30 Sept 2021

நாலு ஊரு தண்ணிய குடிச்சாலும் சளி பிடிக்காது

நாலு ஊரு தண்ணிய குடிச்சாலும் சளி பிடிக்காது

            அப்போ வாய்க்கால் தண்ணிய, கொளத்துத் தண்ணிய, ஆத்துத் தண்ணிய அப்படியே அள்ளிக் குடிச்சிட்டு ஆரோக்கியமா இருந்தாம் மனுஷன். இப்போ சுத்தமான தண்ணின்னு கேன் தண்ணிய வாங்கிக் குடிச்சிட்டு ஆரோக்கியம் இல்லாம நோயாளியா இருக்காம் மனுஷன்.  

            நாலு ஊரு தண்ணி என்னா, நாப்பது ஊரு தண்ணிய குடிச்சாலும் சளி பிடிக்காது அப்போ. இப்போ பாட்டில் தண்ணிய குடிச்சிட்டே சளி பிடிச்சிட்டுதுன்னு நிக்குறாம். எல்லாத்தையும் நாம்ம ரொம்ப அசுத்தம் பண்ணிட்டோம்.

            பொதுவா நம்ம மனுஷங்களுக்கு ஒருகொணப்பாடு இருக்கு. நாம்ம நல்லா இருந்தா போதும், மித்த மித்தது எப்படிப் போனா என்னாங்ற கொணப்பாடுதாம் அது.

            நாமளும் நம்ம வீடும் சுத்தமா இருந்தா போதும், அதெ தாண்டி எது எப்படி இருந்தா என்னாங்ற நெனைப்பு நம்ம மனுஷங்ககிட்டெ அதிகம். இந்த நெனைப்புதாம் வீட்டுக்கு வெளியே ஓடுற சாக்கடையப் பத்தி எந்த சிந்தனையையும் உருவாக்காத மனுஷங்களப் படைச்சிடுச்சு. வெளியில ஓடுற சாக்கடையில நம்ம வீட்டுச் சாக்கடையும் கலந்திருக்குங்ற நெனைப்பு இவுங்களுக்கு வரவே வராது. அது வெளியில ஓடுற சாக்கடைத்தாம், அதுக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் கெடையாதுங்ற நெனைப்புதாம் உள்ளுக்குள்ள ஓடும்.

            கோயில், சாமி, திருவிழான்னு கூடுற மக்கள் ஊரு உலகத்தெ சுத்தமா வெச்சிக்கணும்ங்றதுக்காகக் கூட மாட்டாங்க. ஒரு காலத்துல இந்த ஆறுங்க எல்லாம் எப்படி ஓடுச்சு தெரியுமா? ஆத்துலயே தண்ணி மொண்டு குடிக்குற அளவுக்கு தேங்காய் தண்ணியாட்டம் ருசிச்சிக்கிட்டு ஓடிச்சு. இப்போ சாக்கடையா ஓடிட்டு இருக்கு. அந்தச் சாக்கடையெல்லாம் நம்ம ஒவ்வொரு வீட்டுச் சாக்கடைதாம். நம்ம ஊரு ஆத்துல ஓடுற சாக்கடையில நம்ம ஒவ்வொரு வீட்டுச் சாக்கடையும் கலந்திருக்குங்றது நெஜம்.

            எது எப்படியோ போவட்டும், நாம்ம நல்லா வாழ்ந்தா போதுங்ற நெனைப்பு கடைசியில எப்படி நம்மை நல்லா வாழ வைக்கும்றதெ யோசிச்சா போதும் நாம்ம மாறுறதுக்கான துவக்கப் புள்ளி அங்கேயிருந்து உருவாகி விடும்.

            இதுல அது மட்டுமில்லாம இன்னொரு விசயமும் அடங்கியிருக்கு. நாம்ம நல்லா வாழணும்ன்னு நெனைச்சு நாம்ம கூட நல்லா வாழ்ந்துடலாம். நம்ம சந்ததிங்க? யோசிச்சுப் பார்த்தா இனுமேலும் நாம்ம போற வழியிலேயே போயிட்டு இருக்க முடியாதுங்றது புரியும்.

            ஆரோக்கியங்கறது சாதாரண விசயமில்ல. அது விலை கொடுத்து வாங்குற சமாச்சாரமும் இல்ல. அது ஒவ்வொருத்தரோட தனிமனித பொறுப்புணர்வுலேந்தும் சமூக பொறுப்புணர்வுலேந்தும் வருது.

            ஒரு நோயாளி போதும் ஊரையே நோயாளியாக்கங்றது இப்போ இந்தக் கொரோனா காலத்துல தெரியுது இல்லையா. சுகாதாரத்துலயும் ஆரோக்கியத்துலயும் நம்ம கூட்டுப் பொறுப்பு வெளிப்பட்டா நம்ம மனுஷங்க இவ்வளவு நோய்களோட திரிய வேண்டியதுமில்ல, நோய்களுக்காக இவ்வளவு காசைச் செலவழிக்க வேண்டியதும் இல்ல.

