மாதா பிதா குரு சமத்காரம்
இந்த கொரோனா என்பது வித்தியாசமான நோயாக இருக்கிறது. ஒரே அடியாக
இந்தக் கொரோனா வந்தால் போய்ச் சேர்ந்து விடலாம் என்று நல்லூர் தாத்தா சொல்லிக் கொண்டிருந்தார்.
சொன்னதோடு அல்லாமல் மாஸ்க் போடாமல், சானிடைசரில் கை நனைக்காமல் போன இடங்களில் எல்லாம்
கொரோனாவைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் ஒரு வாய்ச் சாப்பிட்டுதான் வந்தார்.
பழையனூர் பெரியப்பா பாதுகாப்பு விசயங்களில் படு கெட்டி. மாஸ்க்
போடாமல் வெளியில் போனதில்லை. கையோடு கவச குண்டலம் போல் சானிடைசரை வைத்துக் கொண்டு அலைந்தார்.
யாரிடமாவது பேனா, பணம் என்று வாங்கினால் சானிடைசரால் குளிப்பாட்டி விட்டுத்தான் வாங்கினார்.
கிரகம் பாருங்கள் பழையனூர் பெரியப்பா கொரோனா வந்துப் போய்ச்
சேர்ந்தார். நல்லூர் தாத்தா பிடித்து வைத்த பிள்ளையார் கணக்காய் கொரோனா தடுப்பூசி கூட
போடாமல் பழையனூர் பெரியப்பாவுக்குக் காரியம் வரை வந்து விட்டுப் போய் விட்டார். இப்போது
நீங்கள்தான் சொல்ல வேண்டும். இந்த கொரோனா வித்தியாசமான நோயா, வித்தியாசமில்லாத நோயா
என்று.
****
வாங்க வாங்க சாப்பிடலாம் என்ற வாசகத்தை இப்போதெல்லாம் மோட்டலின்
வாசல்களில்தான் கேட்க முடிகிறது. வீட்டிற்குச் சென்றால் தவித்த வாய்க்குத் தண்ணீர்
கொடுக்க யோசிக்கிறார்கள். வீட்டுக்கொரு ஹோட்டல் இருந்தால் வாங்க வாங்க சாப்பிடலாம்
என்பார்களோ என்னவோ.
****
நீர் நிலைப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் என்று ஒருவரை அறிமுகப்படுத்தினார்கள்.
அவரை அறிமுகப்படுத்தும் போதே பக்கத்தில் குசுகுசுவென்று அவருடைய வீடு இருப்பதே ஏரியின்
மீது போடப்பட்ட ப்ளாட்டில்தான் என்றார் பக்கத்தில் இருந்தவர். நம்முடைய சமூக ஆர்வமெல்லாம்
இப்படித்தானோ என்னவோ! அதாவது சுற்றுச்சூழல் பாதுகாவலர் என்பவர் நிச்சயம் அதற்கான பாதுகாவலராக
இருக்க மாட்டார்.
****
வளர விட மாட்டேன்கிறான்களே என்பார் எம்.கே. அடிக்கடி. வளரும்
மரத்தைத்தான் வெட்டுவார்கள் என்பார் எஸ்.கே. பின் வளராத போஸ்ட் மரத்தை யார் வெட்டுவார்கள்?
வளர்ச்சி என்றால் வெட்டுவது இருக்கும்.
****
மாதா பிதா குரு தெய்வம் என்பது வரிசை நிலைக்காகக் சொல்லப்பட்ட
மொழியாகத் தெரிகிறது. முதலில் மாதாவை அறிபவர் அடுத்துப் பிதாவை அறிகிறார். அதற்கடுத்து
குருவை அறிகிறவர் அதைத் தொடர்ந்து தெய்வத்தை அறிகிறார். இப்படிப் பொருள் கொள்வது பொருத்தமாகவும்
தெரிகிறது.
மாதா பிதா குரு தெய்வம் என நான்கையும் சரி சமமாக வைப்பது பொருத்தமாகத்
தெரியவில்லை. ஒரு காலத்தில் அப்படி ஒரு சமநிலை இருந்திருக்கலாம். அப்போது அனைத்துச்
சாதியினரும் மாதாவையும் பிதாவையும் பார்ப்பதைப் போல குருவையும் தெய்வத்தையும் பார்த்து
விட முடியாது. இப்போது காசு பணம் உள்ளவர்கள் குருவையும் தெய்வத்தையும் பார்ப்பதைப்
போல எல்லாராலும் பார்த்து விட முடியாது.
விழுமம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் பார்க்கும் போது
மாதாவும் பிதாவும் குருவும் தெய்வத்துக்குச் சமமானவர்கள். தாயும் தந்தையும் இல்லாமல்
ஒருவர் பிறக்க முடியாது என்பதால் பிறப்பித்த தெய்வமாய் அவர்கள் ஆகிறார்கள். குரு இன்றி
அறிவுக்கண் திறப்பதில்லை என்பதில்லை என்பதால் வழிகாட்டிய தெய்வமாக அவர் ஆகிறார்.
இந்தக் காலத்தில் தெய்வமே கட்டண தரிசனத்தில் காட்சி தரும் போது
தெய்வம் என்ற சொல்லாடலே மறுகட்டுமானம் செய்யப்பட வேண்டியதாக இருக்கிறது. பாலியல் குற்றச்சாட்டுகளில்
சிக்கும் பள்ளிக்கூட குருமார்களிலிருந்து ஆசிரம குருமார்கள் வரைப் பார்க்கும் போது
நிலைமை பரிதாபமாக இருக்கிறது.
எங்கோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒரு குரு தெய்வம் போல இருக்கிறார்.
எங்கிருந்தோ உருவாகும் அதிசய பிறவிகள் அவர்கள் வார்த்தனுப்பிய மாணவச் செல்வங்கள்தான்
எனும் போது அவ்வபோது கொஞ்சம் தெய்வ நம்பிக்கையும் வந்து போகிறது. அதாவது குரு எனும்
தெய்வம் மீதான நம்பிக்கை. மற்றபடி நம் குருமார்களின் குழந்தைகள்தான் மருத்துவர்களாகவும்
பொறியாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களிடம் படித்த குழந்தைகள் சித்தாள்களாகவும்
வெத்தாள்களாகவும்தான் இருக்கிறார்கள்.
****
இந்தக் கொரோனா காலத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டிருந்தால்
ஒருவேளை ரஜினி அரசியலில் குதித்திருப்பாரோ என நினைப்பதுண்டு. நமது அரசியல் களம் என்பது
விவாதக் களத்திற்குள் வரவில்லை. திரையரங்கத்திற்குள்தான் இன்னமும் இருக்கிறது. ஒருவேளை
திரையரங்கங்கள் என்பது இல்லாது இருந்திருந்தால் தமிழ் நாட்டின் முதல்வர்கள் திரையிலிருந்து
வந்திருக்கவே மாட்டார்கள். திரையரங்கங்கள் படிப்படியாகத் திறக்கப்படும் சூழ்நிலையில்
இனிமேல் திரையில் நடிக்கும் நடிகர்கள் எத்தனை பேருக்கு அரசியல் ஆர்வம் வரப் போகிறது
என்பதை நீங்களே பொறுத்திருந்து பாருங்கள்.
****
முரண்படாத முரண்கள்
ReplyDeleteதங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள் ஐயா.
Delete