29 Jan 2026

கட்டம் கட்டப்படுகிறதா தவெக?

கட்டம் கட்டப்படுகிறதா தவெக?

இந்தக் கேள்விக்குச் சுற்றி வளைத்தெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நேரடியாகவே, ஆம் என்று சொல்லி விடலாம்.

இந்தக் கட்டம் என்பது ஜாதக கட்டம் போன்றதல்ல, ஆனால் சதுரங்கக் கட்டங்களைப் போன்றது. சுற்றி வளைத்து விட்டால் ராஜாவின் கதி அதோ கதிதான்.

தன்னைச் சுற்றி வளைத்து விடாமல் வியூகத்தை வகுத்துக் கொள்ள வேண்டியது விஜய்யிடம்தான் இருக்கிறது, விஜய்யிடம் மட்டும்தான் இருக்கிறது. ஏனென்றால் அந்தக் கட்சிக்கு இருக்கும் ஒரே முகம் அவர்தான். அவர் இல்லையென்றால் அந்தக் கட்சியில்லை. அதனால் விஜய்யின் தற்போதைய நிலை என்பது சதுரங்க விளையாட்டின் ராஜாவோடு மிகச் சரியாக ஒன்றிப் போகும்.

அத்துடன் இது ஒரு பைனரி விளையாட்டு போன்றும் உள்ளது. பைனரியில் பூஜ்ஜியமும் ஒன்றும் மட்டும் உள்ளது. இந்த விளையாட்டில் அவருக்கு இரண்டு சாய்ஸ்தான். ஒன்று பூஜ்ஜியம், மற்றொன்று அந்த ஒன்றுதான். பூஜ்ஜியம் என்றால் காலி, ஒன்று என்றால் தப்பித்தார் என்று பொருள்.

அரசியலில் என்ட்ரி கொடுக்கும் போதே, அது யாராக இருந்தாலும் இந்தக் கட்டம் கட்டுதல் ஆரம்பமாகி விடும். விஜய்க்கு அது சற்று தாமதமாகத்தான் ஆரம்பமாகி இருக்கிறது. அதுவும் கரூர் சம்பவம் நடந்த பல வாரங்களுக்குப் பின்பு.

ஏதோ ஒரு பக்கம் பிடி கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் பாஜகவும், அதிமுகவும் கட்டம் கட்டுவதைத் தொடங்காமலே இருந்தன. இப்போது விஜய் தனித்து போட்டியிடப் போகிறார் என்பது தெரிந்ததும் அதிமுக முகாமிலிருந்து கட்டங்கள் பட்டங்களைப் போல பறந்து வரத் தொடங்கி விட்டன. பாஜகவும் பின்னணியில் இப்போது இணைந்து கொண்டு விட்டது. ‘தற்குறி’ என்ற சொற்பிரயோகத்துடன் பிள்ளையார் சுழி போட்டு வைத்துள்ள திமுகவும் விரைவில் கட்டம் கட்டுவதைத் தீவிரமாகத் தொடங்கும்.

கட்சி தொடங்கி இதுவரை காட்டமான விமர்சனங்களை எதிர்கொள்ளாத விஜய் முதன் முறையாக, ப்ளாக்கில் டிக்கெட்டை விற்று படம் காட்டுவது ஊழல் இல்லையா என்ற அதிமுகவின் ஏவுகணை தாக்குதலை எதிர்கொண்டிருக்கிறார். இது தொடக்கம்தான். தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பலவிதமாக வார்த்தைகளால் கட்டம் கட்டப்படுவார் விஜய். இதைத் தவிர சிபிஐ கட்டிக் கொண்டிருக்கும் கட்டங்களும் இருக்கின்றன.

தேர்தல் முடிவுகளுக்குப் பின் விஜய்யின் கட்டத்துக்குள் நிகழப் போவது சனிப்பெயர்ச்சியா, குரு பெயர்ச்சியா என்பதும் போகப் போகத்தான் புரியும்.

இக்கட்டங்களை கியூஆர் கோட் கட்டங்களாக மாற்றி எதிர்கொள்வதும், செக்கில் மாட்டிக் கொள்ளும் சதுரங்கத்தின் கட்டங்களாக எதிர்கொள்வதும் விஜய்யின் சாதுர்யத்தில்தான் இருக்கிறது.

சாதுர்யம் இல்லாமல் அரசியலில் சாதிக்க முடியாது என்பதால், கட்டங்களை எல்லாம் விஜய் சாதுர்யத்தால் எப்படிச் சாதிக்கப் போகிறார் என்பதை விசிலடித்துப் பார்க்க மொத்த தமிழ்நாடே தயார். ஸோ, டிரெய்லர் முடிந்து விட்டது. ரீல் இல்லாத விஜய்யின் ரியலான புல் மூவிக்கு ரெடியாகலாம்.

*****

28 Jan 2026

வேகமெடுக்கும் மஞ்சள் காய்ச்சல்! – ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

வேகமெடுக்கும் மஞ்சள் காய்ச்சல்! – ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

ஒரு சவரன் லட்சம் ரூபாய் என்றால்…

 உண்மையில் விலை அதை விட இன்னும் இருபதாயிரம் அதிகம், செய்கூலி, சேதாரம் பார்த்தால் அரை லட்சம் அதிகம். ஒன்றரை லட்சம் இல்லாமல் ஒரு சவரன் சாத்தியமில்லை.

நிலைமை இப்படியே போனால், சாதாரண மனிதர்கள் கல்யாணம் என்றால் ஒன்று வீட்டை விற்க வேண்டும், அது இல்லாதவர்கள் கிட்னியைத்தான் விற்க வேண்டும்.

தங்கத்தை இப்படி விலையேற்றி வைத்ததில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவர் பண்ணும் அலப்பரைகள் சூனா பானா வடிவேலு ரகம்தான் என்றாலும், நாட்டில் உள்ள சாமன்யர்களுக்கு மஞ்சள் காய்ச்சல் எடுக்க காரணமே அவர்தான்.

சரிதான் போ, என்று தங்கத்தை விட்டு விட்டு வெள்ளியின் பக்கம் தலை வைக்கலாம் என்றால் அதன் விலையும் தலையை வெடிக்கச் செய்து விடும் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது.

வெள்ளி போகிற போக்கைப் பார்த்தால் பிளாட்டினம், வைரமெல்லாம் விரைவில் காலியாகி அந்த இடத்தில் வெள்ளி இருக்கும் போலிருக்கிறது.

இந்த மஞ்சள் காய்ச்சலுக்கு என்னதான் தீர்வு?

தீர்வு வேண்டும் என்பதற்காக பெட்ரமாஸ் லைட்டேதான் வேண்டும் என்று அடம் பிடிக்காமல், பித்தளையும் மஞ்சளாக இருப்பதால் பித்தளை நகைகளுக்கு மாறி விட முடியுமா?

இரும்பில் நகைகள் செய்து அவற்றுக்கு மஞ்சள் நிறத்தைத்தான் அடித்துக் கொள்ள முடியுமா?

தேவைப்படும் போது மட்டும் தங்க நகைகளை வாடகைக்கு எடுத்துதான் அணிந்து கொள்ள முடியுமா?