            எந்த ஊருக்குப் போனா என்ன? அந்த ஊர்ல நல்ல தண்ணி கிடைக்கணும். நல்ல தண்ணின்னா அது இலவசமாத்தாம் கிடைக்கணும். நல்ல சாப்பாடு கிடைக்கணும். நல்லா சாப்பாடுன்னா அது மலிவான விலையிலத்தாம் கிடைக்கணும். நல்ல காத்து கிடைக்கணும். நல்ல காத்துன்னா அதுவும் ஓசியிலத்தாம் கிடைக்கணும். வெலை வெச்சு விக்குற ஆக்ஸிஜன் சிலிண்டர்ல கிடைக்கக் கூடாது. இது மாதிரியான விசயங்க கிடைக்காம அந்த ஊருக்குப் போனா நல்லா சம்பாதிச்சு வாழலாம்ன்னா அதுக்குப் பேரு ஊரா என்ன? அந்த ஊரு வியாதிகளோட கொட்டாரம்தாம். நோயாளிகளுக்கான சுடுகாடுதாம்.

            எது எப்படி இருந்தா என்ன? பணத்தெ சம்பாதிச்சா போதும்ன்னு நினைச்சா, அந்தப் பணத்தைக் கடைசியா வியாதிக்குச் செலவு பண்ண அழிக்க வேண்டியதுதாம். வேற வழியில்ல. பணம் பத்தும் செய்யும்பாங்க. பத்தோட பதினொண்ணா அது வியாதியையும் செய்யும்.

*****

மேட் இன் யுவர் வில்லேஜ்

மேட் இன் யுவர் வில்லேஜ்

            நாங்க சின்ன வயசா இருந்தப்போ வெளிநாடு போயிட்டு வர்ற மாமாமார்க, பெரியப்பாமார்க, சித்தப்பாமார்க, அண்ணன்மார்க வாங்கியார்ற டிவி, டெக், டேப் ரிகார்டர் எல்லாத்துக்கும் ஒரு மவுசு இருந்துச்சு. காரணம் அதெல்லாம் மேட் இன் ஜப்பான். ஜப்பான் பொருளுன்னா ஒரு தரம் இருக்கும்ங்ற நெனைப்புதாம் அதுக்குக் காரணம்.

            மேட் இன் ஜப்பானுக்குப் பெறவு குழந்தைகளுங்கு வாங்குற பொம்மையிலேந்து குழந்தைங்க வாங்கித் திங்குற கொய்யாக்கா முட்டாய் வரைக்கும் பெரிய புரட்சி பண்ணது மேட் இன் சைனாதான். என்ன விதமான கச்சடா சாமான் வேணும்னாலும் மேட் இன் சைனா சாமானுங்க நம்ம ஊர்லயே கிடைக்கும். சைனா சாமானுங்க சைனாவுலதானே கிடைக்கணும். அப்படில்லாம் எந்த லாஜிக் இல்லேங்ற மாதிரிக்கு கொட்லாம்பட்டியிலயும் கிடைக்கும். ஆனா இப்படி நம்ம நாட்டு சாமான் செட்டுங்கள சைனாவுல கொண்டு போய் வித்துட முடியுமா என்ன?

            நம்ம நாட்டுக்கு மேட் இன் இந்தியான்னு சிறப்பு ஏதும் இல்லையான்னு கேட்டா, நம்ம நாட்டுல இருக்குற ஒவ்வொரு ஊருக்கும் அப்படி மேட் இன் சிறப்பு இருக்குது. அதெ எந்த நாட்டுக்காரனும் அடிச்சிக்க முடியாது. மத்த நாட்டுக்காரங்க தங்களோட சாமானுங்கள உலக அளவுல கொண்டு போயிட்டாங்க. நாம்ம கொண்டு போகல. அது ஒண்ணுதாம் வித்தியாசம்.

            மணப்பாறை மாடு கட்டி, மாயவரம் ஏரு பூட்டின்னு மருதகாசியோட பாட்டு ஒண்ணு வருமே. இந்தப் பாட்டே மேட் இன் சிறப்புக்கு நல்ல ஓர் உதாரணந்தாம். அந்தப் பாட்டுலேயே ஆத்தூரு கிச்சிடி சம்பா, விருதுநகர் வியாபாரின்னு நெறைய மேட் இன் சிறப்புக வரும். கடைசியில நம்ம பெத்த அம்மாதாம் மேட் இன் சிறப்புலயே ரொம்ப ஒசத்திங்றதையும் சொல்லிப்புடுவாரு. அந்தப் பாட்டைக் கேட்க கீழே சொடுக்குங்க.


            அதுவுமில்லாமே அல்வான்னா நீங்களே சொல்வீங்களே மேட் இன் திருநெல்வேலி, பால்கோவான்னா மேட் இன் திருவில்லிபுத்தூர், பஞ்சாமிர்தம்ன்னா மேட் இன் பழனி, முறுக்குன்னா மேட் இன் மணப்பாறை, பூட்டுன்னா மேட் இன் திண்டுக்கல், பட்டுன்னா மேட் இன் காஞ்சிவரம், லட்டுன்னா மேட் இன் திருப்பதி, தலையாட்டி பொம்மைன்னா மேட் இன் தஞ்சாவூர்ன்னு.

