2026 - ஆட்சியைத் தீர்மானிக்கும் 5 காரணிகள்!
ஒவ்வொரு
தேர்தலும் ஓர் உணர்ச்சிமிக்க போர்க்களம். புதிததாக ஆட்சியைப் பிடிப்பதும், ஆட்சியைத்
தக்க வைப்பதும், ஆட்சியை இழப்பதும், ஆட்சியை மீட்பதும் இந்தப் போர்க்களத்தில் முடிவாகிறது.
தமிழகத்தின் ஐந்தாண்டுக்கான தலைவிதியைத் தீர்மானிக்கும் இந்தப் போர்க்களத்தின் வெற்றியைத்
தீர்மானிக்கும் காரணிகள் யாவை? அவை ஐந்து இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. விலையில்லா வாக்குறுதிகள்
2001
ஆம் ஆண்டின் தேர்தலுக்குப் பின் விலையில்லா வாக்குறுதிகளே ஆட்சியைப் பிடிக்கும் முதன்மையான
காரணியாக மாறியிருக்கின்றன. விலையில்லா அரிசி, தொலைக்காட்சி, மின்விசிறி, சட்டினி அரைக்கும்
இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் என இருந்த இந்த வாக்குறுதிகள் பரிணாம வளர்ச்சியடைந்து
(அப்டேட்டாகி) உரிமைத்தொகை என்று ரூபாய் நோட்டு வரை நீண்டு விட்டது. தமிழகத்தைக் காப்பியடித்து
பல மாநிலங்கள் உரிமைத்தொகை என்ற பெயரில் ஆட்சியைப் பிடிக்கும் உரிமையைப் பெற்று விட்டன.
இந்தத் தேர்தலில் இதுவரை ஆயிரமாக இருந்த உரிமைத்தொகை இரண்டாயிரமாக உயரப் போவதை அதிமுகவின்
தேர்தல் அறிக்கை உறுதிபடுத்தி விட்டது. இன்னும் திமுகவின் தேர்தல் அறிக்கை வர வேண்டியிருக்கிறது.
இத்தொகை மூவாயிரமாக இருக்குமா? ஐந்தாயிரமாக ஆகுமா? என்பதெல்லாம் தெரிய இன்னும் சிறிது
காலம் நாம் காத்திருக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் தேர்தல் போர்க்களத்தின் பிரம்மாஸ்திரம்
இதுதான் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டியதில்லை.
2. மொழி உணர்ச்சி
1967
இல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணமாக அமைந்ததே மொழி உணர்ச்சிதான். தற்போது
தமிழர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் பேசும் தமிங்கிலத்தின் மீது உயிருக்கு
உயிராக இருப்பதால், இதைத் தாண்டி மூன்றாவது ஒரு மொழியைத் திணிக்கும் அரசியலை ஏற்க மாட்டார்கள்.
எவ்வளவு நைச்சியமாக சமஸ்கிருதத்தையோ, இந்தியையோ கையிலெடுத்தால் தமிழக அரசியலைப் பொருத்தவரை
அது தோல்வியைக் கையில் எடுப்பதற்குச் சமம். இந்த மொழி உணர்ச்சிதான் மாறி மாறி இரு திராவிட
கட்சிகள் ஆட்சியில் இருப்பதற்கும் காரணம். அந்த வகையில் இந்தித் திணிப்பின் மீது ஆர்வமாக
இருக்கும் தேசிய கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் திராவிட கட்சிகளுக்கு அது ஒரு கழித்தல்
புள்ளியாகவே (மைனஸ் பாய்ண்ட்) இருக்கும். இரண்டாவது காரணியாக இருக்கும் இந்தக் கத்தியைக்
கூர்மையாகச் சாணை பிடித்தால் இதுவே ஆட்சியைப் பிடிப்பதற்கான முதன்மையான காரணியாகவும்
மாறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
3. கூட்டணிக் கணக்கு
விலையில்லாக்
காரணிகள், மொழியுணர்ச்சிக் காரணிகளைத் தாண்டி தமிழக தேர்தல் போர்க்களத்தின் வெற்றியைத்
தீர்மானிக்கும் முக்கிய காரணி கூட்டணிக் கணக்குதான். இதில் கூட்டிக் கழித்துப் பார்த்தால்
கணக்குச் சரியாக வர வேண்டும். வரவில்லையென்றால் எப்படி படிநிலைகளை (ஸ்டெப்) போட்டாலும்
பல்டிதான் அடிக்க வேண்டியிருக்கும். தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் வலுவான வாக்கு
வங்கி இருக்கிறது. அது எந்த அலை அடித்தாலும் பெரும்பாலும் மாறுவதில்லை. அந்த மாறாக
வங்கிக் கணக்கோடு கூடுதலாக எவ்வளவு கொசுறு சேர்கிறது என்பதுதான் தமிழகத் தேர்தலின்
வெற்றியைத் தீர்மானிக்கிறது. இதுவரை வழமையாக இருந்த கூட்டணிக் கணக்கில் தமிழக வெற்றிக்
கழகத்தின் வரவும், பாட்டாளி மக்கள் கட்சியின் இருமுனைப் பிரிவும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
சமீப தேர்தல்களில் இரு திராவிட கட்சிகளிடையேயான இருமுனைப் போட்டிகளிடையே நாம் தமிழர்
கட்சி மூன்றாவது முனையாகத் தனித்தே களமாடி வருகிறது. அத்துடன் தமிழக வெற்றிக் கழகமும்
தனித்துக் களமாடினால் தமிழகத்தில் இந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டியாகவும் இந்தத்
தேர்தல் போர்க்களம் மாறலாம்.