இருபத்து இரண்டோ, இருபத்து நான்கோ அந்தக் கேரட்டை விலை கொடுத்து வாங்க முடியாமல், 22 காரட் அல்லது 24 காரட்டை காய்கறிக் கடையிலிருந்து வாங்கிதான் வைத்துக் கொள்ள முடியுமா?

கடவுள் இருக்கான் குமாரு என்று கவரிங் நகையே போதும் என்று இருந்து விட முடியுமா?

இலக்கியங்கள் சொல்கின்றன என்பதற்காக அறிவுதான் செல்வம், தங்கமல்ல என்று ஒரு பிடிப்போடு வாழ்ந்து விட முடியுமா?

நாம் எதார்த்தத்தைப் பார்க்க வேண்டும்.

தங்கம் விலையேறுவது என்பது தங்கத்தை வாங்க முடியாத பிரச்சனையை மட்டும் உருவாக்காது. வாங்கி வைத்திருக்கும் தங்கத்தைப் பாதுகாப்பதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒரு பவுன் தங்க நகையை அணிந்து கொண்டு பாதுகாப்பாக வீடு திரும்பினால்தான் நீங்கள் சுதந்திர இந்தியாவில் வசிக்கிறீர்கள் என்ற நிலை ஏற்படாது என்று சொல்லி விட முடியாது.

இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் எல்லாவற்றின் விலைவாசியையும் ஏற்றும் வகையில் பணவீக்கத்தை வீங்க வைத்து ரூபாய் மதிப்பை பலவீனப்படுத்த வேண்டியிருக்கும்.

அப்படிச் செய்தால் நூறு ரூபாய் நோட்டு பத்து ரூபாய் நோட்டுக்குச் சமானமாக வந்து விடும். ஐநூறு ரூபாய் நோட்டு ஐம்பது ரூபாய் நோட்டுக்குச் சமானமாக வந்து விடும். நிலைமை இப்போதே இப்படித்தான் இருக்கிறது என்றால், நூறு ரூபாய் நோட்டை ஒரு ரூபாய்க்கும், ஐநூறு ரூபாய் நோட்டை ஐந்து ரூபாய்க்கும் மாற்றிக் கொள்ளுங்கள்.

ஆக, நிலைமை இப்படியோ போனால் நீங்கள் லட்சங்களில் சம்பளம் வாங்கலாம். ஆனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை கோடியைத் தொட்டிருக்கும்.

இந்த மஞ்சள் காய்ச்சலுக்குத் தடுப்பூசி இல்லையா என்றால்… நிச்சயம் இல்லை. அதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. இதென்ன கொரோனாவா? தடுப்பூசியெல்லாம் கண்டுபிடித்துக் கட்டுப்படுத்த என்று நீங்கள் கேட்டால் யூ ஆர் பெர்பெக்ட்லி ஆல்ரைட். உங்களுக்கு மஞ்சள் காய்ச்சல் அடிக்க வாய்ப்பில்லை.

*****

டிடிவி தினகரன் சைலண்ட் மோடா? வைப்ரேஷன் மோடா?

டிடிவி தினகரன் சைலண்ட் மோடா? வைப்ரேஷன் மோடா?

தேர்தலில் நிற்கப்போவதில்லை என்ற அறிவிப்பு எப்போதும் ஆபத்தானது. அரசியலைப் பொருத்த வரை பதவி இருக்கும் வரைதான் மதிப்பு. இந்நிலையில் டிடிவி தினகரன் வரும் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதை எப்படிப் பார்ப்பது?

இப்போது விசில் சின்னம் தவெகவின் விஜய் கட்சிக்குச் சென்று விட்டாலும், ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் நின்ற போது அவர் அடித்த குக்கர் விசில் அகில உலக அளவில் பிரபலம். அப்படிப்பட்டவர் இப்படி சைலன்ட மோடிற்குப் போவது, மோடிக்கும் எடப்பாடிக்கும் உகந்ததாக இருக்கலாம், அவருக்கு உகந்ததாக இருக்காது.

தம்முடைய தொண்டர்கள் பதவியிலும் அதிகாரத்திலும் அமர வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை என்பதாக அவர் குறிப்பிடுகிறார். ஆனால் தளபதி போருக்குப் போகாமல் தொண்டர்களை அனுப்பி விட்டு அவர்களை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கினால், அது டெக்னாலஜிக்கு ஒத்து வரும், அரசியலுக்கு ஒத்து வருமா என்ன?

அரசியல் சூழ்ச்சிகள் நிறைந்தது என்ற ஒரு காரணத்தையும் முன்வைக்கிறார் டிடிவி தினகரன். அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்று சாதாரண பொதுஜனத்துக்கே தெரியும் என்பதால் அவரது இந்த நிலை அரசியலில் அவர் ஒரு தெவிட்டிய நிலைக்குப் போய் விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாகத்தான் உள்ளது.

தேர்தலைத் தவிர்ப்பவர்களைப் பொதுமக்களும் சரி, கட்சியினரும் சரி ரீசைக்கிள் பின்னுக்குத் தள்ளி விடுவதைப் போல பார்வையாளர்களின் வரிசைக்குத் தள்ளி விடுவார்கள். இது தலைவர் மோடில் இருக்க விரும்புவர்களுக்குக் கொஞ்சம் கூட செட் ஆகாது. இந்த அபாயத்தை டிடிவி தினகரன் அறிந்துதான் மற்றும் உணர்ந்துதான் இந்த முடிவை எடுத்திருக்கிறாரா என்பதற்கான பதில் அவர் மட்டுமே அறிந்த ரகசியம். இப்படி ஒரு முடிவின் பின் என்னவொரு வியூகத்தை வைத்திருக்கிறார் என்பதும் அவருக்கே வெளிச்சம்.

செல்போனைச் சைலண்ட் மோடில் போட்டு அப்படியே வைப்ரேஷன் மோடில் போட முடியும். அப்படி அவரது இந்தச் சைலண்ட் மோட் அவருக்கு அமைந்தால் அவருக்கு நன்றாக இருக்கும். அப்படி அமைவது அரசியலில் 99.9 சதவீதம் சாத்தியமில்லாதது. ஏனென்றால் அவரே சொன்னபடி அரசியல் சூழ்ச்சிகள் நிறைந்தது. அதில் வீழ்ச்சிகள் இல்லாமல் காத்துக் கொள்வதற்கான முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது ஓர் அரசியல்வாதிக்கு அவசியம்.

*****

27 Jan 2026

2026 போலிடிக்கல் அல்காரிதம்

2026 தேர்தலும் கூட்டணிகளும்

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனை போட்டி என்பது ஒரு வழியாக உறுதியாகிருக்கிறது.

பிரதானப் போட்டி என்பது திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேதான் என்றாலும், விசிலடித்துக் கொண்டு என்ட்ரி கொடுத்திருக்கும் விஜய்யின் தவெகவை இப்போதைக்குத் தேர்தல் முடிவுகள் வரும் வரை டெலிட் செய்யவும் முடியாது, அதை ஒரு பெண்டிங் பைலுக்குத் தள்ளி வைத்துக் குறைத்து மதிப்பிடவும் முடியாது. சீமானின் நாம் தமிழர் கட்சியும் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீத வாக்குகளைப் பெறும் கட்சியாக இருப்பதால் இந்த முறை அது எந்தக் கூட்டணிக்குப் பாதகமாக இருந்து கோட்டையைப் பிடிக்க விடாமல், டேட்டாவைக் காலி செய்யும் என்பதையும் நோக்க வேண்டும்.

