28 Feb 2026

உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு பத்து நிமிடம்!

உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு பத்து நிமிடம்!

வார்த்தைகள் ஆபத்தானவை. ஒருவன் சரி என்கிறான். அதையே இன்னொருவன் தவறு என்கிறான். இந்த சரி, தவறுக்குள் எத்தனை அர்த்தங்கள்? அது சம்மதமாக இருக்கலாம், சலிப்பாக இருக்கலாம், அல்லது இப்போதைக்குத் தொலையேன் என்கிற எரிச்சலாகவும் இருக்கலாம்.

நாம் என்ன செய்கிறோம்? அவன் சொன்ன வார்த்தையை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். அதன் பின்னாலிருக்கும் அர்த்தத்தை விட்டுவிடுகிறோம். அங்கேயே ஆரம்பிக்கிறது உலகப்போர்.

கவனிக்க வேண்டியது வார்த்தைகளையல்ல, அந்த வார்த்தைகளுக்குப் பின்னிருக்கும் அர்த்தத்தை. இதைத் திருவள்ளுவர் குறிப்பறிதல் என்கிறார். இது கொஞ்சம் கஷ்டமான வேலைதான். அந்தக் கஷ்டத்தைப் பார்த்தால் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு படுகிற கஷ்டம் உலக மகா கஷ்டமாக இருக்கும்.

புரியவில்லை என்பதுதான் உலகின் மிகப்பெரிய கவலை. படிக்கிறவனுக்குப் பாடப்புத்தகம் புரிவதில்லை. வேலை பார்ப்பவனுக்கு மேனேஜர் புரிவதில்லை. மேனேஜருக்கு முதலாளி புரிவதில்லை. முதலாளிக்குத் தொழிலாளி புரிவதில்லை. கணவனுக்கு மனைவி புரிவதில்லை. மனைவிக்குக் கணவன் புரிவதில்லை. பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் புரிவதில்லை. பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் புரிவதில்லை. இது ஓர் உலகளாவிய பிரச்சனை.

இந்தப் புரியவில்லை என்பதற்குப் பின்னால்தான் அர்த்தமே ஒளிந்து கிடக்கிறது. ஓர் அர்த்தம் மட்டுமல்ல, வேறுபல அர்த்தங்களும் ஒளிந்து கிடக்கின்றன. ஆகவே இதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும் என்று சிந்திப்பதற்கு ஒரு பத்து நிமிடம் செலவு செய்தால், இங்கே பாதி விவாகரத்துகளும், முக்கால்வாசி சண்டைகளும் காணாமல் போய்விடும்.

அந்தப் பத்து நிமிடம்தான் பிரச்சனை. அப்படி பத்து நிமிடம் ஒதுக்க முடியாத அளவுக்கு உணர்ச்சிக் குவியலுக்குள் காணாமல்போய் விடுகிறோம். உணர்ச்சிப் பிழம்பாய்த் தெறித்து புரிய வேண்டிய அர்த்தங்களை புரிய விடாமல் பொசுக்கி விடுகிறோம்.

நம் மூளை ஒரு விசித்திரமான வஸ்து. அது தனக்குத் தெரிந்த தரவுகளை வைத்துக்கொண்டு, எதிராளி சொல்வதற்கு உடனே ஒரு அர்த்தத்தைக் கற்பித்துக் கொள்கிறது. அதற்கு வேறு அர்த்தமும் இருக்கும் என்பதை யோசிக்க மறுக்கிறது.

உதாரணத்துக்கு ஆசிரியர் கூப்பிட்ட உடன் மாணவன் என்ன நினைத்துக் கொள்கிறான்? திட்டத்தான் கூப்பிடுகிறார் என்று. பாராட்டவும் கூப்பிட்டிருக்கலாம் அல்லவா! இங்குதான் மைன்ட் செட் பிரச்சனை செய்கிறது. பழகிய மைன்ட் செட்டிலிருந்து வெளியே வர மறுக்கிறது மனம். அதிலிருந்து வெளியே வந்து வேறு அர்த்தமும் இருக்கலாம், வேறொன்றும் நிகழலாம் என்று யோசிக்க ஆரம்பித்தால் வாழ்க்கையின் லாஜிக்கே மாறி விடும்.

என்னைக் கேட்டால் மனம் ஒரு தவறான புரிதல்களின் தொழிற்சாலை என்பேன். அது சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது. மனம் சொல்லும் அந்த ஓர் அர்த்தம் மட்டுமா இருக்கும்? வேறு அர்த்தமும் இருக்கும் என்று அதை யோசிக்க பழக்க வேண்டும். இந்த ஒரு பழக்கம் உங்கள் வாழ்க்கையையே மாற்றும். தவறான புரிதல்களிலிருந்து உங்களைக் கரையேற்றும்.

உலகில் உள்ள பாதி பிரச்சினைகள் அவன் சொன்னான், இவள் நினைத்தாள் என்பதில்தான் இருக்கின்றன. ஒரு சொல்லுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மௌனத்தை வாசிக்க நமக்குத் தெரிவதில்லை.

அறிவியல் ஒலியின் வேகத்தை 331 மீ/வி என்கிறது. ஒளியின் வேகத்தை 3×108 மீ/வி என்கிறது. ஆனால் தவறான புரிதலின் வேகம் அதைவிட அதிகம். ஒரு வார்த்தை காதில் விழுந்தவுடனேயே நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம்.

நிதானமாக எதையும் பத்து நிமிடம் ஒதுக்கி யோசிப்பது என்பது ஒரு கலை. அதுவும் இவன் ஏன் இப்படிச் சொன்னான்? அவன் ஏன் அப்படிச் சொன்னான்? என்று மற்றவர் பக்கம் நின்று யோசிப்பது ஒரு மேதாவித்தனம்.

எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு அர்த்தம்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. கமலஹாசன் பேசுவதைப் போலத்தான் இதுவும். பார்க்கும் பார்வையைப் பொறுத்து அர்த்தங்கள் மாறும்.

அடுத்த முறை யாராவது உங்களைக் காயப்படுத்தும் விதமாகப் பேசினால், கோபப்படுவதற்கு முன்னால் மனதிடம் ஒரு பத்து நிமிடம் பாஸ் என்று மனதிற்குள் Pause பட்டனை அழுத்துங்கள். இதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும்? என்று அதனிடமே கேளுங்கள். அதுதானே சிக்க வைக்கப் பார்க்கிறது. ஆகவே அதனிடமே இப்படிக் கேட்டு அந்தச் சிக்கலிலிருந்து வெளியேறுங்கள். ஒரு பெரிய அமைதி பிறக்கும். அந்த அமைதிதான் இந்த உலகத்திற்கும் உங்களுக்கும் இப்போது தேவை.

இது உங்களுக்குப் பிடித்திருந்தால் நான்கு பேரை இதைப் படிக்கக் கூட்டி வாருங்கள். இப்படிச் சொன்னதும் இதற்கு வேறு என்ன அர்த்தம் இருக்க முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டால் நீங்கள் சக்சஸ் ஆகிவிட்டீர்கள் பாஸ். யூ ஆர் Pass. உங்களுக்கு தேர்ச்சி சான்றிதழை விரைவில் அனுப்பி வைக்க வேண்டும்.

*****

27 Feb 2026

எங்கே போகும் தமிழகத்தின் கடன் பாதை?

எங்கே போகும் தமிழகத்தின் கடன் பாதை?

தமிழர்களாகிய நாம் அனைவரும் லட்சாதிபதிகள் ஆகி விட்டோம்!

கையில் இன்னும் பணம் வரவில்லை என்கிறீர்களா? அது வராது. இது கைக்கு வரும் பணம் அல்ல. தலைக்கு வரும் பணம்.

தமிழ்நாட்டின் கடன் 10 லட்சம் கோடி ரூபாய். அதைத் தமிழ்நாட்டின் ஏழு கோடி மக்கள்தொகையால் வகுத்துப் பார்த்தால் தலைக்குத் தோராயமாக ஒன்றரை லட்சம் வருகிறது. அந்தத் தொகையை வைத்துப் பார்த்தால் தமிழர்களாகிய நாமெல்லாம் லட்சாதிபதிகள்தானே.

