31 May 2022

சாதிய பூதத்தின் ஊதப்பட்ட உருவம்

சாதிய பூதத்தின் ஊதப்பட்ட உருவம்

            சாதி என்பது என்ன? பொருளாதாரம்தான் சாதி. அப்புறம் அது ஒரு கோஷ்டி. ஒரு கோஷ்டியில் இருப்பவர்கள் ஒரே மாதிரியாகப் பொருளாதாரத்தை உருவாக்கிக் கொள்ள, உருவாக்கிய பொருளாதாரத்தை ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையாக இருந்து காப்பாற்றிக் கொள்ள உருவாக்கிக் கொண்டதுதான் அது.

            பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர். பொருளாதாரத்தில் உயர்வாக இருப்பவர்கள் உயர் சாதியினர். உயர் சாதிகளுக்கு ஏற்ப பொருளாதாரத்தை நிலைபடுத்திக் கொண்டதுதான் இந்திய சாதிய முறையின் மிகப் பெரிய வெற்றி எனலாம்.

            உயர் சாதியின் பொருளாதார நுகர்வை ஒரு போதும் கீழுள்ள சாதியினர் பெற்று விடக் கூடாது என்பதற்கேற்ப அவர்களைத் தாழ்வு மனப்பான்மைக்குள் வைப்பதற்குதான் சாதி அமைப்பின் சடங்குகளும் சம்பிரதாயங்களும்.

            என் சடங்கும் சம்பிரதாயமும் உயர்வு என்கிற போது உனது அமைப்பின் சடங்கும் சம்பிரதாயமும் தாழ்வு என்ற உணர்வு இயற்கையாக வந்து விடுகிறது அல்லவா. அந்தச் சம்பிரதாயம், சடங்குகளுக்கேற்ப மொழி, பேச்சு, அணுகுமுறை, பழக்க வழக்கம் எல்லாவற்றையும் வேறுபடுத்தி விடுவார்கள்.

            ஒருவர் பேசுவதை வைத்தே அவரது சாதியைச் சொல்லி விட முடியும் என்பார்கள். அது மேற்படி சொன்னதிலிருந்து வந்ததுதான். பெயரை வைத்தும் சாதியைச் சொல்ல முடியும் என்பார்கள். அதுவும் அப்படி வந்ததுதான்.

            இளைய தலைமுறைகள் பெயரை மாற்றிக் கொள்வதால் உன் அப்பன் பெயரைச் சொல் என்பார்கள். இப்படியெல்லாம் அணுகுமுறைகள் வைத்திருக்கிறார்கள்.

            உங்கள் சாதியை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றால் அதற்காகப் போராடிக் கொண்டு இருக்காதீர்கள். அந்த நேரத்தை உங்கள் பொருளாதாரத்தை உயர்த்துவதில் காட்டுங்கள்.

            உங்களிடம் பொருளாதாரம் இருக்கிறது என்றால் நீங்கள் இடும் பணிகளை உயர் சாதியினர் தலையால் செய்யவும் தயாராக இருப்பார்கள்.

            ஒரு மெய்மை என்னவென்றால் நாம் நிலைநாட்டிக் கொள்ள வேண்டியது நம் சாதிக்கான உரிமையே அல்ல. நிலைநாட்டிக் கொள்ள வேண்டியது நமது பொருளாதாரத்திற்கான உரிமையைத்தான்.

            உங்கள் பொருளாதார உரிமைகளை ஒருபோதும் நீங்கள் விட்டுக் கொடுக்க மாட்டீர்கள் என்றால் நீங்கள் யார் முன்னும் மண்டியிட வேண்டியதில்லை. அதை விட்டு விட்டு உயர் சாதியினரிடம் உங்களுக்கான கருணையை வேண்டி மனு போட்டுக் கொண்டு இருக்காதீர்கள்.

            எந்தச் சாதியினராக இருந்தாலும் அவர்கள் உண்ண, உடுத்த, உறைவிடத்தைத் தேடிக் கொள்ள முழு உரிமையும் இருக்கிறது. அதற்கான உரிமை எப்போதும் உங்களுக்கு இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையென்றால் கூட்டமாக ஒன்றிணைந்து உங்களது உரிமையைக் கேளுங்கள்.

            தர மறுத்தால் விடாதீர்கள். அந்த இடத்தைக் காலி செய்யுங்கள். நீங்கள் நினைப்பது போல உயர் சாதியினர் இல்லாமல் தாழ்ந்த சாதியினர் வாழ்ந்து விட முடியும். தாழ்ந்த சாதியினர் இல்லாமல் உயர் சாதியினர் வாழவே முடியாது. அவர்களால் அவர்களுக்கு உரிய சிறிய அடிப்படை வேலைகளைக் கூட செய்ய முடியாது என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.

            இன்றைய வாழ்வில் ஒருவர் உதவி இல்லாமல் மற்றொருவர் வாழவே முடியாது எனும் போது ஒவ்வொருவரின் உதவியும் மற்றவர்களுக்கு தேவை. உங்களுடைய உதவி அவர்களின் அன்றாட வாழ்க்கையில் எப்படியெல்லாம் தேவைப்படுகிறது என்பதை அப்பட்டமாகவே பேசுங்கள்.

            நாம் அப்பட்டமாகப் பேச மறுக்கிறோம். அதுவே சாதி அடிமைத்தனத்திற்குக் காரணமாகி விடுகிறது. பேசுவதற்கான மொழி எல்லாருக்கும் பொதுவானது. அதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கிறது.

            உரக்கப் பேசுங்கள். பேச்சில் உங்கள் பொருளாதர உரிமையைச் சுட்டிக் காட்டுங்கள். நடைமுறை வாழ்க்கையில் உங்களுக்கான பொருளாதார உரிமையை விட்டுக் கொடுக்காமல் நிலைநாட்டுங்கள்.

            அவரவர் பொருளாதார நலன்களையே சாதி என்ற பெயரில் சமத்காரம் புரிவதால் அந்தச் சமத்காரத்தை அப்பட்டமாகப் பேசி உடையுங்கள். எங்கள் பொருளாதார உரிமையை உங்களுக்காக ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேளுங்கள்.

            சாதி என்பது அச்சுறுத்தும் பூதமல்ல. பேசினால் பயந்தோடக் கூடிய பூதம்தான். பொருளாதார உரிமைகளை விட்டுக் கொடுத்ததால் உண்டு கொழுத்த பூதம் சாதி. பேச்சு இருக்கிறதே அது எல்லாவற்றையும் விட பெரிய பூதம். பொருளாதார உரிமை இருக்கிறதே அது மாபெரும் பூதம். இந்த இரண்டு பூதத்தாலும் சாதி எனும் பூதத்தை ஓட ஓட விரட்டுங்கள்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...