இந்த முறைக் கோட்டையில் உதிக்கப் போவது உதய சூரியனா? அல்லது கோட்டையில் மலரப் போவது இரட்டை இலையுடன் கூடிய தாமரையா? என்று தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கான பதிலை லீனியராகத் தேடிக் கண்டடைய முடியாது. தேர்தல் முடிவுகள் எப்போதும் நான் லீனியர் மோட்தான்.

திமுக – அதிமுக கூற்றுகளின்படி பார்த்தால் வெல்லப் போவது திராவிட மாடலா அல்லது இரட்டை இன்ஜினா? மே மாதத்தில் தேர்தல் நடைபெறப் போகிறது என்பதால் இந்தக் கேள்விக்கான பதில் என்பது மே மாதக் கோடையை விட சுட்டெரிக்கும் ஒன்றுதான்.

திமுக தாங்கள் செய்த சாதனைகளைப் பாருங்கள் என்கிறார்கள். அதிமுகவும் – பாஜகவும் குடும் ஆட்சியை ஒழிப்போம் என்கிறார்கள். இரண்டுமே சரியில்லை, நாங்கள்தான் மாற்று என்கிறார்கள் தவெகவினர். தாங்கள் தனிமரம் என்றாலும் தோப்பு என்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

திமுக பக்கம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக என்று பழைய கூட்டணி. இது அவர்களுக்குப் பழக்கப்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டம்.

அதிமுக பக்கம் பாஜக, அன்புமணி பாமக மற்றும் கூடுதலாகத் தினகரன் என்று கூடுதல் பலம் பொருந்திய புதிய கணக்கிற்கான கூட்டணி. இதில் தினகரனால் ஒரு அப்கிரேட் நடந்திருக்கிறது.

தேமுதிக எந்தப் பக்கம் சேரும் என்பது பரமபதத்தைக் கணிப்பது போலத்தான். எங்கே ஏணி இருக்கும், எங்கே பாம்பு கொத்தும் என்பதெல்லாம் தெரியாது.

இராமாதாஸின் பாமக எந்தப் பக்கம் என்பதற்கு அநேகமாக அது திமுகவின் பக்கம்தான் என்பதற்கான வெளிச்சக் கீற்றுத் தெரிகிறது. இது உண்மையான வெளிச்சக் கீற்றா, கிரகணக் கீற்றா என்பதும் போகப் போகத்தான் தெரியும்.

ஓ பன்னீர்செல்வம் என்ன முடிவெடுக்கப் போகிறார்? இப்போது முடிவாகியிருக்கும் கூட்டணியிலிருந்து யாரேனும் பிய்த்துக் கொண்டு போவார்களா? என்பதெல்லாம் தேர்தல் நெருங்கும் வரையில் விடை காண முடியாத பெர்முடா முக்கோணப் புதிர்.

இதற்கும் மேலாக ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் ஸ்லீப்பர் செல்களை மற்றக் கட்சிகளில் களம் இறக்கியிருப்பதாகக் கதை அளந்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் கதை உண்மையானால் தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் திசை திரும்பலாம்.

இதற்கிடையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டங்கள் ஆளும் கட்சிக்கு சாரிடான் போடும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் வாக்குகள் பல்டி அடித்தால் என்னவாகும் என்பதும் தலையா? பூவா? கதைதான்.

இதைத் தாண்டி தேர்தல் நேரத்தில் மக்களின் மனநிலை என்பது  இங்கி, பாங்கி நிலையிலேயே இருக்கும். அவர்களது விரல்கள் எந்தப் பொத்தானையும் அழுத்தலாம். அதற்கான உரிமையும், சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கிறது. அந்த பாஸ்வேர்டைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமானதல்ல.

இப்போது தேர்தல் களத்தை நோக்கி ஒவ்வொரு கட்சியின் கூட்டணிகளும் லோடிங் ஆகிக் கொண்டிருக்கின்றன. இந்த லோடிங்கை வைத்து எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும், எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியாமல் அன்லோடிங் ஆகும் என்பது தேர்தல் முடிவு வரும் வரை கணிப்பது சிரமம்தான்.

கூட்டணிக் கணக்குகள் கச்சிதமாக அமைந்து, மக்கள் மனநிலையும் அதற்குத் தோதாக இருந்து, வாக்குறுதிகள் அவர்களுக்குப் பிடித்துப் போய் விட்டால் 200 சீட்டுகள் என்ற டபுள் செஞ்சுரி கூட அடிப்பதற்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பு இருக்கிறது. அந்தக் கச்சிதமான மசாலாவைக் கிண்டுவது சாதாரணமல்ல. சரியாகக் கிண்டினால் மணமணக்கும் மசாலா, கொஞ்சம் பதம் தப்பினால் கருக்கல் வாடையைத் தரும் என்பதால், கொஞ்சம் கவனமாகவேப் போட வேண்டிய கணக்குக் கூட்டணிக் கணக்கும், வாக்குறுதி வழக்கும்.

பொறுத்திருந்து பார்பபோம் எந்தக் கட்சியின் கூட்டணிக் கணக்கு டபுள் செஞ்சுரி அடிக்கிறது, எந்தக் கட்சியின் கூட்டணிக் கணக்கு டக் அவுட் ஆகிறது என்று.

*****

26 Jan 2026

நாமும் நம் பண்டிகைகளும்!

நாமும் நம் பண்டிகைகளும்!

குழந்தைகளுக்கு எப்போதும் பண்டிகைகள் குதூகலமாக இருக்கின்றன. பெரியவர்களுக்கு பொதுவாகப் பண்டிகைகள் அப்படி இருப்பதில்லை. அவர்களுக்கு அது பொறுப்புகள் நிறைந்த ஒன்று. ஒரு சுமையைப் போன்றது. வழக்கமான நாட்களில் சுமக்கக் கூடிய சுமையை விட கூடுதல் சுமையைச் சுமக்க வேண்டிய நாள் அது.

பள்ளிகளுக்கு விடுமுறைகள் விடுபடுகின்ற ஒரு காரணமே குழந்தைகளைப் பண்டிகைகள் வசீகரித்து விடுகின்றன. அத்துடன் புத்தாடைகள், தின்பண்டங்கள், கேளிக்கைகள் என்று பண்டிகைகள் குழந்தைகளை வசியம் செய்து விடுகின்றன.

பண்டிகைகளுக்கான ஏக்கம் முடியும் போது ஒருவருக்குக் குழந்தைதைத் தன்மையும் முடிந்து விடுகிறது.

பணக்காரர்களுக்குப் பண்டிகைகள் வழக்கமான ஒரு நாளாக இருக்கலாம். காரணம் அவர்களுக்கு இருக்கும் பண வசதிகள் காரணமாக அவர்களுக்கு எல்லா நாட்களுமே புத்தாடைகளை அணிந்து கொள்ளலாம். தினம் தினம் விதவிதமான தின்பண்டங்களை வாங்கித் தின்னலாம். அவர்களுக்கு இருக்கும் பண வசதி அவர்களுக்குத் தினம் தினம் புதுப்புதுக் கேளிக்கைகளைத் தேட வாய்ப்பாக இருக்கலாம்.

