பொய்யும் வதந்தியும் புரண்டு விளையாடும் உலகம்
மக்கள் ஏதோ ஒரு விதத்தில் விரும்பினாலன்றி, மக்கள் ஏதோ ஒரு விதத்தில்
கவனம் ஈர்க்கப்பட்டாலன்றி வதந்தி, பொய் உட்பட எதுவும் மக்களிடையே பரவ முடியாது.
பொய்யும் வதந்தியும் எப்படி மக்களால் ஈர்க்கப்பட்டு அவ்வளவு
வேகமாகப் பரவுகிறது என்பதை நினைக்கையில் வியப்பாகத்தான் இருக்கிறது. எவ்வளவோ நல்ல விசயங்கள்
இருக்கின்றன. அவற்றுக்கு அந்த அளவுக்கு ஈர்ப்பு இருப்பதில்லை. அவை அந்தளவுக்குப் பரவுவதும்
இல்லை.
மக்கள் மனதுக்கு ஒரு பரபரப்பும் படபடப்பும் தேவைப்படுகிறது.
அந்த பரபரப்பையும் படபடப்பையும் தருவதாலேயே பொய்யும் வதந்தியும் றெக்கைக் கட்டிக் கொண்டு
பறக்கின்றன.
எல்லா பொய்களும் வதந்திகளும் நட்சத்தர அந்தஸ்தைப் பெற்று விடுவதில்லை.
ஒரு சில பொய்களும் வதந்திகளும் பெறும் நட்சத்திர அந்தஸ்தைப் பார்க்கையில் அது போன்ற
பொய்களையும் வதந்திகளையும் உள்ளூர அறிந்து கொள்வதற்கான ரகசிய விருப்பம் மக்களிடம் இருப்பதை
அறிய முடியும்.
சண்டை, போர், நோய் என்றால் அதில் இறந்து படும் செய்தி அதைப்
பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை உள்ளூர மக்கள் மனதில் தூண்டுகிறது. அது
நிகழும் நேரத்தில் அது சம்பந்தமாக எந்தச் செய்தியைப் போட்டாலும் அது பொய்யாக இருந்தாலும்
அது வதந்தியாக அமைந்தாலும் அதுவே கவனிக்கப்படுகிறது. அது போன்ற நேரங்களில் 10 பேர்
இறந்ததை 1000 பேர் இறந்ததாகப் போட்டாலும் அல்லது 1000 பேர் இறந்ததை 10 பேர் இறந்ததாகப்
போட்டாலும் அதுதான் செய்தியாகிறது. அது வதந்தியா, செய்தியா என்பது அடுத்த பிரச்சனைதான்.
ஒரு பெரு நிகழ்வில் ஏற்படும் அசம்பாவிதமும் மக்கள் மனதின் கவனத்தைக்
குவிக்கும் விசயம்தான். அது குறித்து அசம்பாவிதம் நிகழாத போதும் அது நிகழ்ந்து விட்டதாகப்
போட்டால் அது உடனடியாகக் கவனிக்கப்படுகிறது. பிறகு அது நிகழவில்லை என்று நிரூபிப்பது
கடினமாகி விடுகிறது.
ஒரு செய்தித்தாளை எடுத்தால் குற்றச் செய்திகளை நோக்கி நம் கவனம்
செல்வதை நாமாகத் தடுத்துக் கொண்டாலொழிய அதைத் தடுக்க முடியாது. ஏதோ ஒரு வகையில் அதை
அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வ துடிப்பு மனதுக்கு இருக்கிறது. அந்தத் துடிப்பு பொய்யுக்கும்
வதந்திக்கும் தனித்த வசீகரத்தைத் தருகிறது.
பொய்களும் வதந்திகளும் மக்கள் விரும்பக் கூடியதாக, மக்களை விரும்ப
வைக்க கூடியதாக இருக்கின்ற காரணத்தால் அதைத் தடுப்பது என்பது சாதாரணமில்லை. தம்மை அறியாமல்
பொய்களையும் வதந்திகளையும் விரும்பி ஏற்கும் மனநிலையில் மக்கள் இருப்பதால் இதை வேறு
வகையில்தான் சரி செய்ய முடியும்.
பொய்களையும் வதந்திகளையும் உண்டாக்குவதைத் தடுக்க முடியாது.
