30 May 2022

ஆசிரியர் குறிப்பு – சில குறிப்புகள்

ஆசிரியர் குறிப்பு – சில குறிப்புகள்

            அண்மையில் ஒரு புத்தகம் வாசிக்க நேர்ந்தது. அந்த புத்தகம் எழுதிய எழுத்தாளரைப் பற்றி இரண்டு மூன்று பக்கங்கள் எழுதியிருந்தார்கள். அதை அந்த எழுத்தாளர் கூட எழுதியிருக்கலாம். எழுத்து நடை யாரோ ஒருவர் எழுதியது போல இருந்தது. அப்படித்தான் எழுத வேண்டும் போல. அதனாலென்ன எழுதிக் கொள்ளட்டும்.

            அந்த எழுத்தாளர் சிறு பிராயத்தில் சந்தித்த பிரபலங்களில் தொடங்கி அந்தப் பிரபலங்கள் அவர் ஆன்னா, ஆவன்னா வாசித்ததைப் பாராட்டியது வரை ஏகப்பட்ட விசயங்கள். ஓர் எழுத்தாளர் என்றால் வரலாற்றில் எவ்வளவு விடயங்களைப் பதிய வேண்டியிருக்கிறது.

            அதைத் தொடர்ந்து அவர் எழுதிய பல புத்தகங்களின் பட்டியல், வெளியான ஆண்டு அடைப்புக்குறிக்குள். அவ்வளவு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். நமக்கு அவர் எழுதிய ஒரு புத்தகம் கூடத் தெரியவில்லை.

            நூல் விவரம் நிச்சயம் அவசியமானது எனக் கருதுகிறேன். அதற்காக அவர் இன்னும் சில பக்கங்கள் ஒதுக்கினாலும் அது நியாயமே. அவர் எழுதியுள்ள நூல்களை இந்தத் தமிழ்ச் சமூகம் மறந்து விடக் கூடாது. அதை விட முக்கியமாக அவற்றை எழுதிய அவர் மறந்து விடக் கூடாது. அதற்காகவேனும் அவரது ஒவ்வொரு நூலிலும் அது இடம் பெறத்தான் வேண்டும்.

            மு.வ.வின் நூல்களில் நீங்கள் அப்படி ஒரு பட்டியலைப் பார்க்கலாம். அவ்வளவு பெரிய எழுத்தாளருக்கே அது தேவைப்படுகிறது என்றால் நான் வாசித்த துக்கடா எழுத்தாளருக்கு அது அவசியம் தேவை. இந்த விசயத்தில் திருவள்ளுவர் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டிருக்கிறார். ஒரே புத்தகத்தோடு நிறுத்தி விட்டார். ஞாபகம் வைத்துக் கொள்வதற்கும் இதனால் பள்ளி மாணவர்களுக்கு எளிமையைச் செய்து விட்டார்.

            திருவள்ளுவர் இருந்திருந்தால் திருக்குறளை மனப்பாடம் செய் என்றெல்லாம் கட்டாயப்படுத்தியிருக்க மாட்டார். அது நம் தேர்வு முறை நமக்குக் கொடுத்த தண்டனை. திருவள்ளுவர் நல்லவர். மறந்தும் பிறன்கேடு சூழற்க என்றுதானே சொல்கிறார். மாணவர்களுக்குக் கேடு நினைத்திருப்பாரா அவர்.

            அவ்வளவு நூல்கள் எழுதி தமிழ்ச் சமூகத்தால் அறியப்படாமல் இருந்த எழுத்தாளரைப் பற்றி எனக்கு ஒரு பெரும் பரிதாபம் எழுந்தது. நான் கூட பாருங்கள் அவர் பெயரைச் சொல்லாமல்தான் எழுதுகிறேன். எனக்கேன் வம்பு சொல்லுங்கள். நான் ஏதாவது சொல்லப் போய் அவனெல்லாம் ஓர் எழுத்தாளானா என்று நான்கு பேர் கிளம்பி விட்டால் நிலைமை என்னாவது? அதற்காகவே பொத்திப் பொத்திக் காக்க வேண்டியிருக்கிறது.

            அந்த எழுத்தாளருக்கு ஒரு நேரம் வராமலா போய் விடும். ஏதாவது சினிமா பாட்டு எழுதுங்கள் எழுத்தாளரே. மக்கள் தங்களை அறியாமல் தாளம் போடும் வகையில் மக்கயாலா, மலமா பித்து, ஒகமசீயா இப்படி ஏதாவது போட்டு. உங்கள் பிரபலம்தான் உங்கள் நூல்களை அறியச் செய்யும்.

            அப்படியும் இல்லையென்றுதான் நினைக்கிறேன். அப்படிதான் என்றால் வாலி எழுதிய இரண்டு நூல்களின் பெயர்களைச் சொல்லுங்கள். அல்லது கண்ணதாசன் எழுதிய இரண்டு நூல்களின் பெயர்களையாவது சொல்லுங்கள். நமக்குத் தெரிந்ததெல்லாம் திருவள்ளுவர் எழுதிய நூல்தான். அவரோ சினிமா பாட்டு எழுதவில்லை. மற்றபடி சேக்கிழாரே சமயத்தில் கம்பராமாயணம் எழுதப் போய் விடுகிறாரே. அவ்வளவுதான் நம் ஞாபகங்கள். நாமென்ன செய்வது?

*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...