2012 வரை இருந்த கடன்தொகை தமிழகத்துக்கு நாலரை லட்சம் கோடிக்குச் சற்றுக் கம்மி என்றால், அதுவே ஐந்தாண்டுகள் கழித்து 2026 இல் பார்க்கும் போது, எதையும் கழிக்க முடியாத அளவுக்குக் கூடிப் போய் பத்து லட்சம் கோடியை எட்டி விட்டது.

கடந்த ஐந்து வருடத்தில் மட்டும் ஆறரை லட்சம் கோடி. அதாவது, கிரிக்கெட்டில் லாஸ்ட் ஓவரில் சிக்ஸராக விளாசுவார்களே, அப்படி எகிறியிருக்கிறது கிராஃப்.

எதிர்க்கட்சிகள் ஓவர் கடன் என்கின்றன. எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன் என்று பெரிய புள்ளிகளை வைத்துதான் பிளான் போடுறோம் என்கிறது தமிழக அரசு.

அப்படியானால் இதில் இருக்கும் லாஜிக்தான் என்ன?

ஐந்து வருடத்துக்கு முன்பிருந்த தஙகம் விலை இப்போது டபுள். அதே போக்கில் இந்தக் கடனும் டபுள் என்று சொல்வது ஒரு வகை லாஜிக்.

ஏழு ரூபாய் டீ கூட இப்போது பனிரெண்டு ரூபாய் என்பது இதே லாஜிக்தான். இது பணமதிப்பு சரிந்துவிட்டது என்று சொல்லும் பண வீக்க லாஜிக்.

மத்திய அரசுக்கே 197 லட்சம் கோடி கடன் இருக்கும் போது தமிழக அரசுக்கு இருப்பது கொசுறுதான் என்பது வேறொரு வகை லாஜிக்.

மத்திய அரசு ரிசர்வ் வங்கியை வைத்து பணத்தை அச்சடித்துக் கொள்ளும். தமிழக அரசால் அது முடியாது.

மத்திய அரசுக்கு பெல், ஐஓசி, ஓஎன்ஜிசி என்று டிவிடென்ட் தரும் கம்பெனிகள் அதிகம். தமிழக அரசுக்கு கடனில் தத்தளிக்கும் கம்பெனிகள்தான் அதிகம். ஆகையால் மத்திய அரசுக்கு இருக்கும் கடனும் தமிழக அரசுக்கு இருக்கும் கடனும் ஒன்றல்ல. மொத்தத்தில் கடன் என்பது எந்த அரசுக்கும் நல்லதல்ல.

ஏனிப்படி ஆகிறது தமிழகப் பொருளாதாரம்?

தமிழகப் பொருளாதாரத்தைப் பொதுவாக பொருளாதாரப் புள்ளிகள் விண்டோ பிரேக் எக்கானமி என்கிறார்கள். அதாவது கண்ணாடியை உடைப்பதும், அப்புறம் அதை மாற்றுவதும் என்று இதற்கு அர்த்தம். அதை ஏன் உடைப்பானேன்? அதை ஏன் மாற்றுவானேன்? உடைத்தால்தானே அல்லது உடைந்தால்தானே மாற்ற முடியும். உடைக்காமல் மாற்ற முடியாதே. ஆனால் இரண்டுமே பொருளாதாரக் கணக்கில் வேலைதான். தி கிட் படத்தில் சார்லி சாப்ளின் செய்வாரே, அப்படி.

அப்படி சாலையைப் போட்டு, ஒரே வருடத்தில் அது ஜல்லியடித்தால் திரும்பவும் சாலையைப் போட்டுக் கணக்கு எழுதினால் கணக்கில் புள்ளி ஏறும், சொத்து டவுன்சைடில் பிரயாணிக்கும்.

ஒரு கட்டிடத்தைக் கட்டிப் பத்து வருடத்தில் மீண்டும் இடித்துக் கட்டினால் அதுவும் இதே வகையறாத்தான்.

ஒரு சாலை என்றால், ஒரு கட்டிடம் என்றால் அதற்கான ஆயுட்காலம் என்ற ஒன்று இருக்கிறது. அந்த ஆயுட்காலம் வரை அதை வாழ விட வேண்டும். இடையிலேயே கொன்று போட்டு உயிர் கொடுக்கக் கூடாது.

அப்புறம், இலவசங்களுக்கு அதிகம் செலவு செய்கிறது தமிழக அரசு என்கிற வாதமும் உண்டு. ஏழைகளுக்குக் கொடுத்தால் அது வீண் செலவு, பணக்காரர்களுக்குக் கொடுத்தால் அது சலுகையா என்கிற எதிர்வாதமும் இதற்கு உண்டு.

இதிலும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அரசாங்கம் ஒரு கையில் மகளிருக்கு உரிமைத் தொகை கொடுக்கிறது. இன்னொரு கையில் அதே வீட்டுக்காரர் டாஸ்மாக்கில் அந்தப் பணத்தை ரிவர்ஸ் கியர் போட்டுக் கொண்டு போய் கொட்டுகிறார். சமூகப் பாதுகாப்புத் திட்டத்துக்குச் செலவு செய்கின்ற பணம், மது வருவாய் வழியாக மறுபடியும் அரசாங்கத்துக்கே வந்து விடுகிறது என்று ஆதங்கப்படும் சமூக மற்றும் பொருளாதார ஆர்வலர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஆதங்கப்படுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

ஆக, என்னதான் நடக்கிறது தமிழ்நாட்டில்?

பல நாடுகள் கடன் வாங்குகின்றன. பல மாநிலங்கள் கடன் வாங்குகின்றன. உண்மைதான். ஆனால், கடன் வாங்காத நாடுகளும், மாநிலங்களும் இருக்கின்றன. வருவாய் பற்றாக்குறை இல்லாமல் பட்ஜெட் போடும் அரசுகளும் இருக்கின்றன. ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கோடு இருக்கும் தமிழ்நாடு அரசு கடனில்லாத பட்ஜெட் என்ற ஓர் இலக்கை ஏன் நிர்ணயித்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் இப்போதைக்கான டிரில்லியன் டாலர் கேள்வி.

*****

26 Feb 2026

எளிமை, நேர்மையின் ஊற்றுக்கண் தோழர் நல்லகண்ணு!

எளிமை, நேர்மையின் ஊற்றுக்கண் தோழர் நல்லகண்ணு!

இந்த மனிதரைப் பார்த்தால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது? அரசியலில் புனிதம் என்ற வார்த்தை இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதற்கு இவர்தான் ஆகச்சிறந்த சாட்சி.

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. நேர்மையின் ஒளி. எப்போதும் நிமிர்ந்த நடை. இவருடைய எளிமையைப் பார்த்தால், கார்ப்பரேட் கார்களில் பவனி வரும் இன்றைய இளம் அரசியல்வாதிகளுக்குக் காய்ச்சலே வந்துவிடும். இன்றைய அரசியல்வாதிகளின் ஒரு நாள் டீ செலவில், நல்லக்கண்ணு ஐயா ஒரு வருடம் குடும்பம் நடத்திவிடுவார். அவ்வளவு எளிமை. மனிதர்களுடன் பழகுவதில் அவ்வளவு இனிமை.

ஒரு முறை தஞ்சாவூரில் ஐயா நல்லக்கண்ணுவைப் பார்க்கும் வாய்ப்பு. அப்படியே அதே எளிமை 100 சதவீதம். பந்தா 0 சதவீதம். மிகப்பெரிய கம்யூனிஸ்ட் தலைவர் என்ற எந்தக் கோதாவும் இல்லை. அறிமுகமே இல்லாத என்னிடம் ஓர் ஆத்மார்த்தமான நண்பரிடம் பேசுவது போன்ற அத்தனைக் கனிவான பேச்சு. நான் அப்போதுதான் அவரை நேரில் பார்க்கிறேன். எனக்கு வெகுநாட்கள் பழகியது போன்ற ஓர் உணர்வு. இப்படி ஒரு ரசவாதத்தை உருவாக்குவது எல்லா தலைவருக்கும் சாத்தியம் இல்லை.