இப்படி நிறைய நம்ம நாட்டுல மேட் இன் சிறப்புக்கு நிறைய ஊருங்க இருக்கு. நம்ம நாட்டுல இருக்குற ஒவ்வொரு ஊருக்குமே இப்படி மேட் இன் சிறப்புக இருந்திருக்கும். ஒவ்வொரு ஊரோட பழைய வரலாற்ற அகழாய்வு பண்ணிப் பாத்தா அதெ தெரிஞ்சிக்கிடலாம். அப்படி இருந்ததை அப்போ சரியா வளத்திருந்தா நம்ம ஊருக ஒவ்வொண்ணும் குட்டிச் சிங்கப்பூரா இருந்திருக்கும். ஏதோ அப்போ செய்யல. இனிமேலாவது அதை சரியானபடிக்குப் போற்றி வளர்த்தாலே இந்தியாவுல இவ்வளவு மேட் இன் சிறப்புகளான்னு உலகம் மூக்குல விரல வைக்கும். ஆனா நம்ம நாட்டுல தொழிலாளிங்க வயித்துலல்ல கைய வைக்குற வேலையத்தானே மொதல்ல பாக்குறாங்க. அதாலத்தாம் நம்ம நாட்டுல மேட் இன் சிறப்புக நிறைய உருவாக மாட்டேங்குது. உருவாகியிருக்குற ஒரு சில சிறப்பான விசயங்களும் நம்ம நாட்டுல தக்க வெச்சுக்க முடியாம போராடிக்கிட்டு கெடக்குதுங்க.

*****

29 Sept 2021

இருக்கிறீரா இல்லையா கடவுளே

இருக்கிறீரா இல்லையா கடவுளே

கடவுளிடம் வேண்டுகிறேன்

அவரின் பிம்பங்களை உடைத்து நொறுக்குகிறார்கள்

பிம்பங்கள் உடைவது குறித்த

பிரக்ஞை அவரிடம் இல்லை

மீண்டும் என்னை உங்களோடு சேர்த்து வையுங்கள் என்கிறேன்

தண்ணீரைத் தண்ணீரோடு சேர்த்து வைப்பதா

என்பதைப் போன்ற கேலிப் புன்னகையை உதிர்க்கிறார்

நீயே உருவாக்கியதில் நீயே சேர்ந்து கொள் என்றபடி

காலாவதியாகிவிட்ட தலைவரைப் போலக் கடந்து செல்கிறார்

மற்றொரு கணத்தில் என்னைப் பிரித்து வையுங்கள் என்கிறேன்

உதிர்ந்து விழும் பழத்தை

எந்தக் காம்பு தாங்கிக் கொண்டிருக்கப் போகிறது

என்பதையொத்த மௌனத்தை அடைகாத்துக் கொண்டிருக்கிறார்

ஓடி விடுவதானால் காலிருக்கும் போதே செய்து விடு

என்ற அசட்டுப் புன்னகையை வீசுகிறார்

இருக்கிறீரா இல்லையா என்ற கேள்விக்கு

பதிலுரைத்தால் ஏதோ ஒன்றை

ஒத்துக் கொள்வது போலாகி விடும் என்று சிரிக்கிறார்

என்னதான் செய்வதென்றால்

என்னைக் குறித்து எதுவும் செய்யாமலிரு என்கிறார்

அதெப்படி எதுவும் செய்யாமலிருப்பது என்றால்

அதற்கும் சிரித்துக் கொள்கிறார்

பிம்பங்கள் மௌனமாக உடைவதன் சத்தம்

பிரபஞ்சமெங்கும் கேட்கிறது

எதுவும் நிகழாததைப் போல அமர்ந்திருக்கிறார் கடவுள்

*****

28 Sept 2021

கிரியா ஊக்கிகளின் சமத்கார பசை

கிரியா ஊக்கிகளின் சமத்கார பசை

டாக்டரெனச் சொல்லப்பட்டவள்

நோயாளியாய்ப் படுத்திருக்கிறாள்

இன்ஜினியரெனப் பெருமிதப்படுத்தப்பட்டவன்

உடைந்த வீட்டில் குடியிருக்கிறான்

போலீஸ்தானெனப் பேசப்பட்டவன்

கைதியாய் அடங்கிக் இருக்கிறான்

வாத்தியார் ஆவானென வாஞ்சையாய்ப் பேசப்பட்டவன்

மொழி புரியாத தூர தேசத்தில்

துயரப்பட்டுக் கொண்டிருக்கிறான்

எதுவும் சொல்லாமல் இருந்திருக்கலாமோ

ஏதோ ஒன்றைச் சொல்லி கனவுகளைக் கிளர்ந்து

எதிர்காலத்தில் சீழ் வடியச் செய்து விட்டோமோ

ஊக்கங்கள் ஊனப்படுத்தாமல் இருந்திருக்கலாம்

எதிர்ப்பேச்சைச் சமத்காரமாய் அடைக்க

திமிர்ந்தெழுவதைச் சாமர்த்தியமாய்த் தடுக்க

ஊக்கியின் அடிமையென ஆகி

அடிமைச் சேவகம் புரிந்து அடி வருட

ஊக்கிக் கொண்டே இருக்க வேண்டும்

ஊக்கத்தின் கனம் தாளாமல்

மூழ்கிக் கொண்டிருந்தால்

யார் மேலெழப் போகிறார்கள்

கலெக்டர் ஆவானெனச் சொல்லப்பட்டவன்

கலெக்டர் ஆக மாட்டான் என்பதும்

கலெக்டர் ஆபிஸ் முன்

வருவோர் போவோருக்கு

மனு எழுதிக் கொடுத்துக் கொண்டிருப்பான் என்பது

தெரியாமலா ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்

கேட்டால் கிரியா ஊக்கி என்பார்கள்

சமத்கார சாமர்த்தியசாலிகள்

*****

27 Sept 2021

பிரச்சனைகள் குறித்த ஒரு தீர்க்கமான பார்வை

பிரச்சனைகள் குறித்த ஒரு தீர்க்கமான பார்வை

வாழ்க்கையில் தீர்வு என்று எதுவும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பிரச்சனைகள் அதுவாக மறைந்து விடுகின்றன அல்லது மறந்து விடுகின்றன.

