரியும்.

            உழுதவர் கணக்குப் பார்த்தால் உழவுக்கும் மிஞ்சாதபடிக்கு ஒரு பற்றாக்குறை நிலையிலேயே ஆதி காலத்திலிருந்து வைத்திருப்பத்தால் விவசாயி விளைவித்தால் அதை பணமிருப்பவரிடம் விற்றுதான் தீர வேண்டும் நிலையைத் திட்டமிட்டே உருவாக்கி வைத்திருக்கிறோம்.

            விவசாயி விளைவித்த பொருள் மகசூல் செய்த அடுத்த நொடியே வியாபாரியின் கைகளுக்கு இடம் மாறுகிறது. வியாபாரியின் கைகளில் இருந்து உணவுப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு கை மாறுகிறது. விளைபொருள் உற்பத்திப் பொருளாகி மீண்டும் வியாபாரியின் கைகளுக்கு வந்து நுகர்வோரிகளின் கைகளுக்குச் சென்று சேர்கிறது.

            அந்த நுகர்வோரில் ஒருவராக விவசாயியும் இருக்கிறார். அதாவது எந்தப் பொருளை விளைவித்தாரோ அந்தப் பொருளின் நுகர்வோர்களின் பட்டியலில் விவசாயிகளும் இருக்கிறார்கள்.

            விவசாயி கடையில் வாங்கும் அரிசியோ கோதுமையோ அவர் விளைவித்ததுதான். அவர் விளைவித்ததை விற்க நேர்ந்தால் அவரால் அந்த விலைக்கு விற்க முடியாது. ஆனால் கடையில் சொல்லப்படும் விலைக்கே விவசாயி தான் விளைவித்த பொருளை உற்பத்திப் பொருளாக வாங்கிக் கொள்கிறார்.

            விளைபொருளாக அவர் தந்த விவசாயப் பொருளுக்கு கிடைக்காத நிச்சயமான விலை உற்பத்திப் பொருளாக மாறியதும் கிடைக்கிறது.

            விவசாயிகள் கொஞ்சம் மெனக்கெட்டு முயற்சித்துப் பார்க்க வேண்டும், அவர்கள் விளைவித்த விளைபொருளை உற்பத்திப் பொருளாக மாற்ற முடியுமா என்று. தற்போதைய இயந்திர முறை உற்பத்திப் பொருளிலிருந்து ஒரு மாற்றை விரும்பும் மக்கள் கைத்தொழிலாக உருவாக்கப்படும் உற்பத்திப் பொருள்களை அதனுடைய இயற்கையான தன்மையை உணர்ந்து நேசித்து வாங்குகிறார்கள்.

            எனக்கே அதில் இப்படி ஓர் அனுபவம் உண்டு. நான் விளைவித்த இயற்கை முறையிலான நெல்லை சந்தையில் விற்க நினைத்தால் மூட்டை ஆயிரத்திற்கு மேல் போகுமா என்பது சந்தேகம்தான்.

            நான் அந்த நெல்லை கை அவியலாக வீட்டிலேயே அவிக்கிறேன். அதை நானே மெனக்கெட்டு இரண்டு மூன்று நாட்களுக்குத் தேவைக்கேற்ப காய வைக்கிறேன். அதை அறவை செய்கிறேன். இப்படிச் செய்வதால் என்னுடைய ஒரு கிலோ அரிசி எழுபது ரூபாய்க்கு விலை போகிறது. இந்த விலையை நான்தான் தீர்மானிக்கிறேன்.

            மக்கள் அந்த அரிசியையும் இந்த விலையையும் நேசித்து வாங்குகிறார்கள். இயற்கை முறையில் விளையும் அரிசி அவர்களின் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் தரும் என்று நம்புகிறார்கள். இரசாயன வேளாண்மையின் நச்சுகள் தாக்காமல் இருக்க சற்று கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருப்பதன் அவசியத்தைப் புரிந்திருக்கிறார்கள்.

            இந்தப் பாதைதான் விவசாயிகளுக்கான பாதையாக இனிவரும் காலங்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்களின் மதிப்பு வருங்காலங்களில் கூடவே வாய்ப்பிருக்கிறது. விவசாயிகள் அதை விரும்பும் நுகர்வோர்களைக் கண்டறிந்து விட்டால் அதனால் அவர்களுக்கும் நன்மை, நுகர்வோர்களுக்கும் நன்மை. இந்த இரு பக்க நன்மையை நோக்கி விவசாயிகள் நகர ஆரம்பித்து விட்டால் அவர்களுக்கு வியாபாரிகளின் தயவிலிருந்து அரசாங்கத்தின் மானியம் வரை எதுவுமே தேவையில்லை.

            விவசாயிகளின் தற்சார்பு அவர்களின் இயற்கைக்குத் திரும்பும் பாதையில் பிரகாசமாகக் காத்திருக்கிறது.

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...