மதிய உணவு பொட்டலமாக வழங்கப்பட்ட போது தனக்கெனத் தனியிடம் எதுவும் தேடாமல், அங்கேயிருந்த ஒரு சிமிட்டு மேடையில் எல்லாரையும் போல பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்து விட்டார். டைனிங் டேபிள், தலைவருக்கான ஸ்பெஷல் கவனிப்பு எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

அவர் அருகில் அமர்ந்து அருகில் சாப்பிட்ட நான்கு பேரில் அப்போது நானும் ஒருவன். அப்படி அவரோடு அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது அப்போது எனக்கு ஒரு சின்ன ஆசை. இப்போதுள்ள தலைவர்களை நினைத்துப் பார்க்கையில் அது ரொம்ப பெரிய ஆசை. அதன்பின் வேறு எந்த தலைவர் அருகிலும் அமர்ந்து சாப்பிடும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. தோழர் தந்த அதிர்ஷ்டம் அது.

அது சரி என்னைப் போன்ற சாமான்யன் அருகே அமர்ந்து சாப்பிட எந்தத் தலைவர் விரும்புவார்? எல்லாரையும் போலத் தானும் ஒருவன்தான் என்பதை ஒரு தலைவர் பழகுவோரிடம் எல்லாம் ஏற்படுத்துவது சாதாரணமானதல்ல. தானும் சாமான்யன்களில் ஒரு சாமான்யன்தான் என்ற எண்ணம் ஒரு தலைவருக்கு வருவது நல்லகண்ணு போன்ற சில ஆபூர்வர்களுக்கே வாய்ப்பது. காமராசர், கக்கன் வரிசையில் நல்லகண்ணு ஓர் அரசியல் அதிசயம்.

தமிழக அரசு வழங்கிய அம்பேத்கர் விருதைப் பெற்றார். பரிசுத் தொகை ஒரு லட்சம். அதை அப்படியே கட்சிக்கும் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்தார். தகைசால் தமிழர் விருது பெற்ற போது கிடைத்த பத்து லட்ச ரூபாயோடு தன் சொந்த நிதி ஐயாயிரத்தையும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி விட்டார். யாருக்கு வரும் அப்படி ஒரு மனசு?

அரசாங்கம் இவருக்கு ஒரு வீடு கொடுத்தது. ஒரு நோட்டீஸ் அனுப்பி அதைத் திருப்பிக் கேட்ட போது எவ்வித மறுப்பின்றி உடனே அதைத் திருப்பித் தந்தார். எனக்கு எதற்கு வீடு, மக்கள் இருக்கிறார்களே என்பது அவரது எண்ணம். ஓர் எளிமையான வாடகை வீடே அவருக்குப் போதுமானதாக இருந்தது. இன்றைய ரியல் எஸ்டேட் உலகில் இது ஒரு சயின்ஸ் பிக்சன் கதை போலத் தெரியலாம். ஆனால் நிஜம்.

தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்க இவர் நடத்திய போராட்டங்கள், மணல் கொள்ளைக்கு எதிராக இவர் காட்டிய உறுதி, இதெல்லாம் ஏதோ பேப்பர் செய்திகள் அல்ல. மண்ணின் மீதான காதல். ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஓர் இலக்கணம். அவரது வாழ்க்கை அதற்கான இலக்கியம்.

நேர்மையாக இருப்பது கஷ்டம் என்கிறார்கள். ஆனால், நேர்மையைத் தவிர வேறு எதையும் செய்யத் தெரியாத மனிதர்களும் இங்கே இருக்கிறார்கள். இப்போது அந்த மனிதர்களில் ஒருவர் இல்லை. மக்களோடு மக்களாக வாழ்ந்த தோழர் நல்லகண்ணு 101 வயதில் இயற்கையோடு இயற்கையாகக் கலந்திருக்கிறார். அவருக்குப் பிறகு அந்த இடம் காலியாகவே இருக்கும் போலிருக்கிறது.

இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது எனும் பொருளில் Nature abhors a vacuum என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஆனால் இந்த வெற்றிடத்தை யாரால் நிரப்ப முடியும்?

கலைஞர் கருணாநிதி ஒரு முறை சொன்னார், எனக்கு ஒரு கண் போனாலும் இன்னொரு கண்ணாக நல்லகண்ணு இருக்கிறார் என்று. இப்போது நம்மிடம் அந்தக் கண்ணும் இல்லை.

காந்தியைப் பற்றிச் சொல்லும் போது ஐன்ஸ்டீன் இப்படிச் சொன்னார், இப்படி ஒரு மனிதர் இந்தப் பூமியில் வாழ்ந்தார் என்பதை வருங்கால உலகம் நம்பாது என்று. ஐன்ஸ்டீன் சொன்னது அப்படியே தோழருக்கும் பொருந்தும்.

*****

25 Feb 2026

மனிதர்களை நம்புங்க பாஸ்!

எந்தத் தீமையிலும் நன்மை உண்டு. எப்படி?

டிரம்ப் மட்டும் டாரிப்பை உயர்த்தா விட்டால் இந்தியாவில் ஜிஎஸ்டி குறைந்திருக்காது.

*****

தேடப்படும் மனிதராக இருக்க குற்றவாளியாகத்தான் இருக்க வேண்டுமா என்ன?

கடன் வாங்கி விட்டு கம்பி நீட்டினாலும் நீங்கள் ஒரு தேடப்படும் மனிதர்தான்.

*****

வாக்காளர் பட்டியலில் பெயரில்லாவிட்டால் ஒருவர் இந்தியன் இல்லையா?

உன்னை வாக்காளர் என்று நிரூபிக்க போராடினால் நீயும் ஒரு இந்தியனே.

*****

போகிற இடமெல்லாம் ஆதார், பான், வாக்காளர் அட்டை என்று எதாவது அடையாள அட்டைகளைக் கேட்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

போகிறப் போக்கைப் பார்த்தால் ஆதார், வாக்காளர் அட்டை, பான் இவற்றையெல்லாம் உடம்பில் பச்சைக் குத்திக் கொள்ள வேண்டியதுதான் போலிருக்கிறது. அல்லது சட்டையில் அச்சிட்டும் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. மனிதர்களை நம்புங்க பாஸ்.

*****

ஐந்து முறைக்கு மேல் வாக்களித்த உங்களுக்கு SIR படிவம் வழங்கப்பட்ட போது என்ன தோன்றியது?

வருமான வரித் துறை ஆதாரையும் பானையும் வைத்து என்னென்னவெல்லாம், எதையெதையெல்லாம் எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறார்கள் தெரியுமா? தேர்தல் ஆணையமும் அது போல நவீன வழிகளைப் பின்பற்றாமல் இன்னும் விண்ணப்பம் கொடுத்தல், திருத்துதல், பதிவேற்றுதல் என்று ஏன் அரதப்பழசான முறைகளிலேயே இருக்கிறார்கள். நீங்கள் தேர்தல் ஆணைய வெப்சைட்டுக்கேப் போனாலும் இருபது ஆண்டுகளுக்கு முந்தை உங்களது வாக்காளர் எண்ணின் நிலையைக் கண்டுபிடிப்பது என்பது லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் செய்ய வேண்டிய வேலைகள்.

*****

24 Feb 2026

மூளையே ஓவராக யோசிக்காதே ப்ளீஸ்!

ஓவர் திங்கிங் – நியூரான்களின் நிழல் யுத்தம்!

யோசிப்பது நல்லது. மனிதனை மரம், செடி, கொடிகளிடமிருந்து பிரித்துக் காட்டுவதே இந்த நியூரான்களின் மின்சாரப் பாய்ச்சல்தான்.

சிக்கல் வரும்போது மூளையானது ஒரு சுவிட்ச் போட்ட மெக்கானிக் போல வேலை செய்ய வேண்டும்.

ஆனால், அந்த மெக்கானிக் வேலையை விட்டுவிட்டு, சுத்தியல், ஸ்பேனர், கோடரி, கடப்பாரையை எடுத்துக் கொண்டு வண்டியைச் சரி செய்யாமல் மொத்தமாக உடைத்துப் போட்டு வேடிக்கை பார்த்தால், அதுதான் ஓவர் திங்கிங். உங்கள் வண்டி எங்கும் போகாது. நீங்கள் அங்கேயேதான் இருப்பீர்கள். உங்கள் வண்டிதான் பிரித்துப் போடப்பட்டிருக்கிறதே.

நமது மூளை ஓர் அற்புதமான கம்ப்யூட்டர்.அதில் ஒரு சின்ன கோளாறு, அதற்கு ஸ்டாப் பட்டன் இல்லாமல் இருப்பது.

