27 May 2022

எடை குறைப்புக்கு எனது ஆலோசனைகள்

எடை குறைப்புக்கு எனது ஆலோசனைகள்

            உடல் எடை குறைய ஆலோசனை கேட்பவர்கள் உலகில் நானூற்று பதின்மூன்று கோடியாக அதிகரித்திருப்பதாக அறிகிறேன். ஆலோசனைகள் மேல் மக்களுக்கு அபரிமிதமான பிடிப்பு வந்திருக்கிறது.

            ஆலோசனைகள்தான் சிறந்தன, அறிவுரைகள் அல்ல. இரண்டும் ஒன்று போல தெரிந்தாலும் வேறு வேறு. ஆலோசனைகள் சொன்னால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம். ஆலோசனைகள்தானே, செய்ய வேண்டும் என்று யாரும் கட்டாயம் செய்ய மாட்டார்கள்.

            அறிவுரைகள் அப்படியல்ல. ஆபத்தானவை. கொஞ்சம் நேரம் கேட்டாலும் அதைக் கேட்பது கடினம்தான் என்றாலும் அதை அப்படியே செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவார்கள்.

            அறிவுரைகளைக் கேட்டுச் செய்ய முடியாமல் வசவுகளை வாங்குவதை விட ஆலோசனைகளைக் கேட்டு எதையும் செய்யாமல் சந்தோஷமாக இருக்கலாம் என்று மக்கள் நினைப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

            உடல் எடை குறைப்புக்கான என்னுடைய ஆலோசனைகள் உங்களுக்கு எப்போதும் பயன்படும். வேறு யாருடைய ஆலோசனைகளை நீங்கள் செயல்படுத்துகிறீர்களோ இல்லையோ என்னுடைய ஆலோசனைகளைக் கட்டாயம் செயல்படுத்துவீர்கள்.

            ஆலோசனைகளை நோக்கி அடியெடுத்து வைப்போம். மூட்டு வலி இருப்பவர்கள் உட்கார்ந்த வாக்கிலும் உள்வாங்கிக் கொள்ளலாம்.

            காலையில் வாக்கிங் போனால் அதற்காக வாங்கி வைத்த டிரக்சூட், டீ சர்ட், சூ போன்றவற்றை வீணாகாமல் பயன்படுத்தலாம். எதுவும் வீணாவதற்கு இடம் கொடுக்காதீர்கள். நீங்கள் பழைய கைலி, கிழிந்த பனியனோடு சென்றாலும் யாரும் எதுவும் கேட்க முடியாது. இருந்தாலும் மேற்படி ஐட்டங்கள் இருந்தால் எங்க வீட்டுக்காரரும் வாக்கிங் போறாரு என்று தாய்குலங்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

            இதை நான் ஆணாதிக்க சிந்தனையோடு சொல்வதாக எனக்குள் ஒரு பயம் ஏற்படுவதால் தாய்குலங்களும் பழைய நைட்டியோடும் மேலே ஒரு சாயம் போன துண்டோடும் வாக்கிங் போகலாம் என்பதைச் சேர்த்துக் கொள்கிறேன். இது தந்தையர்குலங்களுக்குத் தங்கள் தாய்குலங்கள் வாக்கிங் போவதாகச் சொல்வதற்கான பெருமையைப் பெற்றுத் தரும்.

            முற்பகல் 11 மணி மற்றும் பிற்பகல் 4 மணிக்குக் குடிக்கும் டீ மற்றும் சிற்றுண்டியை நிறுத்தினால் தினமும் குறைந்தபட்சம் முப்பது ரூபாயிலிருந்து நூறு ரூபாய் வரை மிச்சம் பிடிக்கலாம். காசு முக்கியம் இல்லையா நண்பர்களே. காசிருந்தால்தான் சுகருக்குக் கூட மாத்திரை வாங்கிப் போட முடியும்.

            கடை, ஆபீஸ் போன்றவற்றிற்கு நடந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தால் பெட்ரோல் செலவை மட்டுமல்லது வண்டி தேய்மான செலவுகள் வரை மிச்சம் செய்யலாம். லிப்ட் கேட்டுத் தொந்தரவு செய்யும் அசாமிகளின் பிரச்சனைகளிலிருந்து மிக எளிதாகத் தப்பித்து விடலாம்.

            லிப்டைப் பயன்படுத்தாமல் மாடி படிகளில் ஏறி இறங்கினால் யாரேனும் தவறவிட்ட பேனா, பென்சில், பர்ஸ்கள் சமயத்தில் ரூபாய் நோட்டுகள் வரை நம் அதிர்ஷ்டத்திற்கு ஏற்ப கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

            ஜிம்மிற்குப் போனால் நமக்குத் தேவையில்லாத அரை லிட்டரோ, ஒரு லிட்டரோ வியர்வையை அங்கே ஊற்றி விட்டு வந்து விடலாம்.

            நாலு இடங்களுக்கு நானா விதமாக சைக்கிளிங் போனால் போகின்ற வருகின்ற வழியில் கறி காய்களைச் சீப்பாகக் கிடைக்குமிடத்தில் தட்டிக் கொண்டு வந்து விடலாம். மாத செலவினத்தில் முப்பது சதவீதம் வரை சேமிக்கலாம்.

            நீச்சல் அடிப்பதும் நல்லது. குளியல் வேலையை அத்தோடு சேர்த்து முடித்துக் கொள்ளலாம்.

            இந்த ஆலோசனைகள் உங்களுக்கு நிரம்பவே பயன்படும் என்று நம்புகிறேன். மேலும் ஆலோசனைகள் தேவை என்றால் நீங்கள் எனக்கு எழுதுவதைப் பொருத்து எழுதுகிறேன்.

            நன்றி. வணக்கம்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...