ஏழைகளுக்குப் பொருளாதாரச் சுமைகள் இருந்தாலும் பண்டிகை நாட்கள் அற்புதமானவைதான். அவர்கள் அன்றைய பலகாரங்களை ரசித்து ருசித்து உண்கின்றனர். அன்று வாங்கி வைத்திருக்கும் புத்தாடைகளை மகிழ்ச்சி பொங்கி அணிந்து கொள்கின்றனர். அன்றொரு நாளின் விடுமுறையில் சொர்க்கத்தைக் காண்கின்றனர்.

நடுத்தர வர்க்கத்தினருக்குப் பண்டிகையானது கடன் சுமையை ஏற்படுத்தினாலும் அது அவர்களுக்கு மனத்தளர்வைத் தருகிறது.

பெண்களுக்கு வழக்கமான நாட்களை விட பண்டிகை நாட்கள் சுமையானவை. அவர்கள்தான் வீட்டில் உள்ள அனைவருக்கும் அன்றும் உணவுப் பண்டங்களையும் பலகாரங்களையும் தயார் செய்ய வேண்டியிருக்கிறது. வீட்டைத் தூய்மை செய்ய  வேண்டியதாக இருக்கிறது. அனைவரையும் உபசரித்து அவர்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டியதாக இருக்கிறது. அவர்கள் பண்டிகையின் மனநிலைக்கு வரும் போது அன்றைய பொழுது முடிந்து விட்டிருக்கும். இந்திய மனநிலையின் சாராம்சம் இது. பண்டிகைக் கால வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும் தன்மை பெரும்பாலான ஆண்களுக்கு இருக்காது. அவர்கள் பெரும்பாலும் பண்டிகை தினத்தைக் கொண்டாடி விட்டு படுத்து உறங்கி விடுவதிலோ அல்லது மது அருந்தி விட்டு மட்டையாகி விடுவதிலோ கழித்து விடுகின்றனர்.

கோமதிநாயகம் சென்னையில் இருப்பவர். தீபாவளி, பொங்கல் என்றால் ஊருக்கு வருபவர். அதுவும் தொடர்வண்டியிலோ, பேருந்திலோ உட்கார இடம் கிடைக்காமல் கூட்டத்தில் தொத்திக் கொண்டு வருபவர். இதில் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் ஊருக்கு வருவது மட்டும் நிற்காது.

ஏன் அண்ணே இவ்வளவு சிரமப்பட்டு வர வேண்டுமா என்றால், பொங்கல், தீபாவளிக்குக் கூட வரவில்லை என்றால் அப்புறம் எப்படி என்பார். விடுமுறையின் இரண்டு தினங்களோ, மூன்று தினங்களோ ஊர் முழுவதையும் ஒரு சுற்று சுற்றி வந்து விடுவார். உறவுகளையும் நட்புகளையும் விசாரித்து விடுவார். ஒவ்வொராண்டும் வாழ்வதே இப்படி பண்டிகை நாட்களில் உங்களை எல்லாம் வந்து பார்க்க முடிகிறதே என்பதில்தான் என்பார்.

*****

25 Jan 2026

டிஜிட்டல் திருடர்களும் சைபர் மடையர்களும்!

டிஜிட்டல் திருடர்களும் சைபர் மடையர்களும்!

இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்திருக்கும். இந்தியாவே அலறிக் கொண்டிருக்கும் கீழே உள்ள நான்குமே டிஜிட்டல் டகால்டிகள்.

1) ஆதார் எண்ணைச் சொல்லி போதைப் பொருளுக்குப் பொறுப்பாக்குவது!

2) வீடியோ காலில் அழைத்து டிஜிட்டல் கைது செய்வது!

3) உங்கள் பிள்ளைகளின் குரலில் பேசி பணம் அனுப்பச் சொல்வது!

4) பகுதி நேர வேலை கோடீஸ்வரன் ஆகலாம் என தில்லாங்கடி பண்ணுவது!

இந்த நான்குமே டிஜிட்டல் கத்திகள். பதம் பார்த்தால் ரத்தமாக வராது. ஆனால் பணம் சுத்தமாகப் போய் விடும்.

இந்த நான்கு கத்திகளும் எப்படி வீசப்படுகின்றன? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

முதல் கத்தி இப்படி வீசப்படுகிறது.

“உங்கள் முகவரிக்கு ஒரு போதைப்பொருள் பொட்டலம் வந்திருக்கிறது. உங்கள் ஆதார் எண் இதுதானே?” – இதுதான் ஆதார் அட்டையில் ஒளிந்து இருக்கும் போதைப் பொருள். உங்கள் ஆதார் எண்ணை ஜாதக சுத்தமாகப் பிரித்து மேய்வதெல்லாம் இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு பெரிய விசயமே இல்லை எனும் போது, உங்கள் ஆதார் எண் யாருக்கோ தெரிந்திருப்பதைக் கண்டு நீங்கள் வியப்படையவே வேண்டியதில்லை. இப்படி ஓர் அழைப்பு வந்தால், “நானே வெத்தலைக்குப் புகையிலை இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன். சீக்கிரமே அதை அனுப்பித் தொலையுங்கடா டுபுக்குகளா!” என்று தெனாவெட்டாகவே பேசலாம். ஒருவேளை இதை கேட்டு நீங்கள் நடுங்கினால், நீங்கள் இதுவரை சேர்த்து வைத்த பணத்துக்கு டெங்கு காய்ச்சல் எடுப்பதை யாராலும் தடுக்க முடியாது.

இரண்டாவது கத்தி இப்படி வீசப்படுகிறது.

உங்களை ஸ்கைப் அல்லது வாட்ஸ்அப் அழைப்பில் வரச் சொல்வார்கள். உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்து விட்டதாக மிரட்டுவார்கள். அதற்கு அடிபணிந்தீர்கள் என்றால், தவித்த வாய்க்குச் சாக்கடைத் தண்ணீர் கூட கிடைக்காது. கதற கதற கோவணம் வரை உருவி விட்டுதான் அனுப்புவார்கள். அதன் பின் சிக்குன்குன்யாவை விட மோசமான காய்ச்சல் வந்து நீங்கள் அவதிப்பட வேண்டியிருக்கும்.

மூன்றாவது கத்தி இப்படி வீசப்படுகிறது.

“அப்பா நான்தான் பேசுறேன். ஆக்சிடென்ட் ஆயிடுச்சுப்பா! அர்ஜெண்டா ஐம்பதாயிரம் பணத்தை இந்த லிங்குக்கு அனுப்புங்க. இல்லன்னா இப்போதைக்கு ஆபரேஷன் பண்ண மாட்டாங்க!”