ஆனால் அது பரவுவதைத் தடுக்க முடியும். பொய்களுக்கும் வதந்திகளுக்கும் ஆழ் மனதில் இருக்கும்
ஈர்ப்பை ஒவ்வொரு மனிதரும் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையாக இருந்தாலும் கூட அது உண்மையா
என்று யோசித்து விட்டு ஒரு முடிவுக்கு வரும் அறிவார்ந்த பழக்கத்தை வளர்த்துக் கொண்டால்
பொய்களையும் வதந்திகளையும் காலப் போக்கில் வெகு எளிதாக அடையாளம் கண்டு கொண்டு விட முடியும்.
பொதுவாக உண்மை என்பது சப்பென்றுதான் இருக்கும். ஏற்றுக் கொள்ள
வேண்டும் என்பதற்காகச் சப்பைக் கட்டு கட்டிக் கொண்டெல்லாம் உண்மையானது நிற்காது. பொய்யும்
வதந்தியும் அப்படியல்ல. நீங்கள் நம்பும் வரை கச்சைக் கட்டிக் கொண்டு நிற்கும்.
பொய்களையும் வதந்திகளையும் பயன்படுத்தி ஆதாயம் தேட முடியுமா
என்ற குரூர எண்ணமும் ஆழ் மனதில் ஓர் ஓரத்தில் ஒவ்வொரு மனதுக்குள்ளும் பதிந்து இருக்கிறது.
மனதுக்குள் மனமே அறியாமல் பதுங்கியிருக்கும் இந்த உணர்வும் பொய்களையம் வதந்திகளையும்
நோக்கி தள்ளி விடும் குணாதிசயம் கொண்டது. இதைப் பொறுமையாகப் புரிந்து கொண்டு விலக்குவதற்கு
ஒரு பெருந்தன்மையான குணம் வேண்டும்.
அடுத்து ஒன்றைப் பொய் என்றும்
வதந்தி என்றும் புரிவதற்கு முன்பே உளறிக் கொட்டி விடாத நிதானமும் வேண்டும். தன்னை அறியாமல்
உளறிக் கொட்டுவது என்பது மனதிற்கே உரிய குறைபாடு. அப்படிச் செய்வது என்பது பொய்யையும்
வதந்தியையும் ராக்கெட்டில் ஏற்றி அனுப்பி விடுவதைப் போன்றது.
எந்தச் செய்தியையும் உள்வாங்கி
தனக்குத் தானே விவாதிப்பதற்கு இடம் கொடுத்தால் பொய்க்கும் வதந்திக்கும் இந்த உலகில்
இடம் இருக்காது. மனதில் ஒரு கருத்தை உள்வாங்கி விவாதத்திற்கு உட்படுத்துவதற்கு முன்பே
மனம் சட்டென நினைக்கும் எண்ணத்துக்கு இயைந்து யோசிப்போமானால் பொய்யையும் வதந்தியையும்
என்ன செய்தாலும் தடுக்க முடியாது.
பொய்யையும் வதந்தியையும்
தடுப்பதில் கூட்டுப் பொறுப்பை விட தனிமனித பொறுப்பு அதிகம் இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு
தனிமனித வாயும்தான் பொய்யும் வதந்தியும் காட்டுத் தீ போல பரவ காரணமாகிறது. ஒரு வாய்
போதும். நாடு எரியும் அளவுக்கு வதந்தியையும் பொய்யையும் பரப்ப. தனிமனித பொறுப்புணர்வை
நன்குணர்ந்தவர்களிடம் பொய்யும் வதந்தியும் பல்லிழுத்து ஓடுவதைத் தவிர வேறு எதுவும்
செய்ய முடியாது.
இந்தச் சமூகத்தில் பொய்யும்
வதந்தியும் தன் மூலமாகப் பரவாமல் இருப்பதற்கு ஒவ்வொருவரும் உறுதி ஏற்றுக் கொண்டால்
போதும் பொய்யும் வதந்தியும் ஒரு போதும் சமூகப் பிரச்சனை ஆக முடியாது. பொய்யும் வதந்தியும்
நோய்த் தொற்றைப் போலத்தான். ஒருவர் தன்னிடம் இருக்கும் நோய்த் தொற்றை இன்னொருவரிடம்
பரப்ப நினைக்கக் கூடாது.
*****
உண்மையான உண்மை
ReplyDeleteதொடரும் தங்களது வாசிப்புக்கும் நேசிப்புக்கும் மிக்க நன்றிகள் ஐயா.
Delete