***

            காசிருந்தால் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்கிறார்கள். காசே ஒரு பிரச்சனைதான். எல்லா பிரச்சனைகளும் அதனால்தான் வருகின்றன. காசில்லை என்றால் காசில்லையே என்ற அந்த ஒரு பிரச்சனைதான். அது இருக்கும் போதுதான் மற்ற அனைத்துப் பிரச்சனைகளும். காசிருந்தால் பிரச்சனை கிடையாது என்றால் காசிருப்பவருக்குப் பிரச்சனையே இருக்கக் கூடாது அல்லவா! உலகில் அப்படியா இருக்கிறது? காசிருப்பவருக்கு இருக்கும் மன உளைச்சலைப் போல வேறு யாருக்கும் இருக்காது தெரியுமா? அதைக் காசிருப்பவர் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார். மன உளைச்சலை விட காசு அவருக்கு முக்கியம். மன அமைதியை விட்டாலும் விடுவாரே தவிர காசை விட்டு விட மாட்டார். காசுக்கு அப்படி சக்தியும் மயக்கு வசியமும் இருக்கிறது. மனதைக் கட்டிப் போடும் வித்தை காசுக்குள் சூக்குமமாய் ஒளிந்திருக்கிறது. இதைப் புரிந்து கொள்பவர்கள் காசோடு அளவான சிநேகம்தான் வைத்துக் கொள்வார்கள். புரியாதவர்கள் காசே கதியெனக் கிடப்பார்கள். இது போன்ற விசயங்களில் விதி இருந்தால் ஒழிய ஒருவரை மீட்டிட முடியாது.

***

            வருங்காலத்தை யார்தான் கணிக்க முடியும்? ஆனால் இந்த ஏஜெண்டுகள் கணித்து விடுகிறார்கள். இந்தப் பாலிசியை எடுங்கள், அந்தப் பாலிசியை எடுங்கள் என்கிறார்கள். அது சரி நீங்கள் எத்தனை பாலிசிகளை எடுத்திருக்கிறீர்கள் என்றால் அதுக்கு வருமானம் இருந்தால் நாங்கள் ஏன் பாலிசிகளை விற்றுக் கொண்டு இருக்கப் போகிறோம் என்கிறார்கள். ஆக வருமானம் இருப்பவர்களுக்குத்தான் வருங்காலம். வருங்காலம் என்ற பேச்சு அவர்களிடம்தான் எடுபடும். அன்றாடம் சம்பாதித்து வாழ்க்கையை ஓட்டுபவர்கள் அதைத் தாண்டியெல்லாம் யோசிக்க முடியாது. அன்றில் வாழ்ந்து அன்றை மட்டும் எதிர்கொள்ள மட்டுமே அவர்களால் முடியும். அவர்கள் பாலிசியைப் பற்றியெல்லாம் யோசிப்பதில்லை என்பதைத்தான் பாலிசியாக வைத்திருக்கிறார்கள்.

            பாலிசியைப் பற்றி யோசித்தால் நிம்மதியாக இருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் செத்தால் எவ்வளவு கிடைக்கும், நீங்கள் உயிரோடு இருந்தால் மாதா மாதம் அல்லது ஆண்டாண்டுக்கு எவ்வளவு கட்ட வேண்டும் என்பதுதான் பாலிசியின் சாராம்சம். இந்தச் சாராம்சத்தைப் புரிந்து கொண்டால் உங்களால் அமைதியாக இருக்க முடியுமா?

எப்போதும் பாலிசி எடுக்கும் போது எச்சரிக்கையாக இருங்கள். பாலிசி கொடுக்கும் நிறுவனம் திவாலாகாது என்பதெல்லாம் நிச்சயமில்லை. இந்த உலகில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அளவோடு நிறுத்திக் கொள்ள பழகுங்கள். அதாவது காசையும் வருங்காலப் பாதுகாப்பு குறித்த எண்ணங்களையும். என்னைக் கேட்டால் இந்த உலகில் பாதுகாப்பே இல்லாமல் வாழும் மனிதர்கள் அதிகம். அவர்களோடு ஒப்பிட்டால் எந்தப் பாலிசி எடுக்கலாம் என்று என்னைக் கேட்பவர்கள் எல்லாம் உச்சபட்ச பாதுகாப்பில் இருக்கிறார்கள் என்றுதான் சொல்வேன்.

***

            உயிர் போவதைப் பற்றிக் கூட மனிதர்கள் பெரிதாகக் கவலைப்பட மாட்டார்கள் போல. சார்ஜ் போய் விட்டால் ரொம்பவே கவலைப்படுகிறார்கள் உயிரே போய் விட்டது போல. மனிதர்களிடம் இப்போது இப்படி ஒரு பிரச்சனை தலை தூக்கிக் கொண்டு இருக்கிறது. இந்நேரம் எத்தனை கால்கள் வந்திருக்குமோ தெரியவில்லை என்ற அலமலந்துப் போகிறார்கள். எத்தனைக் கால்கள் வந்திருந்தால்தான் என்ன? ஒன்றும் உருப்படியானதாக இருக்காது என்பதின் பின் உண்மை இருக்கிறது. கால்கள் இல்லாமல் கூட ஒரு மனிதர் வாழ்ந்து விடுவார் போலிருக்கிறது. போன் கால்கள் இல்லாமல் இந்த மனிதர்களால் வாழ முடியாது.