பேசியது யார்? சாட்சாத் உங்கள் பிள்ளையின் குரல்தான், ஆனால் உங்கள் பிள்ளையில்லை எனும் நான் அவனில்லை பாணி இது. பேசியது பிள்ளையின் குரல் இல்லையென்றால், யார் குரல் இது? செயற்கை நுண்ணறிவின் குரல். உங்கள் பிள்ளையின் குரல் எப்படி செயற்கை நுண்ணறிவு டிஜிட்டல் திருடர்களின் கைகளுக்குப் போனது? எல்லாம் உங்கள் பிள்ளையின் சோசியல் மீடியா திருவிளையாடல்கள்தான். அதற்கு நீங்கள் அவரது முகநூல், இன்ஸ்டாகிராமில் எத்தனை பதிவுகள் போட்டுள்ளார் என்பதை புலனாய்வு செய்ய வேண்டும். என்ன இப்படியெல்லாமா செய்வார்கள் என்றால், எப்படியும் செய்வார்கள். இணைப்பில் போய் பணத்தை அனுப்பினால், மீண்டும் அனுப்பிய பணத்துக்குப் பிணைப்பே கிடைக்காது. அதன் பிறகு அந்தப் பணம் பாளையத்து அம்மன் உண்டியலில் விழுந்த கதைதான். திடீரென ஏற்படும் டயேரியாவுக்கு நீங்கள் சிகிச்சை செய்து கொள்ள வேண்டியதுதான்.

நான்காவது கத்தி இப்படி வீசப்படுகிறது.

தினம் ஒரு மணி நேரம் வேலை செய்தால் பத்தாயிரம் சம்பாதிக்கலாம். அதுவே இருபத்து நான்கு மணி நேரம் வேலை செய்தால் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம். கேட்கவே பிரமிப்பாக இருக்கும் இச்செய்திகள் உங்களுக்கு வாட்ஸ்ஆப்பிலோ, டெலிகிராமிலோ, குறுஞ்செய்தியாகவோ வரலாம். இனியென்ன முழு நேர வேலை, இனி பகுதி நேர வேலையோ போதும் என்று களத்தில் இறங்கினால், நீங்கள் அதன் பின் கண்ணீர் குளத்தில் குளிக்க வேண்டியதுதான். முதலில் முன்பணம் என ஐநூறும், ஆயிரமும் அனுப்பச் சொல்லி, அதை நீங்கள் பார்த்த வேலைக்கான ஊதியம் என இரட்டிப்பாகத் தருவார்கள். அதுவே பத்தாயிரம், லட்சம் என ஆகும்போது போட்ட பணம் பணால் ஆகி விடும். பிறகு நீங்கள் என்ன முயற்சித்தாலும் அவர்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் போவதை அமெரிக்காவின் நாசாவே நினைத்தாலும் தடுக்க முடியாது. பிறகு நீங்கள் இதை மனஉறுதியோடு தாங்கிக் கொள்வதோ, தாங்கிக் கொள்ள முடியாமல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவதோ உங்கள் கையில்தான் இருக்கிறது.

இந்தக் கத்திகளை எப்படி எதிர்கொள்வது என்கிறீர்களா? அதற்கும் நான்கு தங்க விதிகள் இருக்கின்றன.

முதல் தங்க விதி என்னவென்றால், பதற்றப்படாமல் இருப்பது. எந்த காவல் அதிகாரியும் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய முடியாது. சட்டத்தில் அதற்கான இடமே இல்லை. ஆகவே, வீடியோ அழைப்பில் வரச் சொன்னால், கேமராவை ஆன் பண்ணி விடாமல், முதலில் மூளையை ஆன் பண்ணுங்கள்.

இரண்டாவது தங்க விதி என்னவென்றால், எந்த அழைப்பு வந்தாலும், அதை அப்படியே நம்பி விடாமல், அதை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் பிள்ளையின் குரலே என்றாலும், அவர் எண்ணுக்கு அழைத்து விசாரியுங்கள். அது உங்கள் பிள்ளையின் குரலைச் செரித்த சாப்ட்வேர் குரல் என்பதால், உங்கள் பிள்ளை அப்போது பாப்கார்ன் தின்று கொண்டு அதைச் செரித்துக் கொண்டிருப்பார். உண்மை உங்களுக்கு விளங்கி விடும். உங்கள் பணத்துக்கும் பாதுகாப்பு கிடைத்து விடும்.

மூன்றாவது தங்க விதி என்னவென்றால் யார் கேட்டாலும், அது உங்கள் உயிருக்கு உயிரான மனைவியே கேட்டாலும் கடவுச்சொல், ரகசிய எண்களை (ஓடிபி நம்பர்) சொல்லி விடாதீர்கள். ஆம், உங்களை அடித்துக் கேட்டாலும் சொல்லி விடாதீர்கள். அத்துடன் லிங்குகளைக் கிளிக்க சொன்னால் கிளிக்காதீர்கள். விஷப்பாம்பு இருக்கும் புற்றுக்குள் கைவிட்டுச் சாகசம் செய்வதைப் போன்றவை அவை. இந்த டிஜிட்டல் யுகத்தில் பணத்தை விட பாஸ்வேர்டையும், ஓடிபி நம்பரையும்தான் மனதில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நான்காவது தங்க விதி என்னவென்றால், நீங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால் தயங்காமல் 1930க்கு அழையுங்கள். அதுதான் அப்போதைய உங்கள் நிலைக்கான அவசரகால ஆம்புலன்ஸ்.

இதைத் தவிர, இந்த டிஜிட்டல் திருடர்கள் மத்தியில் நாம் சைபர் மடையர்களாக ஆகாமல் இருப்பதற்கு வேறு வழிகள் இருந்தால் சொல்லுங்கள். படிப்பவர்களுக்குப் பயன்படட்டும்.

*****

24 Jan 2026

ஊதப்போவது வெற்றி ‘விசில்’ தானா?

ஊதப்போவது வெற்றி ‘விசில்’ தானா?

அரசியல் என்றால் சத்தம்தான். சத்தம் இல்லாமல் அரசியல் ஏது? வெற்றிடத்தில் சத்தம் கிடையாது என்கிறது அறிவியல். அரசியலில் ஏது வெற்றிடம்? வெற்றிடமில்லாத அரசியலில் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அதுவும் இப்போது தமிழக அரசியலில் ஒரே சத்தம். அது – ‘விசில்’ சத்தம்! அது வெற்றிச் சத்தமாகுமா? அல்லது விஜயகாந்தின் முரசு சத்தம் போலாகுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. இந்த விசிலுக்குப் பின்னும் ஒரு வரலாறு இருக்கிறது. ரஜினிகாந்த் சினிமாவுக்கு வரும் முன்பு அவர் கையில் இருந்தது விசில். இப்போது விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்குச் செல்லும் போது அவர் கையில் கிடைத்திருக்கிறது. அவர் படத்தை விசிலடித்துக் கொண்டாடியவர்கள் இப்போது இந்தச் சின்னம் கிடைத்ததை அதே சின்னத்தை வைத்தே சின்னமடித்து அதாவது விசிலடித்துக் கொண்டாடுகிறார்கள். மொத்தத்தில் கொண்டாட்டத்தில் அதீத ஆர்வம் நிறைந்த தொண்டர்களுக்கு கொண்டாட்டத்திற்கான ஒரு சின்னமே கிடைத்திருக்கிறது. அது வெற்றிச் சின்னமாக ஆகுமா என்பதே கேள்வி.

