28 Feb 2017

ஒண்ணுமே புரியலடா சாமி!


ஒண்ணுமே புரியலடா சாமி!
            நடுத்தர வர்க்கம் வீடு கட்டுவதற்கு இந்தியாவில் வழங்கும் வீட்டுக்கடன் வட்டி விகிதங்களைப் பாருங்கள்.
            அரசு ஊழியர்கள் வேறு வழியில்லாமல் வரி கட்டி வருவதையும் கவனியுங்கள்.
            வரி ஏய்ப்பே கருப்புப் பணம் புழங்குவதற்கு முதன்மையான காரணம் என்ற வாதத்தையும் செவி கொடுத்துக் கேளுங்கள்.
            அப்புறம் நீங்களே சொல்லுங்கள்! கருப்புப் பணம் கட்டுக் கட்டாகப் புழங்கும் திரைத்துறைக்கு எதற்கு வரிச்சலுகை தருகிறார்கள்? வரியே இல்லாமல் பல படங்களை அவர்கள் ஓட்டு ஓட்டென்று ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதுவும் எப்படி? இருபது ரூபாய் டிக்கெட்டை இருநூறு ரூபாய்க்கும், பத்து ரூபாய் பிஸ்கெட் பாக்கெட்டை இருபது ரூபாய்க்கும் விற்று. இதில் புரட்சிப் படங்களும் கணிசமாக அடங்கும்.
            அப்படியே நம் நிலையை கொஞ்சம் தள்ளி நின்று எட்டி நோக்குங்கள். நாம் ஓடி ஓடி நாம் வாங்கும் உப்பு, புளி, மிளகாய் என்று ஒவ்வொன்றுக்கும் வரி கட்டிக் கொண்டு இருக்கிறோம்.
            எல்லாம் தலைவரி. மன்னிக்கவும், தலைவிதி.
*****

பிராயச்சித்தம்


சிலிண்டர் காற்று
"மூச்சடைக்கிறது
கொஞ்சம் காற்று கொடேன்!"
என்றேன்.
கொஞ்சமும் இரக்கம் இல்லாமல்
அந்தப் பெட்டிக் கடையில்
அரை கிலோ சிலிண்டரில்
வாங்கிய
ஆக்ஸிஜனை
தான் மட்டும் சுவாசித்துக் கொண்டு
சென்று கொண்டிருந்தார்
அந்தப் பெரியவர்
தவித்த வாய்க்குத்
தண்ணீர் கொடுக்காத
தன் மருமகளைத் திட்டியபடி!
*****

பிராயச்சித்தம்
குளத்தின் மேல் கட்டிய
வீட்டிற்குப் பிராயச்சித்தமாய்
கண்ணாடித் தொட்டியில்
நீந்திக் கொண்டிருக்கின்றன
மீன்கள்!
*****

தொண்டர்கள்


தொண்டர்கள்
தலைவரை கைது செய்த போது கடைகளைச் சூறையாடி, பேருந்துகளுக்கு தீ வைத்தவர்கள் அவர் இறந்த போது அமைதியானார்கள்.
*****
போட்டோ
"ஒரு பாதுகாப்புக்குத்தான்!" என்ற ஒப்பந்தக்காரர் அமைச்சரோடு ஒரு செல்பி எடுத்துக் கொண்டார்.
*****
தாராளம்
அமலாவை ஆசை தீர அனுபவித்து விட்டு, அவள் கேட்டதற்கும் மேலாக பழைய ஐநூறு ரூபாய் தாள்களாய்க் கொடுத்து விட்டுப் போனான் ஆகாஷ்.
*****

காட்சி முடிவு


மனத்தோற்றம்
இடுப்பளவு வந்த வெள்ளம்
மார்பளவாகி
கழுத்தளவைக் கடந்து
‍தலைக்கு மேலே
போன போது
தோன்றியது
வீட்டிலிருந்த பொருள்களைப்
பாதுகாப்பதில்
மனதைச் செலுத்தியிருக்காமல்
தப்பித்திருக்கலாமே என!
*****


காட்சி முடிவு
வில்லனைக் கேட்கும்
சில கேள்விகள்
எங்கள் மீதும் தெறிக்கின்றன.

வில்லனுக்கு விழும்
அடிகளும், உதைகளும்
சில எங்கள் மீதும் விழுகின்றன.

