29 May 2022

பத்திகளின் உத்திகள் – ஒரு சிறப்புப் பார்வை மனிதர்களின் உலகத்திலிருந்து…

பத்திகளின் உத்திகள் – ஒரு சிறப்புப் பார்வை மனிதர்களின் உலகத்திலிருந்து…

            சில பத்திகளை எழுதும் போது நான் பலருக்கும் நன்றிக்கடன் பட வேண்டியனவாக இருக்கிறேன். சில நேரங்களில் அது தேவையா என்றும் தோன்றுகிறது. நன்றிகடனை அவர்கள் வட்டியும் முதலுமாகக் கேட்கும் போது அவர்கள் கந்துவட்டிக்காரர்களைப் போல கறாராக நடந்து கொள்கிறார்கள்.

            பல பத்திகளில் நான் எழுதியிருப்பவை அவர்களைத்தான். அவர்களைத்தான் எழுதுகிறேன் என்பதற்காக அவர்களின் பெயர்களை எழுத முடியுமா? ஒரு மூன்றாம் உலகப் போர் நடந்தால் பூமி தாங்குமா என்ன? உலகப் போரை உத்தேசித்தும் உலகின் அமைதியை உத்தேசித்தும் நான் பெயர்களை வெளியிடுவதில்லை.

            அவர்களைப் பத்திகளின் மனிதர்கள் என்று அழைக்கலாமா என்று நான்கு இரவுகள் தூங்காமல் விழித்திருந்து யோசித்துப் பார்த்தேன். அவர்களை மனிதர்கள் என்று அழைத்தால் மட்டும் போதுமானது என்று தோன்றியது.

            எல்லா மனிதர்களாலும் ஒரு பயன் இருக்கிறது என்பதை நான் பத்திகள் எழுதத் தொடங்கிய பிறகுதான் உணர்ந்தேன். எதற்கும் பயன்படாத மனிதர்கள் என்று நீங்கள் கருதிக் கொண்டிருக்கும் மனிதர்கள்தான் பத்திகளுக்கு உபயோகப்படுகிறார்கள். அவர்கள் இல்லையென்றால் அந்தப் பத்தி உருவாகப் போவதில்லை. ஒரு பத்திக்கு உபயோகப்படுபவரை நாம் எதற்கும் உதவாதவர் என்று சொல்ல முடியாது பாருங்கள். என்னைக் கேட்டால் உதவாக்கரை என்ற சொல் தமிழின் அர்த்தம் இழந்த சொல் என்பேன்.

            பத்திகள் உலகில் பார்த்தால் எல்லா மனிதர்களும் பயன் உள்ளவர்கள். அவர்களின் பயன்களைப் பத்திகளே வெளிக்கொணர்கிறது. அனைவரும் பத்திகள் எழுத வேண்டும் என்று நான் சொல்வதற்குக் காரணம் அதுதான்.

            உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு மனிதர் பற்றியும் ஒரு பத்தி எழுதுங்கள். நீங்கள் பல பத்திகள் எழுதி விடலாம். நீங்கள் ஒரு பத்தி எழுத்தாளர் என்ற பெயரையும் பெற்று விடலாம். இப்போது உங்களுக்குப் பத்தி எழுத்தாளர் என்ற பெயரைப் பெற்றுத் தந்தவர்கள் யார்? அந்த மனிதர்கள்தானே.

            மனிதர்கள் பத்திகளுக்கு உதவுகிறார்கள். பத்திகள் ஒரு மனிதருக்கு எழுத்தாளர் என்ற பெயரைப் பெற்றுத் தர உதவுகிறது. இப்படித்தான் மனிதர்களால் பத்திகளும் பத்திகளால் மனிதர்களும் பரஸ்பரம் பயன் பெறுகிறார்கள்.

            இனி மனிதர்களைப் பார்க்கும் போதெல்லாம் பத்திகளைப் பற்றி நினையுங்கள். பத்திகளை எழுதும் போதெல்லாம் அந்த மனிதர்களை நன்றியுடன் நினையுங்கள். அந்த மனிதரை நினைத்துதான் இந்தப் பத்தியை எழுதினேன் என்ற உண்மையை எந்தக் காலத்திலும் வெளிப்படுத்தி விடாதீர்கள். வெளிப்படுத்தும் பட்சத்தில் உங்களுக்கு எதிரான ஒரு மோசமான பத்தியை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். பத்தி எழுத்தில் நீங்களும் ஒரு மனிதராகி விடுவீர்.

            எல்லா மனிதர்களையும் பத்திகள் இப்படித்தான் பயன்படுத்துகின்றன. இதில் ஓர் அடிப்படை விசயம் என்னவென்றால் பத்திகளை நீங்கள்தான் பயன்படுத்த வேண்டும். பத்திகள் உங்களைப் பயன்படுத்தக் கூடாது.

            மனிதர்களுக்கான பத்திகளைப் பற்றி எழுதிக் கொண்டே இருப்போம். பத்தி இலக்கியத்தை வளர்ப்போம். பத்திகள் வளர்ப்பது எழுத்தாளர்களை என்பதால் அந்த எழுத்தாளர்களில் ஒருவராக நாமும் இருக்க ஏன் முயற்சிக்கக் கூடாது? முயற்சிப்போம்

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...