குழந்தைகள் முதல் கிழவர்கள் வரை விசில் அடித்து உற்சாகத்தை வெளிப்படுத்துவதில் ஒரு பெரிய உளவியலே இருக்கிறது. கொஞ்சம் குஷி வந்து விட்டால் போதும், வெறும் வாயிலாயே விசில் அடிப்பவர்கள் இருக்கிறார்கள். உளவியல் ரீதியாக விசில் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்ளும் சின்னம்தான். அரசியலையும் வெற்றி கொள்ளும் சின்னமா?

பேருந்து நடத்துநர்கள் கையில் இருக்கும் விசில் இப்போது விஜய்யின் கட்சியின் கையில் வந்திருக்கிறது. அவர் சரியாக அரசியல் பேருந்தைச் செலுத்துவார் என்று மக்கள் நம்பினால் கோட்டையில் நின்று விசிலடிக்கும் உரிமையும் அவருக்குத்தான். ஒருவேளை அந்தப் பேருந்து கரூரைப் போன்ற ஒரு கூட்ட நெரிசலைச் சந்தித்து விபத்துக்குள்ளானால் விசிலே சங்காகவும் மாறி விடும் ஆபத்து இருக்கிறது.

ஆங்கிலத்தில் விசில் ப்ளோயர் (The Whistleblower) என்பதற்குத் தவறுகளைத் தட்டிக் கேட்பவர் என்று ஒரு பொருள் இருக்கிறது. விஜய் அப்படி மாநில அரசையும் மத்திய அரசையும் நிறைய கேட்டிருக்கிறார். என்றாலும் அவரையே இப்போது தட்டித் தூக்கி டெல்லி சிபிஐ கட்டிடத்தில் வைத்துக் கட்டம் கட்டியிருக்கிறார்கள். இதைத்  தாண்டுவதைப் பொருத்துதான் அவரது விசில் சத்தம் வெற்றிச் சத்தமா அல்லது சமிக்ஞை சத்தமா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.

விஜய் – விசில் இந்த இரண்டுக்குமே மூன்றெழுத்துகள் என்பதாலும் வெற்றி என்பதற்கும் மூன்றெழுத்து என்பதாலும் விசில் சின்னத்துக்கும் விஜய் கட்சிக்கும் வெற்றி அவ்வளவு சுலபமாகக் கிடைத்து விடுமா என்றால், அப்படிக் கிடைத்து விடாது. விஜய் கூட்டிய கூட்டங்களில் இனைஞர்களும், பெண்களும் அதிக அளவில் கலந்து கொண்டதால் அது ஒரு வெற்றி வாய்ப்பாக அவருக்குத் தெரியலாம். தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கும் போதும், வாக்குறுதிகள் ஒவ்வொரு கட்சிகளிடமிருந்து வந்து விழும் போது அவர்கள் எப்படி மாறுவார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். மாறிக் கொண்டே இருப்பதுதான் மனிதர்களின் மனநிலை என்பதால், விசிலடித்துக் கொண்டாடியவர்கள் இலையைப் போட்டு பந்திக்கு முந்துபவர்களாகவோ, சூரிய வெளிச்சத்தில் குளிர்காயப் போகிறவர்களாகவோ மாறி விட்டால் ஆட்டம் காலி, படுதா மிச்சம் என்றும் ஆகி விடலாம்.

ஒரு வகையில் விஜய்யின் கைகளுக்கு விசில் கிடைத்து விட்டது. விசிலுக்கான பேருந்து எந்த அளவுக்கு ஓடப் போகிறது? கோட்டை வரையா? கோட்டை விடும் வரையா? என்பதற்குத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் தினமே பதிலைக் கொடுக்கும். அதுவரை அவர் கரூர் வரை ஓட்டிச் சென்ற பேருந்தைப் பழுது பார்த்து, தனது விசிலின் வேகத்திற்கேற்ப ஓடும் வாகனமாக அவர் மாற்ற வேண்டும். மாற்றுவரா என்பதைப் பொருத்திருந்து பார்ப்பதைத் தவிர, பொதுமக்களான நமக்கு வேறு என்ன வழியிருக்கிறது?

இதை வாசிக்கும் நீங்களும் ஒரு வாக்காளர் என்பதால், நீங்கள் இந்த விசிலை வைத்து ஊதப் போகிறீர்களா? அமைதி காக்கப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு ஒரு பதிலை உங்களை வைத்தேச் சொல்லுங்கள். மற்றவற்றைக் கருத்துக் கணிப்புகள் விரைவில் சொல்லும். முடிவு விசிலா? சங்கா? என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாள் துல்லியமாகச் சொல்லி விடும்.

****

2026 - ஆட்சியைத் தீர்மானிக்கும் 5 காரணிகள்!

2026 - ஆட்சியைத் தீர்மானிக்கும் 5 காரணிகள்!

ஒவ்வொரு தேர்தலும் ஓர் உணர்ச்சிமிக்க போர்க்களம். புதிததாக ஆட்சியைப் பிடிப்பதும், ஆட்சியைத் தக்க வைப்பதும், ஆட்சியை இழப்பதும், ஆட்சியை மீட்பதும் இந்தப் போர்க்களத்தில் முடிவாகிறது. தமிழகத்தின் ஐந்தாண்டுக்கான தலைவிதியைத் தீர்மானிக்கும் இந்தப் போர்க்களத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை? அவை ஐந்து இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. விலையில்லா வாக்குறுதிகள்

2001 ஆம் ஆண்டின் தேர்தலுக்குப் பின் விலையில்லா வாக்குறுதிகளே ஆட்சியைப் பிடிக்கும் முதன்மையான காரணியாக மாறியிருக்கின்றன. விலையில்லா அரிசி, தொலைக்காட்சி, மின்விசிறி, சட்டினி அரைக்கும் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் என இருந்த இந்த வாக்குறுதிகள் பரிணாம வளர்ச்சியடைந்து (அப்டேட்டாகி) உரிமைத்தொகை என்று ரூபாய் நோட்டு வரை நீண்டு விட்டது. தமிழகத்தைக் காப்பியடித்து பல மாநிலங்கள் உரிமைத்தொகை என்ற பெயரில் ஆட்சியைப் பிடிக்கும் உரிமையைப் பெற்று விட்டன. இந்தத் தேர்தலில் இதுவரை ஆயிரமாக இருந்த உரிமைத்தொகை இரண்டாயிரமாக உயரப் போவதை அதிமுகவின் தேர்தல் அறிக்கை உறுதிபடுத்தி விட்டது. இன்னும் திமுகவின் தேர்தல் அறிக்கை வர வேண்டியிருக்கிறது. இத்தொகை மூவாயிரமாக இருக்குமா? ஐந்தாயிரமாக ஆகுமா? என்பதெல்லாம் தெரிய இன்னும் சிறிது காலம் நாம் காத்திருக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் தேர்தல் போர்க்களத்தின் பிரம்மாஸ்திரம் இதுதான் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டியதில்லை.