காட்சி முடிந்ததும்
வெளியேறுகிறோம்
நாயகனைப் பாராட்டி விட்டு
வில்லனாய் நடித்தவனின்
நடிப்பைப் புகழ்ந்த படி!
*****

முதல் வெட்டு


முதல் வெட்டு
தலைவரானதும் முதல் வெட்டு விழுந்தது அவரை தலைவராக முன்மொழிந்த கண்ணையனுக்கு.
*****
வில்லன்
"பர்ஸ்ட் வில்லன்! அப்படியே படிப்படியா ஹீரோ! புரியுதா?" பெரிதாகச் சிரித்தார் அரசியல் என்ட்ரி கொடுத்த ஏகாம்பரம்.
*****
புது கடை
"நம்ம ஏரியாவுல புது கடை திறந்திருக்கிறாங்கப்பா!" என்ற மகனிடம் அப்பா சொன்னார், "ஏ.டி.எம்.டா!"
*****

27 Feb 2017

கண்டுபிடிப்புகள்


கண்டுபிடிப்புகள்
மீன்களைப் பார்த்து
தூண்டிலைக் கண்டுபிடித்த,
மான்களைப் பார்த்து
வலையைக் கண்டுபிடித்த,
பறவைகளைப் பார்த்து
கண்ணியைக் கண்டுபிடித்த,
ஒரு மனிதன்தான்
மனிதனைப் பார்த்து
கண்டுபிடித்திருக்க வேண்டும்
துப்பாக்கியை.
*****

ஒரு மரம்
அபார்ட்மெண்டுக்கு
ஒரு மரம் வளர்ப்போம்,
போன்சாய் மரம்!
*****

இடி


கட்டிங்
ஆளுக்கொரு நாள் என்று இருபது பேராக சேர்ந்து கட்டிங் அடித்து விட்டு இரண்டாயிரம் நோட்டைக் கொடுத்து சில்லரை பிரச்சனை இல்லாமல் செய்து கொண்டனர் விசுவாச குடிமக்கள்.
*****
யணம்
முதலில் கிளம்பிய பேருந்து கடைசியாகப் போய் சேர்ந்தது.
*****
இடி
வெளிநாட்டுக்குக் கட்டிட வேலைக்குச் செல்ல விமானம் ஏற காத்திருந்த கன்னியப்பன் தலையில் இடிந்து விழுந்தது விமான நிலையத்தின் மேற்கூரை.
*****

உயிரின் பயணம்


உயிரின் பயணம்
பத்தாவது மாடியிலிருந்து விழுந்தவனுக்கு
ஆறாவது மாடியைக்
கடக்கும் போது
எப்படியும் காப்பாற்றி விடுவார்கள் என
நம்பிக்கை இருந்தது.
மூன்றாவது மாடியைக்
கடந்த போது
பிழைத்துக் கொள்ளலாம் என்று
நம்பிக்கைப் பிறந்தது.
இரண்டாவது மாடியைக்
கடந்த போது
பயப்படாதே என்று சொல்லி
பயம் கொண்டது மனது.
தரையை அடைந்து
உடல் சிதறிய போது
வாழணும் என்ற ஆசை பிறக்க
பிரிந்துப் போனது உயிர்.
*****

நல்ல அரிசி


நல்ல அரிசி
நல்ல அரிசி என்றதும் வீட்டுக்கு ரெண்டு மூட்டை ஓரமாக எடுத்து வைத்துக் கொண்டார் ரேஷன் கடைக்காரர்.
*****
புரிதல்
நேரில் பேசிக் கொள்ளாத நண்பர்கள் இருவரும் வாட்ஸ் அப்பில் பரிமாறிக் கொண்டனர் தங்களின் தேவைகளை.
*****
அட்டை
"அதான் அட்டையை உரசுனா பணம் எடுத்துக்குதாம்மே! அப்புறம் ஏன் பணத்தை அடிக்கிறாங்க? அட்டையா அடிச்சுக் கொடுத்திடலாம்ல!" என்றாள் சிகப்பி ஆச்சி.
*****

புரியாக் கவிதை


ஞாபகம்
மழை வெள்ளம்
பார்க்கும் போதெல்லாம்
காணாமல் போன
ஏரி, குளங்களின்
ஞாபகத்தை வர வைத்து விடுகிறது
தேங்கி நிற்கும் நீர்!
*****