ஒரு சின்னப் பிரச்சினை வரும்போது, அதற்கு ஒரு தீர்வை யோசிப்பதற்குப் பதில், பத்து வருடம் கழித்து இதே போன்ற பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று ஒரு கிளைக் கதையை உங்கள் மூளை உருவாக்கிக் கொண்டே போனால், சத்தியமாக நீங்கள் ஓவர் திங்கிங் என்ற ஓவர் டோஸால் அவதிப்படுகிறீர்கள்.

யோசிப்பதற்கும் மிகையாக யோசிப்பதற்கும், தட் மீன்ஸ் திங்கிங் அன்ட் ஓவர் திங்கிங்கிற்கும் உள்ள வித்தியாசம் மிக மெல்லியது.

வண்டி சாவி தொலைந்து விட்டால், அதைத் தேடுவதுதான் தீர்வு.

இந்நேரம் அந்தச் சாவி யார் கையிலாவது கிடைத்து, அவர் வண்டியை எடுத்துக் கொண்டு போய் எவர் மேலாவது மோதி இருந்தால்…, இன்றைய ராசிபலன் வேறு சரியில்லையே… போன வாரமே ஜோசியர் சொன்னாரே… என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தால், சாரி பாஸ் நீங்கள் ஓவர் திங்கிங் எனும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஐசியுவில் வைக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

அறிவியல் ரீதியாகப் பார்த்தால், மூளையின் ப்ரீஃபிரண்டல் கார்டெக்ஸ் அதிகப்படியான வேலைப்பளுவைச் சுமக்கும்போது, அது முடிவெடுக்கும் திறனை இழந்து விடுகிறது என்கிறார்கள் மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளர்கள்.

அப்போது என்னவாகும் என்கிறீர்களா? ஒருவிதமான பாராலிசிஸ் ஏற்பட்டது போல கை, கால் ஏன் ஒட்டுமொத்த உடலும் செயலிழந்தது போல உட்கார்ந்துவிடுவீர்கள். கேட்பதற்குச் சாதாரணமாக இருக்கலாம். அனுபவிக்கும் போதுதான் அதன் வேதனையும் வலியும் புரியும்.

இதற்குத் தீர்வுகள் இல்லையா?

ஏன் இல்லாமல்,

ஒரு சிக்கலைப் பற்றி யோசிக்க பத்து நிமிடம் போதும். அதற்கு மேல் போனால் அது ஆயிரம் தடவை எழுதும் இம்போசிசன், தீர்வு அல்ல.

மூளைக்குள் ஓடும் எண்ணங்களை ஒரு காகிதத்தில் எழுதினால், அதன் வீரியம் குறைந்துவிடும். ஸோ எழுதுங்கள். சில நேரங்களில் அதற்கு அலுப்புபட்டுக் கொண்டே யோசிப்பதை நிறுத்தி விடுவீர்கள். எப்படியோ நின்றால் சரி சனியன்.

ஓவர் திங்கிங்கால் யோசித்துக் கொண்டே இருப்பதை விட, ஒரு தவறான முடிவை எடுப்பது கூட மேல்தான். தப்பு நடந்தால் திருத்திக் கொள்ளலாம். யோசித்துக் கொண்டே இருந்தால் சமயங்களில் மண்டை கழன்று போகும். ஒருவரை மண்டை கழண்ட கேஸ் என்று சொன்னால் எப்படி இருக்கும் சொல்லுங்கள்.

முடிவாக, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அமுதத்துக்கே அந்தக் கதி என்றால், உங்கள் ஓவர் திங்கிங்கை என்ன சொல்ல?

எனவே யோசனைகளை நீங்கள் ஆளுங்கள். யோசனைகளை உங்களை ஆள விடாதீர்கள். ஒரு சத்தியமான உண்மை என்ன தெரியுமா? உலகத்தில் பல போர்கள் வெறும் யோசனையாலேயே உங்கள் மனதுக்குள் நடந்து முடிந்துவிடுகின்றன. நிஜத்தில் ஒன்றுமே நடப்பதில்லை!

இதற்கு மேல் என்ன சொல்ல? உங்கள் ஓவர்திங்கிங்கிற்கு இன்றே என்ட் கார்ட் போடுங்கள். போனால் போகட்டும் போடா என்று பாடுங்கள். ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி என்று ஆடுங்கள்.

இன்னும் வேறு ஏதேனும் சொல்லவேண்டுமானால் சொல்லுங்கள், சொல்கிறேன். கீழே கமென்ட் பாக்ஸ் இருக்கிறது.

*****

23 Feb 2026

நாக்கே பேசாதே ப்ளீஸ்!

நாக்கே பேசாதே ப்ளீஸ்!

வாழ்க்கை என்பது ஒரு விசித்திரமான டிஜிட்டல் உலகம். நாம் ஓர் உள்ளீடு கொடுத்தால் எர்ரர் மெசேஜ் இன்ஸ்டன்டாக அனுப்பப்படும், அல்லது ஒட்டுமொத்த கட்டமைப்பே ஹேங் ஆகும். நாம் சொல்வதை யாரும் கேட்கப்போவதில்லை என்று தெரிந்த பிறகு, அங்கே எதற்கு ஒரு மைக்ரோஃபோன்?

நம் வழிமுறைகள் தரமானதாக இருக்கலாம். ஆனால் ஏன் இந்த எர்ரர் மெசேஜ், சிஸ்டம் ஹேங்? ஏனென்றால் நாம் சொல்வதைச் செயல்படுத்த வேண்டியவர்கள் மொபைல் போன் அப்டேட் செய்யாத பழைய மாடல் மனிதர்களாக இருக்கிறார்கள். அதில் புதிய ஆப் வேலை செய்யாது. ஆப்பு அடிக்கவே செய்யும்.

மனிதர்கள் பொதுவாக வித்தியாசமானவர்கள். சரியாக நடப்பதை விரும்பவும் மாட்டார்கள், நல்லதாக நான்கு விசயங்கள் சொல்வதைக் கேட்கவும் மாட்டார்கள். இது அவர்களின் பிழையன்று, அவர்களின் மனதின் டிசைனின் பிழை.

அது போன்ற நிலைமைகளில் நம்முடைய எனர்ஜியை வேஸ்ட் செய்வது லாஜிக் இல்லாத விஷயம். ஓரளவுக்கு மேல் முயற்சி செய்தால், நம்முடைய மனம் சூடாகி, மன உளைச்சல் என்கிற ப்ளூ ஸ்கிரீன் வந்துவிடும். மற்றவர்களும் நம்முடைய அட்வைஸ் எனும் ஓவர்லோடைத் தாங்க மாட்டார்கள்.

எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு சைலன்ட் மோட். பேசாமல் இருப்பது. பேச்சைக் குறைப்பது அல்ல, பேச்சையே நிறுத்துவது. உலகத்தின் பாதிப் பிரச்சனைகளுக்குக் காரணம் இந்த நாக்கு என்கிற ஹார்டுவேர்தான். தேவையில்லாமல் பேசப் போய், அது வில்லங்கம் என்கிற வைரஸை உள்ளே இழுத்து வந்துவிடுகிறது.

பேசும்போது என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பேசிவிடுவதால் வரும் ஆபத்துகள் அதிகம். பேசாமல் இருக்கும்போது அந்த ரிஸ்க் பேக்டர் ஜீரோ ஆகிவிடுகிறது.

நாம் மனநிறைவோடு இருந்தால் அதற்கு மேல் அடைவதற்கு என்ன இருக்கிறது? வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் எல்லாம் சுழியம் ஆகிவிடுகிறது. ஒருவிதமான நிதானம், போதும் என்ற மனம்.

அப்போதும் இப்போதெல்லாம் ஏன் எதுவும் சொல்வதில்லை என்று கேட்க ஒரு கூட்டமே வரும். சொல்லி என்ன பயன் என்பதுதான் பதில். எல்லாவற்றையும் சாமர்த்தியமாகப் பேசி டெலீட் செய்பவர்களிடம் நம்முடைய நல்லன எதுவும் எடுபடாது.