2. மொழி உணர்ச்சி

1967 இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்ததே மொழி உணர்ச்சிதான். தற்போது தமிழர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பேசும் தமிங்கிலத்தின் மீது உயிருக்கு உயிராக இருப்பதால், இதைத் தாண்டி மூன்றாவது ஒரு மொழியைத் திணிக்கும் அரசியலை ஏற்க மாட்டார்கள். எவ்வளவு நைச்சியமாக சமஸ்கிருதத்தையோ, இந்தியையோ கையிலெடுத்தால் தமிழக அரசியலைப் பொருத்தவரை அது தோல்வியைக் கையில் எடுப்பதற்குச் சமம். இந்த மொழி உணர்ச்சிதான் மாறி மாறி இரு திராவிட கட்சிகள் ஆட்சியில் இருப்பதற்கும் காரணம். அந்த வகையில் இந்தித் திணிப்பின் மீது ஆர்வமாக இருக்கும் தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் திராவிட கட்சிகளுக்கு அது ஒரு கழித்தல் புள்ளியாகவே (மைனஸ் பாய்ண்ட்) இருக்கும். இரண்டாவது காரணியாக இருக்கும் இந்தக் கத்தியைக் கூர்மையாகச் சாணை பிடித்தால் இதுவே ஆட்சியைப் பிடிப்பதற்கான முதன்மையான காரணியாகவும் மாறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

3. கூட்டணிக் கணக்கு

விலையில்லாக் காரணிகள், மொழியுணர்ச்சிக் காரணிகளைத் தாண்டி தமிழக தேர்தல் போர்க்களத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணி கூட்டணிக் கணக்குதான். இதில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்குச் சரியாக வர வேண்டும். வரவில்லையென்றால் எப்படி படிநிலைகளை (ஸ்டெப்) போட்டாலும் பல்டிதான் அடிக்க வேண்டியிருக்கும். தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் வலுவான வாக்கு வங்கி இருக்கிறது. அது எந்த அலை அடித்தாலும் பெரும்பாலும் மாறுவதில்லை. அந்த மாறாக வங்கிக் கணக்கோடு கூடுதலாக எவ்வளவு கொசுறு சேர்கிறது என்பதுதான் தமிழகத் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. இதுவரை வழமையாக இருந்த கூட்டணிக் கணக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் வரவும், பாட்டாளி மக்கள் கட்சியின் இருமுனைப் பிரிவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். சமீப தேர்தல்களில் இரு திராவிட கட்சிகளிடையேயான இருமுனைப் போட்டிகளிடையே நாம் தமிழர் கட்சி மூன்றாவது முனையாகத் தனித்தே களமாடி வருகிறது. அத்துடன் தமிழக வெற்றிக் கழகமும் தனித்துக் களமாடினால் தமிழகத்தில் இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டியாகவும் இந்தத் தேர்தல் போர்க்களம் மாறலாம்.

4. பெண்களின் வாக்குகள்

சக்தி இல்லையேல் சிவமில்லை என்பதுதான் தமிழகத் தேர்தல்களைப் பொருத்த வரையான மாறாத உண்மை. தமிழகத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. எம்ஜியாருக்கும், ஜெயலலிதாவுக்கும் பெண்களின் வாக்குகள் எப்போதும் துணை நின்றிருக்கின்றன. பெண்களின் வாக்குகளைக் குறி வைத்தே மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், தாலிக்குத் தங்கம், மகப்பேறு உதவிகள், பெண்கல்வி ஊக்கத்தொகைகள் போன்ற வாக்குறுதிகள் முன்வைக்கப்படுகின்றன. சமீப காலங்களில் ஆண்களை விட அதிகம் படிப்பவர்களாகவும், வேலைக்குச் சென்று குடும்பத்தைத் தாங்குபவர்களாகவும் பெண்கள் உருவெடுத்து வருகின்றனர். குடும்பப் பொருளாதாரத்தோடு, மாநிலப் பொருளாதாரத்தின் அச்சாணியாகவும் மாறி வரும் பெண்கள் எடுக்கப் போகும் முடிவானது இந்தத் தேர்தலில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். பெண்களை அதிக அளவில் ரசிகர்களாகப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்க்கு இது ஒரு சாதகமான அம்சமாகவும் அமையலாம். அது எப்படி அமையப் போகிறது என்பதைத் தேர்தல் முடிவுகளைக் கொண்டே கணிக்க முடியும் என்பதால் நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

5. இளைய தலைமுறையின் உடனடி மனப்போக்கு

இரு திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வருவதால் இளைஞர்கள் இவ்விரு கட்சிகளை மட்டுமே விரும்புகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. நாம் தமிழர் கட்சியின் பக்கம் கணிசமாக இளைஞர்களின் ஓட்டுகள் சமீப தேர்தல்களில் பிரிந்து செல்கின்றன. இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்தின் பக்கமும் அந்த வாக்குகள் கணிசமாகச் செல்லக் கூடும். புதிய தலைமுறை இளைஞர்களின் மனநிலையும் சிந்திக்கும் திறனும் பல விதங்களில் முந்தைய தலைமுறையை விட மாறியிருக்கிறது. அவர்களுக்குத் தேவையானது என்பது உடனடி மாற்றம். அதை யார் தருகிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்களோ அவர்களின் பக்கமே அவர்களின் வாக்குகள் செல்ல வாய்ப்பிருக்கிறது.

இப்படித் தமிழகத் தேர்தல் போர்க்களத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளை ஐந்தாகப் பகுத்துக் கொள்ளலாம். இந்த ஐந்துக் காரணிகளில் சரியாகக் கவனம் வைத்து எந்தக் காட்சி முறையாகக் காய் நகர்த்துகிறதோ, அந்தக் கட்சிக்கே புனித ஜார்ஜ் கோட்டையின் சாவி வழங்கப்படும். எந்தக் கட்சி அந்தச் சாவியைக் கைப்பற்றப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த ஐந்துக் காரணிகளில் எந்தக் காரணி இந்தத் தேர்தலில் பிரதானமாக வெற்றி, தோல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறேன் என்கிறீர்களா? உங்கள் வாக்கும் தேர்தலில் வெற்றித் தொல்வியின் ஒரு முக்கியமான காரணி என்பதால் ஆறாவது அறிவைப் போல இந்த ஆறாவது காரணியும் முக்கியமானது என்றே நான் கருதுகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

*****

10 Jan 2026

வாழும் இந்த வாழ்வில்…

வாழும் இந்த வாழ்வில்…

சிதறு காய் உடைக்கிறேன் என்று

தேங்காய் உடைத்து

மண்டையை உடைத்துவிடுகிறார்கள்

திருஷ்டி கழிக்கிறேன் என்று

பூசணியை உடைத்துவாகனத்தில் போகிறவர்களின்

உயிரை எடுத்து விடுகிறார்கள்

என்ன பெரிதாக சம்பாதிக்கிறார்கள்

தினம் தண்ணீரை

முப்பது ரூபாய்க்கு வாங்குகிறார்கள்

நடிகரைப் பார்க்க நாற்பது மணி நேரம் நிற்பவர்கள்தான்

ரேஷன் கடையில்

கால் மணி நேரம் நிற்க அலுத்துக் கொள்கிறார்கள்

ஓட்டுக்கு நோட்டா என்று கொதித்தெழுபவர்கள்தான்

ஒரு கிராம் தங்கம் என்றால் வாய் பிளக்கிறார்கள்

பெயரே வேண்டாமென

உருவான புயல்

வலுவிழந்து போய் விடுகிறது

எல்லா அபத்தங்களையும் தாண்டியும் தாங்கியும்

நகர்ந்து போய்க் கொண்டே இருக்குமிந்த வாழ்வில்

கல்வி கற்றுத் தராததை

அனுபவங்கள் கற்றுத் தர

அனுபவங்கள் கற்றுத் தராததை

அவமானங்கள் கற்றுத் தருகின்றன

*****

9 Jan 2026

கதைக்கின்ற வாழ்வு!

