26 May 2022

விவசாயத்திற்கான பிரகாசமான பாதை

விவசாயத்திற்கான பிரகாசமான பாதை

            விவசாயம் செழித்தால் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. உண்மையான வாழ்க்கை தரம், வளமை, செழிப்பு, அபரிமிதம் அனைத்தும் விவசாய விளைச்சலில்தான் இருக்கிறது.

            வாழ்க்கை அபரிமிதமாக இருக்கிறது என்றால் குறைவற்ற விளைச்சலை விவசாயம் வாரி வழங்கியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இன்றைய வாழ்க்கை முறை விவசாய உற்பத்தியை மட்டும் சார்ந்தில்லை என்று ஒரு சிலர் குறிப்பிடலாம்.

            இன்றைய வாழ்க்கை முறை விவசாய உற்பத்தியைச் சார்ந்ததில்லை என்றால் வெங்காயம் விலையேறினால் நமக்கேன் கவலை தொற்ற வேண்டும்? தக்காளியின் விலை ஏறினால் நாம் ஏன் மலைத்து நிற்க வேண்டும்? வெங்காய விலையேற்றம் ஆட்சியையே ஏன் மாற்றியமைக்க வேண்டும்?

            வெகு எளிதாக விவசாய விளைபொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி நம் வாயில் வந்து விழும் அளவிற்கு நமது அமைப்பு முறைகளை நாம் வைத்திருக்கிறோம். உலகில் எல்லா நாடுகளும் இந்த அமைப்பு முறையை மிக வலுவாகக் கட்டமைத்து வைத்திருக்கின்றன.

            ஒவ்வொரு விவசாயிடமும் ஒரு சேமிப்புக் களஞ்சியம் இருந்தால் போதும். விவசாய விளைபொருள்களின் விலையை நாம் நினைத்தபடி நிர்ணயிக்க முடியாது என்பது புரியும்.

            உழுதவர் கணக்குப் பார்த்தால் உழவுக்கும் மிஞ்சாதபடிக்கு ஒரு பற்றாக்குறை நிலையிலேயே ஆதி காலத்திலிருந்து வைத்திருப்பத்தால் விவசாயி விளைவித்தால் அதை பணமிருப்பவரிடம் விற்றுதான் தீர வேண்டும் நிலையைத் திட்டமிட்டே உருவாக்கி வைத்திருக்கிறோம்.

            விவசாயி விளைவித்த பொருள் மகசூல் செய்த அடுத்த நொடியே வியாபாரியின் கைகளுக்கு இடம் மாறுகிறது. வியாபாரியின் கைகளில் இருந்து உணவுப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு கை மாறுகிறது. விளைபொருள் உற்பத்திப் பொருளாகி மீண்டும் வியாபாரியின் கைகளுக்கு வந்து நுகர்வோரிகளின் கைகளுக்குச் சென்று சேர்கிறது.

            அந்த நுகர்வோரில் ஒருவராக விவசாயியும் இருக்கிறார். அதாவது எந்தப் பொருளை விளைவித்தாரோ அந்தப் பொருளின் நுகர்வோர்களின் பட்டியலில் விவசாயிகளும் இருக்கிறார்கள்.

            விவசாயி கடையில் வாங்கும் அரிசியோ கோதுமையோ அவர் விளைவித்ததுதான். அவர் விளைவித்ததை விற்க நேர்ந்தால் அவரால் அந்த விலைக்கு விற்க முடியாது. ஆனால் கடையில் சொல்லப்படும் விலைக்கே விவசாயி தான் விளைவித்த பொருளை உற்பத்திப் பொருளாக வாங்கிக் கொள்கிறார்.

            விளைபொருளாக அவர் தந்த விவசாயப் பொருளுக்கு கிடைக்காத நிச்சயமான விலை உற்பத்திப் பொருளாக மாறியதும் கிடைக்கிறது.

            விவசாயிகள் கொஞ்சம் மெனக்கெட்டு முயற்சித்துப் பார்க்க வேண்டும், அவர்கள் விளைவித்த விளைபொருளை உற்பத்திப் பொருளாக மாற்ற முடியுமா என்று. தற்போதைய இயந்திர முறை உற்பத்திப் பொருளிலிருந்து ஒரு மாற்றை விரும்பும் மக்கள் கைத்தொழிலாக உருவாக்கப்படும் உற்பத்திப் பொருள்களை அதனுடைய இயற்கையான தன்மையை உணர்ந்து நேசித்து வாங்குகிறார்கள்.

            எனக்கே அதில் இப்படி ஓர் அனுபவம் உண்டு. நான் விளைவித்த இயற்கை முறையிலான நெல்லை சந்தையில் விற்க நினைத்தால் மூட்டை ஆயிரத்திற்கு மேல் போகுமா என்பது சந்தேகம்தான்.

            நான் அந்த நெல்லை கை அவியலாக வீட்டிலேயே அவிக்கிறேன். அதை நானே மெனக்கெட்டு இரண்டு மூன்று நாட்களுக்குத் தேவைக்கேற்ப காய வைக்கிறேன். அதை அறவை செய்கிறேன். இப்படிச் செய்வதால் என்னுடைய ஒரு கிலோ அரிசி எழுபது ரூபாய்க்கு விலை போகிறது. இந்த விலையை நான்தான் தீர்மானிக்கிறேன்.

            மக்கள் அந்த அரிசியையும் இந்த விலையையும் நேசித்து வாங்குகிறார்கள். இயற்கை முறையில் விளையும் அரிசி அவர்களின் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம் தரும் என்று நம்புகிறார்கள். இரசாயன வேளாண்மையின் நச்சுகள் தாக்காமல் இருக்க சற்று கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருப்பதன் அவசியத்தைப் புரிந்திருக்கிறார்கள்.

            இந்தப் பாதைதான் விவசாயிகளுக்கான பாதையாக இனிவரும் காலங்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்களின் மதிப்பு வருங்காலங்களில் கூடவே வாய்ப்பிருக்கிறது. விவசாயிகள் அதை விரும்பும் நுகர்வோர்களைக் கண்டறிந்து விட்டால் அதனால் அவர்களுக்கும் நன்மை, நுகர்வோர்களுக்கும் நன்மை. இந்த இரு பக்க நன்மையை நோக்கி விவசாயிகள் நகர ஆரம்பித்து விட்டால் அவர்களுக்கு வியாபாரிகளின் தயவிலிருந்து அரசாங்கத்தின் மானியம் வரை எதுவுமே தேவையில்லை.

            விவசாயிகளின் தற்சார்பு அவர்களின் இயற்கைக்குத் திரும்பும் பாதையில் பிரகாசமாகக் காத்திருக்கிறது.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...