            இந்த ஒட்டுமொத்த பிரச்சனைகளின் பின்னால் இருப்பது என்னவென்று நினைக்கிறீர்கள்? எல்லாம் அடிமையாதல் எனும் பின்னணிதான். தன்னுணர்வு இல்லாமல் எதற்கு அடிமையாகிறோம் என்று தெரியாமல் அடிமையாகி விடுகிறார்கள். இந்த அடிமைகளின் வருங்காலம் எப்படி இருக்கும் என்கிறீர்கள்? சைக்கோதனமாக இருக்கப் போவது குறித்து வியப்பைத் தெரிவிக்க ஒன்றுமில்லை.

*** ***

26 Sept 2021

காணாமல் போன கதைகள்

காணாமல் போன கதைகள்

கதை சொன்ன பாட்டி

கனைத்துக் கொள்கிறாள்

திருடன் போலீஸ் கதை சொன்ன போது

வெற்றிலையையும் சுண்ணாம்பையும்

களவாடிச் சென்று விட்டார்கள் என்கிறாள்

பையில் இருக்கும் குட்கா பாக்கெட்டை எடுத்து

வேண்டுமா என்கிறான் பதின்ம வயது பேரன்

நள்ளிரவில் நசுவினிக் குரலில்

பேய்களும் பிசாசுகளும்

கொரோனா வந்து செத்து விட்டதெனப் புலம்புகிறாள்

அன்றோடு பேய்க்கதைகளும் பிசாசுக் கதைகளும்

முடிவுக்கு வந்த போது

சாமிக் கதைகளைச் சொல்லும் போதெல்லாம்

வாயிழுத்துக் கோணிப் போனாள்

கடவுளும் கைவிட்டுப் போயிட்டானடி

என்று அடிக்கடி அரற்றினாள்

கதையொழிந்த ஒரு நாளில்

ராஜாவையும் ராணியையும்

கடத்திச் சென்றுவிட்டார்கள்

என்று புலம்பும் பாட்டியை

என்ன சொல்லி ஆற்றுவது

ஒரு நாளில் அவளும் காணாமல் போனாள்

தில்லையம்பல கோயிலின் முன்

பிச்சையெடுத்துக் கொண்டிருப்பதாகப்

பார்த்தவர்கள் சொல்லிப் போனார்கள்

வீட்டில் இருப்பவர்களுக்கு

அழைத்து வர வேண்டுமோ என்ற

குழப்பத்தில் அப்படியே இருந்து விட்டார்கள்

அவர்களுக்கென்ன அவர்களுக்கான கதை

சின்னத்திரையில் தொடர்ந்து ஓடியபடி இருக்கிறது

*****

பொய்யும் வதந்தியும் புரண்டு விளையாடும் உலகம்

பொய்யும் வதந்தியும் புரண்டு விளையாடும் உலகம்

            மக்கள் ஏதோ ஒரு விதத்தில் விரும்பினாலன்றி, மக்கள் ஏதோ ஒரு விதத்தில் கவனம் ஈர்க்கப்பட்டாலன்றி வதந்தி, பொய் உட்பட எதுவும் மக்களிடையே பரவ முடியாது.

            பொய்யும் வதந்தியும் எப்படி மக்களால் ஈர்க்கப்பட்டு அவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதை நினைக்கையில் வியப்பாகத்தான் இருக்கிறது. எவ்வளவோ நல்ல விசயங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு அந்த அளவுக்கு ஈர்ப்பு இருப்பதில்லை. அவை அந்தளவுக்குப் பரவுவதும் இல்லை.

            மக்கள் மனதுக்கு ஒரு பரபரப்பும் படபடப்பும் தேவைப்படுகிறது. அந்த பரபரப்பையும் படபடப்பையும் தருவதாலேயே பொய்யும் வதந்தியும் றெக்கைக் கட்டிக் கொண்டு பறக்கின்றன.

            எல்லா பொய்களும் வதந்திகளும் நட்சத்தர அந்தஸ்தைப் பெற்று விடுவதில்லை. ஒரு சில பொய்களும் வதந்திகளும் பெறும் நட்சத்திர அந்தஸ்தைப் பார்க்கையில் அது போன்ற பொய்களையும் வதந்திகளையும் உள்ளூர அறிந்து கொள்வதற்கான ரகசிய விருப்பம் மக்களிடம் இருப்பதை அறிய முடியும்.

            சண்டை, போர், நோய் என்றால் அதில் இறந்து படும் செய்தி அதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை உள்ளூர மக்கள் மனதில் தூண்டுகிறது. அது நிகழும் நேரத்தில் அது சம்பந்தமாக எந்தச் செய்தியைப் போட்டாலும் அது பொய்யாக இருந்தாலும் அது வதந்தியாக அமைந்தாலும் அதுவே கவனிக்கப்படுகிறது. அது போன்ற நேரங்களில் 10 பேர் இறந்ததை 1000 பேர் இறந்ததாகப் போட்டாலும் அல்லது 1000 பேர் இறந்ததை 10 பேர் இறந்ததாகப் போட்டாலும் அதுதான் செய்தியாகிறது. அது வதந்தியா, செய்தியா என்பது அடுத்த பிரச்சனைதான்.