எல்லாரும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஒரு வழியும் இருக்கத்தான் செய்கிறது. அது அனுபவம். அவர்கள் அனுபவப்பட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

வாழ்க்கையில் எல்லோருடைய பேச்சையும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்பது உண்மைதான். அதே நேரத்தில் யாருடைய பேச்சையும் கேட்காமலும் இருக்க முடியாது. அப்படியானால் யார் பேச்சைக் கேட்பது? யார் பேச்சுக்கு எஸ்கேப் கீயை அழுத்துவது என்கிறீர்களா?

யார் களத்தில் நின்று வேலை பார்க்கிறார்களோ, அவர்கள் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் அப்டேட் அனுபவத்தோடு இருப்பார்கள். வாழ்க்கையில் அவுட்டேட்டட் அனுபவம் உபயோகப்படாது.

என்றாலும் என்னதான் தெரிந்தாலும், இந்த உலகிற்கு எதையாவது சொல்ல நினைத்தாலும், இன்றைய தேதியில் எனக்குத் தெரிந்த சிறந்த தத்துவம், மவுனம் என்பது வெறும் சத்தம் இல்லாத நிலை அல்ல, அது ஒரு பாதுகாப்பான கவசம்.

அதனால்தான் நான் பேசுவதில்லை. எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

*****

22 Feb 2026

ரஜினி, கமல் - யார் ஹீரோ? – அன்றே பாடிய காரிக்கண்ணனார்!

ரஜினி, கமல் - யார் ஹீரோ? – அன்றே பாடிய காரிக்கண்ணனார்!

ரஜினியும் கமலும் இணைந்து இனி நடிப்பார்களா?

இந்தக் கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.

இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள்.

நெல்சனின் இயக்கத்தில், அனிருத்தின் இசையில் அந்தப் ப்ளக்பஸ்டர் தொடங்கி விட்டது.

நேற்று அந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி விட்டது.

அந்தப் ப்ரோமோ வீடியோவில் கேட்கப்படும் யார் ஹீரோ என்ற அந்தக் கேள்விதான் இப்போது தமிழகத்தின் ஹாட் டாபிக்.

47 வருடங்களுக்குப் பிறகு திரையுலகின் இரண்டு துருவ நட்சத்திரங்கள் மீண்டும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன.

இருவரும் இணைவதில் கோலிவுட்டில் ஒரு புது அப்கிரேடேசன் நன்றாகவே தெரிகிறது. படம் ஆயிரம் கோடியில் ஹிட்டடிக்கும் என்ற ஆருடம் காதைப் பிளக்கிறது.

ப்ரோமோவில் அந்த பென்ஸ் கார், அந்த ரெட்ரோ லுக் எல்லாமே எண்பதுகளின் நாஸ்டால்ஜியாவை இன்றைய டிஜிட்டல் துல்லியத்தில் பார்ப்பது போல் இருக்கிறது.

அறிவியல் விதிகளின்படி பார்த்தால், இரு துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்காது, மற்றும் ஒரே இடத்தில் இரண்டு அதிர்வலைகள் மோதுவது ஆபத்தானது. ஆனால் சினிமாவில் அதுதான் மேஜிக்.

கமல் உலக நாயகன், ரஜினி சூப்பர் ஸ்டார். கமல் உலக ஸ்டாராகவா? ரஜினி சூப்பர் நாயகனாகவா?  நெல்சன் என்ன மேஜிக்கை வைத்திருக்கிறார் என்பதற்கான அப்டேட்டுகள் இனி தமிழ்நாட்டை அதிரடிக்கும்.

நீங்கள் புறநானூற்றின் 58 ஆவது பாடலைப் படித்திருக்கலாம். காரிக்கண்ணனார் பாடியது. அது இது,

நீயே தண்புனற் காவிரிக் கிழவனை இவளே

முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்

கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்

தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது

நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ

இளையது ஆயினும் கிளைஅரா எறியும்

அருநரை உருமின் பெருநரைப் பொறாஅச்

செருமாண் பஞ்சவர் ஏறே நீயே

அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை இவனே

நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென

வரைய சாந்தமும், திரைய முத்தமும்

இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே

பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்

நீல்நிற உருவின் நேமியோனும் என்று

இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு

உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி

இந்நீர் ஆகலின் இனியவும் உளவோ

இன்னும் கேண்மின் நும் இசைவா ழியவே

ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும்

உடனிலை திரியீர் ஆயின் இமிழ்திரைப்

பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்

கையகப் படுவது பொய்யா காதே

அதனால் நல்ல போலவும் நயவ போலவும்

தொல்லோர் சென்ற நெறியர் போலவும்

காதல் நெஞ்சின்நும் புணர்ச்சி வென்று வென்று

அடுகளத்து உயர்க நும் வேலே கொடுவரிக்

கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி

நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த

குடுமிய ஆக, பிறர் குன்றுகெழு நாடே               (புறநானூறு, 58)

என்ன சொல்ல வருகிறார் புலவர் என்றால், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கே அமர்ந்திருப்பது என்பது வானத்தில் சூரியனும் சந்திரனும் ஒன்றாகத் தோன்றுவது போல் இருக்கிறது, உங்கள் நட்பு நீடிக்கட்டும் என்கிறார். 

நாம் என்ன சொல்ல வருகிறோம் என்றால் நட்போடு நடிப்பும் நீடிக்கட்டும் என்று.

ஆக, புலவர் காரிக்கண்ணனார் அன்று சொன்ன அதே சூரிய சந்திர லாஜிக் தான் இன்றும். அது யுனிவர்சல் நாயகன், சூப்பர் ஸ்டார் என்று மாறியிருக்கிறது. மற்றபடி ரஜினி அந்தச் சூரியன், அதே பிரகாசம், வேகம், மாஸ். ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார். சூரியனும் ஒரு நட்சத்திரம்தானே. கமல் அந்தச் சந்திரன், அதே குளுமை, கலைநயம், ஆழம். இந்த உலகுக்கு ஒரே நாயகமாக அந்தச் சந்திரன்தானே இருக்கிறது.

ப்ரோமோவில் ரஜினி அந்தக் ஏறும் போது ஹீலியம் வாயுவின் வேகம் தெரிகிறது. கமல் பக்கத்தில் நின்று அந்தச் சாவியைப் பிடிக்கும் போது அப்படி ஓர் அமைதி தெரிகிறது. இயற்பியல் விதிகளின்படி பார்த்தால் அது ஒரு செம்மையான சமநிலை.

ப்ரோமோவில் நெல்சன் தன் வழக்கமான டார்க் ஹியூமர் பாணியில் இருவரையும் கலாய்த்திருப்பது ஒரு புத்திசாலித்தனமான தெறிக்கவிடும் விளம்பரம். ரஜினி ஸ்டைலாகக் கார் சாவியைத் தூக்கிப் போட, கமல் அதை இயல்பாகப் பிடிப்பது என்பது இது வெறும் நடிப்பு அல்ல, காலங்காலமாகத் தொடரும் ஒரு நட்பின் தொடர்ச்சி. சங்கப் புலவர்கள் மன்னர்களைப் புகழ்ந்து பாடுவார்கள். நெல்சன் இவர்களைக் கிண்டல் செய்து ரசிக்க வைக்கிறார். இது ரிவர்ஸ் சைக்காலஜி

சங்கப் பாடல்களில் உவமை மிக முக்கியம். இந்தப் ப்ரோமோவில் வரும் அந்தப் பழைய பென்ஸ் கார் ஓர் உருவகம். நாங்கள் பழைய ஆட்கள் தான், ஆனால் இன்ஜின் இன்னும் பவர்ஃபுல் என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

நமக்கும் எப்போதுமே பழைய விஷயங்கள் மீது ஒரு தீராத கிராவிட்டி உண்டு. கமல் – ரஜினியின் நினைத்தாலே இனிக்கும் அப்படிப்பட்ட ஒன்று. அப்படிப்பட்ட ஒன்றாகவும் இப்படம் இருக்கலாம்.

ஒரு தலையாவது உருளாமல் நெல்சன் படமா என்றால் அதற்கான அறிகுறி எதுவும் இந்தப் ப்ரோமோவில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால் லைட் ஹார்ட் உள்ளவர்களுக்கும் ஏற்றதாக இப்படம் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

ஒருவேளை ஹீரோ – வில்லன் மேஜிக் வேண்டும் எனறு நினைத்தால் அந்த வில்லன் பேக்கேஜக்கு இது எப்படி இருக்கு ரஜினியை அடித்துக் கொள்ள ஆளில்லை.