4. பெண்களின் வாக்குகள்
சக்தி
இல்லையேல் சிவமில்லை என்பதுதான் தமிழகத் தேர்தல்களைப் பொருத்த வரையான மாறாத உண்மை.
தமிழகத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. எம்ஜியாருக்கும்,
ஜெயலலிதாவுக்கும் பெண்களின் வாக்குகள் எப்போதும் துணை நின்றிருக்கின்றன. பெண்களின்
வாக்குகளைக் குறி வைத்தே மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், தாலிக்குத்
தங்கம், மகப்பேறு உதவிகள், பெண்கல்வி ஊக்கத்தொகைகள் போன்ற வாக்குறுதிகள் முன்வைக்கப்படுகின்றன.
சமீப காலங்களில் ஆண்களை விட அதிகம் படிப்பவர்களாகவும், வேலைக்குச் சென்று குடும்பத்தைத்
தாங்குபவர்களாகவும் பெண்கள் உருவெடுத்து வருகின்றனர். குடும்பப் பொருளாதாரத்தோடு, மாநிலப்
பொருளாதாரத்தின் அச்சாணியாகவும் மாறி வரும் பெண்கள் எடுக்கப் போகும் முடிவானது இந்தத்
தேர்தலில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். பெண்களை அதிக அளவில் ரசிகர்களாகப்
பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்க்கு இது ஒரு சாதகமான அம்சமாகவும் அமையலாம்.
அது எப்படி அமையப் போகிறது என்பதைத் தேர்தல் முடிவுகளைக் கொண்டே கணிக்க முடியும் என்பதால்
நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.
5. இளைய தலைமுறையின் உடனடி மனப்போக்கு
இரு
திராவிட கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வருவதால் இளைஞர்கள் இவ்விரு கட்சிகளை மட்டுமே
விரும்புகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. நாம் தமிழர் கட்சியின் பக்கம் கணிசமாக
இளைஞர்களின் ஓட்டுகள் சமீப தேர்தல்களில் பிரிந்து செல்கின்றன. இந்த முறை தமிழக வெற்றிக்
கழகத்தின் பக்கமும் அந்த வாக்குகள் கணிசமாகச் செல்லக் கூடும். புதிய தலைமுறை இளைஞர்களின்
மனநிலையும் சிந்திக்கும் திறனும் பல விதங்களில் முந்தைய தலைமுறையை விட மாறியிருக்கிறது.
அவர்களுக்குத் தேவையானது என்பது உடனடி மாற்றம். அதை யார் தருகிறார்கள் என்று அவர்கள்
நம்புகிறார்களோ அவர்களின் பக்கமே அவர்களின் வாக்குகள் செல்ல வாய்ப்பிருக்கிறது.
இப்படித்
தமிழகத் தேர்தல் போர்க்களத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளை ஐந்தாகப் பகுத்துக்
கொள்ளலாம். இந்த ஐந்துக் காரணிகளில் சரியாகக் கவனம் வைத்து எந்தக் காட்சி முறையாகக்
காய் நகர்த்துகிறதோ, அந்தக் கட்சிக்கே புனித ஜார்ஜ் கோட்டையின் சாவி வழங்கப்படும்.
எந்தக் கட்சி அந்தச் சாவியைக் கைப்பற்றப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த
ஐந்துக் காரணிகளில் எந்தக் காரணி இந்தத் தேர்தலில் பிரதானமாக வெற்றி, தோல்வியில் தாக்கத்தை
ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறேன்
என்கிறீர்களா? உங்கள் வாக்கும் தேர்தலில் வெற்றித் தொல்வியின் ஒரு முக்கியமான காரணி
என்பதால் ஆறாவது அறிவைப் போல இந்த ஆறாவது காரணியும் முக்கியமானது என்றே நான் கருதுகிறேன்.
நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
*****

No comments:
Post a Comment