            ஒரு பெரு நிகழ்வில் ஏற்படும் அசம்பாவிதமும் மக்கள் மனதின் கவனத்தைக் குவிக்கும் விசயம்தான். அது குறித்து அசம்பாவிதம் நிகழாத போதும் அது நிகழ்ந்து விட்டதாகப் போட்டால் அது உடனடியாகக் கவனிக்கப்படுகிறது. பிறகு அது நிகழவில்லை என்று நிரூபிப்பது கடினமாகி விடுகிறது.

            ஒரு செய்தித்தாளை எடுத்தால் குற்றச் செய்திகளை நோக்கி நம் கவனம் செல்வதை நாமாகத் தடுத்துக் கொண்டாலொழிய அதைத் தடுக்க முடியாது. ஏதோ ஒரு வகையில் அதை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வ துடிப்பு மனதுக்கு இருக்கிறது. அந்தத் துடிப்பு பொய்யுக்கும் வதந்திக்கும் தனித்த வசீகரத்தைத் தருகிறது.

            பொய்களும் வதந்திகளும் மக்கள் விரும்பக் கூடியதாக, மக்களை விரும்ப வைக்க கூடியதாக இருக்கின்ற காரணத்தால் அதைத் தடுப்பது என்பது சாதாரணமில்லை. தம்மை அறியாமல் பொய்களையும் வதந்திகளையும் விரும்பி ஏற்கும் மனநிலையில் மக்கள் இருப்பதால் இதை வேறு வகையில்தான் சரி செய்ய முடியும்.

            பொய்களையும் வதந்திகளையும் உண்டாக்குவதைத் தடுக்க முடியாது. ஆனால் அது பரவுவதைத் தடுக்க முடியும். பொய்களுக்கும் வதந்திகளுக்கும் ஆழ் மனதில் இருக்கும் ஈர்ப்பை ஒவ்வொரு மனிதரும் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையாக இருந்தாலும் கூட அது உண்மையா என்று யோசித்து விட்டு ஒரு முடிவுக்கு வரும் அறிவார்ந்த பழக்கத்தை வளர்த்துக் கொண்டால் பொய்களையும் வதந்திகளையும் காலப் போக்கில் வெகு எளிதாக அடையாளம் கண்டு கொண்டு விட முடியும்.

            பொதுவாக உண்மை என்பது சப்பென்றுதான் இருக்கும். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் சப்பைக் கட்டு கட்டிக் கொண்டெல்லாம் உண்மையானது நிற்காது. பொய்யும் வதந்தியும் அப்படியல்ல. நீங்கள் நம்பும் வரை கச்சைக் கட்டிக் கொண்டு நிற்கும்.

            பொய்களையும் வதந்திகளையும் பயன்படுத்தி ஆதாயம் தேட முடியுமா என்ற குரூர எண்ணமும் ஆழ் மனதில் ஓர் ஓரத்தில் ஒவ்வொரு மனதுக்குள்ளும் பதிந்து இருக்கிறது. மனதுக்குள் மனமே அறியாமல் பதுங்கியிருக்கும் இந்த உணர்வும் பொய்களையம் வதந்திகளையும் நோக்கி தள்ளி விடும் குணாதிசயம் கொண்டது. இதைப் பொறுமையாகப் புரிந்து கொண்டு விலக்குவதற்கு ஒரு பெருந்தன்மையான குணம் வேண்டும். 

அடுத்து ஒன்றைப் பொய் என்றும் வதந்தி என்றும் புரிவதற்கு முன்பே உளறிக் கொட்டி விடாத நிதானமும் வேண்டும். தன்னை அறியாமல் உளறிக் கொட்டுவது என்பது மனதிற்கே உரிய குறைபாடு. அப்படிச் செய்வது என்பது பொய்யையும் வதந்தியையும் ராக்கெட்டில் ஏற்றி அனுப்பி விடுவதைப் போன்றது.

எந்தச் செய்தியையும் உள்வாங்கி தனக்குத் தானே விவாதிப்பதற்கு இடம் கொடுத்தால் பொய்க்கும் வதந்திக்கும் இந்த உலகில் இடம் இருக்காது. மனதில் ஒரு கருத்தை உள்வாங்கி விவாதத்திற்கு உட்படுத்துவதற்கு முன்பே மனம் சட்டென நினைக்கும் எண்ணத்துக்கு இயைந்து யோசிப்போமானால் பொய்யையும் வதந்தியையும் என்ன செய்தாலும் தடுக்க முடியாது.

பொய்யையும் வதந்தியையும் தடுப்பதில் கூட்டுப் பொறுப்பை விட தனிமனித பொறுப்பு அதிகம் இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு தனிமனித வாயும்தான் பொய்யும் வதந்தியும் காட்டுத் தீ போல பரவ காரணமாகிறது. ஒரு வாய் போதும். நாடு எரியும் அளவுக்கு வதந்தியையும் பொய்யையும் பரப்ப. தனிமனித பொறுப்புணர்வை நன்குணர்ந்தவர்களிடம் பொய்யும் வதந்தியும் பல்லிழுத்து ஓடுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது.