கமல் வண்டியை எடுக்கிறார், ரஜினி ஆசுவாசமாக அமர்ந்திருக்கிறார். அதனால் ரஜினிக்கு இணையான இன்னொரு ஹீரோவாகவும் கமல் இருக்கலாம். கமல் பெயர் முன்னதாகவும், ரஜினி பெயர் அடுத்தாகவும் இருப்பதால் கமலுக்கு இணையான ஹீரோவாக ரஜினியும் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து விட மாட்டார்கள் என்பது அவர்கள் ப்ரோமோவில் செய்யும் மேக்கப்பிலேயே தெரிகிறது.

அப்புறம் அந்தப் ப்ரோமோவில் ரஜினியும் கமலும் முன்னால் அமர்ந்திருக்க, நெல்சனும் அனிருத்தும் பின்னால் அமர்ந்திருக்க கார் ஜெட் வேகத்தில் புறப்படுகிறது. இவர்கள் இருவரும் காட்டும் வழியில்தான் நெல்சனும் அனிருத்தும் படத்தை இயக்கவும் இசைக்கவும் முடியும் என்பதற்கான படிமமோ என்னவோ அது.

இவையெல்லாம் டீகோட்கள்தான். படம் வெளிவந்தால்தான் மற்றவை தெரியும். அதுவரை என்ன செய்வது என்பதற்கு ஒரு பார்முலா இருக்கிறது. அது வெயிட் அன்ட் வாட்ச்.

*****

21 Feb 2026

ராஜு முருகனின் மை லார்ட் – ஒரு திரைப் பார்வை!

ராஜு முருகனின் மை லார்ட் – ஒரு திரைப் பார்வை!

கோவில்பட்டி முத்துசிற்பியான சசிகுமாருக்கு ஒரு விசித்திரமான சிக்கல். உயிரோடு இருக்கும்போதே அவர் கையில் டெத் சர்டிபிகேட். மறுபக்கம், ஊர் ஊராக கிட்னி திருடும் கும்பல். விதியின் சதியோ அல்லது திரைக்கதையின் சதியோ ஒரு பெரும்புள்ளியின் உடலுக்கு முத்துசிற்பியின் கிட்னி மட்டும்தான் மேட்ச் ஆகிறது. அப்புறம் துரத்தல், சட்டப் போராட்டம், கொஞ்சம் சென்டிமென்ட். முடிவில் வாய்மையே வெல்லும் மெசேஜ்.

அப்புராணி இமேஜுக்கு சசிகுமார் கச்சிதம். அவரது டெம்ப்ளேட்டான நடிப்பு மற்றும் பானைகளை அவராலேயே தவிர்க்க முடியவில்லை.

கதை நாயகி சைத்ரா ஆச்சார் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். அவரது பயமும் காதலும் கலந்த நடிப்பு ஓர் ஆசம்.

எசக் காத்தா பாடல் ஒரு கரிசல் காட்டு கவிதை. ஷான் ரோல்டன் பின்னணி இசையில் விளையாடியிருக்கிறார்.

அதிகாரத்துக்கு ஏழைகள் வெறும் நம்பர்தான் என்ற ராஜு முருகனின் டயலாக் பாய்ன்ட் நச்.

இடைவேளை வரை பாய்ன்ட் டூ பாய்ன்ட் பஸ்ஸில் இருந்த வேகம், பின்பாதியில் டவுன் பஸ் ரேஞ்சுக்குப் போய் விடுகிறது. லாஜிக் என்கிற வஸ்துவை சில இடங்களில் தேட வேண்டியிருக்கிறது மை லார்ட்.

திரைப்படங்களில் கருத்துச் சொல்லலாம், தப்பில்லை. ஆனால், சினிமா திரையை பிளாக் போர்டு ஆக்கி பாடம் நடத்துவது கொஞ்சம் போர். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளே இப்போது அதையெல்லாம் விரும்புவதில்லை.

சிறுநீரகத் திருட்டு என்கிற ஒரு சீரியஸான மெடிக்கல் க்ரைமைக் காதல், சென்டிமென்ட், சோசியல் மெசேஜ் எனும் எமோஷனல் மசாலாவோடு கலந்து கொடுத்திருக்கிறது இந்த மை லார்ட்.

சில லாஜிக் ஓட்டைகளைத் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால், மை லார்ட் பேசுவது முக்கியமான வாதம்.

மை லார்ட் – கிட்னி, காதல், மெசேஜ் அத்துடன் கொஞ்சம் சமூக எதார்த்தம்.

இந்தப் படத்துக்கு மார்க் என்று பார்த்தால், 10க்கு 6½ . அந்தச் சமூக அக்கறைக்காக அரை மார்க் எக்ஸ்ட்ரா! தட்ஸ் ஆல் யுவர் ஆனர்.

*****

20 Feb 2026

விஜய் – ராஷ்மிகாவின் யாயும் ஞாயும் யார் ஆகியரோ?!

விஜய் – ராஷ்மிகாவின் யாயும் ஞாயும் யார் ஆகியரோ?!

தெலுங்குத் திரையுலகின் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டாவும், கன்னடத்தின் கிரிக் பார்ட்டி ராஷ்மிகா மந்தனாவும் கீதா கோவிந்தம் பாடப் போகிறார்கள்.

இத்தனை காலமாய் இன்ஸ்டாகிராம் பைனரி கோடுகளில் ஒளித்து வைத்திருந்த காதல், இப்போது ஒரு கல்யாணப் பத்திரிகையாக உருமாறி இருக்கிறது. இருவரும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் அரண்மனையில் பிப்ரவரி 26 இல் டும்டும்க்குத் தயாராகி விட்டார்கள்.

இவர்கள் இருவருக்கும் பொருத்தமான ஒரு சங்கப் பாடலைத் தேடினால், சட்டென நினைவுக்கு வருவது குறுந்தொகையின் அந்தப் புகழ்பெற்ற வரிகள்தான்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே

விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் இது அப்படியே பொருந்துகிறது. அவர் ஆந்திரா, இவர் கர்நாடகா. இருவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், சினிமா என்கிற அந்த செம்புலத்தில் விழுந்த மழைத்துளிகளாய் இப்போது ஒன்றாகக் கலந்துவிட்டார்கள்.

இவர்கள் காதல் என்னவோ மாலத்தீவில் மலர்ந்திருக்கலாம், ஆனால் கல்யாணம் என்னவோ ராஜஸ்தானில். அப்படித்தான் நடக்க வேண்டும் என்று இப்போது சினிமா நட்சத்திரங்கள் ஓர் எழுதாத விதியையே வகுத்து வைத்து விட்டார்கள்.

ஒட்டகங்கள், வண்ணமயமான தலைப்பாகைகள், மற்றும் கேசரி பால் மணம் வீசும் அந்த ராஜஸ்தான் வெயிலில், திரை ரசிகர்களின் செல்லமான ரவுடி பாய் ப்ளஸ் அர்ஜுன் ரெட்டி விஜய் தேவரகொண்டா ஷெர்வானி அணிந்து காட்சியளிக்கப் போகிறார். புஷ்பாவில் ஆட்டம் பாட்டம் எனக் கொண்டாட்டம் போட்ட ராஷ்மிகா தன் சாமீ சாமீ ராகத்தை நிஜ வாழ்க்கையில் பாடப்போகிறார்.

விஜய் தேவரகொண்டாவின் அந்தத் திமிர் கலந்த ஸ்டைலும், ராஷ்மிகாவின் அந்த வசீகரச் சிரிப்பும் இணையப் போகும் அந்தத் தருணம், தென்னிந்தியத் திரையுலகின் மிகப்பெரிய கிளைமாக்ஸ். ஆந்திரா மீல்சும் கர்நாடகப் பொன்னியும் கலக்க இருக்கும் கலக்கலான தருணம்.

இத்தனை காலம் நாங்கள் வெறும் நண்பர்கள் என்று இவர்கள் சொல்லி வந்ததெல்லாம், சங்கப் பாடலில் வரும் எவ்வழி அறிதும் என்கிற பாவனைதான். ஆனால் இப்போது பிப்ரவரி 26 இல் அன்புடை நெஞ்சம் ராஜஸ்தான் மணலில் அக்னி சாட்சியாக இணையப் போகிறது.

