27 May 2022

அன்பு ஒரு கிலோ, பாசம் இரண்டு கிலோ வாங்குங்கள்

அன்பு ஒரு கிலோ, பாசம் இரண்டு கிலோ வாங்குங்கள்

            நிறைய மருத்துவர்கள் எழுத்தாளர்களாகி நிறைய எழுதுகிறார்கள். அதை படிக்க படிக்க இனிமேல் ஏன் டாக்டர்களிடம் செல்ல வேண்டும் யோசிக்கிறேன். பேசாமல் நானே ஒரு டாக்டராகி எனக்கு நானே வைத்தியம் பார்த்துக் கொண்டு நாலு பேருக்கும் வைத்தியம் பார்த்து சேவை புரியலாம் என்று நினைக்கிறேன்.

            இந்த வரிசையில் வக்கீல்கள், ஆடிட்டர்கள், இன்ஜினியர்கள், டெக்னாலஜிஸ்டுகள் இப்படி நிறைய வகையறாக்கள் வர வேண்டும்.

            வாசிப்புதான் நம்மை விரிவு படுத்தும். பல தொழில்களைச் செய்ய இப்படி வழிகாட்டும். நிறைய வாசியுங்கள். நிறைய தொழில்கள் செய்யுங்கள். வாசிப்பதை நிறுத்தினால் தொழில்களைக் கற்றுக் கொள்ள முடியாது. வாசிப்புத் தொழிலைக் கற்றுக் கொள். கவலை உனக்கில்லை ஒத்துக் கொள்.

*

            பணம் இல்லாமல் இருப்பதைப் போல பணம் இருப்பதும் ஒரு வகைப் பிரச்சனைதான். பணம் இல்லையென்றால் எதையுமே வாங்க முடியவில்லையே என்ற ஒரு கவலைதான். பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்க வேண்டுமே என்று ஏகப்பட்ட கவலைகள்.

            எலான் மாஸ்கிடம் நான் அப்படிப்பட்ட கவலையைக் காண்கிறேன். மனிதரிடம் ஏகப்பட்ட காசு கொட்டிக் கிடக்கிறது. எதை வாங்குவது, எப்படி வாங்குவது என்ற ஏகப்பட்ட யோசனைகளால் அவர் சூழ்ந்திருக்கிறார்.

            டிவிட்டரை வாங்கியிருக்கிறார். கொகொ கோலாவை வாங்க வேண்டும் என்று பிரியப்படுகிறார். நான் தினம் தினம் கொகோ கோலா ஒரு பாட்டில் மட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறேன். எலான் மாஸ்க் சொன்னபடி கொகொ கோலாவை வாங்கினால் நான் எலான் மாஸ்கிடம் தினம் ஒரு பாட்டில் கொகொ கோலா வாங்குகிறேன் என்று பெருமையோடு சொல்லிக் கொள்வேன்.

            இன்னும் அவருக்கு வாங்குவதற்கு நிறைய கனவுகள் இருக்கின்றன. வாங்குவதிலேயே அவர் தன் வாழ்க்கையைக் கழித்து விடுவாரோ என்று நான் அச்சப்படுகிறேன்.

            என்னதான் எலான் மாஸ்க் டிவிட்டரை வாங்கினாலும் ஒரு நாளைக்கு நூறு டிவிட்டுக்கு மேலா போட முடியும்? என்னை எடுத்துக் கொள்ளுங்கள். டிவிட்டரை வாங்காமலேயே எத்தனை டிவிட்டுகள் போட்டுக் கொண்டிருக்கிறேன்.

            கொகோ கோலாவை வாங்கினாலும் அவரால் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் குடிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? அதிபட்சம் ஐந்து லிட்டர் குடிப்பாரா? அவ்வளவு குடித்தால் அவ்வளவுக்கும் சேர்த்து பத்து முறையாவது ஒரு நாளைக்கு உச்சா போக வேண்டியிருக்கும்.

            எலான் மாஸ்க் வாங்கிக் கொண்டே இருக்க போகிறார். வாங்குவது ஒரு வியாதி. அதை அவ்வளவு சீக்கிரத்தில் குணப்படுத்த முடியாது. அதற்கு தடுப்பூசிகள் இருக்கிறதா என்பதை உலக சுகாதார நிறுவனத்திடம் கேட்டு உறுதி செய்ய வேண்டும். அவர் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றால் நான்கு தமிழ் படங்களை வாங்கி ரிலீஸ் செய்தால் போதும்.

            ஒரு தமிழராக இந்த விசயத்தில் நீங்கள் எனக்கு ஏதாவது ஆலோசனை சொல்ல முடியுமா என்று எலான் மாஸ்க் என்னிடம் கேட்டால் நான் சொல்வேன், ஆசைபட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா?

            எலான் மாஸ்க் அவர்களே கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். நாம் வாங்க வேண்டிய அன்பும் பாசமும் நேசமும் நிறையவே இருக்கின்றன. அப்பாடா எலான் மாஸ்கிற்கு ஒரு அறிவுரை சொல்லியாயிற்று. அப்படியே கேட்ஸ், பப்பெட் என்று செல்ல வேண்டும். பிறகுதான் இந்தியா வந்து அம்பானி, அதானிகளுக்கு.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...