28 May 2022

ஆடுவோமோ! பள்ளு பாடுவோமே! பெட்ரோல் வாங்கும் அளவுக்குச் சம்பாதித்து விட்டோமோ!

ஆடுவோமோ! பள்ளு பாடுவோமே! பெட்ரோல் வாங்கும் அளவுக்குச் சம்பாதித்து விட்டோமோ!

            பெட்ரோல் வண்டியின் மதிப்பு அதில் போடும் பெட்ரோலின் மதிப்பில்தான் இருக்கிறது. இன்னும் சிறிது காலத்தில் பெட்ரோல் வண்டிகளை விட பெட்ரோலின் மதிப்பு அதிகமாகி விடலாம். அப்போது பெட்ரோல் வாங்க கடன் கொடுக்கும் நிறுவனங்கள் அதிகமாக இருக்கும். நாமும் வண்டிக்கான இ.எம்.ஐ.யைக் குறைவாகவும் பெட்ரோலுக்கான இ.எம்.ஐ.யை அதிகமாகவும் செலுத்த வேண்டியிருக்கலாம்.

            இப்போதெல்லாம் புல் டேங்க் பெட்ரோல் நிரப்பிப் போய்க் கொண்டிருக்கும் போது என்னையறியாமல் ஒரு பயம் வந்து விடுகிறது.  எங்கே யாராவது வழியில் வழிமறித்து புல் டேங்க் பெட்ரோலைக் கொள்ளையடித்துப் போய் விடுவார்களோ என்று.

            விலையுயர்ந்த பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பேங்குகள் லாக்கர் போன்ற வசதிகளை வழங்குகின்றன. இந்த பெட்ரோல் டேங்குக்கும் அப்படி எதாவது செய்ய முடியுமா என்று பேங்குகள் யோசிக்க வேண்டும்.

            அரபு நாடுகளில் எல்லாம் அவ்வளவு பெட்ரோலை வைத்து எப்படி பாதுகாக்கிறார்களோ? பாதுகாக்க முடியாமல்தானே அமெரிக்காவோடு சண்டை வருகிறது. ஈராக்கும் குவைத்தும் பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டன.

            வருங்காலங்களில் பெட்ரோல் போட ஒருவர் இருந்தால் அதை பிடுங்க ஒருவர் இருப்பார். நீங்கள் நாட்குறிப்பில் அவசியம் இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வருங்கால சந்ததிகள் எவ்வளவு தீர்க்கதரிசனமாக நம் பாட்டனார் எழுதி வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொள்வார்கள். தீர்க்கதரிசி என்ற பட்டமும் கிடைத்தாக இருக்கட்டும்.

            பாரதி மட்டும்தானா நாமும் இப்படி தீர்க்கதரிசி பட்டம் பெற்றுக் கொள்வதால் கோபித்துக் கொள்ள மாட்டார். ஆடுவோமோ பள்ளு பாடுவோமோ ஆனந்த பெட்ரோலை வாங்கும் அளவுக்குச் சம்பாதித்து விட்டோமே என்று.

            இல்லத்தரசிகள் மட்டும் ஏன் சும்மா இருக்க வேண்டும். அவர்களும் ஆடலாம் பள்ளு பாடலாம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி இந்த மாதத்து சிலிண்டரை வாங்கி விட்டோம் என்று.

            நீங்கள் வாங்கும் லிஸ்டில் மண்ணெண்ணெய் இருந்தால் அதற்கும் சேர்த்து ஆடுவோமோ பள்ளு பாடுவோமே பாடிக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் பாடி விட்டு மண்ணெண்ணெயை விட்டு விட்டால் அது என்ன நினைத்துக் கொள்ளும்?

            ஆகவே பாடுங்கள் பெட்ரோலால் பஞ்சப்பாட்டுக்கு ஆளாகப் போவதை பஞ்சமின்றி பாடி ஆடுவது நம் இந்திய ஞான மோன நிலையைக் காட்டக் கூடியதாகும். இது உலகிற்கு நாம் வழங்கும் முக்கியமான ஆன்மீகச் செய்தி என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...