ராஜஸ்தான் மணலில் அந்த அர்ஜுன் ரெட்டி தன் காதலைக் கனிய வைத்து கல்யாணம் செய்யப் போவதுதான் அன்புடை நெஞ்சம் தாம் கலப்பது. சினிமா திரையில் பார்த்த அதே கெமிஸ்ட்ரி, சங்க இலக்கியப் பாடலின் ஆழத்தோடு நிஜமாகப் போகிறது.

வாழ்க்கையும் கூட ஒரு பெரிய தியேட்டர்தான். இதில் இது ஒர் அழகான சுபம் கார்டு இவர்களின் திருமணம். அந்தச் செம்புலப் பெயல் சிவப்பு நகரமான ராஜஸ்தான் நகரங்களிலும் தெறிக்கிறதே. அந்தச் சங்கப் புலவர் செம்புலப்பெயர் நீரார் எவ்வளவு தீர்க்கதரிசனத்தோடு பாடி விட்டார்! சிவப்பு – சிவப்பு நன்றாகவே பொருந்துகிறது அல்லவா!

அடுத்து விஷால் – தன்ஷிகா திருமணம்தான். அதற்கும் ஒரு பாடல் இருக்கிறது. நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் முடிந்து, திருமணத் தேதி நெருங்கட்டும். அதை எழுதுகிறேன்.

*****

19 Feb 2026

TET தேர்வுக்குத் தயாராவது எப்படி?

TET தேர்வுக்குத் தயாராவது எப்படி?

இனி ஒருவர் ஆசிரியர் ஆக வேண்டுமானால் சரி, பணியில் தொடர்ந்து ஆசிரியராக இருக்க வேண்டுமானாலும் சரி TET என்ற இந்தத் தேர்வை ஹை ஜம்ப் செய்ய வேண்டும். சிவகார்த்திகேயன் டான் படத்தில் செய்ததை டான் என்று டன் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டு விட்டது.

150 கேள்விகள், 180 நிமிடங்கள். சராசரியாகப் பார்த்தால் ஒரு கேள்விக்கு 1.2 நிமிடத்தில் விடையளிக்க வேண்டும். இருந்தாலும் இந்தச் சராசரி ஒரு குத்துமதிப்பிற்காகத்தான். உங்களுக்கு நன்கு விடை தெரிந்த வினாவிற்கு ஒரு நொடியில் விடையளித்து விட்டு, யோசித்து விடை எழுத வேண்டிய கேள்விக்கு இரண்டு நிமிடம் கூட எடுத்துக் கொள்ளலாம்.

இதற்கான  சிலபஸ் என்றால் அது 5 தலைப்புகள்.

முதலில் கல்வி உளவியல். பியாஜேயும், பாவ்லோவும் என்ன சொன்னார்கள் என்று கேட்பார்கள். ஒரு குழந்தையை எப்படிப் பார்க்க வேண்டும்? எப்படி கல்வி கற்பிக்க வேண்டும்? அதற்கான படிநிலைகள் என்ன? அது குறித்துச் செய்யப்பட்டிருக்கும் ஆராய்சிகள் என்ன? என்கிற ரீதியில் நீங்கள் படித்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது தாய்மொழி தமிழ்.

பத்தாம் வகுப்பு வரையுள்ள இலக்கணம், செய்யுள் பகுதிகளில் பலமாக இருக்க வேண்டும். முடிந்தால் பனிரெண்டாம் வகுப்பு வரை கூட பலப்படுத்திக் கொள்ளலாம். உரைநடைகளைக் கொஞ்சம் நுணுக்கமாகப் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பெட்டிச் செய்திகளிலிருந்து நுண்ணோக்கியில் பார்ப்பதைப் போலப் பார்த்தெடுத்து வினாக்களைக் கேட்பார்கள்.

மூன்றாவது சர்வதேச மொழியான ஆங்கிலம். இதற்கு நீங்கள் பத்தாம் வகுப்பு வரையுள்ள புத்தகங்களில் ஒரு உலா போய் விட வேண்டும். டென்ஸ், ஆக்டிவ் பேசிவ் வாய்ஸ், டேரக்ட் இன்டேரக்ட், டிகிரிஸ் ஆப் கம்பேரிசன், ஆர்டிகிள் போன்ற கிராமர் இத்தியாதிகளில் புலமை பெற்று விட வேண்டும். அத்துடன் போயம் வெர்ஷன்களில் சிமிலி, மெடாபர் வகையறாக்களையும், அவற்றை எழுதியவர்களை அடையாளம் காணவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

நான்கும் ஐந்தும் உங்களுக்கான பாடங்கள். டெட் 1 என்றால் எட்டாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பாடங்கள். அதுவே டெட் 2 எனும் போது, நீங்கள் கணிதம் மற்றும் அறிவியல் என்றால் நான்காம் பாடம் கணிதம், ஐந்தாம் பாடம் அறிவியல். சமூக அறிவியல் என்றால் நான்காம் பாடமும், ஐந்தாம் பாடமும் உங்களுக்கு அதுவேதான். இதற்கும் நீங்கள் பத்தாம் வகுப்பு வரையுள்ள பாடப்புத்தகங்களை ஓர் அகழ்வாராய்ச்சியைச் செய்ய வேண்டியிருக்கும். கேள்விகள் அப்படித்தான் புகுந்து புறப்பட்டுக் கண்டுபிடித்து எடுத்திருப்பார்கள்.

இப்படியே இவற்றைப் பார்ப்பதுடன் பழைய வினாத்தாள்களையும் ஒரு ரவுண்ட் அடித்து விடுங்கள். எப்படிக் கேள்வி கேட்கிறார்கள் என்பதற்கு இதுதான் கூகுள் மேப்.

படிக்கும் போது கதைப்புத்தகம் போலப் படிப்பது வேலைக்காகாது. பக்கத்திலேயே ஒரு நோட்டை வைத்துக் கொண்டு குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் குறிப்புகளை அடிக்கடி பார்த்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பலமுறை என்பது முக்கியம். ஒரு முறை பார்த்தால் அது ரேம் மெமரிதான். அது வேலைக்காகாது. பரீட்சை நேரத்தில் காலை வாரி விட்டு விடும். பலமுறை பார்ப்பதுதான் ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் பெர்மினன்ட் மெமரி. அதுதான் பரீட்சையில் கை கொடுக்கும்.

தேர்வை எழுதும் போது நேரம் ஓடிக் கொண்டே இருக்கும். எனவே  தெரியாத கேள்விக்கு ஸ்டெப் எடுத்து, ஸ்டாப் எடுத்து எல்லாம் யோசனை பண்ணாதீர்கள். தெரிந்ததை முடித்துவிட்டு, பிறகு அதற்குத் திரும்புங்கள்.

இந்தத் தேர்வில் நெகட்டிவ் மார்க் கிடையாது என்பது மிகப்பெரிய ப்ளஸ். கல்லா கட்டை போட்டாவது 150 கேள்விகளையும் அட்டெண்ட் பண்ணிவிடுங்கள். ஏதாவது ஒரு ப்ராபபிலிட்டி வேலை செய்யும்!

புதிய புத்தகங்கள், கைடுகள் என்று எதைத் தேடியும் ஓடாதீர்கள். எல்லாம் பத்தாம் வகுப்பு வரையுள்ள தமிழக அரசின் பாடப்புத்தகங்கள்தான். அதுதான் இந்தத் தேர்வுக்கான வேதப்புத்தகங்கள்.

ஆக இதை வெறும் தேர்வாக மட்டும் கருதிக் கொள்ள வேண்டாம். மாணவர்களுக்குப் புரிய வைக்க வேண்டுமென்றால், முதலில் ஆசிரியருக்குப் புரிய வேண்டுமே, அதைச் சோதிப்பதற்கான ஒரு சோதனையாக மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள். என்னால் பத்தாம் வகுப்பு வரையுள்ள எந்தப் பாடக்கருத்தையும் எப்படிப்பட்ட மாணவருக்கும் புரிய வைக்க முடியும் என்றால் நீங்கள் இந்த TET தேர்வைப் பற்றிக் கவலைப்படவே வேண்டாம். ஆம், நீங்கள் நூற்று ஐம்பதுக்கு நூறை அசால்டாகக் கடந்து விடுவீர்கள்.