கதைக்கின்ற வாழ்வு!

எல்லாரும்

ஒரு காலத்தில் போகத்தான் போகிறோம்

அதற்குள்

போனவர்களைப் பற்றி

குய்யோ முய்யோ அய்யோவென்று கதறி

ஒப்பாரி வைத்து

போனது பற்றி

போகிற போக்கில்

பேசிப் பேசி

ஒருவர் ஒருவராய்

போகப் போக

போக இருப்பவர்கள்

போனவர் பற்றி

எதையாவது சொல்லிக்

புலம்பிக் கொண்டிருக்க

போனவர்கள் பற்றி

போகப் போகிறவர்கள்

கதைப்பதன்றோ வாழ்வு

*****

8 Jan 2026

வீடு தேடி வரும் கடல்

அசந்தர்ப்பவெளி

ஒட்டிக் கொண்டு

கூடவே

வீடு வரும் வரை

கடலைப் பிரியும்

பிரிக்ஞையின்றியே

வந்து சேர்ந்த

மணல் துகள்

தட்டி விட்டு

டைல்ஸ் தரையில்

விழுந்த கணத்தில்

ஓவென்று கதறப் பார்க்கையில்

ஒளிபெற்றும் பிம்பத்தை உமிழும்

தொலைக்காட்சி

கடலலைச் சத்தத்துடன்

நீல வண்ண திரவப் பரப்பைக் காட்டி

மறுநொடியில் காட்சியை மாற்றி

மஞ்சள் வண்ண மணல் துகள் பரவிய

பாலைவனத்தில் யாருமற்ற பெருவெளியில் உறைகிறது

*****

7 Jan 2026

முரண் மாற்றங்கள்

முரண் மாற்றங்கள்

தமிழ்த் திரையுலகின் முரண் மாற்றத்தைத் திரைப்படங்களைக் கொண்டே விளக்க முடியுமா என்றால், முடியும்.

‘சூரிய வம்சம்’ திரைப்படத்தில் சரத்குமாரும் தேவயானியும் ‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது’ என்ற ஒரே பாடலில் உச்சத்தை எட்டிப் பிடிப்பார்கள். அதே ஜோடிதான் ‘3BHK’ என்ற படத்திலும் நடித்திருந்தது. உச்சத்தை எட்ட ஒரு முழு படமுமே தேவைப்பட்டது. கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கான முழு திரைப்படம் அது. அதுதான் எதார்த்தம்.

இதற்கு முரணான மாற்றம் ரஜினியுடையது. அவர் ‘ஆறிலிருந்து அறுபது வரை’ என்ற திரைப்படத்தில் மெதுமெதுவாக வாழ்க்கையின் போக்கில் உச்சத்தை அடையும் எதார்த்தமான திரைப்படத்தைத் தந்து, அண்ணாமலை, அருணாச்சலம், படையப்பா என்று ஒரு பாடலில் உச்சத்தை நோக்கிச் செல்லும் திரைப்படத்தைத் தந்தவர். அந்த ரஜினியிச தாக்கத்தில் உருவானதுதான் ‘சூரிய வம்சம்’. அதே ரஜினியிசத்தின் பின்னோக்கிய வரலாற்றில் உருவான ‘ஆறிலிருந்து அறுபது வரை’ திரைப்படத்தின் தாக்கத்தில் உருவானதுதான் ‘3BHK’.

*****

புலிக்குப் பிறந்த பூனை

புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா?

ஏன் ஆகாது? ஆகும்!

பொதுவாகப் பழமொழிகள் பொய்க்காது என்பார்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் விதிவிலக்கு உள்ளது.

எத்தனையோ பேர் வியாபாரத்தில் மரண அடி வாங்கி, பின்பு சுதாரித்துக் கொண்டு அதிரடி காட்டியிருக்கிறார்கள். இப்படி பூனைக்குப் பிறந்து புலிகளானோர் எத்தனையோ பேர்.

ஆனால், திருபாய் அம்பானியின் மகன் அனில் அம்பானியோ அப்படி மீண்டு வராமல், புலிக்குப் பிறந்து பூனையாகிப் போனதுதான் சோகம்.

*****

6 Jan 2026

உருமாற்ற இயலாத சாவின் புன்னகை

உருமாற்ற இயலாத சாவின் புன்னகை

நீங்கள் பேசுவது போல

யாரோ ஒருவர்

உங்களைப் போலப் பேசிக் கொண்டிருக்கலாம்

நீங்கள் முகம் காட்டாத காணொளியில்

உங்கள் முகத்துடன்

உலகம் முழுவதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கலாம்

நீங்கள் பேசாத வார்த்தையை

நீங்கள் செய்யாத செயலை

நீங்கள் கொடுக்காத உறுதிமொழியை

நீங்கள் விரும்பாத ஒன்றை

இணையவெளியில் நீங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கலாம்

உங்களுக்காக உங்களை நிகழ்த்த

உங்கள் பிம்பம்ங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன

நீங்கள் செய்ததற்கும்

உங்கள் பிம்பம் செய்ததற்கும்

இந்த உலகிற்கு வேறுபாடு தெரியாது

நீங்கள் செய்யாததை

செய்யவில்லை என்று நிரூபிப்பது

சாதாரணமாக இருக்கப் போவதில்லை

புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும்

என்ற பாட்டி தப்பித்து விட்டாள்

புகைப்படம் எடுத்துப் பதிவிட்டால்

லைக்குகள் கூடும் என்ற நீங்கள் பதிவிட்ட ஒவ்வொன்றும்

பெற்றெடுத்த தறுதலைகளைப் போல

உங்கள் பெயரைக் கெடுக்கவென்றே

உலவிக் கொண்டிருக்கையில்

ரத்தக் கொதிப்பிலும்

மெல்லிய மாரடைப்புகளிலும்

ஆயுள் குறைந்து கொண்டிருக்க

சாவின் போது எடுத்த புகைப்படத்திலிருந்து

சிரித்துக் கொண்டிருப்பாள் பாட்டி

*****

5 Jan 2026

நான் தேவகுமாரன் இல்லை!

நான் தேவகுமாரன் இல்லை!

இன்று

இருள்கிறது

மறுநாள்

விடிய

எந்தச் சாலையை

எப்போது நோண்டுவார்கள்

தோண்டியதை

எப்போது மூடுவார்கள்

சாலையாய்ப் பிறந்து விட்ட பாவத்திற்காக

அனுதினம்

ஏதோ ஓர் அறுவை சிகிச்சை

பாவம் சாலைகள்

இரு மருங்கிலும்

ஏகப்பட்ட மருத்துவமனைகள் மருந்தகங்கள்

அவசரகால ஊர்திகள்

மெதுவாக ஊர்கின்றன

காயம்பட்ட சாலைகளில்

என்னை ஏனடா

தேவகுமாரன் என்கிறீர்கள்

சிலுவையில் அறைவதற்கா

யாருக்குப் பிரியமிருக்கிறது

என்னுடன் இருக்க

என் நிழலைத் தவிர

*****