இந்தச் சமூகத்தில் பொய்யும் வதந்தியும் தன் மூலமாகப் பரவாமல் இருப்பதற்கு ஒவ்வொருவரும் உறுதி ஏற்றுக் கொண்டால் போதும் பொய்யும் வதந்தியும் ஒரு போதும் சமூகப் பிரச்சனை ஆக முடியாது. பொய்யும் வதந்தியும் நோய்த் தொற்றைப் போலத்தான். ஒருவர் தன்னிடம் இருக்கும் நோய்த் தொற்றை இன்னொருவரிடம் பரப்ப நினைக்கக் கூடாது.

*****

25 Sept 2021

மனதை வரைதல்

மனதை வரைதல்

பென்சில் கொண்டுப் போய் வைத்தார்களா என்ன

தாளைத் தானே தேடிக் கொண்டது

அம்மையின் குங்குமத்திலும்

இருக்கின்ற இலைகளிலும் பூக்களிலும்

நிறங்களைப் பிழிந்து கொள்கிறது

கைவிரல்கள் களிநர்த்தனம் புரிகிறது

சிறிய மனிதர்கள் பெரிய மனிதர்கள்

பொம்மைகள் பூனைகள் ஆடுகள் நாய்கள்

என்று வரைந்து தள்ளுகிறாள்

விருப்பப்படி இருக்கின்ற நிறத்தைக் கொடுக்கிறாள்

மனிதர்கள் நீலமாகவும்

பொம்மைகள் வெளிர் சிவப்பிலும்

பூனைகள் பச்சை நிறத்திலும்

ஆடுகள் சிவப்பு நிறத்திலும்

நாய்கள் ஊதா நிறத்திலும் உலவுகின்றன

ஒவ்வொரு படத்தையும் உற்றுநோக்கும் போது

எந்தப் படத்திற்கும் காதுகள் இல்லை

யாரும் யாருக்கும் எதையும் சொல்ல வேண்டியதில்லை

என்பதைச் சொல்கிறாளோ என்னவோ

யாரும் சொல்லாமல் படங்களை வரைகிறாள்

எது இருக்க வேண்டும் எது இருக்க வேண்டாம்

என்பதை அவளே தீர்மானிக்கிறார்கள்

பென்சிலும் தாளும் நாம் கொடுத்தால்

ஓவியங்களை வரைபவள்

அவளாக வரையும் போது மனதை வரைகிறாள்

*****

24 Sept 2021

மாதா பிதா குரு சமத்காரம்

மாதா பிதா குரு சமத்காரம்

            இந்த கொரோனா என்பது வித்தியாசமான நோயாக இருக்கிறது. ஒரே அடியாக இந்தக் கொரோனா வந்தால் போய்ச் சேர்ந்து விடலாம் என்று நல்லூர் தாத்தா சொல்லிக் கொண்டிருந்தார். சொன்னதோடு அல்லாமல் மாஸ்க் போடாமல், சானிடைசரில் கை நனைக்காமல் போன இடங்களில் எல்லாம் கொரோனாவைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் ஒரு வாய்ச் சாப்பிட்டுதான் வந்தார்.

            பழையனூர் பெரியப்பா பாதுகாப்பு விசயங்களில் படு கெட்டி. மாஸ்க் போடாமல் வெளியில் போனதில்லை. கையோடு கவச குண்டலம் போல் சானிடைசரை வைத்துக் கொண்டு அலைந்தார். யாரிடமாவது பேனா, பணம் என்று வாங்கினால் சானிடைசரால் குளிப்பாட்டி விட்டுத்தான் வாங்கினார்.

            கிரகம் பாருங்கள் பழையனூர் பெரியப்பா கொரோனா வந்துப் போய்ச் சேர்ந்தார். நல்லூர் தாத்தா பிடித்து வைத்த பிள்ளையார் கணக்காய் கொரோனா தடுப்பூசி கூட போடாமல் பழையனூர் பெரியப்பாவுக்குக் காரியம் வரை வந்து விட்டுப் போய் விட்டார். இப்போது நீங்கள்தான் சொல்ல வேண்டும். இந்த கொரோனா வித்தியாசமான நோயா, வித்தியாசமில்லாத நோயா என்று.

****

            வாங்க வாங்க சாப்பிடலாம் என்ற வாசகத்தை இப்போதெல்லாம் மோட்டலின் வாசல்களில்தான் கேட்க முடிகிறது. வீட்டிற்குச் சென்றால் தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடுக்க யோசிக்கிறார்கள். வீட்டுக்கொரு ஹோட்டல் இருந்தால் வாங்க வாங்க சாப்பிடலாம் என்பார்களோ என்னவோ.

****

            நீர் நிலைப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் என்று ஒருவரை அறிமுகப்படுத்தினார்கள். அவரை அறிமுகப்படுத்தும் போதே பக்கத்தில் குசுகுசுவென்று அவருடைய வீடு இருப்பதே ஏரியின் மீது போடப்பட்ட ப்ளாட்டில்தான் என்றார் பக்கத்தில் இருந்தவர். நம்முடைய சமூக ஆர்வமெல்லாம் இப்படித்தானோ என்னவோ! அதாவது சுற்றுச்சூழல் பாதுகாவலர் என்பவர் நிச்சயம் அதற்கான பாதுகாவலராக இருக்க மாட்டார்.