*****

18 Feb 2026

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026 – ஒரு பார்வை!

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026 – ஒரு பார்வை!

பொதுவாக இடைக்கால பட்ஜெட் என்பது சினிமா இன்டர்வெல் ப்ளாக் மாதிரி. இங்கே வைக்கும் ட்விஸ்ட்தான் இன்டர்வெல் முடிந்து அதே படத்தைப் பார்க்க மக்கள் வருவார்களா, அல்லது வேறு படத்தைப் பார்க்கப் புறப்பட்டு விடுவார்களா என்பதைத் தீர்மானிப்பது.

இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பே திமுக அரசு ஒரு மெகா டிவிஸ்ட்டைக் கொடுத்து விட்டது. அது மகளிர் உரிமைத்தொகையை முன்கூட்டியே வரவு வைத்தது. இனி ஆட்சிக்கு வந்தால் உரிமைத்தொகை மாதந்தோறும் இரண்டாயிரம் என்பதையும் கோடைக்கால சிறப்புத்தொகை என்ற பெயரில் சொல்லாமல் சொல்லி விட்டது.

இதற்கிடையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இடைக்கால பட்ஜெட் என்ன சொல்கிறது?

தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் இந்த இடைக்கால பட்ஜெட்டைப் பார்த்தால், அது ஒரு மல்டி கலர் மேப் மாதிரி இருக்கிறது.

இந்தப் பட்ஜெட்டில் மைனஸ் குறிகள் நிறைய விளையாடுகின்றன. வருவாய்ப் பற்றாக்குறை நிறைய இருக்கிறது, ஆனால் அதைச் சரிகட்ட வளர்ச்சி என்கிற டானிக்கை ஊற்றியிருக்கிறார்கள்.

பழைய சாப்ட்வேருக்கு புதிய அப்டேட் கொடுத்தது போல, ஏற்கனவே இருக்கும் சமூக நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மகளிருக்கான உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் இவற்றுக்கான நிதி வழக்கம் போலத் தொடர்கின்றன.

தமிழகத்தின் கடன் சுமை ஒரு பக்கம் ஏறிக்கொண்டே போகிறது. இது ஒரு கிரெடிட் கார்டு சுழற்சி போன்று தொடர்வதால், வட்டி கட்டவே ஒரு பெரும் தொகையைச் செலவிட வேண்டியிருக்கிறது.

ஒரு பட்ஜெட் என்பது எண்களால் ஆன பெரிய டேட்டா பேஸ். ஆனால், சாமானியனுக்கு அது வெறும் புள்ளிவிவரக் காடு.

வழக்கமாக ஒவ்வொரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போதும் அது அவதார் படம் போலத் தெரிகிறது. ஆனால், அமலுக்கு வரும்போது அது பிளாக் அண்ட் ஒயிட் படமாகிவிடுகிறது.

இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பில் பாலங்கள், மெட்ரோ ரயில் எனத் தமிழகம் ஒரு மெகா சிட்டியாக மாறத் துடிப்பது தெரிகிறது.

கல்வி, மருத்துவத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கல்வி மேம்பாட்டில் பெரிய பாய்ச்சலை நிகழ்த்துவதற்கேற்ப தொழில்நுட்ப கட்டமைப்புகளுக்கு, ஊக்கத்தொகைகளுக்கு அதிக கவனம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த இடைக்கால பட்ஜெட் ஒரு டெமோ வெர்ஷன்தான். தேர்தலுக்குப் பிறகுதான் ஒரிஜினல் வெர்ஷன் ரிலீஸ் ஆகும். அது ஆட்சியைப் பிடிக்கும் கட்சியின் கரங்களில் இருக்கிறது. அப்படி மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பதற்கு ஆளுங்கட்சிக்கு இப்பட்ஜெட் அச்சாரம் போடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

*****

நியாயம், நேர்மை மற்றும் சில துண்டு துணுக்குகள்!

நியாயம், நேர்மை மற்றும் சில துண்டு துணுக்குகள்!

நியாயம் என்பது பல கோடி பக்கங்கள் உள்ள ஓர் அகராதித் தேடல். அது யார் பக்கம் இருக்கிறது என்பதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மில்லியன் டாலர் கேள்வி. என் நியாயம் உனக்கு அநியாயமாகவும், உன் நேர்மை எனக்குப் பிடிவாதமாகவும் தெரிவதில் தான் மனித இனத்தின் சகலமும் அடங்கியிருக்கிறது.

ஒவ்வொரு மண்டைக்குள்ளும் ஒரு குட்டி ஹிட்லர் ஒளிந்து கொண்டிருக்கிறான். தான் நினைப்பதே வேதம், தான் சொல்வதே நியாயம் அவனுக்கு. அவனோடு நீங்கள் தர்க்கம் செய்யப் போனால், உங்கள் ரத்த அழுத்தம்தான் ஏறுமே தவிர, அவன் ஓர் அங்குலம் கூட நகர மாட்டான். வாதம் செய்யச் செய்ய அவன் இன்னும் மூர்க்கமாவான். இறுதியில், சரிதான், நீ சொல்வதே சரி என்று சொல்லிவிட்டு நகர்வதுதான் பிபியைக் குறைக்க எளிய வழி. இதைக் கோழைத்தனம் என்று சொல்ல முடியாது.  இது ஒரு சர்வைவல் டெக்னிக்.

இவர்களை எதிர்க்க முடியாதா? அதற்கு மன வலிமை கிலோ கணக்கில் வேண்டும். கிராம் கணக்கில் இருப்பது பயன் தராது.

அப்படி எதிர்ப்பது என்று முடிவெடுத்துவிட்டால், அதற்கு ஓர் அறிவாற்றல் வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு எதிர்க்கிறேன் என்று கையைத் தூக்கிவிட்டு, பிறகு பின்விளைவுகளைப் பார்த்து பயந்து மன உளைச்சலுக்கு ஆளாவதற்குப் பெயர்தான் பலவீனம்.

அப்படி ஆனால் மனம் ஹேங் ஆன கம்ப்யூட்டர் போல ஆகி விடும்.  ரீ-பூட் செய்ய வழி தெரியாமல் போய் விடும். இதனால் எப்போதும் சோர்ந்து கிடக்கும் ஒரு பயந்த மனதை எதிர்கொள்ள நேரிடும். பயம் என்பது ஓர் இருட்டு அறை. அதில் எதைத் தொட்டாலும் அது பாம்பாகவே தெரியும்.

எதிர்ப்பதைப் போல எதிர்க்காமல் இருப்பதற்கும் பெரிய மன வலிமை வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால்தான் அது சாத்தியம். உங்கள் உணர்ச்சிகளை உங்களுக்கு ஆளத் தெரிந்தால் அதை விட பெரிய வலிமை உலகில் ஏதும் இல்லை.

ஹிட்லர்களை எதிர்த்து அழிக்க வேண்டும் என்பதில்லை. அவர்களாகவே அழிந்து போவார்கள். அவர்களின் சாப்ட்வேர் பேக்கேஜ் அப்படித்தான் டிசைன் பண்ணப் பட்டிருக்கும். அதற்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

ஆக நதியாய் இருங்கள். எதிர்ப்பவர்களைப் பொருட்படுத்தாமல், யாரையும் எதிர்க்காமல் ஓடிக் கொண்டே இருங்கள். வாழ்க்கையில் நிலையான முடிவு என்பதெல்லாம் ஒரு மாயை. எதிர்க்கின்ற முடிவுகளை க்விஸில் பாஸ் பண்ணுவதைப் போலப் பாஸ் பண்ணுங்கள்.

இன்று எடுக்கும் முடிவு நாளை அபத்தமாகத் தோன்றலாம். வாழ்க்கை என்பது நேர்கோடு அல்ல, அது ஒரு வளைந்து நெளிந்து செல்லும் நதி. பாறைகள் வந்தால் மோதாமல் வளைந்து செல்வதே நதியின் புத்திசாலித்தனம். நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும். இதைக் காலத்தின் கட்டாயமாக எடுத்துக் கொண்டாலும் சரிதான், வாழ்க்கையின் கட்டாயமாக எடுத்துக் கொண்டாலும் சரிதான். அது உங்கள் விருப்பம்.

*****