29 May 2022

தமிழ் சினிமாவில் வறண்ட வானிலையே நிலவும்

தமிழ் சினிமாவில் வறண்ட வானிலையே நிலவும்

            அதென்ன காத்து வாக்குல ரெண்டு காதல்? பத்து பதினைந்து இருக்கக் கூடாதா? நம் தமிழ் இயக்குநர்கள் இப்படித்தான் மண்டையைக் காய வைக்கும் அளவுக்கு டைட்டில் வைக்கிறர்கள்.

            தலைப்பு வித்தியாசமாக இருக்கிறது என்று படம் பார்க்க போனால் மண்டை தொடங்கி உள்ளங்கால் வரை கதற கதற அடித்துக் காய வைத்து விடுகிறார்கள்.

            நாமென்ன நெல்லா? உளுந்தா? பயிரா? காய வைப்பதற்கு. நாம் அப்படித்தான் இருக்கிறோம் தமிழ் பட இயக்குநர்களுக்கு. மேலும் துணியாகவும் இருக்கறோம். அடித்துத் துவைத்துக் காய போடுகிறார்கள்.

            காய்ச்சல் பரவாயில்லை என்பவர்கள் தற்போதைய சூழ்நிலையில் படங்கள் பார்க்கலாம் என்று வானிலை அறிக்கையில் சொல்கிறார்கள். அதுவும் இன்னும் சில மாதங்களுக்குத் தமிழ் சினிமாவில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சொல்கிறார்கள்.

            ஏ.சி. தியேட்டர்களாகப் போனாலும் இந்த நிலைதான் என்கிறார்கள். வானில் மேகம் இருக்கிறது என்பதற்காக மழை பொழியுமா வானம்? அப்படித்தான் என்னதான் ஏ.சி. என்றாலும் உள்காய்ச்சல் அடித்தால் காய வேண்டியதுதான். அதற்குத் தயார் என்பவர்கள் ரிஸ்க் எடுக்கலாம்.

*

            ஆர்.ஆர்.ஆர். இப்படி ஒரு படம். கே.ஜி.எப். இப்படி ஒரு படம். இந்தப் படங்கள் நன்றாகப் பிய்த்துக் கொண்டு போவதாகக் கேள்விப்படுகிறேன். திரையை அல்ல. வசூலைத்தான். பீஸ்ட் படத்தைக் கூட பீ.இ.எ.எஸ்.டி. என்று வெளியிட்டு இருந்தால் இன்னும் பிய்த்துக் கொண்டு போயிருக்கும்.

            தமிழ்ப் பட இயக்குநர்கள் இன்னும் கொஞ்சம் யோசிக்க வேண்டும். நாமும் பான் இந்தியா தரத்துக்குக் குறைந்தவர்கள் அல்ல. சர்வதேச தரத்துக்கு மட்டும்தான் குறைந்தவர்கள். அந்தக் குறைபாட்டைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

*

            கமல்ஹாசன் கூட தன் தரத்தைக் குறைத்துக் கொண்டார் போல்தான் தோன்றுகிறது. அவர் இப்போதைய ரஷ்யா – உக்ரைன் போரை வைத்து விஸ்வரூபம் – 3 எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

            அவர் தன் தரத்துக்கு தமிழக அரசியலில் போர் புரிந்திருக்கக் கூடாது. சர்வதேச தரம் அவருக்கு நன்றாகவே ஒத்து வரும். அதுவும் இந்த ரஷ்யா – உக்ரைன் போர் தரம் ரொம்பவே ஒத்து வரும்.

            அமெரிக்க அதிபராகக் கூட அவர் போட்டியிட்டு இருக்கலாம். ஜார்ஜ் புஷ்ஷாக வேடமிட்டவர் தமிழக முதல்வராக தசாவதாரம் காட்டாததை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். நான் புரிந்துகொண்டிருக்கிறேன். ஐப்பான் பிரதமராகக் கூட அவர் போட்டியிட்டுப் பார்க்கலாம். தசாவதார ஜப்பானியர் மட்டுமல்லாது அப்போதே அவர் ஜப்பானில் கல்யாண ராமனாகியவர்.

            தமிழக மையத்தை மட்டும் சிந்தித்து இந்த உலக மையத்தை அவர் மறந்திருக்கலாம். ஞாபகப்படுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறதே.

*****

No comments:

Post a Comment

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை!

தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை! கோடை விடுமுறையில் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்ததுண்டா? கோடையில் அக்னி நட்சத்திரம் கூ...