****

            வளர விட மாட்டேன்கிறான்களே என்பார் எம்.கே. அடிக்கடி. வளரும் மரத்தைத்தான் வெட்டுவார்கள் என்பார் எஸ்.கே. பின் வளராத போஸ்ட் மரத்தை யார் வெட்டுவார்கள்? வளர்ச்சி என்றால் வெட்டுவது இருக்கும்.

****

            மாதா பிதா குரு தெய்வம் என்பது வரிசை நிலைக்காகக் சொல்லப்பட்ட மொழியாகத் தெரிகிறது. முதலில் மாதாவை அறிபவர் அடுத்துப் பிதாவை அறிகிறார். அதற்கடுத்து குருவை அறிகிறவர் அதைத் தொடர்ந்து தெய்வத்தை அறிகிறார். இப்படிப் பொருள் கொள்வது பொருத்தமாகவும் தெரிகிறது.

            மாதா பிதா குரு தெய்வம் என நான்கையும் சரி சமமாக வைப்பது பொருத்தமாகத் தெரியவில்லை. ஒரு காலத்தில் அப்படி ஒரு சமநிலை இருந்திருக்கலாம். அப்போது அனைத்துச் சாதியினரும் மாதாவையும் பிதாவையும் பார்ப்பதைப் போல குருவையும் தெய்வத்தையும் பார்த்து விட முடியாது. இப்போது காசு பணம் உள்ளவர்கள் குருவையும் தெய்வத்தையும் பார்ப்பதைப் போல எல்லாராலும் பார்த்து விட முடியாது.

            விழுமம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் பார்க்கும் போது மாதாவும் பிதாவும் குருவும் தெய்வத்துக்குச் சமமானவர்கள். தாயும் தந்தையும் இல்லாமல் ஒருவர் பிறக்க முடியாது என்பதால் பிறப்பித்த தெய்வமாய் அவர்கள் ஆகிறார்கள். குரு இன்றி அறிவுக்கண் திறப்பதில்லை என்பதில்லை என்பதால் வழிகாட்டிய தெய்வமாக அவர் ஆகிறார்.

            இந்தக் காலத்தில் தெய்வமே கட்டண தரிசனத்தில் காட்சி தரும் போது தெய்வம் என்ற சொல்லாடலே மறுகட்டுமானம் செய்யப்பட வேண்டியதாக இருக்கிறது. பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் பள்ளிக்கூட குருமார்களிலிருந்து ஆசிரம குருமார்கள் வரைப் பார்க்கும் போது நிலைமை பரிதாபமாக இருக்கிறது.

            எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒரு குரு தெய்வம் போல இருக்கிறார். எங்கிருந்தோ உருவாகும் அதிசய பிறவிகள் அவர்கள் வார்த்தனுப்பிய மாணவச் செல்வங்கள்தான் எனும் போது அவ்வபோது கொஞ்சம் தெய்வ நம்பிக்கையும் வந்து போகிறது. அதாவது குரு எனும் தெய்வம் மீதான நம்பிக்கை. மற்றபடி நம் குருமார்களின் குழந்தைகள்தான் மருத்துவர்களாகவும் பொறியாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களிடம் படித்த குழந்தைகள் சித்தாள்களாகவும் வெத்தாள்களாகவும்தான் இருக்கிறார்கள்.

****

            இந்தக் கொரோனா காலத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டிருந்தால் ஒருவேளை ரஜினி அரசியலில் குதித்திருப்பாரோ என நினைப்பதுண்டு. நமது அரசியல் களம் என்பது விவாதக் களத்திற்குள் வரவில்லை. திரையரங்கத்திற்குள்தான் இன்னமும் இருக்கிறது. ஒருவேளை திரையரங்கங்கள் என்பது இல்லாது இருந்திருந்தால் தமிழ் நாட்டின் முதல்வர்கள் திரையிலிருந்து வந்திருக்கவே மாட்டார்கள். திரையரங்கங்கள் படிப்படியாகத் திறக்கப்படும் சூழ்நிலையில் இனிமேல் திரையில் நடிக்கும் நடிகர்கள் எத்தனை பேருக்கு அரசியல் ஆர்வம் வரப் போகிறது என்பதை நீங்களே பொறுத்திருந்து பாருங்கள்.

****

பேசிப் பேசி…

பேசிப் பேசி…

பேசிப் பேசிக் காதலித்தோம்

பேசிப் பேசிப் பிரிந்தோம்

பேச்சில் ஏதோ இருக்கிறது

நீயும் கவனிக்கவில்லை

நானும் கவனிக்கவில்லை

கவனமில்லாமல் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம்

கொஞ்சம் சுதாரித்திருந்தால்

நீயும் நானும் பிரிந்திருக்க மாட்டோம்

ஆனாலென்ன அதன் பின்

நீ நீயாக இருந்திருக்க மாட்டாய்

நான் நானாக இருந்திருக்க மாட்டேன்

பேச்சினால் ஏதோ ஒன்று நடந்து விட்டது

பிரிவிற்குப் பின் பிரிவிற்கு முந்தினும்

உன்னை அதிகம் நேசிக்கிறேன்

உன்னிடம் பேசுவதாக நினைத்து

நிறைய புலம்புகிறேன்

புலம்பல் வார்த்தைகள் பிரிக்கவொண்ணா

இணைப்பைக் கோருகின்றன

மீண்டும் போய் சேர்ந்து விடு என்கிறது

மற்றுமொரு பிரிவைத் தாங்கும்

பலமில்லை என்பதை அறியாத மனம்

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...