புரியாக் கவிதை
என்னமோ எதுவுமே புரியவில்லை
என்ற கவிதையில்
கவிஞனின் மரணம்
சொல்லப்பட்டிருந்தது.
அவன் மரணம் புரிந்து
வந்து சேர்வதற்குள்
ஈமச்சடங்கு முடிந்து
சடசடவென எரியும் நெருப்பில்
கவிதைச் சொல்லிக் கொண்டிருந்தான் அவன்.
*****

26 Feb 2017

சார்ந்திருக்கும் அழுத்தம்


சார்ந்திருக்கும் அழுத்தம்
            நாம் சார்ந்திருக்க வேண்டும் என்ற அழுத்தம் அளவுக்கதிகமாக நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்து கொடுக்கப்படுகிறது. அதை ஒரு பாதுகாப்பு அம்சமாகக் கருதி நம்மைச் சுற்றியிருப்பவர்கள் செய்தாலும், அளவுக்கு அதிகமான பயங்கள் மனதில் உருவெடுப்பதற்குக் காரணம் அந்த அழுத்தம்தான்.
            தற்சார்பு என்பதை அழித்து விடும் வகையில் அந்த அதீத சார்ந்திருத்தல் குறித்த புத்திமதிகள் புகட்டப்படுகின்றன. யாரைப் பார்த்தாலும் ஒரு மரியாதை கலந்த பயம் ஏற்படுவது இதனால்தான்.
            இந்த மனோவசிய நிலையைத்தான், மரியாதை கலந்த பயத்தை ஏற்படுத்துபவர்கள் அடிமை கலாச்சாரத்துக்கு வசதியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
            இந்த பயம் கலந்த அச்ச உணர்வின் காரணமாக, சுதந்திரமாக நம் உணர்வுகளையோ, முடிவுகளையோ வெளிப்படுத்தியிருக்க மாட்டோம். எந்த ஓர் உணர்வுக்கும், முடிவுக்கும் அது மாதிரியான ஒரு முன்மாதிரி முடிவைத் தேடிக் கொண்டு இருப்போம்.
            சுயத்தைத் தொலைப்பது போன்ற அறியாமை மனித வாழ்க்கையில் இல்லை. அந்த அறியாமையை வாழ்க்கை குறித்த பாதுகாப்புணர்வு என்ற பெயரில் வளர்த்து எடுக்கப்படுவதைத்தான் நீருக்குள் தீக்குச்சியைக் கொழுத்தி பாதுகாப்பாக வைத்திருப்பது போல் இந்த சமூகமும், உறவுகளும் காலம் காலமாகச் செய்து கொண்டு இருக்கின்றன. நமக்கும் பழகி விட்டதால் அதிலிருந்து வெளிவருவதற்கு ரொம்பவே யோசிக்கிறோம். அதிலிருந்து வெளிவந்து விடுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் தங்களுக்குள்ளே தங்களுக்குத் தேவையான சார்புகள், உதவிகள் அனைத்தையும் கேட்டுக் கொள்கிறார்கள். சுய முடிவு எடுப்பவர்கள் முன்னேறுவதை யாரும் தடுக்க முடியாது.
*****

தடை தாண்டும் ஓட்டம்


தடை தாண்டும் ஓட்டம்
பயணிக்கும் வாகனங்களில்
ஒன்றிலேனும் குடித்து விட்டு
வண்டி ஓட்டுகிறார் ஒருவர்.
மூன்று மாதத்திற்கு முன்
ரிசர்வேஷன் செய்தும்
கடைசி நேரத்தில்
தவற விட நேரிடுகின்றனது
ரயிலை.
கடைசி வரை முயற்சித்தும்
பேசன்ஜர் ரயிலில்
உட்கார்வதற்கும் இடம் கிடைக்காமல்
போய் விடுகிறது சில நேரங்களில்.
வேகு பிராயசைப்பட்டு
வேக வேகமாக வந்து
கேன்சல் ஆகிறது
ஆகாய விமானப் பயணம் ஒன்று.
ஆக மொத்தத்தில்,
பயணிப்பதும்,
இலக்கு சென்று சேர்வதும்
எல்லாவற்றையும் தாண்டி
எப்படியோ நிகழ்ந்து கொண்டு இருக்கிறது
தடைகளையும், விபத்துகளையும் தாண்டும்
தடை தாண்டும் ஓட்டமாய்!
*****

என்ன செய்வது?


