சார்ந்திருக்கும் அழுத்தம்
நாம் சார்ந்திருக்க வேண்டும் என்ற அழுத்தம்
அளவுக்கதிகமாக நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமிருந்து கொடுக்கப்படுகிறது. அதை ஒரு பாதுகாப்பு
அம்சமாகக் கருதி நம்மைச் சுற்றியிருப்பவர்கள் செய்தாலும், அளவுக்கு அதிகமான பயங்கள்
மனதில் உருவெடுப்பதற்குக் காரணம் அந்த அழுத்தம்தான்.
தற்சார்பு என்பதை அழித்து விடும் வகையில்
அந்த அதீத சார்ந்திருத்தல் குறித்த புத்திமதிகள் புகட்டப்படுகின்றன. யாரைப் பார்த்தாலும்
ஒரு மரியாதை கலந்த பயம் ஏற்படுவது இதனால்தான்.
இந்த மனோவசிய நிலையைத்தான், மரியாதை கலந்த
பயத்தை ஏற்படுத்துபவர்கள் அடிமை கலாச்சாரத்துக்கு வசதியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த பயம் கலந்த அச்ச உணர்வின் காரணமாக,
சுதந்திரமாக நம் உணர்வுகளையோ, முடிவுகளையோ வெளிப்படுத்தியிருக்க மாட்டோம். எந்த
ஓர் உணர்வுக்கும், முடிவுக்கும் அது மாதிரியான ஒரு முன்மாதிரி முடிவைத் தேடிக் கொண்டு
இருப்போம்.
சுயத்தைத் தொலைப்பது போன்ற அறியாமை மனித
வாழ்க்கையில் இல்லை. அந்த அறியாமையை வாழ்க்கை குறித்த பாதுகாப்புணர்வு என்ற பெயரில்
வளர்த்து எடுக்கப்படுவதைத்தான் நீருக்குள் தீக்குச்சியைக் கொழுத்தி பாதுகாப்பாக வைத்திருப்பது
போல் இந்த சமூகமும், உறவுகளும் காலம் காலமாகச் செய்து கொண்டு இருக்கின்றன. நமக்கும்
பழகி விட்டதால் அதிலிருந்து வெளிவருவதற்கு ரொம்பவே யோசிக்கிறோம். அதிலிருந்து வெளிவந்து
விடுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் தங்களுக்குள்ளே தங்களுக்குத் தேவையான சார்புகள்,
உதவிகள் அனைத்தையும் கேட்டுக் கொள்கிறார்கள். சுய முடிவு எடுப்பவர்கள் முன்னேறுவதை
யாரும் தடுக்க முடியாது.
*****
No comments:
Post a Comment