என்ன செய்வது?
ஏ.டி.எம். கொடுத்த ஒரு ரெண்டாயிரம் நோட்டை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தார் நாலாயிரம் வாடகைக் கொடுக்க வேண்டிய நாகராஜன்.
*****
செத்துடுவேன்
"செத்துடுவேனோன்னு பயமாக இருக்கு!" என்றால் ஏ.எடி.எம்.மில் பணம் எடுக்கச் சென்ற தாத்தா.
*****
விடுப்பு
அக்கெளண்டில் போட்ட மாதச் சம்பளத்தை எடுக்க ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டான் உடல்நலம் சரியில்லாத போதும் விடுப்பு எடுக்காமல் வேலை செய்த வேலாயுதம்.
*****

மனசாந்தி


மனசாந்தி
இருக்கின்ற காசுக்கு
பேய் நடமாட்டம் இருப்பதாகச்
சொல்லும் வீட்டை
துணிந்து வாங்குவதைத் தவிர
வேறு வழி தெரியாத போது
மனம் சாந்தி கொள்கிறது,
மாதம் பிறந்தால்
ஊழியம் கொடுத்து
வாட்ச் மேன் போட முடியாத
வீட்டுக்குக்
காவலாய் இருந்து விட்டுப் போகட்டும்
பேய்கள் என்று!
*****

புரிதல்
நூற்றுக்கு ஒரே ஒரு மதிப்பெண் குறைந்த போது
அலட்சியம் என்று சொன்னார்கள்
ஸ்ட்ரெஸ் என்று புரியாத அப்பாவும், அம்மாவும்.
*****

பிட்டுக்குப் பதில் 2000


அலாவுதீன் பூதம்
"ஆலம்பனா!" என்று பணிந்து நின்ற அலாவுதீன் பூதத்திடம் ரெண்டாயிரம் நோட்டைக் கொடுத்த சில்லரை மாத்தி வரச் சொன்னான் சம்சுதீன்.
*****
பெருமிதம்
முதல் முறையாக வரிசையில் நின்ற பெருங்கூட்டத்தைப் பார்த்து பெருமிதமாக உணர்ந்தார் நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஏ.டி.எம். காவலாளி கண்ணப்பன்.
*****
பிட்டுக்குப் பதில் 2000
பிட்டுக்கு மண் சுமக்கச் சம்மதித்த சிவபெருமான், "அதெல்லாம் முடியாது! ரெண்டாயிரம் நோட்டுதான் தர முடியும்!" என்று பாட்டிச் சொன்னதைக் கேட்டு மாயமானார்.
*****

25 Feb 2017

செய்திகள் வாசிப்பது...


செய்திகள் வாசிப்பது...
ஒரு செய்தி செய்தியாகிறது
அது தரும்
அதிர்ச்சியைப் பொருத்து.

மீண்டும் மீண்டும்
ஒளிபரப்பாகும் செய்திகள்
ஒன்றுமில்லாமல் செய்வது போலிருக்கிறது
நிகழ்ந்து கொண்டிருக்கும்
நிகழ்வுகளை.

செய்தியில் அடிபடும்
மனிதர்களின் வலியும், வேதனையும்
புரியாமல்
சுவாரசியமாக வாசித்து முடிக்கிறார்
வாசிப்பாளர்.

ஒரு செய்தியில்
செய்தியைத் தாண்டிச் சொல்ல
ஒன்று இருக்கிறது என்றால்
நேற்று வரை
அதைச் செய்தியாகாமல்
தடுத்தது எது?

மரணச் செய்திகளில்
காசு பார்க்கிறார்கள்
சேனல்காரர்கள்.
வேதனைச் செய்திகளில்
விளம்பரம் தேடுகிறார்கள்
விளம்பரதாரர்கள்.

நாம் செய்திகளை
விரும்புகிறோம் என்பதும்,
செய்திகள் உருவாக்கப்படுகின்றன என்பதும்
நமக்குத் தெரியாவிட்டாலும்
தெரியும்
அதைக் காற்றில் கலந்து விடுபவர்களுக்கு.
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...